Friday, May 30, 2014

Sai Charita - 33


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 33


"உதியின் பெருமை" - தேள்கடி - பிளேக் வியாதிகள் குணமாக்கப்படுதல் - ஜாம்நேர் அற்புதம் - நாராயண்ராவின் வியாதி - பாலாபுவா சுதார் - அப்பா சாஹேப் குல்கர்னி - ஹரிபாவ் கர்ணிக்.
****************

குருவின்பெருமையைக் கண்டப்பின்னர் உதியின்பெருமையை இங்கேவிளக்குவோம்.

'முன்னுரை'::

மாபெரும்ஞானியர் முன்னேநாமும் சிரம்தாழ்த்தியே வணங்கிப்பணிவோம்.
அவர்தம்கருணைக் கடைக்கண் பார்வையே மலையெனவுயரும் நம்பாவங்களை 

அடியோடழித்துத் தீய‌கறைகளை அறவேநீக்கிச் சீர்ப்படுத்துகிறது.
அவரதுமொழிகளே நல்லுபதேசமாய் அழியாவின்பம் நல்கிடுமே

எனதுஉனது எனுமொருபேதம் அவர்தம்மனதில் எழுவதுமில்லை.
அவரிடம்நாம்படும் நன்றிக்கடனை எப்பிறப்பிலுமே திருப்பிடக்கூடுமோ!

உதி::

அனைவரிடமிருந்தும் பாபாவாங்கிய தக்ஷிணைமூலம் தருமம்செய்திடப்
பெரும்பகுதியையும் மீதிப்பணத்தில் விறகுவாங்கவும் செலவுகள்செய்தார்.

எரியும்துனியில் விறகினையிட்டு அதில்வரும்சாம்பலை உதியெனக்கொண்டு
ஷீர்டிவிட்டுப் புறப்படும்சமயம் பக்தருக்கெல்லாம் மிகுதியாய்த்தந்தார்.

உதியின்மூலம் ஸாயிபாபா நமக்குபதேசமாய்ச் சொல்வதுமென்ன?
உலகினிற்காணும் நிகழ்வுகளெல்லாம் சாம்பலைபோன்றே நிலையற்றதுவே.  

பஞ்சபூதக் கலப்பாமிவ்வுடல் இன்பதுன்பத்தைத் துய்த்திட்டப்பின்னர்
சாம்பலாவதை உதியின்மூலம் பக்தருக்கெல்லாம் நினைவுபடுத்தினார்..

உற்றமும்சுற்றமும் நிலையற்றதெனவும் பிரம்மமொன்றே மெய்ப்பொருளெனவும்
தனியேவந்தநாம் செல்வதும்தனித்தே என்பதைக்காட்டவே உதியினைத்தந்தார்.    [1770]

பலவிதநோய்களை அன்றுமின்றும் குணப்படுத்துவதை நாமுமறிவோம்.
நிலைக்கும்,நிலையா வேறுபாட்டினைப் பகுத்துணர்ந்திடும் விவேகபுத்தியும்  

நிலையாப்பொருட்களை வேண்டாவுணர்வும் உதியும்தக்ஷிணையும் நமக்குணர்த்திடவே
வந்ததும்தக்ஷிணை, செல்கையில்உதியை  நெற்றியிலிட்டு. ஆசீர்வதித்தார்.   

மகிழ்வாயிருக்கும் ஒருசிலநேரம் உதியைப்பற்றியப் பாடலைப்பாடுவார்.
"விளையாட்டுராமா வாரும்வாரும்! உதிமூட்டைகளைநீர் கொண்டேவாரும்!"

[ரம்தே ராம்! ரம்தே ராம் ஆவோஜி, ஆவோஜி!
உதியான் கி கோனியா[ன்] லாவோஜி, லாவோஜி!]

ஆன்மிகம்தவிர உதியால்விளையும் இகலோகப்பயனும் மிகவுமுண்டு.
உடல்நலம்உயர்வு கவலைகள்தீருதல் இன்னும்பலவித பலன்களையளிக்கும்.

'தேள்கடி' ::

‘நாராயண்மோதி ராம்ஜனி’யென்னும் நாசிக்கைச்சேர்ந்த அடியவரொருவர்
‘ராமச்சந்திர மோடக்’கென்னும் மற்றொருஅடியார்க் கீழ்ப்பணிபுரிந்தார்.

