Friday, May 30, 2014

Sai Charita - 50


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

 [மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 50


1. காகா ஸாஹேப் தீக்ஷித், 2. ஸ்ரீ தேம்பே ஸ்வாமி, 3. பாலாராம் துரந்தர் ஆகியோரின் கதைகள்.
***************

இலம்பகம்முப்பத் தொன்பதில்கூறிய மையப்பொருளே மூலப்பதிவின்
ஐம்பதிலிருப்பதால் ஐம்பத்தொன்றாம் இலம்பகமிங்கே ஐம்பதானது!

முன்னுரை:

மூலாதாரமாய், ஆற்ற‌லையளித்து, கீதையைவிளக்கும் ஸத்குருஸாயிக்கு
ஜெயமங்களம்கூறி நம்மையெல்லாம் ஆசீர்வதிக்க வேண்டுதல்செய்வோம்.

மலையில்வளரும் சந்தனமரங்கள் வெப்பத்தைப்போக்கிட, மழைநீர்மேகம்
குளிரைத்தந்திட, வசந்தமலர்கள் பூத்துக்குலுங்கி வழிபாட்டிற்கு,

உத‌வுதல்போல, ஸாயியின்கதைகள் பயில்பவர்க்கெல்லாம் சாந்தியும்,சுகமும்
அளித்திடமுன்வரும். எடுத்துச்சொல்பவர் கேட்போரிருவரும், சொல்பவர்வாக்கும்

கேட்பவர்செவிகளும் ஆசிகள்பெற்றுப் புனிதமடைந்திடும் ஸாயியினருளால்!
அவரதுஆசிகள் நம்முடனிருந்திட ஆன்மீகைலட்சியம் எளிதில்பெறலாம்.

காகா ஸாஹேப் தீக்ஷித் [1864 - 1926] ::

காண்ட்வாமாநிலம் வத்நாகரநகரில் அந்தணக்குலத்தில் ஹரிசீதாராம்
எனப்பெயர்கொண்ட காகாஸாஹேப் தீக்ஷித்என்பார் ஆயிரத்தெண்ணூற்று

அறுபத்துநாலில் பிறந்துவளர்ந்தார். காண்ட்வா,ஹிங்கான்கட் என்னும்ஊர்களில்
கல்விபயின்று, மும்பையிலிரண்டு கல்லூரிகளில் படித்துப்பட்டம்

பெற்றப்பின்னர் வக்கீல்பரிட்சையில் தேர்ச்சியடைந்து அரசுப்பணியிலும்
பின்னர்சொந்தமாய்த் தொழிலும்புரிந்தார். நாற்பத்தைந்தாம் பருவம்வரையிலும்[1909]

ஸாயிபாபாவின் நாமம்கூடத் தெரியாதிருந்தவர் ஸாயிநாதரின்
அரும்பெரும்பக்தராய் ஆகிப்போனார். நானாஸாஹேப் சாந்தோர்கரையவர்

லோனாவாலாவில் சந்தித்தப்போது, லண்டனிலிருக்கையில் புகைவண்டியில்
பயணித்தசமயம் பாதம்நழுவிக் காயமடைந்து, சிகிச்சைகள்பலவும் [2620]

செய்தப்பின்னரும் குணமின்றிப்போன கதையைச்சொல்லிட, ஸாயிநாதனிடம்
சென்றாலெல்லாம் சரியாகிப்போகும் என்றவர்கூறி, 'எனதுமக்களை

நெடுந்தொலைவிருந்தும், ஏழ்கடற்கப்பால் இருந்திடுனுமவரை, குருவியின்காலில்
நூலைக்கட்டி இழுப்பதைப்போல நானிழுத்திடுவேன்' என்னும்ஸாயியின்

வாக்கினைக்கூறி, 'ஸாயியினடியராய் இருக்காவிடிலோ அவரதுதரிசனம்
கிடைப்பதுமரிது' என்னும்சேதியும் காகாஸாஹேப்பிடம் தெளிவாய்ச்சொன்னார்.

அதனைக்கேட்ட தீக்ஷித்மகிழ்ந்து, காலூனத்தைச் சரிசெய்யாவிடினும்
மனத்தைத்திருத்தி, பேரின்பம்நல்கிட வேண்டப்போவதாய் மறுமொழியுரைத்தார்.

