Tuesday, May 27, 2014

Sai Charita - 15


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]

(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 15


[நாரத இசைமுறை - சோல்கரின் சர்க்கரை இல்லாத தேநீர் - இரண்டு பல்லிகள்]

ஷீர்டித்தலத்தில் ராமநவமியைக் கொண்டாடும்விவரம், பாடகரொருவரைப்
பெறுவதன்சிரமம் அனைத்தையும்விரிவாய் ஆறாமிலம்பகம் அதனில்கண்டோம்

பாபாஎங்ஙனம் பெருந்தகை'தாஸ்கணு' வசமிதைத்தந்திட அவருமிப்பொறுப்பை எவ்விதம்செவ்வனே ஆற்றிவருகிறார் என்பதன்விவரம் இங்கேகாண்போம் [810]

'நாரத இசை - பந்ததி' ::

ஹரியின்மஹிமையைப் பாடிடும்தாஸர்கள் மேடையிலுயரிய ஆடையாபரணம்தலையினில்'டர்பன்' பட்டுச்சொக்காய், அங்கவஸ்திரம் ஜரிகைவேட்டி

அனைத்துமணிந்து ஆடம்பரத்துடன் கைவளைகுலுங்க மேடையேறுவர்
இதனைப்போன்ற ஆடையணிந்து 'தாஸ்கணுமஹராஜ்' ஸாயியைப்பணிந்தார்

'மாப்பிள்ளைக்கோலம் நல்லாவேயிருக்கு! எங்கேபயணம்?' என்றார்பாபா!
'கீர்த்தனைசெய்திட' எனும்பதில்கேட்டு, 'அனைத்தையும்கழற்று என்றன்முன்னே'

என்றேபாபா சொன்னதைக்கேட்டு, அவ்விதம்செய்து அதற்குப்பின்னர்
இடுப்புக்குமேலே எதுவுமணியாமல் மாலைஒன்றே கழுத்திலணிந்து

சப்ளாக்கட்டைகள் இரண்டுடன்மட்டும் மேடையேறுதலை வழக்கமாய்க்கொண்டார்
மற்றவரணியும் வேடம்போலன்றி எளிமைவழியைத் தான்மேற்கொண்டார்

கீர்த்தனைமுறைகளை ஒழுங்குபடுத்திய நாரதமுனிபோல் உடலிலும்தலையிலும்

எதுவுமணிந்திடாமல் வீணையொன்றையேக் கைகளிலேந்தி ஹரிபுகழ்பாடினார்

'சோல்கரின் சர்க்கரை இல்லாத தேநீர்' ::

அருகினிலிருக்கும் புனேநகரிலும் அஹமத்நகரிலும் பாபாபற்றி
அறிந்திருந்தாலும் கொங்கணத்தில் அவரதுபுகழை இருவர்பரப்பினர்

நானாசாஹேப் சந்தோர்கரின் சொந்தமுயற்சியும், தாஸ்கணுவின்
கீர்த்தனைமஹிமையும் பலரையும்கவர்ந்து பாபாமஹிமையை அறியச்செய்தது

கீர்த்தனைசெய்பவர் புலமையைக்காணவும், ஆடல்பாடல் முறைகளைக்கேட்கவும்

நகைச்சுவையாயவர் சொல்வதைரசிக்கவும் தத்துவஞானத் தெளிவினைப்பெறவும்

பலரும்வந்து பஜனையைக்கேட்டு பக்தியும்மகிழ்வும் கொள்வதுவழக்கம்
ஆயினுமிவரது கீர்த்தனைக்கேட்போர் பெற்றிடும்பலனோ மின்சாரம்! [820]

தாணேநகரில் கௌபீணேஷ்வர் ஆலயமொன்றில் தாஸ்கணுவும்
பாபாபுகழைப் பாடியவண்ணம் கீர்த்தனையொன்றை நிகழ்த்திவந்தார்

வழக்குமன்றப் பணியினைச்செய்யும் சோல்கரென்னும் ஏழையொருவரும்
கீர்த்தனைக்கேட்டிட அங்கேவந்தார் கேட்டவர்பக்தியில் உருகிப்போனார்

நிரந்தரமில்லா ஊழியம்செய்யும் நிலையினில்வருந்தி சோல்கர்அங்கே
ஸாயியைவணங்கி விரதம்பூண்டு பின்வருமாறு வேண்டிக்கொண்டார்:

'ஏதும்செய்ய இயலாஏழைநான்! தங்களருளால் தேர்வினில்வென்று
வேலையும்நிலைத்தால் ஷீர்டிவந்து பாதம்தொழுது கற்கண்டுதருவேன்'

வேண்டியபடியே தேர்வினில்வென்றார்; விரதம்முடிக்க எண்ணம்கொண்டார்
ஆயினும்ஷீர்டி செல்லுதற்குரிய வசதிகளேதும் இல்லாஏழை!