தாயுடன்சென்று ஸாயிபாபாவைத் தரிசனம்செய்கையில் தாயைப்பார்த்து
'இனிமேலிவனும் வேலைசெய்திட வேண்டாமென்றும், சுயமாய்வேலை

செய்திடவேண்டும்’ எனவும்ஸாயி தாயிடம்சொன்னது உண்மையானது.
வேலையைவிடுத்து ‘ஆனந்தாஸ்ரமம்’ என்னும்விடுதியைச் சிறப்பாய்நடத்தினார்.  

ஒருமுறைஜனியின்  நண்பரொருவரைத் தேளொன்றுகடித்திட, வலியைத்தீர்த்திட
உதியைத்தேடிட அதுகிடைக்காமல் பாபாபடத்தின் முன்னேநின்று

நாமம்ஜெபித்து ஊதுபத்தியின் சாம்பலையெடுத்து ஸாயியைநினைந்து
உதியாயதனைக் கடிவாய்தடவிட, வலியும்மறைந்தது; அனைவரும்மகிழ்ந்தார்.    [1780]

'நெறிகட்டும் பிளேக் வியாதி'::

பாந்த்ராவிலுள்ள அடியவரொருவர் நெறிமிகக்கட்டிய ‘பிளேக்’வியாதியால்
தன்மகள்வருந்தலை அறிந்துஉதியினைத்தேடத் தம்மிடமில்லை என்றேயுணர்ந்து  

நானாசாஹேப்  சந்தோர்க்கரிடம் அதனையனுப்பிடத் தகவல்விடுத்தார்.
கல்யாண்சென்றிடத் தாணேநிலையம் வந்தப்போது நானாயிந்தச்     

சேதியறிந்து, தம்மிடமும்உதி இல்லையென்பதால், தரையிலிருந்து
மண்ணையெடுத்து ஸாயியைநினைந்து வேண்டிக்கொண்டு அருகிலிருந்த

மனைவியின்நெற்றியில் அதனையிட்டிட, அதனைக்கண்ட அடியார்தனது
இல்லம்சென்றதும் மகளின்நோயும் குறைவதுகண்டு மனமிகமகிழ்ந்தார்.


'ஜாம்நேர் அற்புதம்'::

ஆயிரத்தொள்ளா யிரத்துநான்காம் ஆண்டின்போது நானாசாஹேப்
ஷீர்டிதள்ளி நூறுமைல்கள் தொலைவிலிருக்கும் ‘ஜாம்நேர்’என்னும்

நகரின்மாம்லத் தாராயிருந்தார். அவரதுமகளாம் மைனாவதிக்குப்
பேறுகாலமாய் மூன்றுநாட்களாய்ப் பிரசவவேதனையில் கஷ்டப்பட்டாள்.

பாபாவைத்தொழுது உதவிபுரிந்திட மிகவும்வேண்டி மனதுள்நினைத்தார்.
அந்தநேரத்தில் ‘ராம்கீர்புவா’ எனுமோரடியார்  சொந்தஊருக்குப் போகவிரும்பினார்.

ஷீர்டிபாபா அவரையழைத்து செல்லும்வழியில் ஜாம்நேர்சென்று
நானாசாஹேப்பிடம் உதியும்ஆரத்தியும் அளித்துச்சென்றிடக் கட்டளையிட்டார்.   

தன்னிடமிருக்கும் இரண்டுரூபாயில் ஜல்காவன்ரயில் நிலையம்வரையுமே
சென்றிடவியலும்; முப்பதுமைல்கள் தொலைவிலிருக்கும் ஜாம்நேர்சென்றிட

இயலாதென்று ஸாயியிடம்கூற, 'கவலைவேண்டாம்! அனைத்தும்நடக்கும்'
என்றேசொல்லி, மாதவ்அட்கர் இயற்றியஆரத்திப் பாடலையெழுத         [1790]

ஷாமாவைப்பணித்து பாபுகீர்புவாவிடம் இரண்டையும்தந்து   அனுப்பிவைத்தார்.
பாபாசொன்னதைச் சிரமேற்கொண்டு  அதிகாலையிரண்டு மணியளவினிலே    

ஜல்காவனடைந்தார். கையிலோயிரண்டே அணாக்கள்மட்டுமே இருந்தநிலையில்
'ஷீர்டியைச்சேர்ந்த ராம்கீர்புவாவா?' எனுமோர்குரல்வர அவ்விடம்சென்று   

அறிமுகம்செய்ததும், நானாசாஹேப் அனுப்பியஆளென அந்நபர்சொல்லி
ஜோடிக்குதிரைகள் பூட்டியவண்டியில் அமரச்செய்து வண்டியைச்செலுத்தினான்.

