Friday, May 30, 2014

Sai Charita - 31

"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 31


1. சந்நியாசி விஜயானந்த், 2. பாலாராம் மான்கர், 3. நூல்கர், 4. மேகா, 5. புலி இவர்களெல்லாம் பாபாவின் முன்னிலையில் உயிர் நீத்தல்.

'முன்னுரை' ::

மரிக்கும்போது இருக்கும்நினைவவன் எதிர்காலத்தை நிர்ணயித்திடும்.
பகவான்கண்ணனும் பகவத்கீதையில் இந்தக்கருத்தையே கூறியிருக்கிறார்:

'இறக்கும்போது என்னைநினைப்பவன் மெய்யாயென்னிடம் வந்துசேர்கிறான்;
வேறெதும்நினைவில் உயிரைத்துறப்பவன் விரும்பியவண்ணமே சென்றடைகின்றான்.'

வாழ்வினிறுதியில் நல்லதையெண்ணிட நம்மனைவர்க்கும் இயலாவொன்று
பயமோபீதியோ அதிகமடைந்திடும் வாய்ப்புகளங்கே நிறைந்திடக்கூடும்.

இவ்விதமேதும் நிகழாதிருக்கவே இறைவன்நாமத்தை நாளும்பொழுதும்
நிலையானபயிற்சியாய் உச்சரித்திடும்படி ஞானியரெல்லாம் போதித்திடுவர்.

அவர்சொற்கேட்கும் அடியவரனைவரும் தம்மைத்தாமே அர்ப்பணித்திட
அவர்களுக்கெல்லாம் நம்பிக்கையளித்து இறுதிக்காலத்தில் ஞானியர்காப்பர்.

'சந்நியாசி விஜயானந்த்'::

சென்னையைச்சேர்ந்த ‘விஜயானந்த்’தெனும் ஞானியொருவரும் தீர்த்தயாத்திரையாய்
மானஸரோவர் சென்றிடும்வழியில் பாபாபுகழைக் கேள்விப்பட்டு

ஷீர்டிவந்து ஸோமதேவெனும் சாதுவைக்கண்டு யாத்திரைபற்றிய
விவரம்கேட்கையில், ‘கங்கோத்ரிக்கும் மிகவுமுயரம்; பொழியும்பனியும்,

மாறிடும்மொழியும், பூடான்மக்களின் சந்தேகக்குணமும் கொடுத்திடும்கஷ்டம்’
இவையெலாம்கேட்டதும் மனச்சோர்வுற்று யாத்திரைசெல்லும் திட்டத்தைவிட்டார்.

ஸாயியைக்கண்டு பணிந்தபோது பாபாமிகவும் கோபமடைந்து,
'துரத்துங்களந்த உபயோகமற்றத் துறவியையுடனே! அவரதுநட்பு

பயனற்றதுவே' என்றவர்சொன்னதும், மனம்மிகவாடி ஓரத்திலமர்ந்து
காலைநேரத் தர்பாரின்போது கால்களைக்கழுவியும், புனிதநீர்குடித்தும், [1630]

கண்களால்பார்த்தும், சந்தனம்பூசியும்,புனிதமேனிக்கு நறுமணம்தடவியும்
கூடியஅடியவர் மதபேதமின்றி செய்திடும்யாவையும் பார்த்திருந்தார்.

மறுநாட்பொழுதில் ஊரிலிருக்கும் தாயின்உடல்நிலை சரில்லையென்னும்
சேதியறிந்து கவலைப்பட்டுத் தாயைக்காணவே சென்னைசென்றிட

பாபாவிடத்தில் அனுமதிகேட்டதும், 'தாயையித்தனை நேசிக்கும்நீயேன்
துறவியுமானாய்? சொந்தபந்தமும், ஆசாபாசமும் காவியுடைக்கு

ஒத்துவராது. இருப்பிடம்திரும்பி அமைதியாகவே சிலநாள்காத்திரு.
கொள்ளைக்காரர்கள் வாதாவிலதிகம். கதவைத் தாழிடு. ஜாக்ரதையாயிரு.

இருக்கும்திருடர்கள் அனைத்தையும்கொள்வர்.செல்வமும்வளமும் நிலையற்றவையே.
அழியும்/உடலின் ஆசையைவிடுத்து அனைத்தையும்துறந்து ஹரியைச்சரண்புகு.

இப்படிச்செய்திடின் பேரின்பமடைவாய். அன்புடன்நினைத்திட ஹரியும்வருவான்.
முன்வினைப்பயனால் இங்குநீவந்தாய். நான்சொல்லுவதைக் கவனமாய்க்கேள்.

முடிவுவந்ததை நீயுமுணர்ந்து ஆசைகளகற்றி பாகவதத்தை
மூன்றுமுறைகள் ஸப்தாஹம்செய். பரமனும்மகிழ்ந்து பாவம்தொலைப்பார்.'

எனவேபாபா அவர்முடிவறிந்து இவ்விதச்சிகிச்சையை அவருக்குத்தந்தார்.
எமனும்மகிழும் "ராமவிஜய"மெனும் புனிதநூலையும் படிக்கச்செய்தார்.

மறுநாள்குளித்து சடங்குகள்செய்து லெண்டித்தோட்டத் தனிமையைநாடி
பாகவதத்தைப் பாராயணம்செய்ததில் உடல்சோர்வுற்று வாதாதிரும்பினார்.

இரண்டுநாட்கள் தங்கியபின்னர் மூன்றாம்நாளில் ‘படேபாபா’வின்
மடியிற்படுத்து உயிரைநீத்தார். அவரதுஉடலினை மேலும்/ஒருநாள் [1640]

பாதுகாத்திட பாபாசொன்னார். காவலர்வந்து முறைப்படியாக
விசாரணைசெய்து அடக்கம்செய்திட அனுமதியளித்ததும், உரியதோரிடத்தில்

மரியாதைகளுடன் அடக்கம்செய்தனர். இவ்விதமாகத் துறவிக்குதவி
பாபாஅவர்க்கு நற்கதியளித்த அற்புதக்கதையினை இங்கேகண்டோம்.

'பாலாராம் மான்கர்'::

பாலாராம்மான்கர் எனுமொருசம்ஸாரி மனைவியிறந்ததும் வீட்டைத்துறந்து
மகனிடம்பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஷீர்டிசென்று பாபாவையடைந்தார்.

அவரதுபக்தியில் பாபாமகிழ்ந்து நல்லதோர்வாழ்வை அளிக்கவிரும்பி
பனிரெணடுரூபாய் கையிலளித்து மச்சிந்த்ரகட்டெனும் ஊருக்கனுப்பினார்.

ஸாயியைப்பிரிய மனமில்லாமான்கரை பாபாதேற்றி உறுதியளித்து
தினமும்மும்முறை தியானம்செய்திடக் கேட்டுக்கொண்டு அனுப்பிவைத்தார்.

பாபாமொழிகளில் நம்பிக்கைவைத்து மச்சிந்த்ர்கட்வந்து இருக்கும்சூழ்நிலை
தன்னில்மகிழ்ந்து ஒருமனதாகத் தியானம்செய்திட, சமாதிநிலையிலோ

தியானநிலையிலோ மட்டுமேதெரியும் தெய்வீகக்காட்சி சாதாநிலையிலே
அவருக்கேற்பட, தமக்குஎதிரே பாபாதோன்றிட, கண்டதுமன்றி

ஏனிங்குதானும் அனுப்பட்டேன் எனுமொருகேள்வியை பாபாவைக்கேட்டார்.
அன்புடன்ஸாயி அவருக்கிரங்கி, 'பல்வேறுஎண்ணமும் குழம்பியகருத்தும்

ஷீர்டியிலுனக்கு வந்ததனால்தான் மனதையடக்கிட இங்கேயனுப்பினேன்.
ஐம்பொறிகளினாலும் மூன்றரைமுழமும் கொண்டவுடம்பிலே ஷீர்டியில்நானும்

வாழ்வதாகவே நீயுமெண்ணினாய். இப்போதென்னை நேரேபார்த்து
ஷீர்டியிற்கண்ட அந்தமனிதரா இவரென்றேநீ தீர்மானித்துக்கொள். [1650]

இதற்காகத்தான் உன்னையிங்கே நானுமனுப்பினேன்' என்றேபாபா
சொன்னதில்மகிழ்ந்து குறித்தகாலம்வரை அங்கேயிருந்தபின் சொந்தஊரான

பாந்த்ராசென்றிட பூனேவந்து தாதர்வரைக்கும் இரயிலில்சென்றிட
பயணச்சீட்டு எடுத்திடவெண்ணி நிலையம்வந்தார். கூட்டமதிகமாய்

இருப்பதைக்கண்டு திகைத்திட்டப்போது, கோவணம்கட்டிய கிராமவாசி
ஒருவர்வந்து, 'எங்கேபோகிறீர்?' என்றேகேட்டிட, 'தாதர்வரைக்கும்'

எனவிவர்சொன்னதும் இடுப்பிலிருந்து பயணச்சீட்டு ஒன்றையெடுத்து
'வேலைகள்கொஞ்சம் இங்கேயிருப்பதால் என்னால்சென்றிட இயலவுமில்லை.

எனவேயிந்தச் சீட்டைத்தாங்களே எடுத்துக்கொள்க' என்றவர்சொன்னதும்,
மகிழ்ச்சியடைந்து பணத்தைக்கொடுக்க நினைத்தப்போது கிராமவாசியோ

கூட்டத்தில்கலந்து மறைந்துபோனாரே! நிலையம்விட்டு வண்டிகிளம்பும்
நேரம்வரையிலும் மான்கர்தேடியும் மீண்டுமவரைக் கண்டிடவில்லை!

மான்கர்பெற்ற இரண்டாம் காட்சியிது! இல்லம்திரும்பி சிலநாள்தங்கி
மீண்டும்ஷீர்டி திரும்பிவந்து ஸாயிசேவையில் தானீடுபட்டு

ஸாயிமுன்னிலையில் ஆசீர்வாதம் தானும்பெற்று ஸாயிபாதங்களில்
சரணமடைந்து உலகவாழ்க்கையைத் துறக்கும்பேற்றினை அவரும்பெற்றார்.

'தாத்யா சாஹேப் நூல்கர்'::

தாத்யாசாஹேப் நூல்கரென்பவர் ஷீர்டிமண்ணில் உயிரைநீத்தார்
எனவேமட்டும் ஹேமாத்பந்த்தும் சொல்லியிருப்பதால் ஸாயிலீலா

சஞ்சிகையொன்றில் வந்ததன்சுருக்கம் இங்கேகொஞ்சம் தரப்படுகிறது.
ஆயிரத்தொள்ளாயிரத் தொன்பதாமாண்டில் நானாசாஹேப் மாம்லத்தாராய் [1660]

பண்டரிபுரத்தில் இருந்தநேரத்தில் தாத்யாசாஹேப் நூல்கரென்பவர்
சப்-ஜட்ஜாக அங்கேயிருந்தார். இருவரும்கூடிப் பேசிடும்வேளையில்

ஸாயிலீலைகளை நானாவுரைத்து, ஷீர்டிசென்று தரிசனம்கண்டிட
தாத்யாசாஹேப்பை வற்புறுத்திட, பிராமணரொருவர் சமையற்காரராய்த்

தனக்குவேண்டும்; அன்பளிப்பாக ஸாயிக்குத்தந்திட நாக்பூர்ஆரஞ்சு
கிடைத்திடவேண்டும்.இருநிபந்தனைகளும் நிறைவேறினால் தானும்ஷீர்டி

செல்வதாய்ச்சொல்லிட, ஈசனருளால் இருநிபந்தனைகளும் நிறைவேறினவே!.
பிராமணரொருவர் நளனாய்வந்திட, அனுப்பியவராரெனத் தெரியாமலேயே

அழகியநூறு ஆரஞ்சுப்பழங்கள் அடங்கியகூடையும் தாத்யாசாஹேப்பை
வந்தடைந்தது! வேறுவழியின்றி ஷீர்டிசென்றிட ஒப்புக்கொண்டு

அங்கேசென்றதும் முதலில்பாபா கோபம்கொண்டாலும், ஸாயியின்பெருமை
படிப்படியாக நூல்கருக்கும் புரியவந்திட, ‘கடவுளவதாரமே

இவர்'எனஉணர்ந்து, மரணம்வரையிலும் பாபாவுடனே நூல்கர்தங்கினார்.
மரணப்படுக்கையில் கிடந்திடும்வேளையில் புனிதவேதங்கள் படிக்கப்பட்டும்,

ஸாயியின்பாதம் கழுவியநீரும் கொண்டுவரப்பட்டுக் குடிப்பதற்காக
அவர்க்குக்கிடைத்தது. அவரதுமரணச் செய்தியைக்கேட்ட ஸாயிபாபாவும்,

'ஓ! நம்மைவிட்டு தாத்யாசென்றார்! மீண்டும்பிறப்பு அவருக்கில்லை'
என்றேகூறி நூல்கருக்கு முக்தியளித்த லீலையுமிதுவே.

'மேகா' ::

இலம்பகம்இருபத்தெட்டில் மேகாவின்முழுக்கதையும் முன்னமேயே இருக்கிறது.
மேகாஇறந்தவுடன் ஊர்மக்கள்அனைவரோடும் பாபாவும் கலந்துகொண்டார். [1670]

மலர்தூவிப் பொழிந்தப்பின்னர் மக்களைப்போல்பாபாவும் கண்ணீர்விட்டார்.
துக்கத்தால்மிகவாடி மலர்தூவிஉடல்மூடி கண்ணீர்வடித்தபடி மசூதிசென்றார்.

'புலி'::

சமாதியடைந்திட ஒருவாரமிருக்கையில் வியத்தகுசம்பவமொன்று ஷீர்டியில்நிகழ்ந்தது.
சங்கிலியால்கட்டப்பட்டு வண்டியொன்றில்பிணைத்தபடி நோய்வாடும்புலியொன்று ஷீர்டிவந்தது.

ஊரூராய்ச்சென்றபடி புலியிதனைக்காட்டியே பொருளீட்டும்தெர்வஷிக்கள் மூவரங்குவந்தனர்.
குணப்படுத்தும்சிகிச்சையெலாம் பயனற்றுப்போய்விடவே பாபாவின்புகழ்கேட்டு மசூதிவந்தனர்.

சங்கிலியைப்பிடித்தபடி கதவருகில்புலிநிற்க வலியாலும்கூச்சலாலும் புலிசற்றேமிரண்டது.
பாபாவின்ஆணைப்படி உள்ளேகொண்டுவர படியருகேவந்ததும் புலிதலையைத்தாழ்த்தியது.

பாசமுடன்பாபாபார்க்க, வால்மயிரைத்தானாட்டி மூன்றுமுறைதரையடித்து உணர்ச்சியற்றுச்சாய்ந்தது.
மரணித்தக்காட்சிகண்டு தெர்வஷிக்கள்வருந்திடினும் பெருமகனின்கண்ணெதிரே தன்னுயிரைப்போக்கிட்ட

அரும்பேற்றையவர்உணர்ந்து, நோயுற்றவேளையிலும் தன்கடனைத்தீர்த்திட்டுநல்மரணமடைந்திட்டப்
புண்ணியத்தைப்பெற்றதென அவர்மகிழ்ந்து பதம்பணிந்து பாபாவைவணங்கிட்டார். [1676]

ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.