Saturday, May 24, 2014

Sai Charita -11


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]

(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 11 


[ஸகுணப் பிரம்மமாக ஸாயி - டாக்டர் பண்டித்தின் வழிபாடு - ஹாஜி சிதிக்ஃபால்கே - ஐம் பூதங்களின்மேல் பாபாவின் கட்டுப்பாடு.]
**********

பிரம்மத்தின் அவதாரம் பஞ்சபூதக் காவலன்
பரப்பிரம்ம ஸாயியின் சக்தியினைக் கண்டிடுவோம்

"ஸகுணப் பிரம்மமாக ஸாயி"::

பிரம்மத்தை இருவிதமாய் வழிபாடு செய்வதுண்டு
உருவத்தைக் கொண்டொன்றும் உருவமில்லா வழிபாடும்

கொண்டதொரு உருவினையே கொண்டாடிக் களிப்பதிலே
சொல்லவொணா ஆனந்தம் அடியவர்க்கு வருவதுண்டு [580]

உருவினையேக் கொண்டாட அன்புமிகக் கூடிவந்து
உருவமில்லா வழிபாட்டில் தியானிக்க உதவிசெய்யும்

ஸகுணமாக ஸாயியையே இப்போது தியானிப்போம்
எழுபொருட்கும் மேலான உயர்நிலையே குருவடியாம்

பாபாவின் மொழிமீது நமக்கிருக்கும் நம்பிக்கை
நல்லதொரு ஆசனமாய் நாமிட்டு அமர்ந்திடுவோம்

ஆசைகளைத் துறந்திடலே நாம்செய்யும் சங்கல்பம்
யாரெவ்விதம் சொன்னாலும் எமக்கென்றும் அவர்கடவுள்!

எல்லையில்லா மன்னிப்பும் கோபமில்லா நேர்மையும்
மென்மையான குணத்துடனே எதனையுமே பொறுத்திடலும்

எப்போதும் முழுமையான திருப்தியுடன் அவர்திகழ்ந்தார்
உருவமொன்று இருந்தாலும் உருவில்லா ஒளிவடிவேபாபா!

தான்செல்லும் வழியெல்லாம் தாகத்தைத் தணித்தபடி
உயிரளிக்கும் கங்கைபோன்று எம்அருமை பாபாவும்

வாழ்ந்திட்ட காலமெலாம் துயராற்றி மகிழ்வளித்தார்
அடிபணிந்த அடியவர்க்கு புதுக்கிளர்ச்சி தாமளித்தார்

'தூயநல் ஞானியவர் கொண்டதென்றன் திருவடிவம்'
கீதையிலே கண்ணன்சொன்ன கூற்றெல்லாம் இவர்உருவே

நூல்களெல்லாம் சொல்லிவரும் சச்சிதா நந்தமே
ஓர்உருவாய் வடிவெடுத்து ஷீர்டியில் உதித்ததுவே! [590]

அனைவர்க்கும் ஆதாரமாய்த் தானிருந்தும் ஒருநாளும்
தனக்கென்றோர் ஆதாரம் இலாமலே வாழ்ந்திருந்தார்

சாக்குத்துணி ஒன்றினையே ஆசனமாய்த் தான்கொண்டார்
மெல்லியதோர் மெத்தையும் சாய்ந்துகொள்ளத் திண்டொன்றும்

பக்தர்களால் வைத்ததனை பாபாவும் தாமேற்றார்
அடியவர்கள் எண்ணத்தை அவரென்றும் மறுத்ததில்லை

சாமரங்கள் வீசுதலும் இசைக்கீதம் எழுப்புதலும்
கைக்காலை அமுக்குதலும் நைவேத்யம் செய்தலுமாய்

அடியாரின் விருப்பம்போல் வழிபடவே அனுமதித்தார்
ஷீர்டியில் இருந்தாலும் உலகெங்கும் வியாபித்தார்

அவர்பெருமை உணர்ந்திட்ட அடியவரும் மதித்ததுபோல்
எங்கும்நிறை ஸாயியைத் தெண்டனிட்டு வணங்கிடுவோம்.

"டாக்டர் பண்டித்தின் வழிபாடு"::

நூல்கேரின் நண்பராம் 'பண்டித்'தென்னும் பெருமகனார்
பாபாவை வணங்கிடவே ஷீர்டிக்கு வந்திருந்தார்

அடிபணிந்து வணங்கியபின் அங்கேயே அமர்ந்திருந்தார்
கேல்கரின் இல்லம்செல்ல பாபாவும் பணித்திட்டார்

பூஜைக்குப் புறப்பட்ட 'தாதாபட்' கொண்டுவந்த
தாம்பாளம் தனையெடுத்து அதிலிருந்தச் சந்தனத்தை

ஸாயிநாதன் நெற்றியிலே சிவனுக்குச் செய்வதுபோல்
மூவரியாய்ப் 'பண்டித்'தும் அன்புடனே பூசிவிட்டார் [600]

வேறெவரும் புரிந்திராத விசித்ரமான இச்செயலைச்
சலனமொன்றும் கொள்ளாமல் அமைதியுடன் அதையேற்றார்

'மற்றொருவர் செய்திடவே மறுதலித்த நீங்களேன்
இவர்செயலை அனுமதித்தீர்?' எனக்கேட்டார் தாதாபட்

'தோபேச்வர் மஹாராஜன் காகாபுராணிக்' என்பாரின்
சீடரிவர்! குருவுக்குச் செய்வததுபோல் இங்கெனக்குச்

செய்கையிலே யானெப்படித் தடுத்திடுவேன்!' என்றார்பாபா!
'பண்டித்'தும் அவ்வாறே உணர்ந்ததாக மகிழ்வடைந்தார்

அடியவரின் செயல்களையே இதுபோன்று ஏற்றாலும்
சிலசமயம் பாபாவும் வினோதமாய்ச் செயல்பட்டார்

சீற்றமே உருவெடுத்துத் தட்டுகளை விட்டெறிந்து
பக்தர்களைக் கடிந்தாலும் அதையெல்லாம் மறந்தபடி

அன்புடனே அருகழைத்து மெழுகினைப்போல் உருகிடுவார்
'நானென்றும் கோபமாக இருப்பதில்லை' எனச்சொல்வார்

'தாய்மகவை உதைப்பாளோ கடலாற்றைத் தள்ளிடுமோ
அதுபோல யானென்றும் அடியவரைப் புறக்கணியேன்'

எனக்கூறி அடியவரின் உள்ளத்தைக் குளிர்வித்தார்
ஆதரவாய், அன்பினையே பெறுவதற்கே யாசித்தார்

"ஹாஜி சிதிக்ஃபால்கே"::

அடியவரை ஏற்பதவர் சங்கல்பம் பொறுத்தது
'சிதிக்ஃபால்கே' நிகழ்வொன்று இதனுக்கோர் எடுத்துக்காட்டு [610]

கல்யாணைச் சேர்ந்தவராம் சிதிக் ஃபால்கே
'ஹஜ்'யாத்திரை முடித்தபின்னர் ஷீர்டியைச் சென்றடைந்தார்

மாதமொன்ப தானபோதும் சாயியவரைச் சீந்தவில்லை
மசூதியுள் நுழைந்திடவோ அனுமதியும் தரவில்லை

ஏனிந்த நிலையென்றுப் புரியாது தவித்தவரை
ஷாமாவைக் காணுமாறு மற்றொருவர் தேற்றிவிட்டார்

சிவனாரைக் காணுதற்கு நந்தியவர் அருள்போல
ஷாமாவின் துணைகொண்டு பாபாவைக் காணச்சொன்னார்

இவர்விடுத்த வேண்டுதலைச் செவிமடுத்த ஷாமாவும்
மனமிரங்கிச் சம்மதித்து பாபாவை வேண்டலானார்

"ஆராரோ வந்திங்கே அருளாசி பெறுகின்றார்
ஹாஜியார் வருவதற்கு என்னதடை?" எனக்கேட்டார்

வேண்டிநின்ற ஷாமாவை நேரிட்ட பாபாவும்
"புரிந்துகொள்ள இயலாத முதிர்ச்சியற்று நீயுள்ளாய்.

அல்லாவின் ஆணையின்றி ஆரொருவர் புகவல்லார்!
நாளையவர் பார்விக் கிணற்றருகே ஒற்றையடிப்

பாதைக்கு வருவாரா எனக்கேட்டு நீசொல்லு"
என்னுமொரு மறுமொழியை ஷாமாவிடம் தாம்பகர்ந்தார்

அப்படியே சம்மதத்தைப் பெற்றுவந்த ஷாமாவை
"நாற்பதாயிரம் ரூபாய்களை நான்கு தவணைகளில் [620]

என்றனுக்குக் கொடுத்திடவே சம்மதத்தைக் கேட்டுவா"
எனமீண்டும் அனுப்பிவைத்தார்; அப்படியே சென்றிட்ட

ஷாமாவும் ஹாஜியார் நாற்பது லட்சங்கள்
கொடுத்திடவே சம்மதித்தச் செய்தியினைத் தாங்கிவந்தார்

"மசூதியில் வெட்டுகின்ற ஆட்டின் மாமிசமா
கொட்டையா, தொடையா எதுவேண்டும் எனக்கேளு'"

எனச்சொல்லிச் ஷாமாவை மீண்டுமங்கே அனுப்பிவைத்தார்
சென்றவரும் திரும்பிவந்து பாபாவின் மட்கலயப்

பாண்டத்தில் இருக்குமொரு சிறுதுணுக்கே போதுமெனச்
சொன்னதாகச் சொன்னதும் கோபமுற்றார் ஸாயிபாபா

மட்கலயம் உடைத்தெறிந்து வேகமாக நடந்துவந்து
ஹாஜியாரின் கஃப்னியைத் தம்கையால் பற்றியே

"ஏனிப்படி உயர்ந்தவன்போல் தற்பெருமை கொள்ளுகிறாய்?
திருக்குரானை இவ்விதமோ நீயுந்தான் கற்றுணர்ந்தாய்?

மெக்காநீ சென்றதிலே வீண்பெருமை கொள்ளுகிறாய்
என்னையின்னும் சரியாகப் புரியாமல் இருக்கின்றாய்"

எனச்சொல்லித் திரும்பியவர் குழம்பிநின்ற ஹாஜியார்க்கு
ஒருகூடை மாம்பழங்கள் தம்கையால் அனுப்பிவைத்தார்

மீண்டுமவர் ஹாஜியிடம் நேராகத் தாம்சென்று
ஐம்பத்து ஐந்துரூபாய் அவர்கையில் தாமளித்தார் [630]

இதன்பின்னர் ஹாஜியாரும் மசூதிவரத் தடையில்லை
உணவிற்கும் சேர்க்கப்பட்டார் தர்பாரில் தான்கலந்தார்

"பஞ்ச பூதங்களின் மேல் பாபாவின் கட்டுப்பாடு"::

பஞ்சபூதம் அத்தனையும் பாபாவின் ஆணைக்குக்
கட்டுண்ட இருநிகழ்வைச் சொல்லியிதை முடிக்கின்றேன்

மாலையிலே ஓர்நாளில் புயலொன்று வீசியது
கருமேகம் சூழ்ந்திருந்து கனமழையும் பெய்யலாச்சு

வெள்ளமங்குப் பெருகிவர ஜீவராசி அத்தனையும்
மசூதியுள் தஞ்சமாக பாபாவை நாடிவந்து

புயல்வேகம் தணிந்திடவே அருள்வேண்டி அடிபணிந்தார்
பல்லுயிரின் நிலைகண்டு பாபாவும் நெக்குருகி

இருக்கைவிட்டுத் தாமெழுந்து வாசலுக்கு வெளிவந்து
"நிறுத்துவுன் சீற்றத்தை! நிறுத்தி அடங்கியிரு!"

என்றவொரு இடிமுழக்கம் போலங்கே கர்ஜித்தார்
ஆணைக்குக் கட்டுப்பட்டு புயற்சீற்றம் அடங்கியது

மழையங்கு குறைந்துவிட வானமங்கே வெளுத்துவிடச்
சந்திரனும் வெளிவரவே மக்களெல்லாம் மகிழ்ந்தனரே!

2.
மற்றொருநாள் மதியத்தில் மசூதியின் உட்புறத்தில்
துனியிலிட்ட நெருப்பதுவும் சீற்றமுடன் எழும்பியதே

தீச்சுவாலை விட்டத்தின் உச்சியினைத் தொட்டுவிடச்
சுற்றிநின்ற பக்தருக்கோ செய்வதொன்றும் புரியவில்லை [640]

நீரூற்றி அணைத்திடவோ வேறேதும் செயுமாறோ
பாபாவைக் கேட்பதற்கும் எவர்க்குமங்குத் துணிவில்லை

நிலைமையினைக் கண்ணுற்ற பாபாவும் தன்னுடைய
ஸட்காவைக் கையெடுத்து தூணொன்றில் அடித்தபடி,

"கீழிறங்கு; அமைதியுறு" எனச்சொல்ல அதைக்கேட்டு
சுவாலையும் படிப்படியாய்க் கீழிறங்கிச் சாந்தமாக,

கண்ணுற்ற அனைவருமே பரவசத்தில் ஆழ்ந்தனரே!
இதுவன்றோ எம்ஸாயி அவதார லீலையாகும்!

சரணடைந்த அனைவர்க்கும் அருளாசி தருகின்றார்.
பக்தியுடன் தினம்படிக்கும் பக்தர்களின் துயர்களையே

அடியோடு களைகின்றார். இதுமட்டும் இல்லாது
ஆண்டவனின் தரிசனத்தை அவர்கண்டு மகிழ்வாகி

ஆசையெல்லாம் நிறைவேறி அவாவொன்றும் இல்லாது
உயர்நிலையை அடைவாரே! பாபாவே சரணம்சரணம்! [647]

ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!] 
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.