Thursday, May 29, 2014

Sai Charita - 26


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 26


1] பக்த பந்த், 2] ஹரிச்சந்திர பிதலே, 3] கோபால் ஆம்ப்டேகர் ஆகியோரின் கதைகள்.
************

முன்னுரை:

உலகினில்காணும் அனைத்துமிங்கே மாயையினாட்டமே! இறைவனினாற்றலே!
உண்மையிலிவையெலாம் இருப்பதுமில்லை; பரப்பிரம்மமே உண்மையிலிருப்பது!

இருட்டினில்தெரியும் மாலையோ,கயிறோ பாம்பெனமயங்கும் புறத்தோற்றமே
உள்ளினிலுறையும் மெய்ப்பொருளதனை நம்மிலெவரும் காண்பதுமில்லை!

ஞானக்கண்களைத் திறந்திடுமாற்றல் குருவினருளால் நிகழ்ந்திடுமென்பதால்
குருவருள்வேண்டி இறையருள்காண குருவடிபணிந்து வேண்டுதல்செய்வோம்.

'அந்தரங்க வழிபாடு'::

வழிபடும்நூதன முறையொன்றினையே ஹேமாத்பந்த்தும் இங்கேதருகிறார்.
குருபதம்கழுவும் பன்னீரெனவே இருகண்வழியும் நீரினைக்கொள்வோம் [1330]

தூயஅன்பெனும் சந்தனமெடுத்து குருவின்மேனியில் மகிழ்வுடன்பூசி
நம்பிக்கையென்னும் நல்லுடைகொண்டு ஸத்குருமேனியில் அழகாயுடுத்தி

நல்லுணர்வென்னும் அட்டகமலமும் ஒருமனதென்னும் கனியுமளித்து
பக்தியில்கமழும் நறுமணப்பொடியைச் குருவின்சிரசினில் பணிவுடனிட்டு

பற்றெனும்வேட்டியை இடுப்பினில்கட்டி பாதமலர்களில் நம்தலைவைத்து
நமதெனுமனைத்தையும் அவருக்களித்து, பக்தியென்னும் சாமரமெடுத்து

வெப்பந்தணிக்க விசிறியபின்னர் பணிவுடனவரிடம் இப்படிவேண்டுவோம்:
'உள்முகம்நோக்கி புத்தியைத்திருப்புக! இருப்பதுமில்லா திருப்பதுமான

அனைத்தையும்பிரித்து உணர்ந்திடும்ஞானமும், பற்றினையொழிக்கும் திண்மையுமளித்து
ஆன்மவுணர்வினை நாங்களடைந்திட எங்கள்கண்களைத் தமதாக்குங்கள்

உடலையுமுணர்வையும் கட்டுப்படுத்தும் மெய்யருள்நல்கி பதமலரடியில்
ஆறுதலடைந்திடும் மெய்ந்நிலைதந்து இன்பதுன்பங்கள் மறந்திடவருள்க!'

'பக்த பந்த்'::

ஷீர்டிசென்றிட எண்ணமின்றியும் 'பந்த்'தெனும்சீடர் அங்கேசென்றிடும்
நல்லருள்கிடைத்த நிகழ்வொன்றினை பின்வரும்சம்பவம் நமக்குச்சொல்லிடும்.

இரயிலில்செல்கையில் ஷீர்டிசென்றிடும் உறவினர்நண்பர் வரும்படியழைத்ததால்
மறுக்கவொண்ணாமல் விராரிலிறங்கி தன்குருஆசியைப் பெற்றுச்சென்றார்.

மறுநாட்காலை பதினொருமணிக்கு மசூதிசென்று தரிசனம்காணச்
சென்றிட்டவேளையில் வலிப்புவந்திட தம்முணர்வின்றி மயங்கிவீழ்ந்தார்.

அனைவரும்பயந்து தண்ணீர்தெளித்து பாபாவருளால் உணர்வுதிரும்பிட
மற்றொருகுருவின் சீடரிவரென முற்றிலுமறிந்த பாபாஅவரிடம், [1340]

'எந்நிலைவரினும் உமதுகுருவையே பற்றெனப்பற்றி அவருடனொன்றி
சதாகாலமும் அவருடனிருந்திடு' என்றவர்மொழிந்திட பாபாசொன்னதன்

குறிப்பினையுணர்ந்த பந்த்தும்தனது குருவினைநினைந்து ஸாயிகாட்டிய
அன்பினில்நெகிழ்ந்து வாழ்நாள்முழுதும் ஸாயியைமறந்திடா நினைவினைப்பெற்றார்.

'ஹரிச்சந்திர பிதலே'::

மும்பையில்வசித்த ஹரிச்சந்திரபிதலேவுக்கு வலிப்புநோய்வருத்திய மகனொருவனிருந்தான்.
பலவகைவைத்தியம் பார்த்துமேஅவனும் குணமாகாததால் ஞானியர்துணைநாடியே

தாஸ்கணுவின் கீர்த்தனைகேட்டு ஸாயிமஹிமையைக் கேள்விப்பட்டு
வெகுமதிபலவும் எடுத்துக்கொண்டு ஷீர்டிவந்து மசூதிசென்று

பாபாபதமலர் பணிந்தவர்முன்னே மகனையிட்டதும் அக்கணமேயவன்
வலிப்புவந்து உணர்வினையிழந்து வாய்நுரைதள்ளி வியர்த்துக்கொட்டி

உயிரிழந்தவன்போல் கீழேவிழுந்ததைக் கண்டவன்தாயும் கண்ணீர்விட்டாள்.
திருடர்க்குப்பயந்து வீட்டிலொளிந்தவன் மேலவ்வீடே இடிந்துவிழுதற்போல்,

புலிக்குப்பயந்து ஓடியபசுவும் கசாப்புக்காரனிடம் அகப்பட்டதுபோல்,,
வெயிலுக்கொதுங்க மரத்தடிசென்றவன் மேலம்மரமே சாய்ந்ததுபோலவும்,

பக்திமிகுந்து ஆலயம்சென்றவன்மேல் கோபுரமிடிந்து வீழ்ந்ததுபோலவும்
பாபாவினிடத்தில் நிகழ்ந்ததைக்கண்டு தாயவள்கலங்கிக் கதறியழுதாள்.

அதனைக்கண்ட பாபாஉடனே அவளைப்பார்த்து அமைதியாகவே
'ஓலமிடாதுபொறுமைகாத்திடு! அரைமணியிலிவன் நிலைசரியாகும்!

வாதாவிற்கிவனைக் கொண்டுசெல்லுக!' என்றேகூறிட அதன்படிசெய்திட
வலிப்பும்நின்று மகன்குணமாகிட அனைவரும்மகிழ்ந்து ஐயம்தெளிந்தனர். [1350]

பிதலேதனதுமனைவியினுடனே தரிசனம்காணமசூதிவந்து ஸாயியைப்பணிந்தவர் கால்களைப்பிடித்து
மனத்தினுள்ளேநன்றிகூறிட, அவரைப்பார்த்துபாபாசிரித்து, 'ஐயமனைத்தும் தீர்ந்துபோனதா?

பொறுமையும்நம்பிக்கையும் கொண்டவர்தம்மை ஹரியும்காப்பார்' என்றவர்சொல்லிட,
வசதிபடைத்தபிதலேஅங்கே இனிப்புகள்வழங்கி பழமும்தாம்பூலமும் பாபாவுக்களித்தார்.

அவரதுமனைவியின் பூரணபக்தியும் அன்பையும்கண்டு, உள்ளம்மகிழ்ந்த
பாபாஅவர்கள் கிளம்பிடும்நாளில் உதியும்ஆசியும் அளித்தப்பின்னர்

பிதலேயைப்பார்த்து, 'முன்னமேயுனக்கு இரண்டுரூபாய்கள் கொடுத்திருக்கிறேன்;
மேலும்மூன்று ரூபாய்களுனக்கு ஆசீர்வாதமாய் இப்போதுதருவேன்!

பூஜையறையினில் இதனைவைத்திட நலங்கள்யாவும் நின்னைச்சேரும்.'
என்றவர்சொன்னதன் பொருளறியாமல் இல்லம்திரும்பி அன்னையினிடத்தில்

விவரம்சொல்லிட அவருமதனைத் தீவிரமாகச் சிந்தித்தபின்னர்
முன்னம்நடந்த சம்பவமொன்று நினைவினில்வந்திட மகனைப்பார்த்து,

'முன்னமொருநாள் உனதுதந்தையார் அக்கல்கோட்டுச் சித்தரொருவரைச்
சந்தித்தபோது அந்தயோகியும் இரண்டுரூபாயை அவருக்குத்தந்து

இதேபோலவே பூஜையில்வைத்து வழிபடச்சொன்னார். அப்படியேயுன்
தந்தையும்செய்திட சிலநாட்கழிந்து அதனைமறந்திட அவையும்தொலைந்தன!

ஸாயிபாபாவின் நல்லாசியினால் இப்போதுனக்கது மீண்டும்கிடைத்தது;
இனிமேலாகிலும்நீ கவனமாயிருந்து தீவினையகற்றிட நன்மையடைவாய்'

என்றுசொன்னதும், பாபாசொன்னதன் பொருளையுணர்ந்து குருவின்மஹிமையைத்
தானுமுணர்ந்து தரிசனப்பலனின் பெருமையுணர்ந்து நேர்வழிநடந்தார். [1360]

'ஆம்ப்டேகர்'::

புனேயைச்சேர்ந்த 'கோபால்நாராயண்ஆம்ப்டேகர்' ஸாயிபாபாவின் அரும்பெரும்பக்தர்
வேலையிலிருந்து ஓய்வுபெற்றதும் மீண்டுமோர்வேலை முனைந்துதேடியும்

எதுவும்கிட்டாமல் கேடுகள்சூழ்ந்து நிலைமைமேலுமே மோசமாகிட
ஒவ்வொருஆண்டும் ஷீர்டிசென்று ஸாயியைக்கண்டு தம்குறைகவலைகள்

அனைத்தையும்சொல்லி ஏழாண்டுகளைக் கழித்தபின்னர் ஆயிரத்தொள்ளாயிரத்து
பதினாறாமாண்டில் ஷீர்டியிலேயே தற்கொலைசெய்திட முடிவும்செய்து

மனைவியினுடனே ஷீர்டிவந்து தீக்ஷித்வாடாவிற்கு எதிரேயிருந்த
மாட்டுவண்டியில் அமர்ந்தநேரம், அருகினிலுள்ளக் கிணற்றில்வீழ்ந்து

வாழ்க்கையைமுடிக்கத் தீர்மானித்தார்; ஆயினும்பாபா வேறொருவிதமாய்
நடத்திவைத்தார்! அருகிலிருந்த உணவுவிடுதியின் உரிமையாளராம்

'சகுண்'என்பவர் வெளியேவந்து இவரைப்பார்த்து 'அக்கல்கோட்மஹராஜ்
சரித்திரத்தை எப்போதேனும் படித்துள்ளீரோ?' என்றேவினவிட,

அவரிடமிருந்து நூலைவாங்கிஅதனில்கண்ட கதையொன்றினையே படிக்கலானார்:
'தீராவயிற்று வலியால்துடித்த பக்தனொருவன் தன்னுயிர்மாய்த்திட

நள்ளிரவொன்றில் அருகிலிருந்த கிணற்றில்குதித்ததும் மஹராஜ்அவனை
வெளியிலெடுத்து 'நல்லதோகெட்டதோ முன்வினைப்பயனை அனுபவித்தாகணும்!

தற்கொலையுனக்கு உதவிசெய்யாது! மற்றொருபிறவிநீயுமெடுத்து மீண்டுமதனை
அனுபவிக்கநேரிடும்! தன்னைத்தானே மாய்ப்பதற்கெதிராய் இன்னும்கொஞ்சம் கஷ்டப்பட்டே

முன்வினைப்பலனை தீர்ப்பதேநன்று' எனுமோர்போதனை அவனுக்களித்தார்.
தக்கசமயத்தில் பொருத்தமானதிக் கதையைப்படித்தவர் அதிசயமடைந்தார். [1370]

கதையில்சொல்லிய குறிப்பினையுணர்ந்து பாபாஅருளை முற்றுமாயுணர்ந்து
எங்கும்நிறையுமவர் மஹிமையையறிந்து பக்தியில்மேலும் தீவிரமானார்.

குருமாரிருவர் அருளையடைந்து ஜோதிடராகிப் பெரும்பொருளீட்டி
வசதியாகவும் இன்பமாகவும் காலத்தைக்கழிக்கும் நல்லருள்பெற்றார். [1372]

ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.