Thursday, May 29, 2014

Sai Charita - 30


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 30


1. வணியைச் சேர்ந்த காகாஜி வைத்யா, 2. பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்.

ஷீர்டிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக் குருவிகள் மேலுமிருவரின்
கதைகளின்விவரம் இவ்விலம்பகத்தில் விரித்துச்சொல்லிட நாமும்கேட்போம்.-

முன்னுரை:

கருணையின்வடிவாம் ஸாயிராமன்தம் அடியவரிடத்தில் அளவிலாப்பாசமும்
நேசமும்கொண்டு தரிசனம்தந்து இகபரவாழ்வின் பயத்தைத்தீர்க்கிறார்.

தம்மடியவர்க்கு விடுதலைதந்திட அருவவடிவினை விட்டவர்நீங்கி
மானிடவுருவில் தாம்பிறப்பெடுத்து 'தன்னையறிந்திடும்' வழிநெறிதந்தார்.

ஞானியர்வருகையின் காரணம்தமது அடியவர்க்கெல்லாம் தன்னுணர்வளித்து
விடுதலையென்னும் முக்தியைத்தரவே. ஸாயிநாதர்க்கிது தவிர்க்கவொண்ணாது!

பண்டிதர்பலரும் மஹிமையறிந்துப் புனிததலங்களை விட்டிவண்வந்து
அவரதுசபையில் வேதங்களோதி மந்திரம்ஜெபித்து வந்தனம்புரிவர். [1570]

முடிவுமில்லாது வரையறையுமின்றி அனைத்துஜீவருளும் ஆவிர்ப்பவித்து
ஸர்வவியாபியாய் சாயிபாபா எங்கணுமுறையும் மஹிமையுடையவர்

இவ்வகையறியா பலவீனர்நாமோ பக்தியென்பதே அறியாதிருந்தும்
எவர்கைவிட்டாலும் ஸாயிவிடாரெனும் நம்பிக்கையென்பதைத் தந்தவர்காக்கிறார்.

தம்மடியாரைக் கைவிடமாட்டார் எனுமொருவாக்கினால் ஞானமருள்கிறார்.
அடியவர்வேண்டிடும் அனைத்தையும்தந்து பக்தியைவளர்த்து ஆறுதல்தருகிறார்.

இத்தகுஸாயி காட்டியக்கருணையே இச்சரிதத்தை நமக்குத்தந்தது
ஹேமாத்பந்த்தொரு கருவியாயமைந்திட ஸாயிபாபா இவ்வருள்புரிந்தார்.

எவ்விதக்கவலையும் தமக்கில்லாமல் இதனையெழுதிடும் ஆற்றலைத்தந்த‌தும்,
முன்வினைப்பயனால் தனக்கிப்புண்ணியம் வாய்த்ததாய்ஹேமாத் பந்த்தும்சொல்கிறார்.

பின்வரும்கதையில் சொல்லிய அமுதினைப் பருகிடும்பாக்கியம் பெற்றவரனைவரும்
ஸாயியின்பெருமையும் எங்கும்நிறைந்திடும் தன்மையுமுணர்ந்து மகிழ்ச்சியடைவார்.

விவாதம்செய்வோர் இங்கேவேண்டாம்; ஸாயியின்மீது அன்புமார்வமும்
குறைவறக்கொண்டு ஞானியர்சேவகர் என்போர்மட்டுமே இதன்பொருளுணர்வார்.

கற்பகத்தருவாய் அடியார்கொள்வார்; கற்பனைக்கதையென மற்றவர்சொல்வார்.
லீலைகள்தந்திடும் அமுதைப்பருகுவோர் அறியாமைவிடுத்து முக்தியையடைவார்.

இல்லறவாசிகள் மனநிறைவடைவர்; சாதகர்க்கெல்லாம் லட்சியம்நிறையும்.
இங்கேசொல்லிடும் கதையின்பொருளை நன்குணர்ந்திடவே அனைவரும்கேட்போம்.

'காகாஜி வைத்யா'::

[நாசிக்]வணியில்வசித்த காகாஜிவைத்யா சப்தஷ்ரிங்கி தேவிஉபாசகர்.
வாழ்க்கையில்நிகழ்ந்த துயரங்களாலவர் அமைதியிழந்து வாடியிருந்தார். [1580]

ஒருநாள்மாலை ஆலயம்சென்று தேவியைவணங்கி துயரைத்தீர்த்திட
வேண்டியபோது அவரதுகனவில் சப்தஷ்ரிங்கி இரவினில்வந்து

'பாபாவிடம்நீ சென்றிடும்வேளையில் மனக்குறைதீரும்' எனச்சொல்லிமறைந்தாள்.
யாரிந்தபாபா எனக்கேட்கும்முன்னரே தூக்கம்கலைந்து விழித்தெழுந்தார்.

த்ரயம்பகேச்வரச் சிவனேயிந்த பாபாஎன்றவர் தான்தீர்மானித்து
த்ரயம்பக்சென்று பத்துநாட்கள் அங்கேதங்கி காலையில்குளித்ததும்

'ருத்ரம்'ஓதி அபிஷேகம்செய்து பூஜைகள்செய்தும் பலனேதுமில்லை.
இல்லம்திரும்பி மீண்டும்தேவியை உருகிவேண்டிட, கனவில்வந்த

தேவியுமவரிடம், 'பாபாவெனவே நானும்சொன்னது ஷீர்டிவாழும்
ஸமர்த்தஸாயியை! த்ரயம்பகேச்வரம் ஏன்நீசென்றாய்' என்றவள்மறைந்தாள்.

அந்தக்கணம்முதல் ஷீர்டிசென்று ஸாயியைக்கண்பதே காகாஜியின்
குறிக்கோளானது. மெய்விருப்புடனே ஞானியக்காணும் ஆர்வம்கொண்டால்

ஞானியும்கடவுளும் தாம்முன்வந்து அடியவராசையை நிறைவேற்றிடுவார்.
குருவருளின்றி எவரும்தாமே காணுதலென்பது இயலாதவொன்று.

விருந்துக்கழைத்தவர் வரும்விருந்தாளியை வரவேற்றிடவே ஆயத்தம்செய்வார்.
அதேபோலவே காகாஜிவரவும் திட்டப்படியே தொடங்கலாயின.

'ஷாமாவின் வேண்டுதல்கள்'::

ஷீர்டிசென்றிட இவருமெண்ணிய அதேவேளையில் அவரையழைத்துக்
கூட்டிச்சென்றிட இன்னொருநபரே அவரைத்தேடி 'வணி'க்கேவந்தார்.

ஸாயியின்நெருங்கிய அடியவரான ஷாமாயென்பவர் தன்னிளம்வயதில்
நோய்வாய்ப்பட்டு வருந்தியவேளையில் நலமுறவேண்டி அவரதுதாயார் [1590]

வணியிலிருக்கும் தம்குலதெய்வம் ஸப்தஷ்ரிங்கி தேவியைவேண்டினார்.
தன்மகன்குணமாய் ஆனதுமுடனே ஆலயம்வந்து திருவடியதனில்

சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டார். ஒருசிலஆண்டுகள் கழிந்தப்பின்னர்
தன்னிருமுலைகளில் சருமநோய்போல் ஏதோவருத்திட, மீண்டும்தேவியை

மனதில்நினைத்து வேண்டிக்கொண்டார். ஆயினுமிவ்விரு வேண்டுதல்களும்
நிறைவேற்றாமலே காலம்சென்றிட, மரணப்படுக்கையில் இவற்றைநினைந்து

மகனிடம்கூறி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதாக சத்தியம்வாங்கினார்.
ஷாமாவுமிதனை நிறைவேற்றாமல் ஒருசிலதினங்களில் மறந்தும்போனார்.

இவ்விதம்முப்பது ஆண்டுக்காலம் கழிந்தப்பின்னர் ஜோதிடரொருவர்
ஷீர்டிவந்து தங்கியபோது பூ[B]ட்டிமுதலாம் பிறர்க்குச்சொன்ன

கணிப்புகள்யாவும் சரியாயிருத்தலைக் கண்டஷாமாவின் சகோதரரான
பாபுஜியென்பார் ஜாதகம்பார்த்திட, தாயின்வேண்டுதல் பூர்த்தியாகாமல்

இருப்பதைக்கேட்டதும், இனியும்காலம் தாழ்த்தலாகாது எனத்தீர்மானித்து
தட்டானையழைத்து ஒருஜதைவெள்ளி ஸ்தனங்களையுமே செய்யச்சொன்னார்.

மசூதிசென்று ஸாயியைப்பணிந்து நேர்த்திப்பொருட்களைப் பாதத்தில்வைத்து
'நீரேயெனக்கு ஸப்த்ஷ்ரிங்கியும்! ஏற்றுக்கொண்டு விடுதலைதருக'

எனவேண்டிடவும், பாபாஅவரிடம் ‘வணிக்கேசென்று நேரேயவற்றை
சமர்ப்பித்தலொன்றே முறை’யெனச்சொல்லி உதியுமளித்து அனுப்பிவைத்தார்.

பூசாரியில்லம் இவர்சென்றவேளை காகாஜியுமங்கே கவலையுடனே
அமர்ந்திருந்தார். யாரிவரென்றே காகாஜிகேட்க, ஷீர்டியிலிருந்து [1600]

வந்தவரென்றுத் தெரிந்தவுடனே காகாஜியவரைக் கட்டியணைத்து
ஸாயிலீலைகள் பலவும்கேட்டு தேவிகோவிலுக்குக் கூட்டிச்சென்று

நேர்த்திக்கடன்களை சமர்ப்பிக்கச்செய்து இருவருமாக ஷீர்டிகிளம்பினர்!
மசூதிசென்று ஸாயியைக்கண்டதும் கண்ணீர்பெருகிடக் கால்களில்வீழ்ந்தார்.

தேவியருளியக் கூற்றின்படியே ஸாயியைக்கண்டதும் மனதிலிருந்த
சலனம்மறைந்து அமைதியாகிட தனக்குளிவ்விதம் எண்ணிடலானார்:

"என்னவோர்சக்தி! பாபாஒன்றும் பேசிடவில்லை. கேள்வியுமில்லை
பதில்களுமில்லை. ஆசிகளெதுவும் அளிக்கவுமில்லை. தரிசனமொன்றே

இவ்விதமகிழ்வை எனக்குத்தந்தது. தரிசனத்தின் பெருமையேயிதுவும்!"
கவலைகள்மறைந்து கலப்பிலாவின்பம் அதிகமடைந்து அமைதியும்பெற்றார்.

பனிரெண்டுநாட்கள் தங்கியபின்னர் பாபாவைப்பணிந்து உதியும்ஆசியும்
நிறைவாய்ப்பெற்று மனவமைதியுடனே சொந்தஊருக்குத் திரும்பிச்சென்றார்.

'ராஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த்'::

விடியற்காலையிற் கண்டிடும்கனவு விழித்திடும்போது நனவாகிவிடும்
எனுமொருநியதி உலகினிலுண்டு; ஆயினும்ஸாயி தந்திடும்கனவோ

இம்முறைக்கொவ்வா தென்னும்மெய்யினை விளக்கிடும்நிகழ்விது.
ஒருநாள்மாலை ஸாயிபாபா காகாசாஹேப் தீக்ஷித்தையழைத்து

ராஹாதாசென்று நெடுநாள்காணா ஆவலினாலே குஷால்சந்த்தை
அழைத்துவந்திடச் சொல்லியனுப்பினார். காகாசாஹேபும் குதிரைவண்டியில்

உடனேகிளம்பி ராஹாதாசென்று குஷால்சந்திடம் தகவலைச்சொன்னார்.
அதனைக்கேட்ட குஷால்சந்தோ ஆச்சரியத்தாலே கண்கள் விரிந்தார்! [1610]

அன்றையமதியம் உணவின்பின்னே உறக்கம்கொள்கையில் அவரதுகனவில்
பாபாதோன்றி ‘உடனேஷீர்டி வருக’வென்றுச் சொன்னதைச்சொல்லித்

தாமும்ஷீர்டி வருவதற்காக ஆவலாயிருப்பதைத் தெரிவித்ததுடன்
தம்மிடம்வண்டி இல்லாக்காரணத்தால் தனதுமகனை ஷீர்டிசென்று

பாபாவிடத்தில் தெரிவிக்கச்சொல்லி அனுப்பியிருந்தார். கிராமஎல்லையில்
தீக்ஷித்தின்வண்டியைக் கண்டபுதல்வரும் விஷயமறிந்து வண்டியிலேறி

இருவருமாக ராஹாதாதிரும்பினர். ஸாயியினிந்த லீலையைகண்ட
குஷால்சந்த்தும் மனமிகமகிழ்ந்து உணர்ச்சிப்பெருக்கில் நெகிழ்ந்துபோனார்.

'பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்'::

மும்பையைச்சேர்ந்த பஞ்சாபிபிராமணர் ராம்லாலென்பவர் கனவொன்றுகண்டார்.
யாரோஓர்மஹான் கனவினில்வந்து ஷீர்டிவந்திடச் சொன்னதைக்கண்டார்.

யாரிந்தமஹானோ? எங்கிருக்கின்றாரோ? எனவேஅறியா ராம்லாலும்
என்னசெய்வதெனத் திகைத்திட்டப்போது, "பேட்டிக்கழைத்தவர் தாமேயெல்லா

ஏற்பாடுகளையும் செய்திடல்போல", ஸாயிலீலையும் இதனில்நிகழ்ந்தது!
அன்றுமாலையே சாலையில்மெதுவாய் நடந்திடும்போது வழியிற்கண்டக்

கடையொன்றினிலே ஸாயியின்படத்தைக் கண்டவர்வியந்து கனவிற்கண்ட
மஹானைப்போலவே ஒத்திருப்பதை அறிந்துமகிழ்ந்து ஷீர்டிவாழும்

ஸாயிபாபாவே இந்தமஹானென விசாரித்தறிந்து உடனேகிளம்பி
ஷீர்டிசென்றுஸாயியைக்கண்டு இறுதிக்காலம்வரை அங்கேதங்கினார்!

தரிசனம்தந்திட இவ்விதமாகத் தமதுபக்தரை பாபாகொணர்ந்து
இகபரத்தேவைகள் எல்லாவற்றையும் ஸாயிபாபா பூர்த்திசெய்தார். [1620]

ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.