Friday, May 30, 2014

Sai Charita - 36


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

 [மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]

(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 36


1. இரண்டு கோவா கனவான்கள், 2. திருமதி ஔரங்காபாத்கர் ஆகியோரின் அற்புதக் கதைகள்.
--------------------------

'இரண்டு கோவா கனவான்கள்'::

கோவாவிலிருந்து இருகனவான்கள் ஓர்நாள்ஷீர்டிவந்து ஸாயியைப்பணிந்தனர்.
இருவரிலொருவரை மட்டுமேபாபா பதினைந்துரூபாய் தக்ஷிணைகேட்டார்.

மனமுவந்தவர் தந்தவுடனே மற்றொருவரோ முப்பத்தைந்துரூபாய்
தாமேமுன்வந்து தக்ஷிணைதந்தும் பாபாவதனை ஏற்றிடவில்லை.

அருகிலிருந்த ஷாமா,ஸாயியிடம் இந்தச்செயலின் வேறுபாட்டினை
அறிந்திடவிரும்பிக் கேட்டப்போது, 'ஒன்றுமேதெரியாது ஷாமாவுனக்கு!

நானாயொன்றும் எவரிடமிருந்தும் எடுப்பதுமில்லை. இந்தமசூதியின்
ஆளும்தெய்வமாம் மசூதிமாயி கேட்டிடும்கடனை உரியவரளித்து

கடனைத்தீர்க்கிறார். வீடோசொத்தோ குடும்பமோயெதுவும் எனக்குஇல்லை.
தேவைகளென்பதும் எனக்குஇல்லை. சுதந்திரமாகவே நானும்வாழ்கிறேன்.

கடன்,பகைமை,கொலை இவற்றுக்கெல்லாம் பரிகாரமின்றித் தப்பிட வழியிலை'
எனமொழிகூறித் தனதுபாணியில் பின்வருமாறு மொழிந்திடலானார். [1970]

'ஏழையாயிருக்கையில் வேலைகிடைத்ததும் முதல்சம்பளத்தைக் காணிக்கையாகத்
தருவதாயொரு வாக்கினைத்தந்தவர், வேலைகிடைத்ததும் ஊதியமுயர்ந்தும்

கொடுத்தவாக்கினை மறந்துபோனதால் அவரிடமிருந்து கடன்வசூலித்தேன்.
மற்றொருமுறையோ கடற்கரையோரமாய் நடந்துசெல்கையில் மாளிகையொன்றைக்

கண்டதுமந்தத் தாழ்வாரத்தில் அமர்ந்தநேரத்தில் வீட்டுக்காரர்
வரவேற்பளித்து வயிறாறஉணவுமளித்து உறங்கிடயிடமும் தந்துபசரித்தார்.

உறங்கியப்போது அந்தமனிதரோ கன்னம்வைத்து சுவற்றில்புகுந்து
என்னுடையப்பையில் நான்வைத்திருந்த முப்பதாயிரம் ரூபாயனைத்தையும்

திருடிக்கொண்டார். கண்விழித்தநானோ பணம்தொலைந்ததை அறிந்துமிக்கக்
கவலைக்கொண்டு அழுத்துப்புலம்பி பதினைந்துநாட்கள் அமர்ந்திருந்தேன்.

அந்தப்பிராமணன் என்செல்வத்தைக் கொள்ளைக்கொண்டதாய் மனதுள் நினைத்தேன்.
பக்கிரியொருவர் என்துயர்கண்டு விசாரித்தப்போது, அனைத்தையும் கூறினேன்.

'நான்சொல்லும்வண்ணம் செய்வீராகில் தொலைந்தப்பணமும் திரும்பக் கிடைக்கும்.
எனக்குத்தெரிந்தப் பக்கிரியொருவர் விவரம்தருகிறேன். அவரிடமும்மை

முழுவதுமாகச் சமர்ப்பித்துவிட்டால் அவரும்பணத்தை மீட்டுத்தருவார்'
என்றவர்கூறிட அதன்படிநடந்து இழந்தச்செல்வமும் திரும்பப்பெற்றேன்.

