Sai Charita- 1
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 1
நமஸ்காரங்கள்: பாபா கோதுமை மாவு அரைத்த நிகழ்ச்சியும், அதன் தத்துவ உட்கருத்தும்.
*************
உன்னதமானதும் வழிவழிவந்ததும் மரியாதையுமான வழக்கப்படியே
ஸாயிஸத்சரிதத்தை நூலாசிரியரும் துதிகள்பலவுடன் எழுதித்தொடங்குவார்.
வினையெல்லாம் தீர்த்தருள்வாய் 'ஸாயி'வி நாயகனே !
எனையாளும் கலைவாணி என்நாவில் குடியிருப்பாய் !
முத்தொழிலும் செய்தாளும் மும்மூர்த்தி நாயகரே !
இத்தரையை விட்டொழிக்கும் ஸாயியாய் வந்தீரே !
கொங்கணத்தில் அவதரித்த எங்கள்குல தெய்வமே !
பங்கமின்றிக் காத்தருளும் ஆதிநாத நாரணரே !
பரத்வாஜர் முன் தொடங்கி யக்ஞவல்க்யர்,பிருகு,பராசரர்
நாரதர்,வேதவியாஸர், ஜனகர்,ஜனந்தனர், ஜனத்குமாரர்,சுகர்,
ஸௌனக,விஸ்வாமித்ரர், வசிஷ்டர்,வால்மீகி, வாமதேவர்,ஜைமினி
வைசம்பாயனர்,நவயோகீந்திரர், நிவ்ருத்தி,ஞானதேவ், சோபான்,முக்தாபாய்
ஜனார்தனர்,ஏக்நாத், நாம்தேவ்,துகாராம், கனகர்,நரஹரிவரை
தொடர்ந்துவரும் வரமுனிகள் அனைவருக்கும் பணிவானஎன்வணக்கம்.
பெற்றவர்க்கும் எனையென்றும் காத்தருளும் உற்றவர்க்கும்
மற்றவர்க்கும் தாள்பணிந்தேன் தயவோடு காத்திடுவீர்.
இந்நூலைப் படிப்பவரின் தாள்பணிந்து வேண்டிடுவேன்
தன்னூக்கம் குறையாமல் கருத்தொன்றிப் படித்திடவே.
பிரம்மமே மெய்ப்பொருளாம், பாரனைத்தும் வெறும்மாயை
எனவுணர்த்தும் ஸ்ரீதத்தரின் அவதாரமாம் ஸாயியைநான்பணிந்திடுவேன். [10]
இறையுறையும் அனைத்தையுமே பக்தியாற்பலகாலும் வணங்கியப்பின்
தாம்கண்ட நிகழ்வொன்றை ஹேமாத்பந்த் உரைத்திடுவார்
அன்றொருநாள் காலையிலே எழுந்தவுடன் பல்துலக்கி
வாசலுக்கு வந்தபாபா விசித்திரமாய்ச் செயல்செய்தார் !
கோதுமையை அரைக்கின்ற பணியினிலே ஆழ்ந்துவிட்டார்.
மாதர்சில பேர்களுமே உதவிக்கு வந்தரைத்தார்.
காரணமே புரியாத மாதரிலே சிலபேர்கள்
தாமரைத்த கோதுமையைத் தம்மடியில் கட்டிக்கொண்டார்!
கோபமுற்ற பாபாவோ 'யார்வீட்டுப் பொருளிதுதான்
நீரெடுத்துச் செல்கின்றீர்? என்றவரைக் கடிந்தபின்னர்
'ஊரெல்லை வரைசென்று ஆங்கதனைக் கொட்டிடுக'
எனச்சொல்லிப் பணித்தாரே! ஊராரும் திகைத்தாரே!
'ஏனிந்தச் செய்கை?'யென யானொன்றும் புரியாமல்
மானொத்த விழியுடைய மாதரிடம் வினவினேன்.
'காலரா' என்னுமொரு கொடுநோயின் தாக்கத்தை
காலனென அழித்திடவே செய்ததிந்த லீலையென்றார் !
வியப்பாலே விழிவிரிந்து நானிவரின் சரித்திரத்தை
உவப்புடனே எழுதிடவே மனத்துள்ளே முடிவெடுத்தேன்.
மாவரைத்ததன் தத்துவ உட்கருத்து::
மாவரைத்த பொருளென்ன? அதுநமக்கு உரைப்பதென்ன?
மாமனிதர் பாபாவும் இதன்மூலம் சொன்னதென்ன? [20]
நாமெல்லாம் செய்கின்ற பாவங்கள் அனைத்தையுமே
மாவரைக்கும் எந்திரமாய் பாபாவும் தீர்க்கின்றார்.
நம்வினையும் பக்தியுமே எந்திரத்தின் இருகல்லாம்
கர்மம்/அதன் கீழ்க்கல்லாம்; பக்தியதன் மேற்கல்லாம்
ஸத்வ,ரஜஸ, தாமஸமெனும் முக்குணத்துத் தீவினையை
தியானமெனும் கைப்பிடியைச் சுழற்றியதை அரைக்கின்றார்.
இக்கதையைப் போலொன்றும் கபீர்தாசர் வாழ்விலுண்டு.
சோளத்தை அரைப்பவளைப் பார்த்தவரும் வருந்துகையில்
குருவங்கே சொல்கின்றார் 'ஞானத்தைக் கைப்பிடியாய்க்
கருத்துடனே உள்நோக்கி நீயென்றும் சுழன்றாலே
குருவுன்னைக் கைகொடுத்துக் காப்பதுவும் திண்ணமே
உருவாகும் உன்னுள்ளே ஞானமெனும் பேரருளே!' [26]
ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment