Monday, May 19, 2014

Sai Charita - 6


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்." 
 [மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]

(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 6 


ஶ்ரீராம நவமித் திருவிழாவும், மசூதி ரிப்பேர்களும் - குருவின் கைத்தீண்டலினால் ஏற்படும் பயன் - ஶ்ரீராம நவமித் திருவிழா - அதன் ஆரம்பம், மாறுதல்கள் முதலியன - மசூதி ரிப்பேர்கள்
***********

ஶ்ரீராம நவமி ::

தலைப்பினைச் சொல்லுமுன்னே ஸத்குருவைப் பற்றியொரு
முன்னோடிக் குறிப்புகளை இங்கேநான் தருகின்றேன்

'குருவின் கை தீண்டலினால் ஏற்படும் விளைவு [பயன்]' ::

ஸத்குரு என்னுமொரு உண்மையிங்கு வழிகாட்டியாய்
எமக்கெல்லாம் இருக்கையிலே பரகதிக்குக் கவலையில்லை

ஸத்குரு எனும்சொல்லே ஸாயிபாபா நினைவுதரும்
என்முன்னே அவர்நின்று 'உதி'யினையே இடுமாறும்

என் தலையில் கைவைத்து ஆசிகளை நல்குதல்போல்
தோற்றமொன்று எனக்கிங்கேத் தெளிவாகத் தெரிகிறது [220]

அன்பினாலே நெஞ்சுபொங்கி கண்களில்நீர் வழிகிறது
திருக்கரத்தின் தீண்டலதன் சக்தியினை உணர்கிறது

உடலழிந்து பாவம்கழிந்து மனமமைதி பெறுகிறது
சுந்தர ரூபமது தொண்டைக்குழி யடைக்கிறது

ஆறாகக் கண்ணீரின் வெள்ளமிங்கு பாய்கிறது
பிரம்மமெனும் உணர்வினையே அதுதூண்டி விடுகிறது

நான்நீ எனும்பேதம் அப்போதே மறைகிறது
நூலடிகள் அனைத்திலுமே ஸத்குருவே வருகின்றார்

ராமனாகிக் கிருஷ்ணனாகி கதைகளிலே நிறைகின்றார்
ராமாயணம் பாகவதமும் இவர்நினைவே ஊட்டிடுது

எழுதாமல் எழுதுகின்றேன் அவராணை உந்துதலால்
அஹங்காரம் தலையெடுக்க அவருடனே அழுத்துகிறார்

அவர்சொல்லே வேதமெனத் தமதாணை பணிக்கின்றார்
மனநிறைவாய் யானெழுத அவரருளே காரணமாம்

நாலுவகை இன்பமெலாம் ஸாயியினால் நிறைவேறும்
நாலுவகை வழிகளுமே கடவுளிடம் கொண்டுசெல்லும்

பக்திவழி கடினமதாய் நமைவருத்தித் தடைசெய்யும்
ஸாயிநாதன் அருளாலே முட்களெல்லாம் பூவாகும்

பிரம்மமென்றும், மாயையென்றும் உலகமென்றும் மூவிதமாய்ச்
சொல்லுகின்ற அனைத்துமே ஒன்றென்று உரைக்கின்றார் [230]

'இல்லாமை என்பதுவே என்னடியார் இல்லிலில்லை
எம்மடியார் நலனொன்றே எனக்கென்றும் கவனமாகும்

உணவுடைமை இதற்காக செயலெதுவும் செய்யவேண்டாம்
ஏதேனும் வேண்டுமெனில் இறைவனையே கேளுங்கள்

இவ்வுலக மரியாதை எல்லாமும் விட்டிடுங்கள்
இறையருளை வேண்டுவதே நும்பணியாய்க் கொண்டிடுங்கள்

அவரெதிரில் நும்பெருமை அடைந்திடவே முயலுங்கள்
இறைரூபம் மனதினிலே திடமாகப் பயிலுங்கள்

வேறெந்தப் பொருட்களிலும் கவனத்தை நாடாமல்
இறைவனுக்கே புலனனைத்தும் அர்ப்பணமாய்க் கொள்ளுங்கள்

எனைநினைந்து எப்போதும் நீங்களிங்கே செயல்பட்டால்
அமைதியும் அடக்கமும் தானாகக் கைகூடும்

அலைகின்ற மனமென்றும் ஒன்றாக ஆவதில்லை
அதையுணர்ந்து நல்வழியில் நேராகச் செல்லுங்கள்'”