பம்பாய்மாகாணக் கீழ்சட்டசபையில் இடம்பெறவேண்டி, ஓட்டுகள்பெற்றிட‌
அஹமதுநகரில் சர்தார்காகா ஸாஹேப்மீரிகரின் இல்லம்வந்து

சந்தித்தப்போது, அவரதுபுதல்வர் பாலாஸாஹேப் மிரீகரென்னும்
கோபர்காவனின் மாம்லதார் குதிரைக்காட்சியைக் காண்பதற்காக‌

அஹமதுநகர்வர, ஷீர்டிசெல்லும் ஆசையைதீக்ஷித் அவரிடம்சொல்ல‌
வழிகாட்டியொருவராய் யாரையனுப்பலாமென தந்தையும்மகனும்

யோசித்தவேளையில் ஷீர்டிநகரில் ஸாயிபாபாவோ வரவேற்புக்கான‌
ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். காய்ச்சலில்வாடிய மாமியாரைக்காண‌

அஹமதுநகர்க்கு ஷாமாவந்த சேதியறிந்து, நானாஸாஹேப் பான்சேயென்பவரும்
அப்பாஸாஹேப் க‌த்ரேயென்பாரும் அவரைக்கண்டு, மிரீகரில்லவிருந்தாளியான‌

காகாஸாஹேப்பை கூட்டிச்சென்றிட வேண்டிக்கொள்ள அன்றையயிரவே
பத்துமணிரயிலில் கோபர்காவனுக்கு இருவரும்செல்வதாய்த் தீர்மானமானது. [2630]

அப்போதங்கோர் விசித்திரநிகழ்வு நடைபெற்ற‌து! யாரைக்கண்டிட
செல்கின்றனரோ அவரதுபடத்தைத் திரையையகற்றி பாலாஸாஹேப்

தீக்ஷித்துக்குக்காட்டினார்! மேகாவின்படத்தின் கண்ணாடியுடைந்ததால் பழுதுபார்த்திட‌
மிரீகரிடத்தில் அனுப்பப்பட்டது, பழுதுபார்த்ததும் இவருடனேயே அனுப்பப்பட்டது!

ரயிலில்கூட்டம் அதிகமிருந்தும், கார்டினுதவியால் முதல்வகுப்பிலே
அமர்த்தப்பட்டு இருவரும்சுகமாய் கோபர்காவன் சேர்ந்தடைந்த‌னர்!

நானாஸாஹேப் சாந்தோர்கருமங்கே வந்ததைக்கண்டதும் இருவரும்மகிழ்ந்தனர்.
கோதாவரிநதியில் நீராடியப்பின்னர் மூவருமாக ஷீர்டிசென்று

ஸாயியின்தரிசனம் கண்டதுமவரது நெஞ்சமுருகிக் கண்கள்பனித்தன.
நீண்டநாட்களாய்க் தானும்காத்திருந்து அவரைவரவேற்க ஷாமாவையனுப்பியதாய்

ஸாயிகூறிட தீக்ஷித்நெகிழ்ந்தார்! அந்நாள்முதலாய் காகாஸாஹேப்
மகிழ்வாய்ப்பல்லாண்டு ஸாயிநாதரின் கூடவேகழித்தார். வாதாஒன்றை

ஷீர்டியில்கட்டி அதையேத்தனது வாசஸ்தலமாய் ஆக்கிக்கொண்டார்.
பாபாவுடனவர் பெற்றிட்டஅனுபவம் பற்பலவென்பதால் இங்கிடவில்லை!

ஸாயிலீலா சஞ்சிகையில்வந்த 'காகாஸாஹேப் தீக்ஷித்'மலரில்
அவற்றைப்படித்திட ஹேமாத்பந்தும் வாசகரையெல்லாம் வேண்டிக்கொள்கிறார்.

'புஷ்பகவிமானம் ஒன்றில்லுன்னை நானெடுத்துச்செல்வேன்' என்றேஸாயி
சொன்னதுபோலவே ஆயிரத்தொள்ளா யிரயிருபத்தாறு ஜூலைமாதம்

ஐந்தாம்தேதி ஹேமாத்பந்துடன் ரயிலில்செல்கையில் ஸாயிபாபாவைப்
பற்றியநினைவில் பேசிக்கொண்டிருக்கையில் ஹேமாத்பந்த்தின் [2640]

தோளில்சாய்ந்தே எவ்விதவலியோ, அசௌகரியமோ இன்றியேஅந்த‌
உயரியபக்தர் காகாஸாஹேப் தீக்ஷித்தனது உயிரைவிட்டார்!

ஸ்ரீ தேம்பே ஸ்வாமி ::

ஞானியரனைவரும் சோதரவுணர்வுடன் ஒருவரையொருவர் நேசிக்குமுண்மையை
இனிவரும்கதையால் நாமுமறிவோம்! வாஸுதேவானந்த சரஸ்வதியென்னும்

ஸ்ரீதேம்பேஸ்வாமி கோதாவரிக்கரையில் ராஜமஹிந்திரியில் வந்துதங்கினார்.
இறையவதாரமாம் தத்தாத்ரேயரின் பக்தராய்விளங்கிய ஞானியோகியவரை

நாத்தேட்நகரின் புண்டலிக்ராவ்என்பார் நண்பர்சிலருடன் தரிசிக்கவந்தார்.
பேச்சுவாக்கிலே ஷீர்டிஸாயியின் பெயரைக்கேட்டதும் இருகைக்கூப்பி

தேங்காயொன்றை அவருக்களித்திட புண்டலிக்ராவிடம் ஸ்வாமிஜிதந்து,
'எனதுவணக்கத்துடன் சோதரர்ஸாயியிடம் இதனைச்சமர்ப்பித்து என்றுமென்னை

மறந்துவிடாமல் அன்புசெலுத்த வேண்டியாதாகச் சொல்லுங்கள்'என்றார்.
'ஸ்வாமிகள்பொதுவாய் வணக்கமெவர்க்கும் செய்வதுமில்லை ஆயினுமிந்த‌

விஷயத்தில்சற்றே விதிவிலக்கும் செய்திடல்வேண்டும்' எனவும்கூறினார்.
'சோதரன்'எனவே ஸ்வாமிகள்சொன்னதும் ஒருவகைப்பார்த்தால் சரியேயாகும்!

வைதீகமாக அக்னிஹோத்திரம் என்னும்நெருப்பை இரவும்,பகலும்
ஸ்வாமிகள்தினமும் காத்ததுபோலவே, 'துனி'யில்நெருப்பை ஸாயிபாபாவும்

அல்லும்பகலும் எரியவிட்டிருந்தார். ஒருமாதம்சென்று, புண்டலிக்ராவும்
இன்னபிறருடன் ஷீர்டிசென்றிடும் வழியில்'மன்மாட்' நகரடைந்தனர்.

தாகம்பெருகிட, அருகிலிருந்த ஓடைக்குச்சென்று நீரருந்தும்வேளையில்,
வெறும்வயிற்றினில் தண்ணீர்பருகதல் முறையிலையென்று, 'சிவ்டா'என்னும் [2650]

காரஅவலை உண்டிடும்போது, காரமாயிருந்ததால், கையிலிருந்தவோர்
தேங்காயையுடைத்து அதனுடன்கலந்து அனைவருமுண்டிட, துரதிர்ஷ்டவசமாய்

அந்தத்தேங்காய் ஸ்வாமிகள்கொடுத்தத் தேங்காயென்றுணர்ந்து புண்டலிக்ராவ்
வருந்திநடுங்கி, பதைபதைப்புடனே ஷீர்டியடைந்தார். அதற்குமுன்னரே

நடந்ததையெல்லாம் பாபாஅறிந்து, ராவைப்பார்த்து, தனதுசோதரர்
கொடுத்தனுப்பிய பொருளைமுதலில் தந்திடுமாறு குறிப்பாய்க்கேட்டார்!

ஸாயியின்பாதம் பிடித்தவர்தனது கவனமின்மையை மன்னித்தருள‌
வேண்டியேமேலும் மற்றொருகாயை அதற்குஈடாய்த் தருவதாய்வேண்ட,

அந்தக்காய்க்கு ஈடாய்மற்றொரு காய்கிடையாது என்றேமறுத்து,
'செயல்களின்கர்த்தா நீயெனஏனோ மயங்குகின்றாய்? தேங்காயுடைந்தது

என்விருப்பத்தாலே! கவலையைவிட்டொழி! நல்லதோகெட்டதோ அவற்றைச்செய்வது
நீயெனயெண்ணும் உணர்வினைவிட்டொழி! அனைத்திலும்முழுமையாய் கர்வமின்றியிரு!

ஆன்மீகப்பாதையில் முன்னேற்ற‌மடைவாய்!' என்றும்கூறி, இதனின்மூலம்
அழகியசொல்லால் ஆன்மீகபோதனை விளக்கமும்தந்தது நம்பேறன்றோ!

பாலாராம் துரந்தர் [1878 - 1925] ::

பம்பாயிலிருக்கும் சாந்தாகுருஸில் பதாரேபிரபு இனத்தைச்சேர்ந்த‌
பலராம்துரந்தர் வக்கீல்தொழிலில் பெரும்பொருளீட்டி தனதினத்தவர்க்கு

சேவைகள்செய்து, அதனைப்பற்றியோர் கட்டுரையெழுதி, அதற்குப்பின்னர்
ஆன்மீகநாட்டம் மனதில்கொண்டு சாத்திரநூல்கள் பலவும்கற்று விட்டோபாவின்

பக்தருமானார். அவரதுசோதரர் பாபுல்ஜி,வாமன்ராவ் இருவரும்சென்று
ஷீர்டிநாதனைக் கண்டுதிரும்பிய அனுபவம்கேட்டு, ஸாயியைக்காண [2660]

ஆவல்கொண்டு, மூவருமாக ஷீர்டிசெல்லத் தீர்மானம்செய்தனர்.
அவர்வருமுன்னரே, ஸாயிபாபாவோ அனவரிடத்தும், 'இன்றெனைக்காண‌

எனதுதர்பாரின் ஆட்கள்வருவர்!' என்றுரைத்தைக்கேட்டு உடனிருந்தவர்
ஆச்சரியமுறவும், அதேசமயம் இவர்கள்வரவும்,, 'முன்னர்நானும்

குறிப்பிட்டநபர்கள் இவர்களேயாம்'! கடந்தஅறுபது தலைமுறைகளாய்
ஒருவரோடொருவர் உறவுபூண்டு இருக்கின்றோம்'என ஸாயியுரைத்ததும்,

சோதரர்மூவரும் மயிர்க்கூச்செறிந்து கண்ணீர்மல்கி பதமலர்பணிந்தனர்!!
வாதாசென்று ஓய்வெடுத்தப்பின், மீண்டும்வந்து ஸாயிபாதங்களை

பாலாராம்துரந்தர் பிடித்துவிடுகையில், தான்புகைத்த சில்லிம்குழாயை
அவரிடம்நீட்ட, இதற்குமுன்னர் புகைபிடிக்கும் பழக்கமில்லை

என்றபோதும், ஸாயிதந்ததை மறுக்கவொண்ணாமல், திக்கித்திணறிப்
பிடித்துவிட்டுத் திரும்பவும்கொடுத்தார். ஆறுஆண்டுகளாய் ஆஸ்துமாநோயால்

அவதிப்பட்ட பாலாராமுக்கு அந்தக்கணமோர் புனிதநேரமானது!
இதற்குப்பின்னர் அந்தவியாதியால் அவஸ்தைப்படாமல் சுகமாய்வாழ்ந்தார்!

மஹாசமாதி ஆனநாளிலே மீண்டுமவர்க்கு ஒருமுறைவந்தது.
சாவடியூர்வலம் நடைபெறும்போதும் மறுநாள்காலைய ஆரத்திபோதும்

இஷ்டதெய்வமாம் பாண்டுரங்கனின் ஜோதியைபாபா முகத்தில்கண்டார்.
ஞானிதுகாராமின் வாழ்க்கைக்கதையை எழுதியபோதும் பதிப்பில்காண‌

முடியாநிலையில் காலமெய்தினார். அடுத்தஆண்டில் அவரதுசோதரர்
வெளியிட்டப்பதிப்பில் அவரைப்பற்றிய வாழ்க்கைக்குறிப்பில் இதனைக்காணலாம்! [2670]

ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!

[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
( To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.