நாணேகட்டையும், ஸஹ்யாத்ரிமலையையும் கடந்திடலெளிது; ஏழையொருவரால்
உம்பரேகாட்டைக் கடப்பதுகடினம் என்பதையுணர்ந்த சோல்கர்மனதுள்

செலவினைக்கொஞ்சம் கட்டுப்படுத்த, உணவிலும்'டீ'யிலும் சர்க்கரையில்லா
நிலையினைக்கொண்டு கொஞ்சங்கொஞ்சமாய்ப் பணத்தைச்சேர்த்து ஷீர்டிசென்றார்

தரிசனங்கண்டு பதங்களில்பணிந்து தேங்காயளித்து கற்கண்டுகொடுத்தார்
ஆசைகளனைத்தும் பூர்த்தியானதாய் பாபாவிடமவர் மகிழ்வுடன்சொன்னார்

மசூதிவிட்டு நகர்ந்திடும்போது நண்பர்'ஜோக்'கிடம் பாபாசொன்னார்:
'சர்க்கரைமிகுந்த தேநீர்ப்பானம் உமதுநண்பர்க்கு உடனேதருக!'

கருத்துச்செறிந்த வார்த்தைகள்கேட்டு சோல்கர்மிகவும் நெகிழ்ந்துபோனார்
கண்கள்பனிக்க 'பாபாசரணம்' என்றேயவரது திருவடிவீழ்ந்தார். [830]

விரதப்படியே கற்கண்டுபெற்றதும், சர்க்கரையில்லா உணவுஉண்டதும்
அனைத்தும்தமக்குத் தெரியுமென்பதை பாபாஇவ்விதம் குறிப்பாய்ச்சொன்னார்

'இருகரம்கூப்பி என்னைப்பணிந்தால் என்றும்நானே உம்முடனிருப்பேன்!
ஸ்தூலவடிவாய் இங்கேயிருப்பினும் ஏழ்கடல்தாண்டி நும்மையறிவேன்!

விரும்பியவண்ணம் எங்குநீசெல்லினும் நானுமங்கே உம்முடனிருப்பேன்!
இதயத்துள்ளே வாசம்செய்கிறேன் உங்களுக்குள்ளே நானேயிருக்கிறேன்!

அனைவருள்ளும் இருக்குமென்னை என்றும்நீவிர் வணங்குவீராக!
இவ்விதமென்னை அறிந்தவரென்றும் பெரும்பேறடைந்தோர் என்பதையுணர்வீர்!'

'இரண்டு பல்லிகள்'::

பாபாஒருமுறை மசூதியமர்ந்து நண்பரொருவருடன் பேசிடும்வேளையில்
பல்லியொன்று 'டிக்..டிக்..டிக்'கென துடிப்பைச்சொல்லித் துள்ளிக்குதித்தது

பல்லிசொன்னதன் பலனையறிந்திட நண்பரும்மிகவும் ஆவல்கொண்டார்
'பல்லியின்சோதரி சற்றுநேரத்தில் அயலூர்விட்டு இங்கேவருகுது

அதனால்பல்லியும் மகிழ்ச்சிகொண்டே துள்ளிக்குதிக்குது' என்றார்பாபா!
சற்றுநேரத்தில் ஔரங்காபாத் நகரிலிருந்து குதிரைமேலேறி

தரிசனங்காண பெருந்தகையொருவர் மசூதிவந்து பணிந்துவணங்கினார்
மீண்டும்புறப்படக் கிளம்பியபோது, குதிரையின்களைப்பைப் போக்கிடவென்று

தீனியளிக்க எண்ணங்கொண்டு தோளினிலிருந்த பையினையெடுத்தார்
தூசியைப்போக்கிடத் தட்டியபோது பல்லியொன்றுமே குதித்துவீழ்ந்தது

அனைவருமதனைப் பார்த்திடும்வேளையில் சுவற்றின்மேலே ஏறிநகர்ந்தது
சுவற்றிலிருந்த இன்னொருபல்லியை நோக்கியேஅதுவும் பீடுடன்நடந்து [840]

ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, முத்தங்கொடுத்து நடனமாடின!
ஷீர்டியெங்கே ஔரங்கபாத்தெங்கே? பல்லிவருவதை எப்படியறிந்தார்?

எங்கோநிகழும் நிகழ்வினையறிந்து முன்பேசொல்லிய அருட்பெருந்திறனை
அனைவரும்வியந்து ஸாயியைப்பணிந்து பதமலர்போற்றித் தொழுதுவணங்கினர்.

'பிற்சேர்க்கை'

பக்தியுடனும், சிரத்தையுடனும் அனுதினம்படிக்கும் அன்பரனைவரும்
ஸத்குருஸாயி நாதனருளால் ஆழ்துயர்நீங்கி அவரருள்பெறுவர். [843]

ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!

[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.