Thursday, May 29, 2014

Sai Charita - 27

-->
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 27


விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைக் கொடுத்து அனுகூலம் செய்தல் - தீக்ஷித்தின் விட்டல் காட்சி - கீதா ரஹஸ்யம் - கபர்தே குடும்பம்.

********************

திருக்கரந்தொட்டுப் புனிதப்படுத்தி ஆசீர்வதித்து அனுக்ரஹித்துப்
புனிதநூல்களைப் பக்தருக்களித்து அனுகூலம்செய்ததை இங்கேகாண்போம்.

முன்னுரை:

கடலிற்குளிக்கையில் புனிதநதிகளில் மூழ்கியபுண்ணியம் வந்தடைவதுபோல்,
ஸத்குருமலரடி பணிந்திடும்போது தெய்வமனைத்தையும் வணங்கிடும்பேறுவரும்.

கற்பகத்தருவாய் வேண்டியதளித்து ஞானக்கடலில் நம்மைநிறைத்து
ஆன்மவுணர்வினை அளித்திடும்ஸாயிக்கு என்றுமேவெற்றி உண்டாகட்டும்!

ஓ,ஸாயிபாபா! லீலைகள்சொல்லுமிக் கதைகளைக்கேட்டிடும் ஆர்வமெமக்கு
வந்திடச்செய்து, மழைநீருண்ணும் சாதகப்பறவையாய் மனம்நிறைசெய்க!

கேட்டிடுமவரும் அவரதுகுடும்பமும் கண்ணீர்பெருக்கி சுவாசம்சீராகி
மனவமைதியுடனே வேற்றுமைமறந்து நல்லருள்பெற்றிட ஆசீர்வதித்திடுக!

இவ்விதம்நிகழ்ந்திட குருவருள்மலர்ந்து ஆன்மீகவழியில் நமைநடத்திடுவார்
குருசரணெய்திட மாயையின்பிடிகள் நமைவிட்டகன்றிட பரம்பொருள்தெரியும்.

'புனிதமாக்கப்பட்ட நூலை அளித்தல்'::

நாளுமோதிட விரும்பியநூல்களை பாபாகரங்களால் புனிதமாக்கியே
பின்னரேயதனைப் பாராயணம்செய்ய பக்தர்சிலரும் விரும்புவதுண்டு.

அவ்விதம்படிக்கையில் ஸாயிபாபாவே தம்முடனிருப்பதாய் அவர்கள்கருதினர்.
ஏக்நாத்பாகவத நூலினையொருநாள் காகாமஹாஜனி அவ்விதம்கொணர்ந்தார் [1380]

அதனைப்படிக்கும் ஆர்வம்மிகுந்து ஷாமாஅதனைத் தன்னுடன்எடுத்து
மசூதிசென்றார். அவரிடமிருந்து நூலைவாங்கிய பாபாஅதனை

இங்குமங்குமாய்ச் சிலபக்கங்களைப் புரட்டிப்பார்த்தபின் ஷாமாவிடமே
திருப்பிக்கொடுத்து 'நீயேயிதனை வைத்துக்கொள்க' எனவேமொழிந்தார்.

காகாவுடையது எனச்சொன்னபின்னரும் 'நானுனக்களித்ததால் நீயேகொள்க!'
என்றவர்சொல்லி, இவ்விதமாக மேலும்பலநூல்கள் ஷாமாவையடைந்தன.

மற்றொருநூலுடன் காகாவந்து பாபாதிருக்கரம் பட்டிடச்செய்து தானதைக்கொண்டார்
நன்மையடைவாய் எனுமொருஆசிதந்து காகாவிடத்தில் பாபாகொடுத்தார்.

'ஷாமாவும், விஷ்ணு ஸஹஸ்ரநாமமும்'::

தன்னரும்பக்தராம் ஷாமாவுக்கு விஷ்ணுஸஹஸ்ர நாமப்பிரதியினை
பிரசாதமாக அளிப்பதன்மூலம் நன்மைபுரிந்திட பாபாநினைத்தார்.

ஷீர்டிவந்த ராம்தாஸியொருவர் காலையெழுந்துக் குளித்தபின்னர்
ஆடையணிந்து திருநீறணிந்து புனிதநூல்களைப் படிப்பதுவழக்கம்.

ஷாமாவுக்கு விஷ்ணுஸஹஸ்ர நாமப்பிரதியை அளித்திடவிரும்பிய
பாபாஓர்நாள் ராம்தாஸியையழைத்து, 'வயிற்றுவலியால் துடித்திடுமெனக்கு

சூரத்தாவாரை பேதிமருந்தைக் கடைவீதிசென்று இப்போதேகொணர்க'
எனப்பணித்தவரை அனுப்பியபின்னர், இருப்பிடத்திருந்து எழுந்துநடந்து

ராமதாஸி இருந்தவிடம்சென்று அங்கேயிருந்த நூலினையெடுத்து
ஷாமாவைப்பார்த்து, 'இந்தப்புத்தகம் மிகப்பயனுள்ளது.இதயம்துடித்து

உயிர்போகும்நிலையில் இருந்தசமயம் மார்போடுஇதனை அணைத்துக்கொண்டேன்.
அல்லாவேயிறங்கி என்னைக்காத்ததாய் ஆறுதலளித்த அற்புதநூலிது! [1390]

எனவேயிதனை இப்போதுனக்கு நானளிக்கின்றேன்! பொறுமையாய்ப்படி!
ஒருநாமமேனும் தினந்தோறும்படி! நன்மையுண்டாகும்' என்றவர்தந்தார்.

"கோபக்குணமும் பிடிவாதமும் மிகவும்நிறைந்த பைத்தியமானராமதாஸி

நிச்சயமென்னுடன் இதன்காரணமாய்ச் சண்டைக்குவருவான். மேலும்நானோர்

படிப்பறிவில்லாப் பட்டிக்காட்டான். எனக்கெதற்கிந்த ஸம்ஸ்கிருதப்புத்தகம்"
என்றேசொல்லி ஷாமாமறுத்தும் பாபாவதனை அவரிடம்திணித்தார்!

ராமதாஸிக்கும் தனக்குமிடையே சண்டைமூட்டவே பாபாயிவ்விதம்
செய்வதாகவே நினைத்தாரேயன்றி, துன்பத்தினின்றுத் தன்னைக்காத்துத்

தனக்கருள்செய்திட பாபாநிகழ்த்திய இந்தச்செயலையவர் புரிந்திடவில்லை.
எவ்வகைத்துன்பம் எவர்க்குவந்தாலும் அவற்றினின்று அவரைக்காத்திட

எவ்விதச்சடங்கும் தேவையில்லாத இறைநாமமொன்றே நல்வழியாகும்.
ஷாமாயிதனைப் புரிந்துகொள்ளாமல் இருந்தபோதிலும், ஏக்நாத்மஹாராஜ்

ஏழைபிராமணனைக் காத்தசெயல்போல் பாபாஇந்தச் செயலைநிகழ்த்தினார்.
சூரத்தாவாரை விதைகளைவாங்கி ராமதாஸியும் திரும்பிவந்ததும்

அருகிலிருந்த அண்ணாசிஞ்சிணீகர் நாரதர்வேலை செய்யவிரும்பி
நடந்ததனைத்தையும் அவரிடம்சொல்ல, கோபம்மிகுந்து முழுவெறியுடனே

ஷாமாவைநோக்கி ஓடிவந்து வயிற்றுவலியெனப் பொய்யைச்சொல்லித்
தம்மையனுப்பி புத்தகமெடுத்தவர் ஷாமாதானென ஏசிப்பேசிப்

புத்தகமுடனே தரவில்லையானால் மண்டையையுடைத்துக் கொள்வதாய்ப்பேசினார்.
அமைதியாய்ஷாமா எத்தனைசொல்லியும் ஆத்திரமடங்கா ராமதாசியைநோக்கி, [1400]

'ஓ,ராமதாஸி! ஏனிந்தக்கோபம்? ஷாமாநம்மவன்; வீணாயவனை
திட்டுவதேனோ? இத்தனைசண்டை போடுமாளாய்நீ மாறியதெங்ஙனம்?

இனிமையாய் மிருதுவாய் பேசிடவுன்னால் முடியாமற்போனதோ?
தினமுமித்தனை நூல்களைப்படித்தும் மனத்தூய்மையும் கட்டுப்பாடும்

இல்லாநீயொரு ராமதாஸியோ? பற்றுகளொழித்து இருந்திடல்வேண்டாமோ?
இந்தப்புத்தகத்தை இவ்வளவதிகமாய் விரும்புவதுனக்கு வியப்பாயில்லையோ?

மமதையொழித்து சமதையாகப் பாவிக்கும்மனமும் இருக்கவேண்டாமோ?
அற்பநூலுக்காய் சண்டையைவிடுத்து உன்னிடம்சென்று அமைதியாயமர்.

காசையெறிந்தால் நூல்கள்கிடைக்கும்; ஷாமாபோன்றொரு மனிதர்கிடைப்பாரோ?
நானேயந்த நூலினையெடுத்து ஷாமாவிடத்தில் கொடுத்திருக்கிறேன்.

மனப்பாடமாயது உனக்குத்தெரியும்; அவன்பலன்பெறவே அதனையளித்தேன்'
என்றேஸாயியும் இனிமையாய்க்கூறிட மந்திரம்போல அதனைக்கேட்டதும்

ராமதாஸியும் அமைதியடைந்து பஞ்சரத்தினி கீதையின்பிரதியை
ஷாமாதந்திட வேண்டிக்கேட்டதும், பத்துப்பிரதிகள் தருவதாய்ஷாமா

மறுமொழிதந்திட இவ்விதமந்த நிகழ்வுமங்கே முடிவுக்குவந்தது.
எதனாலிவ்விதம் தனக்குத்தேவையிலா நூலினையவரும் கேட்டுப்பெற்றார்

என்பதுபற்றியும், நன்னூல்படித்தவர் பாபாயெதிரில் சண்டையிட்டதும்
ஏனெனும்விவரம் தெரியாவிடினும் ஸஹஸ்ரநாமத்தின் பெருமையைஷாமா

உணர்ந்துகொள்ளவே பாபாயிவ்விதம் செய்தாரெனவே சொல்லிடவியலும்.
படிப்படியாக நூலினைக்கற்று பொறியியற்கல்லூரி பேராசிரியரும் [1410]

ஸாயிபாபாவின் பக்தருமான பூட்டியின்மருமகன் நார்கேயென்னும்
பேராசிரியர்க்கு விளக்கம்சொல்லிடும் வல்லமைபெற்று ஷாமாஉயர்ந்தார்.

'விட்டல் காட்சி'::

தியானம்செய்கையில் காகாஸாஹேப் விட்டலைக்கண்டதும்,
பின்னர்பாபா,வந்தவிட்டலை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ள

ஆசிகள்தந்ததும், அன்றையமதியம் வியாபாரியொருவன் பண்டரிபுரத்து
விட்டலின்படங்களை விற்றிடவருகையில், காலையிற்கண்டதும், படத்திலிருப்பதும்

ஒன்றாயிருந்த அதிசயம்கண்டு காகாவியந்ததும், பாபாசொன்ன
மொழிகளின்பெருமையை நினைந்துவியந்ததும் முன்னரேகண்டோம்.

'கீதா ரஹஸ்யம்'::

பிரம்மவித்தையைக் கற்றிடுமடியரை பாபாமிகவும் ஊக்குவித்தார்.
'பாபுஸாஹேப் ஜோக்[G]' என்பவர் 'திலகர்'எழுதிய 'கீதாரஹஸ்யம்'

எனுமோர்நூலினை அக்குளிலடக்கி மசூதிவந்து ஸாயியைப்பணிய
கீழேவிழுந்த புத்தகத்தினை பாபாபுரட்டிப் பார்த்தபின்னர்

பையிலிருந்து ரூபாயொன்றை அதன்மேல்வைத்து நன்னூலதனை
ஜோக்[G]'கிடமளித்து 'முழுமையாய்ப்படித்திட நன்மைவிளையுமென' ஆசியளித்தார்.

'கபர்தே குடும்பம்'::

அமராவதியின் பெரும்பணக்காரரும் பெருமைவாய்ந்த வழக்கறிஞரும்
டில்லிகவுன்ஸிலின் உறுப்பினருமான தாதாஸாஹேப் கபர்தேஎன்பவர்

குடும்பத்தினருடன் ஷீர்டிவந்து சிலமாதங்கள் தங்கியிருந்தார்
புத்திசாலியும் நாவன்மையுங்கொண்ட தாதாஸாஹேப் பாபாமுன்னால்

பேசுவதற்கும் நாவெழும்பாமல் மௌனமாயங்கே அமர்ந்திருந்தார்.
வந்திடுமனைவரும் பாபாவிடத்தில் பலவும்பேசி விவாதித்தபோதிலும் [1420]

சாந்தம்,எளிமை பொறுமையென்னும் நற்பண்புகள் மிகவும்வாய்ந்த
கபர்தே,நூல்கர், பூட்டிமூவரும் ஒன்றும்பேசாமல் மௌனமாயிருப்பர்.

பஞ்சதசிக்கு விளக்கம்கூறும் புலமைபடைத்தவர் கபர்தேயாயினும்
பாபாமுன்னர் மசூதிவந்தபின் எதுவும்பேசா நிலையினிலிருந்தார்.

வேதப்புலமை படைத்தவராயினும் பிரம்மத்தின்முன்னே மங்கியேவிடுவார்
கபர்தேயங்கு நான்குமாதமும் அவரது மனைவியார் ஏழுமாதமும்

பெருமகிழ்வுடனே தங்கிருந்தார். அன்பும்பக்தியும் நிறையப்பெற்ற
கபர்தேயின்துணைவியார் ஒவ்வொருமதியமும் நைவேத்தியத்தைத் தானேகொணர்ந்து

பாபாஅதனை எற்றபின்னரே தமதுஉணவினை உண்ணச்செல்வார்.
அவளதுபக்தியின் உறுதியைமற்றவர்க்குக் காட்டிடவிரும்பிய பாபாஒருநாள்

சன்ஸா,பூரி, சாதம்,சூப், சர்க்கரைப்பொங்கல் வற்றல்எடுத்து
மதியவேளையிலவர் வந்திட்டவுடனே மணிக்கணக்காய் காத்திடும்பாபா

உடனேஎழுந்து உணவிடம்சென்று மூடியைத்திறந்து உண்ணத்தொடங்கிட
அதனைக்கண்ட ஷாமாஅவரிடம், 'மற்றவருணவை வீசியெறிந்து

கண்ணெடுத்துப்பார்க்கும் கவலையுமின்றி இருந்திடும்நீங்கள் இந்தஉணவையோ
ஊக்கமுடன்வாங்கும் பாரபட்சமும் ஏனோதேவா? இவைமட்டும்இனிமையோ?'

என்றுகேட்டதும், 'உண்மையாகவே தனித்துவமேயிது! முந்தையப்பிறவியில்
பசுவாய்ப்பிறந்திவள் அதிகப்பாலினைக் கொடுத்துவந்தாள். அடுத்தடுத்துஇவளோர்

தோட்டக்காரன், க்ஷத்திரியன்,பிராமணன் முதலியகுலத்தில் பிறந்திருந்தாள்
வெகுநாள்கழித்து இவளையிங்கே நானும்கண்டதால் இப்படியுண்கிறேன்' [1430]

என்றேஸாயியும் பதிலுரைகூறி உணவினையுண்டு கைகளைக்கழுவி
திருப்தியடைந்ததின் அடையாளமாகவோர் ஏப்பமும்விட்டு இருக்கையிலமர்ந்தார்!

வணங்கிய அவளும் அருகினிலமர்ந்து பாபாவின்கால்களை இதமாய்ப்பிடித்தாள்
அவளதுகையை ஆதரவாக ஸாயிபிடித்துவிட இதனைக்கண்ட

ஷாமாவேடிக்கையாய் 'கடவுளும்பக்தையும்ஒருவருக்கொருவர் பரஸ்பரம்இப்படி
சேவைசெய்திடும் காட்சியைக்காண்பதும் அற்புதம்'என்றார். அப்போதுபாபா

''ராஜாராமா ராஜாராமா' என்றேதினமும் சொல்லிவந்திட வாழ்வின்நோக்கம்
அடையப்பெற்று சாந்தியுமடைவாய்' எனஅன்புடன் உபதேசித்தார்.

ஆன்மீகவழியை அறியாத‌‌வ‌ர்க்கிதுவோ தவறாய்த்தெரியினும் ஆனாலிதுவோ
குருதம்சக்தியைச் சீடர்க்குணர்த்தும் 'சக்தி-பாட்'எனும் அற்புதநிலையாம்.

குருவின்திருமொழி வந்திடுமனைத்தும் சீடனையடைந்து பலனையளிக்கும்.
குருவும்சீடனும் இருவருமொன்றே! பேதங்களேதும் இடையினில்லை.

குருவைச்சீடனும் வணங்குவதெல்லாம் புறத்தோற்றமே! இருவருமொன்றே!
பேதங்கள்அவரிடைக் காண்பவரெல்லாம் ஒழுங்கும்பக்குவமும் அடையாதவரே! [1437]

ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.