Monday, May 26, 2014

Sai Charita -14



"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]

(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 14


[நாந்தேடைச் சேர்ந்த ரத்தன்ஜி வாடியா - மௌலா ஸாஹேப் முனிவர் - தக்ஷிணை சாஸ்திரம் - மீமாம்ஸா.]

சொல்லும்,கருணையும் தீராநோய்களைத் தீர்த்ததைக் கண்டோம்
நல்லதோர்பிள்ளையை ரத்தன்ஜிவாடியாவுக்கு பாபாஅருளியதை இங்கேகாண்போம்

ஞானியர்வாழ்க்கை உள்ளும்புறமும் இனிமைகொண்டதாய் இருத்தலையுணர்வோம்புரிந்திடும்பல்வகைச் செயல்களனைத்தும் மானுடவுருவில் பேரானந்தம் [740]

கடமை,செயல்களை விளக்கிடும்கதைகளை அடியவர்க்கருளி மெய்வழிகாட்டினார்
கவனம்கூடிய மகிழ்வுடன்வாழ்ந்திடும் மெய்வழிதந்து அனுபூதிநிறைத்தார்

முன்னருட்பயனாய் கிடைத்தவிவ்வுடம்பால் பக்தியும்முக்தியும் பெற்றிடல்வேண்டும்சோம்பலைநீக்கி விழிப்புடனிருந்து பிறந்தப்பயனைப் பெற்றிடல்வேண்டும்

சாயிலீலையைச் சொல்லிடும்கதைகளை நாடோறும்கேட்டிட தரிசனம்கிட்டும்சாயியின்நினைவு மனதையடக்கி மெய்ப்பொருளதனில் ஒன்றிடச்செய்யும்

'நாந்தேடைச் சேர்ந்த ரத்தன் ஜி'::

நைஜாம்மாநில 'நாந்தேட்'நகரினில் பெரும்பணம்கொண்ட வணிகரொருவர்
வாழ்ந்திருந்தார் 'ரத்தன்ஜிஷாபூர்ஜி வாடியா'யென்பது அவர்தம்பெயராம்

நிலபுலன்மிகுந்து கால்நடைசெழித்து வசதிபடைத்த செல்வராய்த்திகழ்ந்தார்
புறத்தினில்மிகவும் மகிழ்வுடனிருந்தும் மனத்துளங்ஙனம் இருந்திடவில்லை

குறையிலாமனிதர் இருப்பதேயில்லை எனுமோர்விதிக்கு இவரும்விலக்கல்ல

நிறைவாய்ப்பலர்க்கும் உதவிகள்செய்திட நிறைமகனென்றே பலரும்நினைத்தனர்

பிள்ளையில்லாக் குறையினலவரோ நாளுமுள்ளுள் மிகவும்வாடினார்
அன்பிலாத்துதிபோல், துணையிலாஇசைபோல், பூணூலில்லா அந்தணன்போல

பொதுவறிவின்றிக் கலையினில்மட்டும் தனித்தோர்திறமையைக் கொண்டவன்போலதன்நிலைவருந்தாத் தீர்த்தயாத்திரை செல்பவன்போல, அட்டிகையில்லா

அணிகலன்போல, அழகும்பயனும் இல்லாநிலையே கொண்டவர்போன்றே
ஆண்மகவில்லா கணவனின்நிலையும் என்றேஉலகினில் யாவரும்கொள்வர்.

இறைவனையெண்ணி அவன்புகழ்பாடி அவனருள்நாடி அல்லும்பகலும்
ஒருமகவுக்காய் ரத்தன்ஜியும் மனமிகவாடி நாளுமேங்கினார் [750]

மதிப்பிற்குரிய தாஸ்கணுவிடம் தன்குறைசொல்லி வழியைக்கேட்டிட
ஷீர்டிசென்று சாயியைப்பணிந்து அவரைவேண்டிடும் வழியைக்காட்டினார்

அவர்மொழிகேட்டு ஷீர்டிசென்று சாயியைப்பணிந்து மாலையையிட்டார்
பழங்கள்நிறைந்த கூடையையளித்து அவர்பதம்கொண்டு வேண்டலாயினார்:

'துயரால்வருந்தும் அடியவர்குறைகளை அடியோடகற்றும் நின்புகழ்கேட்டு
நானுமிங்கே திருவடிதேடி அடைக்கலம்புகுந்தேன்; கைவிடல்வேண்டாம்!'

தந்திடநினைத்த ஐந்துரூபாயை தக்ஷிணையாக பாபாகேட்டு
அதிலேமூன்று ரூபாயும்பதினாலு அணாவும்கழித்து மீதியைக்கேட்டார்

முதன்முறைதரிசனம் பெற்றிடும்வேளையில் முன்னரேஎங்ஙனம் பெற்றிடலியலும்என்றேதிகைத்த ரத்தன்ஜியும் மறுபேச்சின்றி மீதியைக்கொடுத்தார்

மீண்டும்பணிந்து மகவினையளிக்க பாபாவையவர் வேண்டிக்கொண்டார்
அவரதுநிலையைக் கண்டதும்பாபா மனமிகவுருகி அவரைத்தேற்றினார்

'கவலையெதுவும் பட்டிடவேண்டாம்; கெட்டகாலமும் இன்றோடொழிந்தது'
என்றேகூறி உதியையளித்து தலையைத்தொட்டு ஆசீர்வதித்தார்

'அல்லாஅவரது ஆசையைமுடிப்பார்' எனுமொருஆசியை பாபாநல்கினார்
நாந்தேட்வந்து தாஸ்கணுவிடம் நடந்ததைக்கூறி விளக்கம்கேட்டார்

ஷீர்டியிதுவரை சென்றதேயில்லை; எவ்விதம்பாபா என்னிடம்தக்ஷிணை
முன்னரேபெற்றேன் என்றுகூறினார் என்பதுமட்டும் விளங்கவேயில்லை'

இருவருமதையே சிந்தித்திருக்க சிலநாள்முன்னர் நடந்ததோர்நிகழ்வு
நினைவினில்வரவே சட்டெனவனைத்தும் தெளிவாய்ப்புரிந்து மனதைநிறைத்தது [760]

'மௌலாஸாஹேப்' எனுமொருமுனிவர் நாந்தேட்நகரில் வாழ்ந்திருந்தார்
கூலிதூக்கும் பணியாளாகப் பணியினையவரும் செய்திருந்தார்

ஒருமுறைமுனிவர் ரத்தன்ஜிஇல்லம் வந்திட்டபோது வரவேற்றவர்க்கு
விருந்தொன்றுகொடுத்த கணக்கின்தொகைதான் மூன்றுரூபாயும் பதினாலணாவும்!

எங்கோயிருந்தும் எங்கும்நிகழ்வதைக் கண்டிடும்நிறைபெரு அறிவுடையாரிவரெனஇருவருமுணர்ந்து ஆச்சரியத்தாலே செயலதைமறந்து பாபாவைப்போற்றினர்

ஷீர்டியில்வாழினும் தொலைவினிலேநிகழ்வதெலாம் துல்லியமாய் அறிந்திருந்தார் நடப்பதுவும் நடந்திடப் போவதுவுமனைத்துமே நிச்சயமாய்த் தெரிந்திருந்தார்

காணாதபோழ்தினிலும் முனிவரின் இதயத்துளும் கலந்திருந்திலாவிடின் எங்ஙனமவர்
அவர்க்களித்தவரவேற்பினையும் செலவிட்டதொகையினையும் தெளிவாகச் சொல்லவியலும்?

தாஸ்கணுஅளித்திட்ட விளக்கத்தால்வாடியாவும் மனமகிழ்ந்து உவகையுற்றார்

வரமளித்தபடியவர்க்கு ஆண்மகவும்பிறந்திட்டு அதற்கடுத்து பனிரெண்டுபெற்றாலும்

நான்குமகவுகளே உயிர்தப்பிப் பிழைத்தன‌வெனக் கேட்டவரால் அறிகின்றோம்'ஹரிவிநாயக்சாதே'யெனும் பெருந்தகையின் முதல்மனைவி மரித்தபின்னும்

மறுமணமும்புரிகவென பாபாஅருளினாற்போல், முதலிரண்டும் பெண்ணாயினும்மூன்றாவதுபிள்ளையாக ஆண்பிள்ளைபெற்றாரென அடிக்குறிப்பு ஒன்றுண்டு.

'தக்ஷிணை - மீமாம்ஸம் [தக்ஷிணை பற்றிய தத்துவம்.'] ::

தக்ஷிணைபற்றிய குறிப்புகளுடனே இலம்பகமிதனை முடிக்கின்றோம்
காணவந்தஅடியாரிடம் தக்ஷிணைகேட்டார் பாபாவென்பது அனைவருமறிவர்

பக்கிரியென்றிவர் பற்றற்றிருப்பின் தக்ஷிணைஇவர்ஏன் கேட்டிடவேண்டும்?
பணத்தைப்பற்றிஏன் கவலையுறவேண்டுமெனும் கேள்விகள்பலவும் பிறக்கலாமிங்கே [770]

ஷீர்டிவாசம் தொடங்கியகாலம் நெடுநாள்அவருமிதைக் கேட்கவுமில்லை
எரிக்கப்பட்டத் தீக்குச்சிகளையேச் சேமித்துப்பையுள் வைத்துக்கொண்டார்

மரியாதைநிமித்தம் எவரும்அவர்முன் வைத்திட்டபைஸாவில் அதனைக்கொண்டு தனக்குப்பிடித்தப் புகையிலைஎண்ணெய் இவற்றையே வாங்கினார்

சிலநாள்கழிந்து ஒருசிலர்அவர்முன் செப்புக்காசுகளை வைக்கலாயினர்
பைசாஒன்றெனில் சட்டைப்பைக்குள்ளும் இரண்டெனில்அதனைத் திருப்பித்தந்தும்

இருந்திட்டவழக்கம் நாட்படநாட்பட பெருமையறிந்து கூட்டம்பெருகிட
அப்போதவரும் அடியவர்களிடம் தக்ஷிணைகேட்டு வாங்கத்தொடங்கினார்

தெய்வபூசையில் வைப்பதுபோலவே ஞானியர்க்குமது பொருந்திவந்தது
இறைவன்,அரசன், ஞானியர்குருமார் இவர்களைக்ககாண தக்ஷிணைதேவை

வேதநூல்களும் இதனைச்சொல்லும் கருத்துகள்பலவும் மிகவிங்குண்டு
பிருஹாதாரண்யக உபநிடதம்சொல்லும் கருத்தினையிங்கே சற்றேகாண்போம்

'த'வெனுமெழுத்தால் இறைவனைதேவர்கள், மனிதர்,பிசாசுகள் குறிப்பிட்டறிந்த‌னர்
'தமா'வென்னும் தன்னடக்கமிதுவெனத் தேவர்கள்புரிந்து தெரிந்துகொண்டனர்

'தானம்'என்னும் தர்மமிதுவென மனிதர்தெளிந்து செயல்படுத்தினர்
'தயா'வென்னும் பரிவிதுவெனவே பேய்களும்புரிந்து நடந்துகொண்டன

இதன்படிமனிதர் தானமும்தருமமும் செய்திடல்வேண்டும் என்பதுபுரியும்
தைத்ரியவேதமும் குருவென்பவர்தம் சீடரிடத்தில் சொல்வதுமிதுவே

'நம்பிக்கையுடனோ அல்லதில்லாபடிக்கோ பெருந்தன்மையுடன் தானம்கொடுங்கள்
பணிவன்புடனும் பயபக்தியுடனும் இரக்கத்துடனும் மிகுதியாய்க்கொடுங்கள்' [780]

தானம்கொடுப்பதைப் புரிந்திடும்வண்ணம், பற்றுகளனைத்தும் அற்றிடும்வண்ணம்
மனதில்சுத்தம் பெருகிடும்வண்ணம் பாபாயிதனை வற்புறுத்திப்பெற்றார்

ஆயினும்இதிலோர் விசித்திரமான செய்கையும்உள்ளுள் மறைந்திருந்தது
வாங்கியதொகைக்கு நூறுமடங்காய் பாபாஅதனைத் திருப்பிக்கொடுத்தார்

திரும்பத்திரும்ப வற்புறுத்தியே பணப்பைமுழுதும் காலியாக்கியே
பாபாவாங்கிய தக்ஷிணையாலே பின்னாள்வாழ்நாள் முழுதும்தமக்கு

பணத்திற்கென்றும் குறையேயில்லை என்றொருஅடியார் 'கணபதிராவ்
போடஸ்'என்பார் சுயசரிதையொன்றில் குறிப்பிட்டநிகழ்வை இங்கேகுறிப்போம்.

பணத்தைமட்டுமே தக்ஷிணையாகப் பெற்றார்எனாமல் மறைபொருளுமுண்டு
'நார்கே'யென்னும் பேராசிரியரைப் பதினைந்துரூபாய் தக்ஷிணைகேட்டார்

பணமேயில்லாப் பரமஏழைநான் என்றவர்சொல்ல அதற்குபாபா
'பணமேதுமில்லை யென்றேயெனக்கு நன்கேதெரியும். ஆயினும்நீவிர்

படித்துவந்திடும் யோகவசிஷ்டம் என்னும்நூலின் வழியேயெனக்குத்
தக்ஷிணைதருக’ என்றவர்சொன்னதன் பொருளும்நூலைப் படித்ததன்பொருளை

மனத்துள்ளிருத்தி ஸாயியையதனுள் உணர்ந்துகொள்வதே பாபாகேட்டது!
'தர்கட்'என்னும் பெண்மணியிடத்தில் ஆறுரூபாய்கள் தக்ஷிணைகேட்டார்

இல்லையென்றவர் வருந்தும்நேரம் உள்ளின்றுவாட்டும் 'காமம்குரோதம்
மோஹம்லோபம் மதமாத்சர்யம்' இவையேஆறெனக் கணவர்விளக்கினார்

தக்ஷிணைமூலம் பெரும்பணம்சேர்ந்தும் அனைத்தையுமன்றே பகிர்ந்தளித்திடுவார்
மறுநாள்காலை வழக்கம்போலொரு பக்கிரியெனவே பாபாயிருப்பார் [790]

பத்துஆண்டுகள் ஆயிரக்கணக்கில் தக்ஷிணைவாங்கியும் மஹாஸ‌மாதி
அடைந்திடும்நேரம் அவர்தம்பையில் ஒருசிலரூபாய்ப் பணமேமிச்சம்!

துறவும்தூய்மையும் போதித்திடவே அடியவரிடத்தில் தக்ஷிணைவாங்கினார்
என்பதேயிதனின் சுருங்கியகருத்து என்பதையனைவரும் புரிந்திடல்வேண்டும்.

'பின்னுரை'::

ஸாயியினடியவர் மாம்லதாரிவர் பி.வி.தேவ்எனும் பெருந்தகையொருவர்
ஸாயிலீலாவின் சஞ்சிகையொன்றில்[7:25:26]தக்ஷிணைபற்றிச் சொல்வதைக்கேட்போம்

'எல்லாரிடத்தும் கேட்டதுமில்லை; கேளாதபோதும் கொடுத்தவர்கொடுப்பதை
வாங்கிக்கொண்டார்; ஒருசிலசமயம் மறுத்ததுமுண்டு; ஒருசிலரிடமே

அடிக்கடிகேட்டார்; சஞ்சலப்பட்டுத் தயங்கியவரிடத்தில் கேட்டதுமில்லை;
விரும்பாப்பொருளை எவரேனும்வைத்தால் அதனையவரும் தொடுவதுமில்லை

அப்படிஎவரும் தொடர்ந்துவைத்தால் எடுத்திடச்சொல்லி அகற்றிடச்செய்வார்;
அவரவர்பக்தி, தேவை,விருப்பம் இவற்றைக்கொண்டு தொகையைக்கேட்டார்;

பெண்டிர்சிறுவர் ஏழைகள்செல்வர் எல்லாரிடத்தும் விரும்பிக்கேட்டார்;
தரவில்லையெனிலோ அவரிடம்சீற்றம் கொண்டதுமில்லை; அயலார்மூலம்

அனுப்பியதக்ஷிணை தரவிலையென்றால் ஞாபகமூட்டித் தந்திடச்செய்வார்;
கொடுத்தபணத்தில் பகுதியைத்தந்து பத்திரமாகக் காத்திடச்சொல்வார்;

இவ்விதம்செய்தல் அடியவர்மனதில் மகிழ்ச்சியைத்தந்து நன்மையளித்தது
கேட்டதைவிடவும் கூடக்கொடுத்தால் மிகுதியைத்திருப்பிக் கொடுப்பார்பாபா;

கடன்வாங்கியோ, பிச்சையெடுத்தோ கேட்டத்தொகையை அளித்திடச்சொல்வார்; ஒரேநபரிடம் ஒரேநாளினில் பலமுறைதக்ஷிணை கேட்டுவாங்குவார்; [800]

வாங்கியபணத்தில் தனக்கென மிகவும் குறைவேபாபா செலவழித்திருந்தார்
'சில்லிம்'என்னும் புகைக்குழாய்வாங்கவும், 'துனி'யிலெரிக்க விறகினைவாங்கவும்

செலவழித்தது போகமிகுதியை அடியவர்க்கெல்லாம் தருமமாய்த்தந்தார்;
சமஸ்தானத்தில் இருக்கும்பொருட்கள் ராதாகிருஷ்ண மாயியால்கேட்டுப்

பெற்றவையாகும்; பெரும்பொருளெவரும் கொணர்ந்தால்பாபா சீற்றங்கொண்டு கடிந்துகொள்வார்; கோமணம்,துண்டு, கஃப்னிமற்றுமோர் தகரக்குவளையே

தன்னிடமிருக்கும் உடமைகளெனவும், மீதிப்பொருட்களை அடியவர்கொணர்ந்து தொல்லைசெய்வதாய் நானாசாஹேப் சந்தோர்க்கரிடம் பாபாசொல்லுவார்;

பெண்ணும்பொருளும் ஆன்மீகவாழ்வின் இருபெருந்தொல்லை; இதனைக்காட்டிட
ஷீர்டித்தலத்தில் பாபாநிகழ்த்திய இருபெரும்முறைமைகள் மாயியும்,தொகையும்!

வருபவரிடத்தில் தக்ஷிணைகேட்டார்; பள்ளிக்குச்செல்ல அவரைப்பணித்தார்
பள்ளியென்பதோ ராதாகிருஷ்ண மாயியின்வீடு! இவ்விருசோதனைத்

தேர்ச்சியடைபவர் பெண்ணையும்,பொன்னையும் துறந்தவராகி முன்னேற்றம்காண்பர்'

என்றவர்சொல்லி, 'புண்ணியத்தலத்தில் புண்ணியர்கையில் கொடுத்திடும்தக்ஷிணை

நற்பலனளிக்கும்' என்னுமுண்மையை மேற்கோள்காட்டி தேவும்முடிக்கிறார்
ஷீர்டித்தலத்தில் அருளும்ஸாயி பாபாவைநிகர்த்தொரு புனிதமுமுண்டோ! [808]

ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!

[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.