Sai Charita - 23
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 23
[யோகமும், வெங்காயமும் - பாம்புக் கடியினின்று ஷாமா குணமாக்கப்படுதல் - வாந்தி பேதியின் [காலரா] கட்டளைகள் மீறப்பட்டன - குரு பக்திக்குக் கடுமையான சோதனை]
***********
முன்னுரை:
ஸத்துவ,ராஜஸ தமோகுணங்களுக்கு அப்பாற்பட்டே ஜீவனிருந்தும்
'தான்யார்?'என்றே அறியவொண்ணாமல் மாயையுள்சிக்கி, 'தானேஎல்லாம்'
எனுமோராணவக் குழியினில்வீழ்ந்து முடிவிலாத்துன்பச் சூழலிலாழ்ந்து
விடுபடமுடியா வழியுமறியாது அல்லற்பட்டே மனிதன்தவிக்கிறான்.
குருசரணங்களிற் செலுத்துமன்புடை பக்தியொன்றுதான் விடுதலைக்கானவழி
ஸாயிபிரபுவெனும் மஹாநடிகரும் அடியரைமகிழ்த்தித் தமதுருவாக்கினார்.
இறையவதாரமென முன்னரேகாணினும் கடவுளின்சேவகன் எனவேசொன்னார்
அவரவர்கடமையை அவரவர்செய்து வாழ்விலுயர்ந்திட வழியும்காட்டினார்.
ஒருவர்க்கொருவர் போட்டியுண்டாக்கியோ, தமக்கெனவேதும் செய்திடவேண்டியோ
எதுவும்வேண்டா ஸாயிவனைத்திலும் கடவுளைக்கண்டு பணிந்திடச்செய்தார்.
எவரையுமொதுக்கித் தள்ளிடவில்லை; நாராயணனையே அனைத்திலும்கண்டு
'அல்லாமாலிக்' என்றேசொல்லி சேவகனாகவே தம்மைக்கொண்டார்.
உலகினிலிருக்கும் முனிவரனைரும் செய்திடும்வழிகளை நாமிங்கறியோம்.
அருளைப்பொழிந்திடும் முனிவரின்கதைகளைக் கேட்டிடும்பாக்கியம் நல்வினையால்வரும்.
'யோகமும், வெங்காயமும்'::
பதஞ்சலியோகம் பயின்றிட்டவொருவர் நானாஸாஹேப் சாந்தோர்க்கருடன்
ஷீர்டிவந்தார். அனுபவஞானம் எதுவுமில்லாமல் சமாதியடையும்
நிலையினைபாபா தமக்குஅருள்வார் எனும்குறிக்கோளுடன் ஷீர்டிவந்தார்.
மசூதிசென்று வணங்கிடும்நேரம் வெங்காயத்துடன் ரொட்டியைச்சேர்த்து [1190]
பாபாஉண்டிடும் காட்சியைக்கண்டு, 'இங்ஙனம்செய்திடும் ஒருவரெனக்கு
எவ்விதம்சமாதி நிலையெனுமொன்றினைக் காட்டிடவியலும் எனச்சிந்தித்தார்.
யோகியினுள்ளக் கிடக்கையையறிந்த ஸாயிபாபா நானாவைநோக்கி,
'ஓ!நானா!, வெங்காயத்தை ஜீரணம்செய்யும் ஆற்றலுள்ளவன்
ஒருவன்மட்டுமே அதையுண்ணவேண்டும். மற்றவரெவரும் அங்ஙனம்செய்தல்
முறையானதன்று' எனச்சொன்னதுமே ஆச்சரியமுற்று செயலிழந்தயோகியும்
சட்டெனபாபா பாதம்பணிந்து தம்நிலைகூறி வழிகாட்டவேண்டிட
பாபாகூறிய நல்லுரைகேட்டு மனம்தெளிவுற்று திரும்பிச்சென்றார்.
'பாம்புக்கடியினின்று ஷாமா குணமாகுதல்'::
கூண்டினுளிருக்கும் கிளியும்கூட்டினுள் சிக்கிடும்ஜீவனும் ஒன்றெனச்சொல்வார்
இருவரின்நிலையும் அவரவர்க்கேற்றதே; நேரம்வந்திடக் கடவுளினருளினால்
கட்டுகளறுந்து மிகப்பெரும்வாழ்க்கையை அவையவையடையும் என்பார்ஹேமாத்பந்த்
அதுவரைவாழ்ந்த வாழ்க்கையுமவர்க்கே சூனியமென்றே மேலுமுரைப்பார்.