விடியும்வேளையில் ஓடையொன்றின் கரையையடைந்து குதிரைகளுக்குத்
தண்ணீர்காட்டிட அழைத்துச்சென்றபின், உணவுஅருந்திட பாபுவைவேண்டினான்.

தாடிமீசையைப் பார்த்தபாபுவோ முஹமதியரவரெனச் சந்தேகித்துச்சும்மாயிருந்தார்
அப்போதந்தப் பணியாள்தாமொரு கார்வாலைச்சேர்ந்த ஹிந்துக்ஷத்ரியன்;

நானாசாஹேப் அனுப்பியஉணவையேக் கொணர்ந்திருப்பதால் ஏற்றுக்கொண்டிடத்
தயக்கம்வேண்டாம்' எனச்சொன்னவுடன் உணவினையருந்தி மீண்டும்கிளம்பினர்.

பொழுதுவிடிகையில் ஜாம்நேர்அடைந்ததும் சிறுநீர்கழித்துத் திரும்பிவந்ததும்
வண்டியும்குதிரையும் வண்டியோட்டியும் மாயமாய்மறைந்தது கண்டுதிகைத்தார்.

அருகிலிருந்தக் கச்சேரிசென்று விசாரித்தறிந்து  மாம்லத்தாரும்
வீட்டிலிருப்பதை அறிந்துக்கொண்டு இல்லமடைந்து நானாசாஹேப்பிடம்    

தான்யாரென அறிமுகப்படுத்தி உதியும்ஆரத்தியும் அவரிடம்தந்தார்.
சந்தோர்க்கரும் மைனாவதியின்  நிலைமையையறிந்து உதியைக்கரைத்துக்

கொடுத்திடச்சொல்லி, ஆரத்திபாடி, தக்கசமயத்தில் பாபாஅளித்த
உதவியையெண்ணி நெகிழ்ந்திடும்வேளையில் மைனாவதியின்      [1800]

பிரசவம்சுகமாய் நடந்துமுடிந்தச் சேதிவந்திட மகிழ்ச்சியடைந்தார்.
நானாஅனுப்பிய வண்டியோட்டியைப் பற்றியசேதியை பாபுசொல்லிடக்   

கேட்டநானாவோ ‘அப்படியேதும் வண்டியோஆளோ அனுப்பவில்லையே!’
என்றவர்வியந்து ஷீர்டியிலிருந்து ஒருவர்வருவதே தெரியாதென்றார்!   

[பின்னொருநாளில் பிவி.தேவெனும் பாபாஅடியார் இதனைக்குறித்து
நானாவின்புதல்வர் பாபுராவிடம் விசாரித்தறிந்து உறுதிசெய்துளார்.]

'நாராயண்ராவ்'::

‘நாரயண்ராவ்’எனும் பக்தரொருவர்  இருமுறைஸாயியை சந்தித்திருக்கிறார்.
பாபாமறைந்து மூன்றாண்டாகியும் நோய்வாய்ப்பட்டதால் வரவியலவில்லை.

சிகிச்சைகள்செய்தும் குணமாகாததால் அல்லும்பகலும் ஸாயியைநினைந்து
தியானம்செய்கையில் ஒருநாளிரவில் கனவினில்காட்சி ஒன்றினைக்கண்டார்.

நிலவறையிலிருந்து பாபாவந்து  'ஒருவாரத்திற்குள் நலமடைந்திடுவாய்.
நடக்கவும்செய்வாய்'என ஆறுதல்தந்திட, சொன்னதுபோலவே குணமடைந்தாரே!

"தேகமிருக்கையில் பாபாவாழ்ந்தார்; தேகம்மறைந்ததும் இறந்துபோனாரா?
பிறப்பிறப்பு இரண்டையும்கடந்து என்றும்வாழ்கிறார்! முழுமனத்துடனே    

நேசிப்பவர்கள் எங்கேயிருப்பினும்  உகந்தபதிலை அவருக்களிக்கிறார்
எந்தரூபமும் எடுத்துக்கொண்டு பக்தர்முன்தோன்றி ஆறுதல்தருகிறார்."

'அப்பாஸாஹேப் குல்கர்னி' ::

'அப்பாஸாஹேப் குல்கர்னி'யெனும் அன்பரொருவர்க்கு ஆயிரத்தொள்ளா
யிரத்துப்பதினேழில் ஸாயியின்படத்தை வழிபடும்வாய்ப்பு 'பாலாஸாஹேப்

பாடே'யென்பவர் அளித்தப்படத்தால் தாணேநகரில் கிடைத்ததுமவரும்
சந்தனமிட்டு மலர்களையிட்டு படையலுமளித்து வழிபடலானார்.        [1810]

ஸாயியைநேரில் கண்டிடவும்அவர் விருப்பம்கொண்டார். படத்தைக்காண்பதும்
நேரில்காண்பதும் இரண்டும்சமமே என்பதுகுறித்து ஓர்கதைகாண்போம்.   

['பாலாபுவா ஸுதார்'::]

'நவீனதுகாராம்' எனும்பெயர்பெற்ற 'பாலாபுவாஸுதார்' எனுமொருஞானி
ஸாயியைக்காண மும்பையிலிருந்து ஷீர்டிவந்துப் பணிந்தப்போது,   

'நான்காண்டாய்நான் இவரையறிவேன்' எனஸாயிபாபா மொழிந்ததைக்கேட்டு
முதன்முறைவிஜயம் செய்திட்டஞானியும் 'எங்ஙனமிதுவும் நிகழக்கூடும்?'

என்றேவியந்து மனதினுள்நினைக்க, நான்காண்டிற்கு முன்னமொருநாள்
ஸாயியின்படத்தின் முன்னால்விழுந்து நமஸ்கரித்ததை எண்ணிப்பார்த்தார்!

'ஞானியர்பெருமையை என்னெனச்சொல்வேன்! அவர்தம்அன்புதான் எத்தனைசிறந்தது!
படத்தைக்காண்பதும், நேரில்காண்பதும் இரண்டுமொன்றே என்றேயின்று

நானுணர்ந்திடத்தான் அப்படிச்சொன்னார்! எங்குமிருப்பவர் எல்லாமறிவார்!'
என்றவர்வியந்ததைத் தொடர்ந்துநாமும் அப்பாஸாஹேப் கதைக்குத்திரும்புவோம்!

தாணேயில்வசித்து இருந்தப்போது, 'பிவண்டி'யெனுமோர் ஊருக்குச்சென்றார்.
திரும்பும்நாளும் தெரிந்திடவில்லை. மூன்றாம்நாளில் மதியவேளையில்  

பக்கிரியொருவர் அப்பாஸாஹேப் இல்லம்வந்தார். அங்கஅமைப்பினைக்
கண்டுவியந்து 'ஷீர்டிஸாயியோ?' எனக்குல்கர்னியின் குடும்பத்தார்கேட்டனர்.

அதனைமறுத்த அந்தப்பக்கிரி, 'ஸாயியின்பணியாள் நான்'எனச்சொல்லி
குடும்பநலனை விசாரித்தறியவே தானும்வந்ததாய் விவரம்கூறி

தக்ஷிணைகேட்டார். இல்லத்தரசி ஒருரூபாய்கொடுக்க அதனைவாங்கிய
அந்தப்பெரியவர் உதியினையளித்துப் பூஜையறையினில் வைத்திடச்சொல்லி     [1820]

அவ்விடமகன்றதும், சற்றுநேரத்தில், சென்றவண்டியின் குதிரைகள்நோயுற
அப்பாஸாஹேப் இல்லம்திரும்பினார். மனைவியின்மூலம் விவரமறிந்ததும்  

'நானாயிருந்தால் பத்துரூபாய்க்குக் குறைவாய்தக்ஷிணை தந்திடமாட்டேன்'
என்றவர்கூறி, உணவுட்கொள்ளாமல் சாதுவைத்தேடி வீதியிலலைந்தார்.   
 
எங்குதேடியும் காணாமையினால் வருத்தத்துடனே இல்லம்மீண்டார்.
'முப்பத்திரண்டாம் இலம்பகமதனில் 'வெறும்வயிற்றுடனே இறைவனைத்தேடுதல்

கூடாதென்னும்' கருத்தினையிங்கே நினைவுகூருதல் பொருத்தமானது!'
உணவுண்டப்பின் மீண்டும்தேடிச் செல்லும்போது படத்திலிருக்கும்

பாபாவடிவினை ஒத்தபெரியவர் எதிரேவருதலைக் கண்டதுமவரே
இல்லம்வந்த சாதுவென்றெண்ணி அருகேசென்றதும், பக்கிரிதனது

கையினைநீட்டி தக்ஷிணைகேட்டார். அப்பாஸாஹேப் ஒருருபாய்தர
மீண்டும்பக்கிரி கேட்பதையறிந்து மேலுமிரண்டு ரூபாய்தந்தார்.

