Wednesday, September 15, 2010

Karma- Part-4


 
சிறிது நாட்கள் சென்றன. நானா மீண்டும் பாபாவிடம் வந்து தனக்கு செய்த உபதேசங்களை மீண்டும் தொடருவதாகக் கூறியதை நினைவு கூர்ந்து மனத் துயரம் மற்றும் துயரங்களில் இருந்து முக்தாஸ்திதி என்ற மன விடுதலை கிடைப்பது எப்படி என்பது பற்றி தனக்குக் கூறுமாறு கேட்டார். அதற்கு பாபா கூறலானார் ' எந்த ஒருவரும் தன்னுடைய மனதை விருப்பு வெறுப்பற்ற நிலையில் வைத்திருந்து நல்லது, கேட்டதை பார்த்து நடந்து, விதியை நம்பிக்கொண்டு வாழவேண்டும்.
இயற்கையாக நடப்பவையே நமக்கு விதிக்கப்பட்டு உள்ள விதி. நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்வது விதியால் வருபவை அல்ல. அவை நாம் செய்யும் காரியத்தினால் நிகழ்பவை. ஒரு வேலையாள் தன்னுடைய எஜமானனைக் கொன்று விட்டு அவனுடைய சொத்துக்களை அபகரித்துக் கொண்டு எஜமானனாக மாறி பெரும் செல்வத்தில் மிதக்கத் துவங்கினால் அதி விதியால் அல்ல அவனுடைய கேடு கேட்ட மதியால் ( புத்தி), தனது மனதில் தோன்றிய ஆசையினால் ஏற்படுத்திக் கொண்டவை. அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த கர்மாவினால் இந்த ஜென்மத்தில் வேலையாளாக பிறந்து உள்ளான். அவ்வளவே. ஆனால் இந்த ஜென்மாவில் எஜமானனையும் ஏமாற்றி ஏற்படுத்திக் கொண்ட கர்மாக்களும் சேர்ந்து கொண்டு அவனுக்கு அடுத்தடுத்த பிறப்புக்களை தரும். அதற்கெல்லாம் அவன் அனுபவிக்க வேண்டும். அதை முட்டாள்கள் உணருவது இல்லை. அறிவு இருப்பவரே யோசனை செய்து தக்க வாழ்வை மேற்கொள்வார்கள். மேலும் ஒருவன் விஷம் குடித்து தனக்கு மரணத்தை ஏற்படுத்திக் கொள்வது அவனுடைய விதியால் அல்ல, அவனுடைய கெட்ட புத்தியால்தான்.
ஒரே மாதிரியான கல்வியை பெற்ற பட்டதாரிகளைப் பார். அவர்களில் எத்தனைபேர் யோகிகளாக மாறுகிறார்கள், எத்தனைபேர் ஆசிரியர்களாகவும், கடைகளை வைத்திருப்பவராகவும், தொழில் செய்பவர்களாகவும் மாறி விடுகின்றார்கள். அனைவர் படித்ததும் ஒரே படிப்பு அல்லவா? அதற்குக் காரணம் அவர்களின் விதி அல்ல, அவர்கள் தாமாகவே தமது மனதினால் ஏற்படுத்திக் கொண்ட நிலை. ஆகவே விதிக்கும், ஒருவர் தாமாகவே ஏற்படுத்திக் கொள்ளும் நிலைக்கும் உள்ள வேறுபாட்டை நீ கவனிக்க வேண்டும்'
அதைக் கேட்ட நானா கூறினார் ' ஒருவன் திருடனாவது அவன் விதியினால்தானே? பிறப்பவன் தனது நடத்தையினாலா திருடனாகிறான்?'
பாபா அதைக் கேட்டு கோபமடைந்தார். ' நானா, உன்னுடைய எண்ணங்களுடைய முட்டாள்தனத்துக்கு எல்லையே இல்லை. உண்மையான பல திருடர்கள் வழக்கை நிரூபிக்க முடியாமல் விடுதலை அடைந்து சுதந்திரமாக சுற்றுகிறார்கள். பல அப்பாவிகள் சிறைக்குள் மாட்டிகொண்டு தேவையற்ற தண்டனை பெறுகின்றார்கள். அதுவே விதி. உண்மையான திருடர்கள் இந்த ஜென்மத்தில் தண்டனையை அனுபவிக்காவிடில் அடுத்த ஜென்மம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றார்கள். அதுவே கர்மா . இந்த உண்மையை நீ புரிந்து கொள்ளவேண்டும் .
நாம் உண்மையானவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களையே பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கேட்டவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். நம்மால் முடியாததை தருவதாக தேவை இல்லாமல் வாக்குறுதி தரக் கூடாது. வாக்குறுதி தந்து விட்டால் அது கடவுளுக்கு தரும் வாக்குப் போல காப்பாற்றப் படவேண்டும்.
திருமணம் ஆன ஒருவன் தன்னுடைய மனைவியுடனே உல்லாச வாழ்க்கை நடத்தலாமே தவிர மற்றொருவனின் மனைவியிடம் சுகம் பெற்று வாழ எண்ணுவதே தவறு. தனது இந்திரியங்களை, ஆசைகளை கட்டுப் படுத்த முடியாத நிலையே ஒருவன் அடையும் கர்ம வினைக்கு காரணமாகி மறு பிறப்பு எடுக்க வைக்கும். ஆகவே நமக்கு கர்ம வினை வரகூடாது என நினைப்பவர் தமது தீராத ஆசைகளை , ஆறு ஆசைகளையும் கட்டுப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆசையும் உன்னை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை உன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திரு. உண்மையான புத்திசாலி அப்படித்தான் செய்வான். நமக்குத் தேவையான அளவு ஆசையே வைத்துக் கொள்ளவேண்டும். கடவுளை அடைய ஆசைப் படு, முக்தி கிடைக்க ஆசைப் படு, அதற்கான வழிகளைப் பெற ஆசைப் படு, தீயவற்றின் மீது பற்று வைக்காதே. கடவுளின் நினைவுடனே என்றும் இருந்து வா. அகங்காரத்தை அடக்கு. நலாவற்றை கேள் , நல்லதைப் பார். படிததவர்களையும் பெற்றோர்களையும் மதித்துப் பழகு.
ஒரு தாய் என்பவள் ஆயிரக்கணக்கான புனித இடங்களுக்கு சமமானவள். தந்தை வணங்க வேண்டியவர். உன் உடன் பிறந்தோருடன் அன்புடன் பழகு. மனைவியை நல்லபடி நடத்து, ஆனால் அவளிடம் அடிமையாகி விடாதே. தேவையானவற்றுக்கு மட்டுமே அவளுடன் ஆலோசனை செய். வீட்டு விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடாதே . குழந்தைகளுடன் அதிகம் கூத்தடிக்காதே, பணத்திற்காக உன் மகளை வயதானவருக்கு மணம் முடிக்காதே, அதற்குப் பதில் உன் மகளுக்கு தகுதியான மருமகனைத் தேர்ந்து எடு, வேலைகாரர்களுடன் நெருக்கமாகப் பழகாதே. இது போன்ற குணங்களைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கப் பழகு.

............பாகம்  -5.......தொடரும்
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.