வாதாவிலிருந்து கடற்கரைவந்து நீராவிக்கப்பல் ஒன்றிலேறிட
முயற்சிசெய்தேன். கூட்டமிகுதியால் ஏறிடமுடியா நிலையினிலாங்கோர்

சிப்பந்திவொருவரின் நற்செயலாலே கப்பலிலேறி அக்கரைவந்து
புகைவண்டியேறி மசூதிமாயியின் இருப்பிடத்தை நானுமடைந்தேன்' [1980]

கதைமுடிந்ததும் ஷாமாவிடத்தில் வந்தவிருந்தினர்க்கு உணவளித்திட
பாபாபணிக்கவும், தம்மில்லத்திற்குக் கூட்டிச்சென்று நல்லுணவளித்தார்.

சாப்பிடும்போது, ஷாமாஅவரிடம், கடற்கரைப்பக்கமே போகாதபாபா
எவ்விதமாக அவரிடமில்லா முப்பதாயிரம் ரூபாய்களைத் தொலைத்திடக்கூடும்?

இந்தக்கதைகளின் நுட்பத்தைநீங்கள் புரிந்துகொண்டீரா? எனுமொருவினாவை
விருந்தினரிடத்தில் கேட்டதுமவர்கள் கண்ணீர்மல்கிடத் தொண்டையடைத்திடும்

குரலிலிந்தக் 'கதைகளிரண்டும் தங்கள்வாழ்வினில் நேரிடையாக
நடந்தநிகழ்வுகளே! நிறைபேரறிவுடை ஸாயியின்சக்தி எல்லையற்றதே!

திருவாய்மொழிந்தக் கதைகளிரண்டும் எங்கள்வாழ்வினில் நடந்தநிஜமே!
எங்ஙனமிதனை பாபாஅறிந்தார் என்பதேப்பெருத்த ஆச்சரியமிங்கு'

என்றவர்கூறி, தனித்தனியாக ஸாயிகூறியக் கதையினையியொத்த
நிகழ்வுகளிரண்டையும் ஒருவரிவிடாமல் கண்ணீர்பெருகிடச் சொல்லிமுடித்தார்.

ஸ்ரீதத்தரிடத்தில் வேலைக்காகத் தானும்வேண்டிய காணிக்கைக்கடனைத்
தான்மறந்துப் போனகதையினை விவரமாய்ச்சொல்லி பாபாஎங்ஙனம்

அந்தக்கடனை இன்றுவசூலித்தார் என்றொருவரும், வீட்டலமாரியில்
பத்திரமாய்வைத்த முப்பதாயிரம் ரூபாய்ப்பணத்தை தன்னுடனிருந்த

பிராமணனொருவன் திருடிச்சென்றதும், அழுதுபுலம்பிய வேளையிலங்கே
பக்கிரியொருவர் வழிகாண்பித்திட அதன்படிநடந்திட அந்தப்பிராமணச்

சமையற்காரரே பணத்தைக்கொணர்ந்துதிருப்பித்தந்து மன்னிக்கவேண்டிட,
ஸாயியைக்காணக் கப்பலில்சென்றிடும் வேளையிலாங்கோர் பணியாளொருவர் [1990]

உதவிசெய்ததும், இரயிலிலேறி ஷீர்டிவந்து ஸாயியைக்கண்டதும்
விவரமாயிருவரும் சொன்னதைக்கேட்டு ஸாயியின்பெருமையை

அனைவருமுணர்ந்து, கொடுத்தக்கடனையே கேட்டுப்பெற்றிடும் அரியப்பண்பினை
நினைந்துவியந்தனர். பணத்தைத்தேடி அலைந்திடவில்லை. தம்முடனிருந்த

அடியவர்களையும் யாசகம்பெற்றிட அனுமதிக்கவில்லை. ஆன்மீகவழியில்
மேலுமுயர்ந்திடப் பணமொருதடையென பாபாகருதியே, தம்முடனிருந்த

பரமஏழையாம் மஹால்ஸாபதிக்கு ஹம்ஸ்ராஜென்னும் வியாபாரியொருவர்
பெருந்தொகையொன்றினை அளித்திடவிரும்பிய சமயம்பாபா அதனைப்பெற்றிட

அனுமதிமறுத்தார் எனுமொருநிகழ்வினை ஹேமாத்பந்த்தும் இங்கேயுரைக்கிறார்.
இப்படித்தமது கதைகளைக்கூறிய இருகனவான்களும் ஷாமாவைப்பார்த்து,

'ஸாயியினுடனே வசிக்கும்நீங்கள் பண்ணியப்புண்ணியம் மிகவுமரியதே!
அதனாற்றானே இந்தமஹானும் இவ்விடம்வந்து அருள்புரிகின்றார்!

எம்மிருவர்க்கும் அவரருள்புரிந்து நிறைபேராற்றலை நிரூபணம்செய்தார்'’
எனமிகப்போற்றி ஸாயியின்பெருமையை வியந்தவண்ணமே உருகிநின்றார்.

'திருமதி. ஔரங்காபாத்கர்' ::

ஷோலாபூரைச் சேர்ந்தஸகாராம் ஔரங்கபாத்கர் என்பவருக்கு
இருபத்தேழாண்டாய்க் குழந்தைகளின்றி அவரதுமனைவி வேண்டுதல்பலவும்

செய்தப்பின்னரும் பலனில்லாததால் மனம்மிகவாடி நம்பிக்கையிழந்து
இறுதிமுயற்சியாய் தனதுசகோதரி புதல்வனுடனே ஷீர்டிவந்து

ஸாயியைக்கண்டு, சேவைகள்செய்து இரண்டுமாதங்கள் தங்கியிருந்தாள்.
கூட்டமிகுதியால் தனியேப்பணிந்துத் தன்குறைசொல்லிட சந்தர்ப்பமின்றி [2000]

ஷாமாவிடத்தில் தன்சார்பாக முறையிடுமாறு வேண்டிக்கொண்டாள்.
ஸாயியின்தர்பார் அனைவர்க்கும்பொதுவாய் வெளிப்படையானது ஆயினும்தானும்

முயற்சிசெய்வதாய்த் தைரியம்கூறி, தேங்காய்,ஊதுபத்தி முதலியவற்றுடன்
உணவுநேரத்தில் மசூதிமுன்னேத் திறந்தவெளியில் நின்றிடுமாறும்,

ஜாடைசெய்ததும் வந்திடுமாறும் யோசனைகூறிட அதன்படிசெய்தாள்.
ஒருநாள்நண்பகல் உணவுண்டபின்னர் ஸாயியின்ஈரக் கைகளைத்துண்டால்

ஷாமாதுடைத்திட அந்தநேரத்தில் செல்லக்குறும்பாய் ஷாமாவின்கன்னத்தை
பாபாகிள்ளிட, பொய்க்கோபத்துடன் ஷாமாஅவரிடம், 'இந்தக்குறும்பெலாம்

என்னிடம்வேண்டாம். இவ்விதமென்னைக் கிள்ளுதல்முறையோ? நெருக்கமானோரை
துன்புறுத்துவதோ உறவின்பலனோ?' எனச்சொன்னதுமே, பாபாஅவரிடம்,

'ஓ!ஷாமா! எழுபத்திரண்டுத் தலைமுறையாக என்னுடனிருந்தும்
ஒருமுறையேனும் உன்னைநானும் கிள்ளியதில்லை. இந்தஒருமுறை

கிள்ளியதற்கோ உனக்கிந்தக்கோபம்?' எனமறுமொழிந்திட, ஷாமாவும் விடாமல்,
‘உங்களிடத்தில் நாங்களிரப்பது இனியமுத்தமும், இனிப்புப்பண்டமுமே!

மோக்ஷமோ,மற்றும் புஷ்பகவிமானமோ எமக்குவேண்டாம். திருப்பாதங்களில்
நீடித்தநம்பிக்கையும், தெளிந்தவிழிப்புமே இருந்திடல்வேண்டும்' எனவேண்டியதும்,

'இவையெலாமுமக்கு அளித்திடத்தானே நான்வந்திருக்கிறேன். அன்னமளித்துப் பாதுகாக்கின்றேன்.அன்பும்பாசமும் பூண்டிருக்கிறேன்' எனக்கூறிஇருக்கையிலமர்ந்தார்...