இதுகாறும் சொன்னபின்னர் திருக்கதையைத் தொடர்கின்றேன்
ஶ்ரீராம நவமிவிழா தொடங்கியகதை சொல்கின்றேன்

'தோற்றம்' ::

'கோபல்ராவ் குண்ட்'டென்பார் மகவின்றி வாடிநின்றார்
பாபாவின் அருளாலே ஆண்மகவு தான்பெற்றார்

மகிழ்ச்சியினைக் காட்டும்வண்ணம் விழாவெடுக்க நினைத்திட்டார்
பாபாவின் அருளாசி வேண்டியவர் நாடிநின்றார் [240]

ஆசிபெற்ற பின்னரும் அதிகாரி மறுத்துவிட்டார்
பாபாவின் ஆசிமுன்னே அவையெல்லாம் எம்மாத்திரம்?

ஶ்ரீராம நவமியன்று விழாக்காண முடிவாச்சு
'உருஸ்'தினம் இந்நாளில் கொண்டாட முடிவாச்சு

இந்துமுஸ்லீம் இருவரையும் ஒன்றாக்கும் வழியாக
இந்நாளில் இதுபோல கொண்டாட்டம் உருவாச்சு

கொண்டாட்டம் நடைபெறவே முடிவான பின்னாலும்
கஷ்டங்கள் பலவங்கு மேன்மேலும் உருவாச்சு

நீரில்லாக் கிராமத்தில் நீர்வரவே வழியாச்சு
தாத்யாவின் உதவியினால் நீர்வரவும் செஞ்சாச்சு

கடைகளெல்லாம் உருவாகிப் போட்டிகளும் முடிவாச்சு
கொடியொன்றைத் தயார்செய்ய நிமோண்கரும் சம்மதித்தார்

ஊர்வலமாய்க் கொண்டுசென்று மசூதியிலே கொடிநாட்டி
இன்றளவும் இவ்விழாவும் சிறப்பாக நடக்கிறது

'சந்தனக்கூடு ஊர்வலம்' ::

'அமீர்சக்கர் தலால்'லென்னும் இஸ்லாமிய அன்பரினால்
சந்தனக் கூடுஎன்னும் திருவிழாவும் நடந்தேற

அன்றுமுதல் இன்றுவரை எந்தவித இடையூறின்றி
இருவிழாவும் விமரிசையாய் இன்றளவும் நடக்கிறது

'ஏற்பாடு' ::

ஸாயிபாபா அடியவர்க்கு இந்நாளே புனிதநாளாம்
அனைவருமே பங்குபெற்று சிறப்பாகச் செய்துவந்தார் [250]

தாத்யாவின் மேற்பார்வை வெளிவேலை எனச்சொன்னால்
ராதாகிருஷ்ன மாயியோ உள்வேலை கவனித்தார்

மசூதியைச் சுத்தம்செய்து தூயவெள்ளை வண்ணம்பூசி
அன்னதானம் அனைத்திலுமே இவர்பங்கு பெரிதாகும்

''உருஸ்'ஸை ஶ்ரீராமநவமித் திருவிழாவாக மாற்றுதல்' ::

ஆயிரத்துத் தொளாயிராத்துப் பனிரெண்டாம் ஆண்டினிலே
இவ்விழாவில் ஒருமாற்றம் நிகழ்ந்திட்ட கதையிங்கே

'ஜாகேஷ்வர் பீஷ்மா'வெனும் ஓரன்பர் 'காகாமஹா-
ஜனி'யைப் பார்த்துவொரு வார்த்தை சொன்னார்

ராமநவமிக் கொண்டாட்டம் இந்நாளில் நாம்செய்ய
பாபாவின் அனுமதியைக் கேட்டிடவே வேண்டிக்கொண்டார்

ஹரிகானம் பாடவொரு ஹரிதாஸைத் தேடாமல்
தானங்கே பாடுவதாய் பீஷ்மாவும் தெரிவித்தார்

'சுண்ட்வடா' பிரசாதம் செய்துதர மாயிவந்தார்
பாபாவின் அனுமதியும் உடனேயே கிடைச்சாச்சு

தொட்டிலொன்றை மாயிதர எல்லாமும் தயாராச்சு
நிம்பாரின் மாலையொன்றை பாபாவே தாமெடுத்து

பீஷ்மாவின் கழுத்திலிட்டுக் கீர்த்தனையைத் துவக்கிவைத்தார்
ஶ்ரீராம ஜெயமென்னும் கோஷமங்கு வான்கிளம்ப

குலாலென்னும் சிகப்புப்பொடி நாற்புறமும் தூவலாச்சு
திடீரெனவோர் கர்ஜனையும் அதன்நடுவே கேட்டது [260]

தூவிவிட்ட சிகப்புப்பொடி பாபாவின் கண்படவே
கோபத்தால் பாபாவும் கண்டபடி ஏசலானர்

தீயவெண்ணம் அஹங்காரம் அத்தனையும் களைந்திடவே
பாபாவின் ஏசலிது எனபக்தர் மகிழ்ந்திட்டார்

கோபத்தால் தொட்டிலையே உடைத்திடுவார் எனவெண்ணி
மாயியம்மா அதையகற்ற முனைந்திட்ட வேளையினில்

சாந்தமுற்ற பாபாவும் அதையகற்ற மறுத்துவிட்டார்
அதன்பின்னர் ஆரத்தி பூசனைகள் முடிந்தபின்னர்

தொட்டிலையே அகற்றிடவே பாபாவைக் கேட்டபோது
நாளையின்னும் வேலையுண்டு எனச்சொல்லி சிரித்திட்டார்

மறுநாளில் 'கோபால்காலா' விழாவொன்று முடிந்தபின்னர்
தொட்டிலையே அகற்றிவிட பாபாவும் சம்மதித்தார்

இப்படியாய் 'உருஸ்'விழா 'ராமநவமி' விழாவாச்சு
அதன்பின்னே இதுவின்னும் விமரிசையாய் நடக்கலாச்சு

ஈராண்டு கழிந்தபின்னர் தாஸ்கணுவே இப்பணியை
பலகாலம் தொடர்ந்துவந்து ஹரிதாஸாய்ச் சிறப்பித்தார்

ஆண்டுதோறும் படிப்படியாய் விழாவிங்கு சிறப்பாக
மேன்மேலும் பொருட்களெல்லாம் அதிகமாகக் குவியலாச்சு

அழகான குதிரையும் அருமையான பல்லாக்கும்
வெள்ளியினால் ஆனபலப் பொருட்களெல்லாம் சேரலாச்சு [270]

இதையெல்லாம் கவனியாது பாபாதம் எளிமைகாத்தார்
இந்துமுஸ்லீம் ஒற்றுமையை எந்நாளும் பாதுகாத்தார்

'மசூதி ரிப்பேர்கள்' ::

'கோபால்ராவ் குண்ட்'டிற்கு உதித்தவொரு எண்ணத்தால்
மசூதியைப் பழுதுபார்க்க ஒருதிட்டம் உருவாச்சு

மஹால்ஸாபதி வேண்டுதலால் பாபாவும் அனுமதித்தார்
சாக்குத்துணி விட்டொழித்தோர் ஆசனத்தைக் கொண்டிட்டார்

பல்வேறு கம்பமூன்றி வேலைகளும் நடக்கையிலே
கோபத்தின் வசப்பட்டு பாபாவவற்றைப் பிடுங்கிவிட்டார்

தாத்யாவின் முண்டாசைத் தன்கையால் பற்றியவர்
நெருப்பொன்றைக் கொளுத்தியே தீக்குழியில் இட்டுவிட்டார்

பையினின்று ஒருரூபாய் நாணயத்தை விட்டெறிந்தார்
யாருமவர் பக்கலிலே சென்றிடவும் அஞ்சினரே

தடுத்திடவே முனைந்திட்ட பாகோஜி தள்ளப்பட்டார்
மாதவராவ் எனும்'ஷாமா' கற்களால் அடிக்கப்பட்டார்

ஆனாலும் உடனேயே பாபாவும் சாந்தமானார்
பூவேலை செய்தவொரு முண்டாசை வாங்கிவந்து

தாத்யாவின் தலையினிலே தம்கையால் கட்டிவிட்டார்
காரணத்தை அறியாமல் மாந்தரெல்லாம் திகைத்துவிட்டார்

ஏனிந்தக் கோபம்? ஏனிந்தச் சாந்தம்?
எவரிங்கே அறிவாரோ சொல்லவென்னால் இயலுமோ! [280]

பாபாஓர் இந்துவா? அல்லதுஅவர் முஸ்லீமா எனும்கேள்வி,
அவருடைய யோகசாதனை அடுத்திங்கே இயம்புகிறேன். [281]

ஶ்ரீஸாயியைப் பணிக! அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்!

[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.