Sai Charita -9
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்." [மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 9
விடைபெறும்போது ஸாயிபாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல் - கீழ்ப்படியாதிருத்தலின் விளைவு - சில நிகழ்ச்சிகள் - பிச்சை எடுப்பதும், அதன் அவசியமும் - பக்தரின் [தர்கட் குடும்பத்தின்] அனுபவம் - பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்பட்டார்
*****************
விடைபெற்றுச் செலும்போது பாபாவின் சொல்கேட்டுச்
சென்றவரும் செலாதவரும் அடைந்திட்ட நிலை சொல்வேன்
'ஷீர்டி புனித யாத்திரையின் குணாதிசயம்'
யாத்திரையாய் ஷீர்டிக்குச் செல்லுகின்ற யாராலும்
பாபாவின் ஆணையின்றித் தங்கிடவோ இயலாது
செல்லுகின்ற நேரத்தில் அனுமதியை வேண்டுங்கால்
நல்லவராம் பாபாவும் சிலகுறிப்புகள் சொல்லிடுவார்
அதன்படியே நடவாதார் அடைந்திட்ட தொல்லைகளில்
சிலவற்றை யானிங்கே இப்போது சொல்லிடுவேன்
'தாத்யா கோதே பாடீல்'
அவசரமாய்க் கடைவீதிச் சென்றிடவே ‘தாத்யா’வும்
அதிவேகக் குதிரைவண்டி தனிலேறிச் செல்லுமுன்னர்
பாபாவைப் பணிந்தவரின் அனுமதியை வேண்டிட்டார்
'போகாதே இப்போது! சற்றுநேரம் பொறுத்துச்செல்'
எனபாபா சொன்னாலும் தாத்யாவின் வேகங்கண்டு
ஷாமாவை உடனழைத்துச் செல்லுமாறு கூறினாலும் [430]
அதையெல்லாம் கேளாமல் தனியாகச் சென்றவரும்
குதிரைகளைப் பூட்டியதோர் வண்டியேறிப் பறந்திட்டார்
ஒருகுதிரை தாறுமாறாய்க் கண்டபடி ஓடியதில்
சிறுகாயம் இடுப்புவலி இவற்றாலே அவதியுற்றார்
மீண்டுமொரு நேரமும் இதுபோன்றே செய்தவரும்
இக்கதிக்கே ஆளாகித் துயருற்று வாடினாரே
'ஐரோப்பியப் பெருந்தகை'
நானாவின் அறிமுகமாய் வந்தவொரு ஐரோப்பிய
கனவானும், பாபாமுன் மண்டியிட்டு அவர்கையைப்
பற்றியதில் முத்தமிட மனங்கொண்டு வந்திருந்தார்
மசூதியுள் அவர்வரவும் பாபாவும் மறுத்துவிட்டார்
மூன்றுநாள் முயற்சித்தும் அனுமதியே கிட்டவில்லை
வசதியாய்க் கூடாரம் இருந்தபோதும் மகிழ்வில்லை
மனஞ்சுளித்த கனவானோ ஷீர்டியை விட்டகல
பாபாவின் அனுமதியை நாடியங்கே வந்தபோது
மறுநாளை செல்லுமாறு பாபாவும் பணித்திட்டார்
சொற்கேளாக் கனவானோ 'ஜட்கா'வில் கிளம்பிட்டார்
ஸாவுல்லிஹீர் கிராமத்தைத் தாண்டியதும் குதிரைகளும்
எதிர்வந்த 'சைக்கிளைக்' கண்டவுடன் தாம்மிரண்டு
வேகமாக ஓடியதில் வண்டியங்கே கவிழ்ந்திடக்
கனவானும் சிலதூரம் வண்டியுடன் புரண்டலைந்து [440]
கோபர்காங்வ் சென்றங்கோர் மருத்துவச் சாலையிலே
சிகிச்சைபெறத் தங்கிடுமோர் அவலமும் நிகழ்ந்ததே
சொற்கேட்டால் சுகம்வருமே கேளாது நடந்திட்டால்
பெருந்துன்பம் தேடிவரும் எனமக்கள் உணர்ந்தனரே
'பிச்சை எடுப்பதன் நோக்கம்'
உச்சத்தில் அமர்ந்திருந்த பெருமகனாம் ஸாயிபாபா
பிச்சைதினம் எடுத்திங்கே வாழ்ந்ததனின் பொருளென்ன?
இருவகையில் இதைப்பற்றி இப்போது நினைந்திடுவோம்
துறவறத்தை மேற்கொண்ட மானிடரே இதைச்செய்ய
சாத்திரங்கள் சொல்லுவது ஒருவகையால் உண்மையாகும்
ஏதுமில்லாத் துறவியாம் பாபாவும் இவ்வகையே
மறுவகையாய்ப் பார்க்கையிலே வேறுண்மைப் புலனாகும்
'பொடியாக்கி, அரைத்திருந்து, நீர்கழுவித் ,தூசுபெருக்கி,
தீயொன்றை உருவாக்கும்' ஐந்துவகைச் செயல்புரியும்
இல்லறத்தார் பெறும்பாவம் அதற்கான பரிகாரம்
'பிரம்மயக்ஞம் பித்ருயக்ஞம் தேவயக்ஞம் பூதயக்ஞம்
அதிதியக்ஞம்' எனும்வகையாய்ச் சாத்திரங்கள் சொல்லிவிடும்
பாவத்தைத் தீர்த்திடவே பரிகாரம் தரும்விதமாய்
பாபாவும் தினந்தோறும் இவரில்லம் யாசித்தார்
பெருமகனேத் தேடிவந்து பாவத்தைத் தீர்த்திட்டப்
பேறுபெற்ற மக்களெல்லாம் புண்ணியமே செய்தனரே! [450]
'பக்தர்களின் அனுபவங்கள்'
'இலையாயினும் மலராயினும் கனியாயினும் நீராயினும்
உளத்தூய்மை கொண்டொருவன் பக்தியுடன் படைத்திட்டால்
மகிழ்வோடு யானவற்றை எப்போதும் கொண்டிடுவேன்'
எனக்கண்ணன் கீதையினில் சொன்னசொல்லைக் காட்டுதற்போல்
அடியவர்கள் நினைத்திட்டு மறந்திட்டக் காணிக்கை
பாபாவால் நினைவூட்டி அருள்செய்த கதையிங்கே!
'தர்கட் குடும்பம் [தந்தையும், மகனும்]'
பாபாவின் அடியவராம் 'பாபாஸாஹேப் தர்கட்'
மனைவிமகன் இருவருடன் பாபாவை வணங்கிவந்தார்
மேமாத விடுமுறையில் மனையாளும் குமாரனும்
ஷீர்டிக்குச் சென்றுவர எண்ணியே முடிவெடுத்தார்
பாபாவின் பூசனைகள் முறையாக நடக்காதோ
எனஅஞ்சிப் புதல்வனும் தாம்செல்ல விரும்பவில்லை
பிரார்த்தனா சாமாஜத்தில் நம்பிக்கை கொண்டிருந்தத்
தந்தையார் தாம்அதனைச் செய்வதாக வாக்களித்தார்
இருவருமே சென்றபின்னர் பாபாவின் படத்தருகே
சென்றிட்ட தட்கரும் 'முறையாக யானிங்கே
பூசனைகள் செய்திடுவேன்! நீரெமக்குத் துணையாக
உடனிருந்து காக்கவேண்டும்' என்றவரும் பிரார்த்தித்தார்
நிவேதனமாய்க் கற்கண்டைப் பகலுணவாய்ச் சமர்ப்பித்தார்
முறையாகச் செய்ததிலே மனவமைதி தாம்பெற்றார் [460]
இப்படியாய்ச் சிலதினங்கள் சென்றபின்னர் ஓர்மதியம்
கற்கண்டைக் காணாதுப் பணியாளை கேட்டபோது
காலையிலே நிவேதனம் மறந்துபோன காரணத்தைப்
பணியாளும் பகன்றிடவே மனவருத்தம் கொண்டிட்டார்
திருவுருவப் படத்தருகே மண்டியிட்டு மன்றாடி
'முறையான வழிகாட்டல் ஏன்செய்ய வில்லைபாபா?'