சுண்டுவிரலதில் பாம்புகடித்து விஷம்தலைக்கேறிட ஷாமாஅரண்டார்
வலிமிகவாகிட நண்பர்களவரை விட்டோபாவிடம் ஏகிடவிரும்பிட
ஷாமாஉடனே தனதுவிட்டோபாவாம் ஸாயிபாபாவிடம் ஓடியடைந்தார்
அவரைக்கண்டதும் பாபாவெகுண்டு, 'ஓ!இழிந்தபதூர்த்யா! மேலேறாதே!
ஏறாதேயுனை எச்சரிக்கின்றேன்! அப்பால்நகரு! கீழேயிறங்கு' எனக்கடிந்துரைத்தார்.
அடைக்கலமிவரே எனநம்பியஷாமா குழப்பமடைந்து அமைதியாயிருந்தார்.
நேரம்பொறுத்து பாபாசற்றே அமைதியாகிட ஷாமாமேலேசென்றார்.
அன்புடன்பாபா அவரைப்பார்த்து, 'பயமோகவலையோ உனக்குவேண்டாம்! [1200]
கருணைமிகுந்த ஃபக்கீருன்னைக் காப்பாற்றிடுவார். இல்லம்திரும்பி
அமைதியாயமர்ந்திடு. வெளியிற்செல்லாதே. என்னைநம்பு' எனத்தேற்றியனுப்பினார்.
விரும்பிடுமெதையும் உண்டிடச்சொல்லி, நடையுடையாகவே இருந்திடச்சொல்லி
தாத்யா,காகா இருவரைத்துணையாய் கூடவேயனுப்பிட ஷாமாகுணமானார்.
இக்கதைமூலமாய் நினைவில்நாமும் கொண்டிடவேண்டிய கருத்துகளிவையே:
பாபாகூறிய மொழிகளனைத்தும் விஷத்தையிறக்கிடக் கூறியமந்திரம்!
நேரடியாயவை விஷத்தைநோக்கியே பாபாயிட்ட கட்டளையாகும்.
வேறெதுமின்றிச் சொற்களினாலே சொன்னகட்டளையே இவர்க்குப்போதும்!
இவ்விருகதையும் கேட்டிடுமன்பர்கள் ஸாயியின்பாதக் கமலங்கள்மீது
நம்பிக்கைகொண்டு மாயையெனும்பெருங் கடலைக்கடந்திடும் வழியினையறிவார்.
'காலரா வியாதி' ::
காலராவியாதியின் கோரத்தாண்டவம் ஷீர்டியிலொருமுறை வாட்டியபோது
ஆடுகளெதையும் கொல்லாதிருக்கவும், எரிபொருளெதுவும் உள்ளேவந்திடாத்
தடைகளைவிதித்து நோயையொழித்திட கிராமத்தாரும் முடிவினையெடுத்தார்.
தடைகளைமீறும் எவரையும்தண்டிக்கும் நிபந்தனைகளை அங்கேவிதித்தார்.
மூடநம்பிக்கை இதுவெனவுணர்ந்த பாபாயிவற்றை அலட்சியம்செய்தார்.
நகரினெல்லையில் நின்றிட்டஎரிபொருள் வண்டியொன்றினை உள்ளேவந்திட
பாபாவழைத்து எரிபொருள்யாவையும் தாமேவாங்கி 'துனி'க்கெனக்கொண்டார்.
அவரையெதிர்த்திடும் தைரியமின்றிப் போனமக்களுமதையே தமக்கெனக்கொண்டார்.
வாங்கியபொருளை மக்கள்கொண்டிட பாபாசற்றும் கடிந்திடவில்லை
முழுதும்துறந்தும் இல்லறத்தார்போல் முன்னுதாரணமாய் பாபாவிளங்கினார். [1210]
'குருபக்திக்குக் கடுமையான சோதனை'::
இரண்டாம்காலராக் கட்டளைமீறிய பாபாகதையினை இனிநாம்காண்போம்.
ஆட்டைக்கொன்றிடக் கூடாதென்னும் கட்டளையிருந்த நாளொன்றினிலே
யாரோவொருவர் மூப்படைந்த ஆடுஒன்றினை மசூதிக்குக்கொணர்ந்தார்.
மாலிகான்நகரைச் சேர்ந்தஃபக்கீர் 'படேபாபா'என்பவர் அருகேயிருந்தார்.
ஆட்டினைவெட்டிப் பலியிடச்சொல்லி பாபாஅவரைக் கேட்டுக்கொண்டார்.
பாபாஅருகே வலப்புறமமர்ந்து ஹுக்காமுதலில் பிடிக்குமளவிலும்,
மதியவுணவு உண்டிடும்போது, தமதுஇடப்புறம் அமர்த்திடுமளவிலும்
தினமுமைம்பது ரூபாயளித்தும், நூறடிகூடவே அவருடன்நடந்தும்
இன்னும்பிறபல வகையிலும்ஸாயி பாபாஅவரைப் பெரிதும்மதித்தார் .
ஆட்டினைவெட்டச் சொல்லியபோது படேபாபா அதனைமறுத்தார்..
எதற்கும்பயனிலா ஆட்டினைக்கொன்று ஆவதென்னவெனக் காரணம்சொன்னார்.
ஷாமாவையழைத்து கொன்றிடச்சொன்னதும் ராதாகிருஷ்ண மாயியிடத்தில்
கத்தியொன்றினை வாங்கிவந்து பாபாமுன்வைக்க, நோக்கமறிந்த'மாயி'யதனை
உடனேவந்து எடுத்துச்சென்றிட, மற்றொருகத்தியை வாங்கிடச்சென்ற
ஷாமாஅங்கே வாதாவிலேயே தங்கிட்டநிலையில் காகாஸாஹேப்
தீக்ஷித்தின்முறையாய் வாதாசென்று கத்தியைக்கொணர்ந்து ஆயத்தமானார்.
பிராமணக்குலத்தில் பிறந்ததீக்ஷித் சொக்கத்தங்கமேயாயினும் அவரையும்சோதித்தார்.
இவரதுநிலையைக் கண்டிட்டயாவரும் ஆச்சரியத்தால் பேச்சிழந்தனர்.
வேட்டியைமுடிந்து கத்தியையோங்கி அனுமதிகேட்டு பாபாவைப்பார்த்தார்.
'என்னவுன்நினைப்பு? உடனேவெட்டு!' என்றதுமவரும் கத்தியையிறக்கும் [1220]
நிலையினில்பாபா, அவரைப்பார்த்து, 'பிராமணனாயினும் கொடுஞ்செயல்செய்திட
மனமெங்குவந்தது?' என்றதும்தீக்ஷித், 'தங்களின்சொல்லே அமிர்தமெனக்கு.
வேறொரு சட்டமும் தெரியாதெனக்கு. தங்களைநினைந்து, ரூபத்தைத்தியானித்து
இரவும்பகலும் உமக்கேயாட்செய்வோம். கொல்வதுசரியா, தப்பாயென்பது
பற்றியகவலை இங்கெமக்கில்லை. குருவின்கட்டளை ஒன்றேயெமது
கடமையும்தர்மமும்' என்றவர்சொன்னதும், தாமேயதனை 'தகியா'யென்னும்
ஃபக்கீர்களமரும் இடத்தில்பலியிடச் செய்வதாய்ச்சொல்லி ஆட்டினையனுப்பிடச்
சென்றிடும்போதது இறந்துவீழ்ந்தது. அடியவர்வகைகள் மூவிதமென்பர்.
குருவின்விருப்பம் எதுவெனவறிந்து கட்டளைவரும்வரைக் காத்திருக்காமல்
அதனைமுடித்துச் சேவைசெய்திடும் முதல்வகையாளர் மிகச்சிறந்தவரே.
கட்டளையிட்டபின் சுத்தமாய்முடித்துச் சேவைசெய்பவர் இரண்டாம்வகையினர்.
குருவின்கட்டளை தாம்முடிக்காமல் ஒவ்வொருபடியிலும் தவறிழைப்பவர்
மூன்றாந்தரமே. இவ்விதம்சீடர்கள் மூவகையாகப் பிரித்தறிந்திடுவர்.
அறிவினிற்சிறந்து நம்பிக்கையிற்தேர்ந்து பொறுமையும்சேர்ந்திட சீடருமுயர்வர்.
பிறவழிச்சாதனை எதுவுமின்றியே இதைக்கைகொண்டால் ஆன்மீகவழியில்
குருமார்தோன்றி முழுநிறைவடைந்திட சீடருக்குதவி இலட்சியம்நிறைப்பார். [1228]
ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment