Sai Charita - 40
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 40
பாபாவின் கதைகள்
1. திருமதி தேவின் 'உத்யாபன்' விழாவுக்கு ஒரு சந்நியாஸி போல் மற்ற இருவருடன் செல்லுதல். 2. ஒரு சித்திர ரூபத்தில் ஹேமாத்பந்த்தின் வீட்டுக்குச் செல்லுதல்.
***********
முன்னுரை::
தம்மடியார்க்கு ஆன்மீக,லௌகீக அறிவுரைவழங்கும் ஸாயிபுனிதரே!
அவரவர்லட்சியம் அடைந்திடச்செய்து மகிழ்வினையூட்டி ஊக்குவிக்கிறார்.
அவர்தம்தலைகளில் கையினைவைத்து ஆசீர்வதிக்கையில் சக்தியையளித்து
பேதமில்லாமல் அரவணைத்தவர்க்கு எட்டிடமுடியாப் பொருளைத்தருகிறார்.
மழைக்காலத்தில் கடலெதிர்வந்து ஆற்றுடன்கலப்பது போலவேஸாயி
இறைபுகழ்பாடும் அடியவர்மீது பிரியம்கொண்டதை நாமுமுணரலாம்.
திருமதி தேவின் உத்யாபன் விழா::
தாணேஜில்லா டஹாணூமாம்லதார் கே.வி.தேவென்பவர் தமதுதாயார்
பூர்த்திசெய்த விரதமுடிவினை உத்யாபனெனும் விழாவாக
நடத்திடநினைத்து நூறுஅந்தணர்க்கு உணவினையளித்திட நிச்சயித்திருந்தார்.
நிறைவுசெய்திட ஸாயியின்வரவைப் பெரிதும்விரும்பி அவரையழைக்க [2190]
பாபுஸாஹேப் ஜோக்[G]கிற்குக் கடிதமெழுதிட, அக்கடிதத்தை பாபாவிடத்தில்
ஜோக்கும்படித்திட, 'என்னைநினைவில் கொண்டிருப்பவனை நானெப்போதும்
நினைத்திருக்கிறேன். நானங்குசென்றிட வாகனமெதுவும் தேவையுமில்லை.
அன்புடனழைக்கின் அவன்பாலோடி நானேசென்று கலந்துகொள்கிறேன்.
நீ,நான்,மற்றும் இன்னொருவருடனே மூவராய்ச்சென்று அந்தவிழாவில்
கலந்துக்கொள்வதாய் நீயவருக்கு மகிழ்வாயோர்பதில் எழுதிடு'என்றார்.
அவ்வண்ணம்வந்தக் கடிதம்கண்டு தேவும்மகிழ்ச்சி அடைந்தாரெனினும்,
ராஹதா,ரூய், நீம்காவன் இவ்விடம்தவிர வேறெந்தவிடத்தும்
ஸாயிபாபா சென்றதேயில்லை என்பதறிந்து சற்றேவருந்திடினும்
ஸர்வவியாபியாம் பாபாநினைத்தால் முடியாததென்று எதுவுமேயில்லை
என்பதாலவரும் திடீரெனவந்து சொன்னபடிசெய்வார் எனநம்பியிருந்தார்.
இந்தநிகழ்வு நடப்பதன்முன்னால், பசுக்களைக்காத்திடும் குறிக்கோளுடனொரு
ஸந்நியாஸிவந்து மாம்லதாரைச் சந்திக்கச்சென்று இருவருமமர்ந்து
பேசிடும்சமயம், சிலநாள்முன்னரே பிறிதொருதர்மச் செயலுக்காக
நிதிதிரட்டும் வேலைநடப்பதால், சிலநாள்பொறுத்து வந்திடச்சொன்னார்.
அதனைக்கேட்டு அந்தத்துறவி மீண்டும்வருவதாய்ச் சொல்லிச்சென்றார்.
ஒருமாதம்சென்று ஒருநாட்காலை குதிரைவண்டியில் அந்தத்துறவி
தேவின்இல்லத்து வாசலில்வந்தார். விழாவேலையில் ஈடுபட்டிருந்த
காரணத்தினால் பணத்திற்காகத் தான்வரவில்லை உணவுக்காகவே
வந்திருப்பதாய்ச் சொன்னதைக்கேட்டு தேவ்மிகமகிழ்ந்து நல்வரவென்று [2200]
அழைத்தப்போது, தன்னுடனின்னும் இருவரிருப்பதாய்த் துறவியும்சொல்ல
அவரையும்கூட்டி வந்திடுமாறு தேவ்வேண்டினார். விருந்துக்கின்னமும்
இருமணிநேரம் காலமிருந்ததால், எங்கேசென்று அவர்களையழைத்து
வரவேண்டுமென தேவும்கேட்டிட, குறித்தநேரத்தில் தாமேயவருடன்
நண்பகல்வேளையில் வருவதாய்ச்சொல்லி அந்தத்துறவி அவ்விடமகன்றார்.
சரியாய்மதியம் பனிரெண்டுமணிக்கு மூவரும்வந்து விருந்தினையுண்டு
திரும்பிச்சென்றதும், வாக்களித்தப்படி பாபாவராத நிகழ்வைச்சுட்டி
நண்பர்க்குமீண்டும் கடிதமெழுதினார். அக்கடிதத்தை பாபாமுன்னே
கொண்டுசெல்கையில் அவரைப்பார்த்து, "நான்வரவில்லை; ஏமாற்றிவிட்டேன்;
எனவேதேவும் வருத்தப்படுகிறான். ஆனால்நானோ சொல்லியபடியே
மூன்றுபேராய் அங்கேசென்று உணவுமருந்தினேன். நிதிகேட்பதற்கே
ஸந்நியாசிவந்ததாய் அவனெண்ணுகையில் அச்சந்தேகத்தைத் தீர்க்கவில்லையா?
என்னைமுழுதுமாய்ப் புரியாநிலையில் எதற்காயவனும் அழைத்திடவேண்டும்?
கொடுத்தவாக்கினைக் காத்திடவேண்டி என்னுயிரையேநான் தியாகம்செய்வேன்.
என்மொழிக்கெதிராய் இருக்கவேமாட்டேன்' என்றவர்சொல்லிட, அதனைக்கேட்டு
ஜோக்கும்மகிழ்ந்து இந்தத்தகவலைக் கடிதம்மூலம் தேவுக்கும்சொன்னார்.
அதனைப்படித்த தேவ்மிகவருந்திக் கண்ணீர்விட்டு, துறவிகூறியக் குறிப்பினையறியத்
தவறியசெயலை முழுதுமுணர்ந்து ஸாயியைநினைந்து மிகவும்போற்றினார்.
முழுமையாயடியார் சத்குருவிடத்தில் சரண்புகும்போது அவர்கள்நடத்தும்
மதச்சடங்குகள் முறையாய்நடப்பதை பாபாகவனிக்கும் நிகழ்விதால்புரியும். [2210]
ஹேமாத்பந்த்தின் ஹோலிப் பண்டிகை விருந்து::
சித்திரவடிவில் பாபாவந்து அடியவர்தமக்கு அருள்செய்தகதை:
ஆயிரத்தொள்ளா யிரத்துப்பதினேழில் பங்குனிமாதப் பௌர்ணமிநாளின்
காலைவேளையில் துறவிவேடத்தில் ஸாயிவந்து உணவருந்திட
வந்திடும்சேதியைச் சொல்வதுபோல ஹேமாத்பந்த்தொரு கனவினைக்கண்டார்.
கண்விழித்துப் பார்த்தப்போது துறவியெவரையும் கண்டிடவில்லை.
ஏழாண்டுக்காலம் பாபாவுடனவர் இருந்தபோதிலும் ஸாயிவருவார்
என்னும்சேதியை நம்பிடுமுள்ளம் அவருக்கில்லை. எனினுமவரும்
மனைவியிடத்தில் துறவிவந்திடும் சேதியைச்சொல்லி உணவினைச்சற்றுக்
கூடுதலாக சமைத்திடும்படி சொல்லிட்டப்போது, யாரவர்வருவார்?
என்றேமனைவியும் கேட்டவேளையில், கண்டக்கனவினை விவரித்துரைத்தார்.
ஷீரடியுணவை விடுத்துபாபா நம்மில்லத்திற்கு வந்திடுவாரோ
என்றவள்கேட்க, நேரிடையாக வராதபோதும் விருந்தினர்வடிவில்
வருவாரென்று ஹேமாத்பந்த்தும் தேறுதல்கூறி அதிகச்சாதம்
வடிப்பதிலெந்தக் குறைவுமில்லை எனவேமேலும் ஆறுதல்சொன்னார்.
விருந்துணவும் மதியநேரத்தில் தயாரானது; ஹோலிவழிபாடும் செய்யப்பட்டது;
விருந்தாளிக்கெனவே நடுவிலோரிலையும் மற்றவர்களுக்கு இருபுறமாகவும்
இலையுமங்கே இடப்பட்டது; அனைவருமர்ந்திட பதார்த்தங்களும் பரிமாறப்பட்டன;
விருந்தாளிவரவை அனைவருமங்கே எதிர்பார்த்தனர்; மதியம்கடந்தும் [2220]
யாரும்வராததால் கதவையடைத்து தாளிடப்பட்டது; அன்னசுத்தியும்[நெய்]
செய்யப்பட்டது; நைவேத்தியமும் செய்யப்பட்டப்பின் அனைவருமுண்டிட
ஆரம்பிக்கும்வேளையில் காலடிச்சத்தம் வாசலில்கேட்டது; ஹேமாத்பந்த்தும்
கதவினைத்திறக்க அலிமுஹமது, மௌலானாஇஸ்மு முஜாவரென்னும்
இருவரைக்கண்டார்; உணவருந்திடும் வேளையில்வந்ததால் மன்னிப்புக்கோரி
'மற்றவரனைவரும் காத்திருப்பதால் உங்களுக்கான இந்தப்பொருளை
பெற்றுக்கொள்க; வியப்பூட்டுமிதன் பின்னணிக்கதையை பின்னருரைப்போம்'
என்றேகூறி செய்தித்தாளில் சுற்றியிருந்த பொட்டலமொன்றை அவரிடமளித்தனர்.
பிரித்துப்பார்க்கையில் பெரியதோர்வியப்பு காட்சியளித்தது! ஸாயிபாபாவின்
வண்ணப்படமொன்று அதிலேயிருந்தது! மயிர்க்கூச்செறிய கண்ணீர்மல்க
படத்தில்கண்ட பாதத்தில்தலையை வைத்துப்பணிந்து விவரம்கேட்டார்.
பின்னர்சொல்வதாய் அவர்கள்சொல்லிட நன்றியைக்கூறி அனுப்பியப்பின்னர்
நடுவிலவர்க்காய் ஒதுக்கியவிடத்தில் படத்தைவைத்து அனைவருமுண்டனர்.
சொல்லியபடியே ஸாயிவந்ததைக் கண்டஅனைவரும் மிகவும்மகிழ்ந்தனர்.
இவ்விதமாகக் கனவில்சொன்னதை ஸாயிபாபா செய்துகாட்டினார்.
சித்திரவடிவில் பாபாவந்த அற்புதக்கதையை அடுத்துக்காணலாம். 2228
ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment