Sai Charita - 29
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 29
1. சென்னை பஜனை சங்கம், 2. டெண்டுல்கர் [தகப்பனும், மகளும்], 3. டாக்டர் கேப்டன் ஹாடே, 4. வாமன் நார்வேகர் ஆகியோரின் கதைகள்.
****************
சென்னை பஜனை சங்கம் ::
ஆயிரத்தொள்ளாயிரப் பதினாறாமாண்டில் தீர்த்தயாத்திரையாய்க் காசிசென்றிடச்
சென்னையைச்சேர்ந்தொரு நால்வரடங்கியக் குடும்பமொன்றுக் குழுவாய்ச்சென்றது. [1510]
செல்லும்வழியில் ஷீர்டிநகரில் வல்லுநர்க்கெல்லாம் வாரிக்கொடுக்கும்
வள்ளலொருவர் உள்ளாரென்னும் சேதியறிந்து அவ்விடம்சென்றார்.
தக்ஷிணைமூலம் நாளும்சேரும் நிறையப்பணத்தில் பக்தகொண்டாஜி
என்பவர்மகளாம் அமனியென்னும் சிறுமிக்குத்தினம் ஒருரூபாயும்,
இன்னும்சிலர்க்கு இரண்டுமுதலாய் ஐந்துரூபாயும்,அமனியன்னைக்கு
ஆறுரூபாயும், விருப்பம்போல அடியார்க்கெல்லாம் அள்ளிக்கொடுப்பார்.
இவற்றையறிந்து ஷீர்டிவந்து சிறந்தபஜனைகள் பலவும்பாடி
உள்ளுக்குள்ளே பணத்தைவேண்டி நால்வரில்மூவர் ஆசைப்பட்டனர்.
ஆயினுமந்தக் குடும்பத்தலைவியோ பாபாமீது பிரியம்கொண்டு
அல்லும்பகலும் அவரைவணங்கியே வந்ததைக்கண்ட பாபாமகிழ்ந்து
இஷ்டதெய்வமாம் இராமனின்வடிவில் காட்சியொன்றினை அன்னைக்குக்காட்டி
ஆசீர்வதித்திட அகமகிழ்வடைந்து கண்ணீர்வழிந்திடப் பாதம்பணிந்தாள்.
மாலைப்பொழுதில் விடுதியில்தனது கணவரிடத்தில் நடந்ததனைத்தையும்
அவளும்சொல்லிட, 'மற்றவரனைவரும் ஸாயியைக்கண்டிட, நீயொருத்திமட்டும்
எங்ஙனமித்தகுக் காட்சியைக்காணல் சாத்தியமாகும்?' எனக்கேலிசெய்தார்.
வேண்டும்போதெலாம் கிட்டியக்காட்சியால் கணவர்சொன்னதை செவிமடுத்திலளே!
'அற்புதக் காட்சி' ::
ஒருநாளிரவில் அவளதுகணவன் அற்புதமானக் கனவொன்றுகண்டார்::
பெருநகரொன்றில் காவல்துறையால் கைகளைக்கட்டிக் சிறைப்பிடித்தவரை
அழுத்திக்கட்டும் வேளையில்ஸாயி சிறையின்வெளியே அமைதியாய்நிற்கிறார்.
அவரைப்பார்த்து, 'நின்புகழ்கேட்டே யானிவண்வந்தேன்! ஏனிந்தக்கேடும் [1510]
எனக்காயிற்று?' என்றிவர்வினவ, 'கர்மவினையதன் பலனைநீயும்
அனுபவித்தலே முறைமையாகும்' என்றேபாபா பதிலுரைக்கின்றார்.
'இந்தப்பிறவியில் ஏதும்செய்ததாய் நினைவெனக்கில்லையே என்றவர்கூற,
'முற்பிறப்பொன்றில் ஏதும்பாவம் செய்திருப்பாயோ?' என்றார்பாபா!