என்றவரும் பாபாவைச் செல்லமாகக் கண்டித்து அதன்பின்னர்
விரிவாக நடந்தவற்றைக் கடிதத்தில் தானெழுதி
பாபாவின் படத்தடியில் பணிவுடனே சமர்ப்பித்துப்
பொறுத்தருள வேண்டியவர் பாபாவின் பதம்பணிந்தார்
பாந்த்ராவில் இவ்விதமாய் நிகழுகின்ற அதேநேரம்
ஷீர்டியில் ஸாயிபாபா தர்கட்டின் மனைவியிடம்
'பசித்ததற்குப் புசித்திடவே நின்னில்லம் யான்சென்றேன்
பூட்டிய கதவினுள்ளே எப்படியோ யான்புகுந்து
புசிப்பதற்கு ஏதுமின்றிப் பசியோடு திரும்பிவந்தேன்'
எனச்சொல்லக் கேட்டவுடன் தவறேதோ நடந்ததனை
புதல்வனும் உடனுணர்ந்து வீடுசெல்ல வேண்டிநின்றான்
அதைமறுத்து ஸாயிபாபா பூஜைசெய்ய அனுமதித்தார்
நடந்ததெல்லாம் தந்தைக்கோர் கடிதமாய் எழுதியவனும்
பூசனையை முறையாகச் செய்யுமாறு மன்றாடினான் [470]
கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று தாண்டிப்போய்
அடுத்தவர்க்குக் கிடைத்திட்ட அற்புதத்தை என்சொல்வேன்~!
'திருமதி தர்கட்'
வாசனைப் பொடிகளுடன் தயிர்கலந்த கத்தரிக்காய்
நெய்யிலே வறுத்தெடுத்த கத்தரிக்காய் துண்டுகள்
'பரீதென்றும் காச்ர்யாவென்றும்' பேர்கொண்ட உணவுவகை
திருமதி தர்கட்டின் உபசரிப்பை ஏற்றகதை!
'புரந்தரே' எனுமன்பர் பாந்த்ராவைச் சேர்ந்தவர்
பாபாவைத் தரிசிக்கச் செல்லுவதைக் கேட்டிட்ட
திருமதி தர்கட்டும் கத்தரிக்காய் இரண்டெடுத்து
அவர்களிடம் கொடுத்தனுப்பி பரீத்தும் காச்ர்யாவும்
பதமாகச் சமைத்தங்கே பாபாவிற்குத் தரச்சொன்னார்
அவ்விதமே 'பரீத்'சமைத்து ஷீர்டியை அடைந்தபின்னர்
மசூதிக்கு மதியத்தில் போனபோது ஸாயிபாபா
மதிய வுணவுண்ண பக்தருடன் அமர்ந்திருந்தார்
சுவையான பரீத்தை மிகவிரும்பி யுண்டபாபா
காச்ர்யாவும் வேண்டுமென மாயிக்குத் தகவல்சொன்னார்
கத்தரிக்காய் கிடைக்காத காலமிது எனத்திகைத்த
ராதாகிருஷ்ண மாயியும் புரந்தரேயின் மனைவியாரே
அதனையும் கொண்டுவரும் பணியினிலே இருக்கக்கண்டு
பாபாவின் லீலையிது எனத்தெளிந்து களித்திட்டார் [480]
ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டினிலே
பாலாராம் மான்கரெனும் பாபாவின் அடியவரும்
தந்தையாரின் திதிசெய்ய ஷீர்டிக்குப் புறப்பட்டான்
போகுமுன்னர் திருமதி தர்கட்டைச் சந்தித்தான்
வீடெங்கும் தேடியும் யாதொன்றும் கிட்டாமல்
அகப்பட்டப் 'பேடா'வைக் காணிக்கையாய்த் தந்திருந்தார்
ஷீர்டிக்குச் சென்றவனும் பாபாவைக் காணச்சென்றான்
பேடாவை மறந்துபோனான் பாபாவும் காத்திருந்தார்
மாலையிலே செல்லும்போதும் மீண்டுமவன் மறந்துவிட்டான்
பொறுக்காத ஸாயிபாபா காணிக்கை எங்கேயென்றார்
'ஏதுமில்லை' எனச்சொன்ன கோவிந்தை மீண்டுமவர் கேட்டபோதும்
ஒன்றுமில்லை' எனும்பதிலே வரக்கேட்ட ஸாயிபாபா
'கிளம்புகையில் நின்னிடத்தில் இனிப்பொன்றும் கொடுக்கலையா
என்னம்மா?' எனும்சொல்லைக் கேட்டவுடன் பதறிப்போய்
நாணமுற்ற பாலாராம் அவசரமாய் ஓடிப்போய்
பேடாவைக் கொண்டுவந்து பாபாவிடம் சமர்ப்பித்தான்
ஆவலுடன் அப்படியே அதைவாங்கி ஸாயிபாபா
வாயிலிட்டுச் சுவைத்திட்டு காணிக்கை ஏற்றிட்டார்
'எவ்விதமாய் மனிதரிங்கே எனையிங்கு நம்புவரோ
அவ்விதமே யானவரை மகிழ்வுடனே ஏற்றிடுவேன்' [490]
எனுமிந்தக் கீதைமொழி பாபாவின் சன்னதியில்
நிகழ்ந்திட்ட நிகழ்வாலே அனவருக்கும் தெளிவாச்சு!
'பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்பட்டார்?'
ஷீர்டியில் ஒருவீட்டில் திருமதி தர்கட்
தங்கிவந்த நாளொன்று மதியத்தில் அமுதுண்ண
அமர்ந்திட்ட நேரத்தில் நாயொன்று குரைக்கக்கேட்டு
திருமதியும் ரொட்டியொன்றை அதன்பக்கம் வீசியதும்
ஆவலுடன் நாயங்கு அதைவிழுங்கிச் சென்றபின்னர்,
மசூதிக்கு அவர்சென்று பாபாவைப் பணிந்தபோது
'மனம்நிறைந்து பிராணன்யாவும் பெருமளவில் திருப்தியாச்சு
மசூதியில் அமர்ந்துகொண்டுப் பொய்யுரைகள் பேசமாட்டேன்
இவ்விதமே என்மீது என்றென்றும் இரக்கமுடன்
பசியோடு வருவோர்க்கு ருசியாக அமுதூட்டி
அதன்பின்னே நீயுண்ணும் வழக்கத்தைக் கொண்டிடுக'
எனபாபா சொலக்கேட்டு திகைத்திட்ட திருமதியும்
'நானெங்கே உணவளித்தேன்? என்நிலையே பிறர்வீட்டில்
சார்ந்திருந்துப் பணத்துக்கு உணவுண்ணும் நிலையன்றோ?'
எனச்சொல்ல, ஸாயிபாபா ' நீகொடுத்த ரொட்டித்துண்டு
இன்னுமென்றன் வயிற்றினிலே ஏப்பத்தைத் தருகிறதே!
விட்டெறிந்த ரொட்டித்துண்டைக் கவ்விய நாயும்யானும்
எல்லாமே ஒருவரன்றோ! பிறவுயிர்கள் அனைத்திலுமே [500]
வாழுகின்ற சீவனாக எனைப்பார்க்கும் எல்லாரும்
எனக்குகந்த பேர்களன்றோ! இருவிதமாய்ப் பாராமல்
இன்றுபோல் என்றென்றும் எனக்கேநீ சேவைசெய்'
எனச்சொன்ன மொழிகேட்டு கண்ணிரும் பெருகியதே!
'நீதி'
படைத்திட்ட அனைத்திலுமே பகவானைக் காண்பதுவே
பலவகையாம் சாத்திரங்கள் பகர்கின்றப் பேருண்மை
வேதத்தின் சாரமெல்லாம் நடைமுறையில் பயின்றிடவே
குருவாக ஸாயிபாபா பலவிதமாய் லீலைசெய்தார்!' [504]
ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment