Friday, May 30, 2014

Sai Charita - 32

"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 32


குரு - கடவுள் தேவை - பட்டினி அங்கீகரிக்கப்படவில்லை.
******************

பாபாதமது குருவைவனத்தில் சந்தித்தவிவரமும், மூன்றுநாட்கள்
விரதமிருக்க எண்ணியவொருவரைத் திருத்தியகதையும் இங்கேகாண்போம்.

'முன்னுரை'::

கண்ணுக்குத்தெரியும் சம்ஸாரவாழ்க்கையை ஆலமரத்துடன் ஒப்பிடுகின்றார்.
ஆலமரத்தின் வேர்கள்மேலும் கிளைகள்கீழுமாய் மேலும்கீழும்

பரவுவதாக பகவத்கீதையில் சொல்லியிருப்பதை இங்கேகாட்டி,
குணங்கள்உரமாய், துளிர்கள்புலனாய், செயல்கள்வேராய் பாருலகெல்லாம்

விரிந்துகிடந்து, தொடக்கமும்முடிவும் எதுவெனத்தெரியா விசித்திரமாக
இல்லறவாழ்க்கை புரியாப்புதிராய் இருப்பதைஹேமாத் பந்த்தும்சொல்கிறார். [1680]

பற்றின்மையென்னும் கோடரியாலிவ் வாலமரத்தை வெட்டியப்பின்னர்
அப்பாலுள்ளப் பாதையையொருவன் தேடிக்கண்டிட, திரும்புதலில்லை.

இவ்வழிசென்றிட குருவெனவொருவர் வழியைக்காட்டி உதவிடல்வேண்டும்.
கற்றிடும்நூல்களோ வேதாந்தஅறிவோ பயணமுடிவினைக் காட்டுவதில்லை.

வழிகாட்டியென வந்திடுமொருவரே இடர்களைத்தவிர்த்து, விலங்குகள்விலக்கி
அழைத்துச்சென்றிட எளிதாய்ப்பயணமும் முடிந்திடுமனுபவம் பாபாவாழ்விலும்

நிகழ்ந்ததோர்க்கதையினை அவரேசொல்லிடக் கேட்டறிகையிலே இன்பம்விளைத்து
பக்தியையூட்டி நம்பிக்கைவளர்த்து நம்மைக்காத்திடும் நிகழ்வினைக்காண்போம்::

'தாகம்'::

‘முன்னொருநாளில் நால்வர்நாங்கள் சாத்திரநூல்களைப் படித்திடும்வேளையில்
பிரம்மம்குறித்து உற்சாகமாக எங்களுக்குள்ளே விவாதம்செய்தோம்.

'அடுத்தவருதவியை நாடிச்செல்லாமல் அவரவரான்மாவை அவரவர்மட்டுமே
உயர்த்திடவேண்டும்' -எங்களிலொருவர் இவ்விதம்சொல்லிட அடுத்தொருவரோ,

'மனதையடக்கி, யோசனைஎண்ணம் இவற்றைத்துறந்து இருப்பவனெவனோ
அவனேயுலகில் பெருமைபடைத்தவன்; நம்மையன்றி வேறேதுமிந்த

உலகினிலில்லை' என்றேசொன்னதும், மூன்றாமவரும் தம்கருத்தாக,
'மாறிடுமுலகினில் எதுநிலைஎதுஇலை என்பதையுணர்ந்து, அருவமேநிலையெனும்

மெய்யினைப்பகுத்து உணர்தலேசிறப்பு' என்பதைக்கேட்ட நான்காமவரும்,
'நூலறிவாலேதும் பயனிங்கில்லை; உலகக்கடமையைச் சரிவரச்செய்து

குருவேகடவுள் என்பதையுணர்ந்து உடல்பொருளாவி அனைத்தையுமவரது
பாதங்களிலே நம்பிக்கையுடனே அளித்திடல்வேண்டும்' எனவேபகர்ந்தார். [1690]

இவ்விதமாகப் பேசிக்கொண்டே மெத்தப்படித்த நால்வர்நாங்களும்
கடவுளைத்தேடிக் கானகம்புகுந்து அலையத்தொடங்கிட, எங்களில்மூவர்

பிறர்துணையின்றி அறிவின்துணையொடு சென்றிடும்வேளையில், எருமையின்மீது
தானியமேற்றி வணிகம்செய்யும் வனஜாரியொருவன் எதிரேவந்தான்.

'வெப்பமதிகமாய் இருக்குமிவ்வேளையில் எதனைத்தேடிச் செல்கின்றீர்கள்?'
என்றவன்கேட்க, நேரடிபதிலைக் கூறிடமனமின்றி, ஏதோபதிலை

அவனிடம்சொன்னதும், 'காட்டினைமுற்றிலும் அறிந்துக்கொள்ளாமல் திசையறிவின்றி
இவ்விதமலைவது முறையானதன்று; சென்றிடவிரும்பிடின், வழிகளறிந்த

வழிகாட்டியொருவரைத் துணையாய்க்கொள்வதே சுடும்வெயில்வேளையில் நல்வழியாகும்;
தேடும்இரகசியம் சொல்லிடவேண்டாம்; ஆயினுமிங்கே என்னுடனமர்ந்து

உணவினையுண்டு, தண்ணீரருந்தி இளைப்பாறியதும் மேலும்செல்லலாம்'
என்றவன்அன்பாய்ச் சொன்னதைக்கேட்டும், அவனைவிடுத்து மேலேதொடர்ந்தோம்.

அறிவேதுணையாய் இருந்திடும்போது வழித்துணையெவரும் தேவையுமில்லை
என்றேநினைத்தோம். ஓங்கியுயர்ந்த மரங்கள்நிறைந்துப் பரந்தவனத்தில்

வழியினைத்தவறி இங்குமங்குமாய் எங்கோஅலைந்து அதிர்ஷ்டவசமாய்க்
கிளம்பியயிடமே வந்துசேர்ந்திட, அதேவனஜாரியை மீண்டும்கண்டோம்.

"சொந்தபுத்தியை மட்டுமேநம்பி வழியினைநீங்கள் தவறவிட்டீர்கள்.
சிறிதோபெரிதோ எதுவானாலுமே தகுந்தவழியைக் காட்டிடவொருவர்

என்றும்நமக்குத் தேவையாகிறது. பசியுடனெதையும் தேடிடும்போது
வெற்றியடைவதும் மெத்தக்கடினம். வழியினிலெதிர்ப்படும் எவரும்நம்மைச் [1700]

சந்திப்பதென்பதும் இறைவனினாணையே. தந்திடுமுணவை மறுத்தலுந்தவறு.
கிடைத்திடும்முணவும் வெற்றியின்அறிகுறி" என்றவர்சொல்லியே உணவினையெடுத்து

எம்முன்வைத்து அமைதியும்பொறுமையும் காத்திடச்சொல்லி அன்புகாட்டினார்.
இத்தனைசொல்லியும் என்னுடன்வந்தவர் அவற்றைமறுத்துச் சென்றிடவிழைந்தனர்.

பசியுந்தாகமும் நிரம்பியநானோ வனஜாரிதந்ததை மகிழ்வுடனேற்றேன்.
உருவினைக்கண்டிவர் தாழ்ந்தோரென்றே மற்றவர்நினைத்தும் நானோஅவரது

அன்பினிலுருகி, பேதமின்றியே உணவினையேற்பதும், மேலோர்கீழோர்
எனும்நினைப்பின்றியும் இருப்பவரெவரோ அவரே மேலும் உயர்த்தப்படுவர்

எனத்தெளிவடைந்து, அவரெனக்களித்த ரொட்டியும்நீரும் வாங்கிப்பருகினேன்.
அவ்விதம்யானும் செய்தக்கணமே பெரும்பேரதிசயம் ஒன்றுநிகழ்ந்தது!

எங்கள்குருவே எம்முன்வந்து நடந்ததைப்பற்றிய விவரம்கேட்டார்!
நிகழ்ந்தவனைத்தையும் நானும்சொன்னதும் 'என்னுடன்வந்திட சம்மதிப்பீரா?

அப்படிவந்திடின் வேண்டியயாவையும் நான்காட்டிடுவேன். நம்பிக்கைவைத்து
சொன்னதைக்கேட்டிட வெற்றியும்பெறுவீர்' என்றவர்கூறிட, அதனைக்கேட்டும்

எம்முடன்வந்தவர் அவரைவிட்டு அகன்றுசென்றிட, நான்மட்டுமே
அவரைவணங்கி அவர்பின்சென்றேன். அருகிலிருந்தக் கேணியொன்றினில்

என்கால்களைக்கட்டி, அங்கேயிருந்த மரக்கிளையொன்றில் தலைக்கீழாக
நீர்மட்டத்துக்கு மூன்றடிமேலே தொங்கவிட்டவர் எங்கோசென்றார்.

சிலமணிநேரம் கழித்தவர்த்திரும்பி,கிணற்றிலிருந்து என்னையெடுத்து
'எப்படியிருந்தது?' என்றவர்கேட்டார். 'பேரானந்தப் பெருநிலையதனில் [1710]

யானுமிருந்தேன். சொல்லிடவொண்ணா நிலையதைச் சொல்லவும்மொழியிலை'
எனநான்சொன்னதைக் கேட்டதுமென்குரு மகிழ்ச்சியடைந்துத் தன்னுடன்கொண்டார் .

[நாலைந்துமணிநேரம் தலைக்கீழாகத் தொங்கவிட்டதை ஸமாதிநிலையைக்
குறித்திடும்ஓர்வித ரூபவிளக்கமாய்க் கொண்டுணர்ந்திட வேண்டுமிங்கே!

புலன்வழியாகவும் ஆன்மவழியாகவும் இருவகையுணர்வுகள் உணர்ந்திடக் கூடும்.
இலட்சியமடையப் புலன்களும்,மனதும் அவரவர்ஆசையை அடைந்திட உதவும்.

இன்பமும்துன்பமும் தனித்தோ,கலந்தோ புலன்வழிவந்தும் பேரின்ப நிலையை
அவைகள்தாரா. புலன்,மனவழியே தோன்றிடும்ஆசையைப் பொய்யென மறுத்து

அதற்குஎதிராய்த் திசைத்திருப்பியே தலைக்கீழான நிலையைத்தந்திட
உள்முகமாக ஆன்மசங்கமம் பெற்றிடும்போது சொல்லுக்கடங்கா

அளவிடமுடியாப் பேரின்பப்பெருநிலை தந்திடும்மகிழ்வை சொல்லிடப்போமோ!
'பேரானந்தப் பெருநிலையதனில் யானுமிருந்தேன். சொல்லிடவொண்ணா

நிலையதைச் சொல்லவும்மொழியிலை' என்னும்மொழிகள் ஸமாதிநிலையில்
இவரையழுத்திய குருவருளென்பதே இந்நிலைதந்திட்ட அரியவிளக்கமாம்.]

குஞ்சினைப்பேணும் தாய்ப்பறவைபோல் அன்புடனென்னைத் தன்குருகுலத்தில்
சேர்த்துக்கொண்டார். தாய்தந்தையர்மேல் பாசம்விடுத்து அவரையணைத்து

அவர்முகமொன்றே ஒவ்வொருகணமும் பார்த்திருக்கவே நானும்விரும்பினேன்.
திருமுகம்காணாக் கண்களிருந்தும் பயனிலையென்றே நானுமுணர்ந்தேன்.

ஒருமுறையங்கே நுழைந்தவரெவரும் வெறுங்கையுடனே திரும்புவதில்லை.
உற்றார்உறவும் வீடும்செல்வமும் அனைத்துமேயெனக்கு குருவேயானார். [1720]

புலன்களனைத்தும் கண்களில்தேங்கி ஒருமுகப்பார்வையாய் அவரிடம்நின்றன.
அவரையன்றி வேறெவரையுமே மனம்நினையாமல் மனமும்புத்தியும்

அசையாநின்றதால் பேச்சுணர்வற்று அமைதியாகவே அவரைவணங்கினேன்.
இவ்விதமில்லாப் பிறகுருகுலங்களில் ஞானம்வேண்டியே காலமும்பொருளும்

உழைப்பும்சிந்தி பலரும்சென்று முடிவினில்பெறுவதோ வருத்தம்மட்டுமே!
தன்னிடமிருக்கும் இரகசியஞானம் நேர்மைபற்றியே அவ்விடமிருக்கும்

குருமார்பலரும் தம்பட்டமடித்து காட்சிப்பொருளாய்க் காட்டிக்கொள்வர்!
தன்புகழ்பாடியே அவர்கள்சொல்லிடும் சொந்தமொழிகளால் அடியவரெவரும்

தெளிவும்பெறாமல் தன்னிலையறியா நிலையும்பெறாமல் தவித்துநிற்பர்.
பயனெதுமின்றி நன்மையும்தராத குருமாரிவரால் யாதும்பயனிலை.

எனக்குவாய்த்த என்குருமஹராஜ் இவர்களுக்கெல்லாம் மாறுபட்டவர்.
அவரருளாலே முயற்சியோபடிப்போ எதுவுமேயின்றி ஞானம்பெற்றேன்.

தேடாமலேயான் வெள்ளிடைமலைபோல் அனைத்துமுணர்ந்ததால் 'தலைகீழ்த்தொங்கல்'
தந்தவோர்மகிழ்வை குருவினருளால் எனக்குக்காட்டிய அதிசயம்நிகழ்ந்தது.

கதையில்சொல்லிய நால்வரில்முதல்வன் எதனைச்செய்வது
எதனைவிடுவது என்னும்சடங்குகள் முறையாயறிந்த கர்மகர்த்தா.

ஞானப்பெருமையில் மிகவும்ஊறிய இரண்டாமவனோர் ஞானியாவான்.
அனைத்தும்புரிவது இறையருளாலெனும் பக்தியிலாழ்ந்தவன் மூன்றாமவனும்.

இவர்கள்மூவரும் கடவுளைப்பற்றி வாதம்புரிகையில் முறையாய்வழியினைக்
காட்டுதலில்லா அறிவுடனிறைவனைத் தேடிக்கொண்டு வனத்திலலைந்தார். 1730]

அறிவுக்கூர்மையும் பற்றின்மைக்குணமும் ஒருங்கேசேர்ந்த ஸாயிஅந்தநான்காமவர்.
பிரம்மவுருவேத் தானாயிருந்த ஸாயிபாபாவும் முட்டாள்தனமாய்

ஏனிப்படிநடந்தார் என்னும்கேள்வி சிலரதுமனத்தில் எழும்பிடக்கூடும்
சாதிமதபேதம் சற்றும்பாராது கீழோனெனப்படும் வனஜாரிமனிதரைக்

மக்களின்நன்மையைக் கருத்திற்கொண்டும் அடியார்தம்மைப் பின்பற்றிடவுமே
'உணவேகடவுள்' என்பதைக்காட்டி இவ்விதம்ஸாயி ஏற்றுக்கொண்டார்.

உணவினைஏற்கா மற்றமூவரும் வருந்தியநிலையையும் குருவெனவொருவரைக்
கொண்டாலன்றி ஞானமடைவது இயலாதென்பதையும் மேலுமுணர்த்தினார்.

மனதினைத்தூய்மை செய்வதற்காகப் பெற்றோர்,குருவை வழிபடவேண்டும்.
புனிதகிரந்தம் கற்றுணர்ந்தோதி மற்றவர்கட்கும் கற்பிக்கவேண்டும்

தைத்ரீயோபனிஷத் என்னும்ஸ்ருதியும் இந்தக்கருத்தையே வற்புறுத்திடுது
இவ்விதமின்றி தன்னையறிதலும் இயலாதென்பதை ஸ்ருதியும்சொல்லும்.

உணர்வோமனமோ புத்தியோகொண்டு ஆன்மாவைக்காணுதல் நடவாக்காரியம்
குருவினருளே இதனையறிந்து எண்ணுதலென்பதை நடத்திக்கொடுக்கும்.

வாழ்வும்பொருளும் காமமும்நமது முயற்சியினாலே அடையக்கூடும்
விடுதலையென்பதோ குருவின்வழியால் மட்டுமேயென்றும் அடைந்திடமுடியும்.

ஜோஸியக்காரரும் அரசகுமாரரும் பெருங்கனவானரும் ஏழையும்செல்வரும்,
துறவியும்யோகியும் இசைவல்லுநர்களும் ஸாயிதர்பாரில் தரிசனம்செய்தனர்.

கீழ்ச்சாதியினரும் வந்தனம்செய்து ஸாயியேதமது பெற்றோரென்றனர்.
வித்தைக்காரரும் வில்லுப்பாடகரும் குருடரும்நொண்டியும் நாட்டியக்காரரும் [1740]

விளையாட்டுவீரரும் மசூதிவந்துத் தம்திறன்காட்டி வரவேற்படைந்தனர்.
அவ்விதமாகவே வனஜாரிஅன்பரும் தனக்குவிதித்தப் பாத்திரமேற்றார்.

'உண்ணாவிரதமும், திருமதி கோகலேயும்'::

ஒருநாளும்ஸாயி உணவின்றியில்லை; பிறரையுமவ்விதம் அனுமதிக்கவில்லை.
பசியால்வருந்திட அமைதியையிழப்பார்; எவ்விதம்பிரம்மத்தை அடைந்திடவியலும்?

வயிறுகாய்ந்திடக் கடவுள்சிக்கார்; பட்டினிகிடந்திடப் பாடுதலெங்ஙனம்?
கடவுளையவரும் காண்பதுமெங்ஙனம்? காதினாலவர்புகழ் கேட்பதுமெங்ஙனம்?

உடலுறுப்பனைத்தும் சக்தியுடனிருந்திடக் கடவுளையடைவதும் மிகவுமெளிதாம்.
பட்டினிகிடப்பதோ, அளவுக்கதிகமாய் உணவினையுண்பதோத் தவிர்த்திடல்வேண்டும்.

திருமதிகோகலே என்னும்பெண்மணி திருமதிகனிட்கர் என்னும்பாபா அடியவரிடமிருந்து
அறிமுகக்கடிதம் ஒன்றினைக்கொணர்ந்து தாதாகேல்கரைச் சந்திக்கவந்தார்.

அதற்குமுன்தினம் கேல்கரிடத்தில் புனிதநாட்களில் பட்டினிகிடப்பதை
அனுமதிக்கவியலா தெனுமொருமொழியை ஸாயிபாபா சொல்லியிருந்தார்.

தாதாகேல்கர் கூடவந்து திருமதிகோகலே ஸாயிநாதனை
தரிசனம்காண்கையில் 'பட்டினிகிடந்திடத் தேவையுமென்ன?' எனுமொருகேள்வியை

கேட்டப்பின்னர் 'தாதாபட்’டின் இல்லம்சென்று பூரண்போளியைத் தயார்செய்து
குழந்தைக்குக்கொடுத்து நீயும்சாப்பிடு' என்றேசொல்லி அனுப்பிவைத்தார்.

பண்டிகைநாளாம் அன்றையத்தினத்தில் வீட்டுவிலக்கம் ஆகியிருக்கவே
'திருமதிகேல்கரால்’ சமைக்கமுடியா நிலைமையையறிந்தேஇவ்விதம்சொன்னார்.

பாபாசொற்படி அவ்விடம்சென்றே பண்டம்சமைத்து சிறுவர்க்குத்தந்து
தானுமுண்ட இந்தக்கதையால் பெரும்படிப்பினையை பாபாதந்தார்! [1750]

'பாபாவின் எஜமானர்'::

பாலப்பருவக் கதையொன்றினையே ஸாயிபாபா ஓர்முறைசொன்னார்:
‘சிறுவனாயிருக்கையில் உணவுக்காகவேலைத்தேடி பீட்காவனுக்கு நானும்சென்றேன்.

எம்பிராய்டரி வேலைகிடைத்திட துன்பம்பாராது வேலையிலாழ்ந்தேன்
வேலைத்திறனைக் கண்டமுதலாளி எந்தன்மீது மிகமகிழ்வடைந்தார்.

என்னுடன்கூட வேலைசெய்த மூவரில்முதல்வன் ஐம்பதுரூபாயும்
இரண்டாமவனும் நூறுரூபாயும் மூன்றாமவனோ நூற்றைம்பதும்

ஊதியம்பெற்றிட அவர்களைவிடவும் இருமடங்காக எனக்குத்தந்தார்
அறுநூறுரூபாயும் தலைக்குடர்பனும் உடலுக்குஷேலாவும் எனக்குத்தந்து

என்எஜமானர் அன்புசெலுத்தி எனைநேசித்தார்; என்னைத்துதித்தார்.
எனக்குத்தந்ததை பத்திரப்படுத்தி நெடுநாளவற்றை நான்வைத்திருந்தேன்.

மனிதரளிப்பது நிலைப்பதுமில்லை; அவையெல்லாமும் முழுமையுமல்ல.
என்முதலாளியாம் இறைவனளிப்பதோ காலம்கடந்தும் நிலைத்துநிற்பது.

அவர்தரும்பரிசினை வேறெந்தப்பரிசுடன் ஒப்பிடக்கூடுமோ! 'எடுத்துக்கொள்க;
எடுத்துக்கொள்க' என்றேயிறைவன் சொல்லிடும்போது, என்னிடம்வருபவர்

'கொடு,கொடு'என்றே வேண்டுவர்; நான்சொல்லுவதினைக் கேட்பதுமில்லை.
என்எஜமானரின் கஜானாமுழுதுமாய் நிரம்பியிருக்கநான் கூறுவதுமிதுவே!

வண்டிப்பாரம் நிறையயிதனை எடுத்துச்செல்க! புண்ணியம்செய்தவர்
செல்வமிதனை நிரப்பிக்கொள்க! இறைவனின்செயல்முறை விசித்திரமானவை

என்னைப்பற்றிய கவலையுமில்லை; என்னுடல்மண்ணுடன் கலந்து கரைந்திடும்.
இருக்குமிந்நேரம் மீண்டும்வருமோ? மாயையின்தொல்லையால் எங்கோ செல்கிறேன்; [1760]

எங்கோஅமர்கிறேன். அப்படியிருந்தும் என்னன்பர்க்காக ஆசைக்கொண்டு
அல்லற்படுகிறேன். முயற்சிசெய்பவர் அதற்கானபழத்தை அறுவடைசெய்வார்!’

இம்மொழிகேட்டிடும் அன்பர்யாவரும் விலைமதிப்பில்லா ஆனந்தமடைவர்!
பாபாசொல்லிய இக்கதைகேட்டிடும் அடியவர்யாவரும் நல்லருள்பெறுவர்!. [1762]

ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.