அந்தநேரத்தில் ஷாமாகண்காட்ட அந்தப்பெண்மணி அருகேவந்து
நிவேதனமளித்து வணங்கிநின்றார். தேங்காயையெடுத்து பாபாஆட்டிட [2010]

அதனுள்ளிருக்கும் முற்றியப்பருப்பு உருளும்சத்தம் உள்ளேகேட்டது!
ஷாமாவிடத்தில் 'இந்தச்சத்தம் கூறுவதென்ன?' எனபாபாகேட்க,

‘இதுபோன்றொரு சிசுவும்தனது வயிற்றினிலுருள இந்தப்பெண்மணி
வரம்கேட்கின்றாள். ஆசியளித்து அவளிடம்தருக' என்றார்ஷாமா!

'தேங்காய்மூலம் குழந்தைகிடைக்குமோ? அறிவிலியாகவும், மூடநம்பிக்கையாகவும்
இந்தமக்கள் இருக்கின்றனரே!' என்றார்பாபா. 'தங்கள்மொழியும் ஆசியுமளிக்கும்

பலனையறிவேன். குழந்தைத்தொடரையே உம்சொல்தந்திடும்! விவாதமின்றி
ஆசியையளித்திட நானும்வேண்டுவேன்' என்னும்படியாய் இருவருக்குள்ளும்

விவாதம்நிகழ்ந்தது. தேங்காயையுடைக்க பாபாகூற, முழுத்தேங்காயை
அவளுக்களிக்க ஷாமாவேண்டிட, இப்படிநிகழ்ந்த விவாதமுடிவில்

வேண்டியவரத்தை அவளுக்களிக்க ஒருவழியாக ஒப்புக்கொண்டார்.
'அவளுக்கொரு குழந்தைபிறக்கும்' என்றதும்ஷாமா 'எப்போது?'எனக்கேட்க

பனிரண்டுமாதக் கெடுவினில்அவளுக்குக் குழந்தைப்பிறக்கும் எனவாக்களித்தார்.
இதற்குப்பின்னர் இரண்டாயதனை ஷாமாஉடைக்க ஒருபாதியினை

ஷாமாவும்பாபாவும் உண்டப்பின்னர் மறுபாதியந்தப் பெண்மணிகைகளில்
அளிக்கப்பட்டது. ஷாமாஅவளிடம் 'இன்னும்பனிரண்டு மாதங்களுக்குள்

குழந்தையுனக்குப் பிறக்காவிடிலோ, தேங்காயொன்றை இந்தக்கடவுளின்
தலையிலடித்து மசூதிவிட்டே வெளியேற்றிடுவேன். இவ்விதம்யானும்

செய்யத்தவறினால் 'மாதவ்'என்றே என்னையானும் அழைத்திடமாட்டேன்!.
நான்கூறுவதன் பொருளைநீயும் விரைவிலுணர்வாய்.'எனச்சூளுரைத்தார். [2020]

சொல்லியவண்ணமே ஓராண்டுக்குள் ஆண்மகவொன்றினை அந்தப்பெண்மணி
நலமாய்ப்பெற்று ஐந்தாம்மாதம் தம்பதிசகிதமாய் குழந்தையைக்கொணர்ந்து

பாபாமுன்னேப் பணிந்துவணங்கி ஐந்நூறுரூபாய் தக்ஷிணைதந்தனர்.
'ஷ்யாம்கர்ண'’ எனும்பாபாவின் குதிரைக்காக கொட்டகையொன்றினை

கட்டிடஅத்தொகை செலவிடப்பட்டது. சொல்லியசொல்லின் ஆசிகளொன்றே
இத்தனைமஹிமையும் செய்ததுயென்னும் கருத்தினைநாமும் உணர்ந்துமகிழலாம். [2023]

ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.