திருப்தியின்றியே மேலும்மேலும் பெரியவர்கேட்டிட, 'சித்ரே'யென்னும்
நண்பரிடமிருந்து மூன்றுரூபாய்கள் கடனாய்வாங்கி பக்கிரிக்களித்தார்.  

இதுவரைத்தந்த ஒன்பதுரூபாயும் போதாதென்றே பக்கிரிநின்றிட
பையிலிருந்து பத்துரூபாய் நோட்டினையெடுத்து அவருக்களித்ததும்

முன்னம்கொடுத்த ஒன்பதுரூபாயைத் திருப்பித்தந்து நோட்டினைப்பெற்று
பக்கிரியகன்றார். மனதிலெண்ணிய பத்துரூபாயே தக்ஷிணையாகப்

பக்கிரிகொண்டு, ஒன்பதுரூபாய்களைத் திருக்கரத்தினால் புனிதப்படுத்திப்
பெரியவர்தந்தது 'இருபத்தொன்றாம் இலம்பமதனில் பாபாகூறிய     [1830]

நவவிதபக்தியைக் குறித்திருப்பதும், லக்ஷ்மிபாய்க்கு இறுதிக்காலத்தில்
பாபாகொடுத்த ஒன்பதுரூபாய் நாணயமென்பதும் நினைவிற்கொள்க!  

உதிப்பொட்டலத்தில் சிலமலரிதழ்களும் அக்ஷதைசிலவும் இருப்பதைக்கண்டார்.
சிலநாள்கழித்து ஷீர்டிசெல்கையில் பாபாஉரோமம் ஒன்றுகிடைத்திட   

இவற்றையெல்லாம் தாயத்திலிட்டு ஸாயிஎன்றுமே தன்னுடனிருக்கும்
வகையாய்ப்புஜத்தில் கட்டிக்கொண்டார். உதியின்சக்தியால் சம்பளவுயர்வும்

ஆற்றலும்பெருமையும் தனக்குமேலும் சேர்ந்திடும்அதிசயம் கண்டுமகிழ்ந்தார்.
"இகபரசுகமெலாம் அளித்திடும்உதியை குளித்தப்பின்னாலே நெற்றியிலிட்டு

சிலதுளிநீரில் கரைத்துக்கொண்டுப் புனிதத்தீர்த்தமாய்க் குடித்திடவேண்டும்"
என்னும்வழியையும் ஹேமாத்பந்தும்  நமக்குச்சொல்லி இக்கதைமுடிப்பார்.

'ஹரிபாவ் கர்ணிக்'::
அதேஆண்டில்[1917] ‘ஹரிபாவ்கர்ணிக்’ எனுமொருஅடியார் குருபூர்ணிமா
நன்னாளன்று ஷீர்டிவந்து ஸாயியைப்பணிந்து உடைகளளித்து

தக்ஷிணைகொடுத்து ஷாமாமூலம் பாபாவிடத்தில் திரும்பிச்சென்றிட
அனுமதிவாங்கி மசூதிப்படிகளில் இறங்கும்போது மேலுமொருரூபாய்  

தக்ஷிணைகொடுத்திட மனதினிலெண்ணித் திரும்பவும்படிகளில் ஏறிடும்போது
விடைபெற்றப்பின்னர் திரும்பிடவேண்டாம் எனுமொருசைகையால் ஷாமாஉணர்த்திட,

வீடுதிரும்பிடும் வழியினில்நாசிக் காலாராமரின் தரிசனம்காண ஆலயம்சென்றார்.
கோயிற்கதவின் உள்ளேஅமர்ந்த நரசிம்ஹமஹராஜ் என்னும்ஞானி

தம்முடனிருந்த அடியவரையெல்லாம் விட்டுவிலகி நேரேயிவரது
அருகினில்வந்து கைமணிக்கட்டை அழுத்திப்பிடித்து 'என்ஒருரூபாயை    [1840]

இப்போதேகொடு!' எனச்சொன்னவுடன் வியப்புமிகுந்து மகிழ்ச்சியடைந்து
ஷீர்டியில்தானும் கொடுத்திடநினைத்த ரூபாய்க்காசை ஞானிக்குத்தந்தார்!   

ஞானியரனைவரும் ஒன்றேயென்பதும், ஒத்திசைவுடனே எங்ஙனமவர்கள்
செயல்படுகின்றனர் என்னும்உண்மையும் இந்நிகழ்வாலே நமக்கும்புரியும்!   [1842]

ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால்,   என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.