'அதைப்பற்றி ஒன்றுமறிந்திலேன். எப்படியிருப்பினும் இப்போதுங்கள்
சன்னிதிமுன்னர் நின்றிடுமெனக்கு நெருப்பில்வைக்கோல் எரிவதுபோலேன்
அவைகளையெல்லாம் அழிக்கக்கூடாது?' என்றவர்சொன்னதும், 'அப்படியுனக்கு
நம்பிக்கையிருப்பின் கண்களைமூடு!' என்றேஸாயி சொன்னதைக்கேட்டவர்
கண்களைமூடிட பலத்ததோர்சத்தம் கேட்டுக்கண்களை மீண்டும்திறக்க
தான்விடுதலையாகி காவல்காரர் ரத்தம்சிந்திடக் கீழேயிருப்பதைக்
கண்டவர்பயந்து பாபாமுகத்தைத் தீனமாய்ப்ப்பார்க்கவும், 'நன்றாயிப்போ
மாட்டிக்கொண்டாய்! மீண்டுமுன்னைச் சிறைசெய்வார்கள்!' என்றேபாபா
சொன்னதைக்கேட்டு மீண்டும்கெஞ்சவே, மீண்டும்கண்களை மூடித்திறந்திட
ஸாயிசொல்லவும், அதன்படிசெய்தவர் பாபாவருகினில் தானும்நிற்பதைக்
கண்டதும்பணிந்துக் காலடிவீழ்ந்தார். 'இப்போதளிக்கும் வணக்கத்திற்கும்
முன்புநீசெய்த வணக்கத்திற்கும் வேறுபாடுண்டோ?' எனஸாயிவினவிட
'முந்தையதெல்லாம் பணபெறச்செய்தவை! இந்தவணக்கமோ கடவுளேநீவிர்
என்னுமுணர்வில் செய்வதாகும். முஸ்லீம்வேடம் தரித்துத்தாங்கள் இந்துக்களையே கெடுத்திடுவதாக இதுவரையெண்ணினேன்' என்றவர்வணங்கினார். அதற்குபாபா,
‘முஸ்லீம்கடவுள் நம்பிக்கையில்லாத நீயேன்வீட்டில் 'பஞ்சா'யெனுமொரு [1520]
கையடையாளம் வைத்துவணங்குவாய்? பண்டிகைநாட்களில் 'காட்பீபி'யெனும்
பெண்தெய்வத்தை ஏனோவணங்கினாய்?' எனக்கேட்டதுமே தவற்றினையுணர்ந்தார்.
ஸத்குருவான இரமதாசரின் தரிசனம்காண அவரும்விழையவே
பின்னால்திரும்பிப் பார்த்திடுமாறு பாபாசொன்னதும், அங்கேகுருவின்
தரிசனம்கண்டு பாதம்பணிந்திட ஓடியபோது குருவும்மறைந்தார்.
'வயதானவர்போல் இருக்கும்தங்களின் வயதெத்தனையோ?' எனமீண்டும்கேட்க
'யானோகிழவன்? எனக்குச்சமமாய் ஓடிடவுன்னால் இயலுமோ?'வெனக்கூறி
பாபாஓடவும், ஓடியகால்கள் எழுப்பியதூசியில் பாபாமறைந்தார்.
கனவுகலைந்திடக் கண்களைவிழித்தவர் கண்டகாட்சியின் பொருளைக்குறித்து
சிந்திக்கலானதும், ஸாயியின்பெருமையை முற்றிலுமுணர்ந்து தீயக்குணங்களை
அத்துடன்விடுத்து பக்திபெருகிட மனந்திருந்திய அடியவரானார்.
கண்டதுகனவே ஆயினும்நிகழ்ந்தவை மிகவுமுயர்ந்த பொருட்செறிவாகும்.
மறுநாட்காலை ஆரத்திவேளையில் இரண்டுரூபாய் பெறுமானமுள்ள
இனிப்பையும்கூடவே இரண்டுரூபாய்கள் தக்ஷிணையும்தந்து மேலும்சிலநாள்
அங்கேதங்கிட அனுமதியளித்து, 'அல்லாவுனக்கு எல்லாம்தருவார்!
அனைத்துநன்மையும் அவரேயளிப்பார்' எனுமொருஆசியும் நிறைவாய்த்தந்தார்.
அதிகமாய்த்தானம் பெறவிலையெனினும் அதற்கும்மேலாம் ஆசிகள்பெற்றதால்
சென்றவிடமெலாம் பொருள்மிகப்பெற்று சோதனையின்றியேப் பயணம்முடித்தார்.
'டெண்டுல்கர் குடும்பம்' ::
பாந்த்ராவாழ்ந்த டெண்டுல்கர்குடும்பமே பாபாவிடத்தில் பக்திகொண்டவர்
சாவித்ரிபாயி டெண்டுல்கரென்பார் ஸ்ரீஸாயிநாத் பஜன்மாலாவெனும் [1530]
ஸாயிலீலையைப் போற்றிடுமெண்ணூறு பாடல்கள்கொண்டவோர் நூல்வெளியிட்டார்.
இவர்களின்புதல்வன் பாபுடெண்டுல்கர் மருத்துவத்தேர்வுக்கு முயன்றுபடித்தான்.
ஜாதகம்பார்த்த ஜோஸியர்சிலரும் 'கிரஹங்கள்சரியாய் இல்லாதபடியால்
இவ்வாண்டுத்தேர்வு சாதகமில்லை; அடுத்தவருடம் நிச்சயம்வெல்வாய்'
என்றேசொன்னதில் கலக்கமடையவே தாயவள்ஷீர்டியில் ஸாயியைக்கண்டாள்.
மகனைப்பற்றியக் கவலையைச்சொன்னதும், 'என்னைநம்பிட அவனிடம்சொல்லு!
ஜாதகம்ஜோஸியம் இவற்றைவிடுத்துப் படிப்பதில்கவனம் செலுத்தச்சொல்லு.
இந்தவருடமே தேர்வினில்வெற்றி பெறுவதுதிண்ணம்!' எனஸாயிசொன்னதும்,
கவலையொழித்து தேர்வையெழுதியும், மதிப்பெண்குறைவாய்ப் பெற்றிடுவோமெனும்
பயத்தின்காரணம் வாய்மொழித்தேர்வைப் புறக்கணிக்க முடிவுசெய்தான்.
தேர்வதிகாரியோ விடுவதாயில்லை! எழுத்துத்தேர்வில் மதிப்பெண்பெற்றதால்
வாய்மொழித்தேர்வுக்கு வந்திடவேண்டுமென நண்பனின்மூலம் சொல்லியனுப்பி
இருதேர்வுகளிலும் வெற்றிபெற்றிட ஊக்கமளித்தது பாபாஅருளே!
ஐயமும்கஷ்டமும் நம்மைச்சூழினும் நம்நம்பிக்கையினை உறுதிசெய்யவே!
ஸாயிமீது நம்பிக்கைகொண்டு சோதனையனைத்தையும் நேரெதிர்க்கொண்டால்
அவரது அருளால் தடைகள்விலகி வெற்றியென்பதும் நம்மிடம்சேரும்!
இவனதுதந்தை ரகுநாத்ராவும் மூப்படைந்ததால் தளர்ச்சியுற்றுப்
பார்த்தவேலையில் ஓய்வுபெற்றிட முடிவெடுக்கையில், ஓய்வூதியமுடன்
விடுப்புக்கொடுக்க அலுவலகத்தில் தீர்மானிக்கவும், என்னகொடுப்பது
எனுமொருமுடிவு எடுக்கும்நிலையினில், வாங்கியசம்பளம் நூற்றைம்பது [1540]
ரூபாயென்பதால், கிடைக்குமூதியம் எழுபத்தைந்து எப்படிப்போதும்
என்னும்கவலையில் ஆழ்ந்திருக்கையில் சாவித்ரிபாயியின் கனவில்வந்து,
'ஓய்வூதியமாய் நூறுரூபாய்கள் அளிக்கவேண்டுமென நான்விரும்புவதுனக்குத்
திருப்திதானே?' எனவேஸாயி கேட்டதுமவளும் 'என்னையெதற்குக்
கேட்டிடவேண்டும்? என்னவேண்டுமென நீங்கள்நினைப்பதே எனக்குப்போதும்!
உம்மைநம்பியே நாங்களிருக்கிறோம்' பதிலுரைத்திட, நூற்றுப்பத்து
ரூபாய்பென்ஷனாய் அவருக்குக்கிடைத்தது! தம்மைநம்பிடும் பக்தரின்நலனை
பாபாகாக்கிறார் என்னுமற்புதம் இந்தநிழ்ச்சியால் தெரியவந்திடும்!
'கேப்டன் ஹாடே'::
பிகானீரில் தங்கியிருந்த கேப்டன்ஹாடே எனும்ஸாயிபக்தர்
கனவினிலோர்நாள் பாபாவந்து 'என்னைநீயும் மறந்துபோனாயோ?'
எனவினவிடவும், அதற்குஹாடே. 'தாயினைச்சேயும் மறந்துபோயிடின்
எங்ஙனமதுவும் காப்பாற்றப்படுமோ?' எனப்பதிலுரைத்து, தோட்டத்திலிருந்து
அவரைக்காயைப் பறித்தொரு விருந்தும்தக்ஷிணையும் ஏற்பாடுசெய்யும்
வேளையில்கனவும் கலைந்திடவிழித்து எழுந்ததும்ஸாயியை நினைந்துருகினார்.
சிலநாட்சென்று குவாலியர்வந்ததும் நண்பரொருவர்க்கு பன்னிரெண்டுரூபாய்
மணியார்டர்செய்து, ஷீர்டிசென்று இரண்டுரூபாய்க்கு சமையற்பொருட்களும்
மீதம்பத்து ரூபாய்த்தொகையைத் தக்ஷிணையாகவும் ஸாயிக்குச்சமர்ப்பிக்கச்
சொல்லியகுறிப்பால், நண்பருமுடனே ஷீர்டிசென்று மளிகைச்சாமான்
வாங்கியப்பின்னர் காய்கறியெதுவும் கிடைக்கவில்லையே எனவருந்தினார்
அப்போதங்கொருக் கூடைக்காரி விரும்பியவண்ணமே அவரைக்காயைச் [1550]
சுமந்துவருதல் கண்டவர்வியந்து அவற்றைவாங்கி ஸமஸ்தானத்தில்
கேப்டனின்சார்பில் சமர்ப்பித்தாரே! மறுநாள்நிமோண்கர் படையல்செய்து
கேப்டனின்சார்பில் பாபாவுக்களித்திட அவரைக்காயையே பாபாமுதலில்
கையிலெடுத்து மற்றததெனையும் தொடாததுகண்டு அனைவரும்வியந்தார்.
செய்தியறிந்த கேப்டன்ஹாடே மட்டற்றமகிழ்ச்சியில் திளைத்திருந்தாரே!
விரும்பியவண்ணமே நல்லெண்ணங்களையே ஊக்குவித்தவர் நிறைவேற்றிடுவார்!
'புனிதமாக்கப்பட்ட நாணயம்'::
பாபாதிருக்கரம் தொட்டதோர்நாணயம் தமதுவீட்டினில் இருந்திடவேண்டி
கேப்டன்ஹாடே ஒருமுறைவிரும்பி, ஷீர்டிசெல்லும் நண்பரொருவரிடம்
நாணயமொன்றைக் கொடுத்தனுப்பிட, அந்தநண்பரும் ஷீர்டிசென்று
ஸாயியைப்பணிந்து தனதுகாணிக்கையாய் அளித்தத்தொகையை
பாபாவாங்கிப் பையுள்போட்டதும், கேப்டனின்நாணயம் ஸாயிக்குக்கொடுத்திட
தமதுகைகளில் அதனைவாங்கி உற்றுப்பார்த்துச் சுண்டிவிளையாடி,
'உதியுடனிதனைத் தந்தவரிடமேத் திருப்பிக்கொடுத்திடு!
அவரிடமிருந்து எனக்கெதும்வேண்டாம்! அமைதியும்திருப்தியும்
என்றும்தங்கிட வாழச்சொல்லு' எனுமொருமொழியுடன் திருப்பிக்கொடுத்தர்.
இதனைக்கேட்ட கேப்டன்ஹாடே மிகவும்மகிழ்ந்து பெருமையுணர்ந்தார்.
'வாமன் நார்வேகர்'::
வாமன்நார்வேகர் எனுமொருஅடியவர் பாபாவிடத்தில் பக்திகொண்டவர்.
இராமலக்ஷ்மணர் சீதாஉருவம் ஓர்புறம்பதித்து மறுபுறம்மாருதி
வணங்கியநிலையில் இருக்குமோர்க்காசை பாபாதொட்டு ஆசியளித்து
உதியுடன் திருப்பிப் பெற்றிடவேண்டும் எனுமொருநினைப்புடன் ஸாயிக்களித்தார். [1560]
வாங்கியபாபா உடனேயதனைத் தமதுசட்டைப் பைக்குள்போட்டதும்
வாமன்ராவின் எண்ணமறிந்த ஷாமாபாபாவிடம் வேண்டிக்கொண்டார்.
'ஏனதையவர்க்குத் திருப்பித்தரணும்? நாமேயதனை வைத்துக்கொள்வோம்.
இருபத்தைந்து ரூபாய்க்காணிக்கை அவரும்தந்தால் திருப்பியளிப்போம்'
என்றேஸாயி சொன்னதைக்கேட்டு தொகைசேகரித்து வாமன்ராவும்
தக்ஷிணையாக பாபாமுன்வைத்தார். அதனைக்கண்ட பாபாஷாமாவிடம்,
'இந்தநாணயம் மதிப்புவாய்ந்தது. தொகையையெடுத்து அறைக்குள்வைத்திடு!
நாணயத்தையுன் பூஜையில்வைத்து வழிபடுவாயாக' எனச்சொல்லிவிட்டார்!
ஏனதைச்சொன்னார்? ஏனப்படிச்செய்தார்? என்பதைக்கேட்டிடும் தைரியமங்கே
எவர்க்குமில்லை! எவருக்கெதுவோ சிறந்ததென்பதை ஸாயியேயறிவார்! [1565]
ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment