Sai Charita - 34
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 34
1) டாக்டரின் சகோதரியின் மகன், 2) டாக்டர் பிள்ளை, 3) ஷாமாவின் மைத்துனி, 4) ஈரானியப் பெண், 5) ஹர்தா கனவான், 6) பம்பாய்ப் பெண்மணி.
******************
உதியின்பெருமையை, அதுதரும்பலன்களை, அதனையிடுவதால் பெற்றிடும்பயன்களை
மேலும்விளக்கிடும் சம்பவங்களை இந்தஇலம்பகம் கூறிடக்காண்போம்.
'டாக்டரின் சகோதரியின் மகன்'::
மாலேகாவனில் மருத்துவப்பட்டம் பெற்றிட்ட டாக்டரின் சகோதரியின்மகன்
எலும்புருக்கி நோய்க்கட்டியால் அவதிப்படுகையில், டாக்டரும்அவரது
சகமருத்துவரும் அறுவைச்சிகிச்சை முதலியபலவும் செய்துபார்த்தும்
குணமாகாததால், கடைக்கண்பார்வையால் மட்டுமேதீர்த்திடும் வல்லமைகொண்ட
ஸாயிநாதரிடம் அழைத்துச்சென்றிட நண்பரும்சுற்றமும் அறிவுறுத்திடவே,
அதனைக்கேட்டு ஷீர்டிவந்து பாபாமுன்னே மகனையிட்டுப் பணிந்துவேண்டினர்.
கருணையுள்ளம் கொண்டஸாயியும் ஆறுதலளித்து, 'மசூதியினுள்ளே
அடைக்கலம்புகுந்தோர் எக்காலத்தினும் துயரம்கொள்ளார்! கவலையைவிடுங்கள்!
நான்தரும்உதியை கட்டியின்மீது தடவிடஅவனும் ஒருவாரத்துள்
குணமடைந்திடுவான்! கடவுளைநம்புக! இங்கிருப்பவள் துவாரகமாயி!
காலடிவைப்பவர் கவலைகள்தீர்ந்து மகிழ்வும்நலமும் பெறுவார்' என்றார்.
சிறுவனின்உடலைக் கைகளால்தடவி அன்புடன்பார்த்து உதியைத்தடவினார்.
சிலநாட்களிலே சிறுவனின்நோயும் குணமடைந்திடவே ஸாயியைவணங்கி
நன்றியும்சொல்லி ஷீர்டிவிட்டுத் திரும்பவும்தமது ஊருக்குவந்தனர். [1850]
செய்தியறிந்த சிறுவனின்மாமா வியப்பிலாழ்ந்து பம்பாய்செல்லும்
வழியில்தானும் ஷீர்டிசென்றிட விரும்பியப்போதும், ஒருசிலர்கூறிய
விஷமப்பேச்சால் ஷீர்டிவிடுத்து நேரடியாக பம்பாய்சென்று
விடுமுறைநாட்களை 'அலிபாக்'என்னும் ஊரினில்கழிக்க விருப்பம்கொண்டார்.
ஆயினும்தொடர்ந்து மூன்றுஇரவிலும் 'இன்னும் என்னைநீ நம்பவில்லையா?'
எனுமொருகுரலைக் கேட்டடாக்டரும் ஷீர்டிசென்றிட மனம்மாறினார்.
ஒட்டுஜுரத்தால் அவதிப்பட்ட நோயாளியொருவரைக் கவனிக்கும்பணியில்
அப்போதிருந்ததால் 'இன்றவர்நலம்பெற நாளைசெல்வேன்' எனமுடிவெடுத்தார்.
அந்நொடித்தொட்டே நோயாளியின்ஜுரம் படிப்படியாகக் குறையலானது!
முடிவின்படியே ஷீர்டிசென்று ஸாயியைக்கண்டு மனமிகமகிழ்ந்து
நான்குநாட்களவர் தங்கியப்பின்னர் உதியினைப்பெற்று இல்லம்திரும்பினார்.
பதினைந்தேநாளில் பணிஉயர்வுற்று பீஜாப்பூருக்கு மாற்றலாயினார்.
சகோதரியின்மகன் நோய்ச்சம்பவத்தால் ஷீர்டிசென்றிடும் வாய்ப்பினைப்பெற்று
ஸாயியின்பாத கமலங்கள்மீது நம்பிக்கைகொள்ளவும் காரணமானது.
'டாக்டர் பிள்ளை' :;
டாக்டர்பிள்ளை எனும்அடியாரிடம் பாபாமிகவும் விருப்பம்கொண்டு
சகோதரனென்றே அழைத்துப்பேசி தம்மருகினிலே இருத்திக்கொண்டார்.
நரம்புச்சிலந்தி நோயால்வருந்திய காலத்தில்பிள்ளையும் காகாஸாஹேப்
தீக்ஷித்திடத்தில், 'தாங்கவொண்ணா இந்தநோயினால் அவதிப்படலைக்
காட்டிலுமிந்த உயிரைவிட்டிட விருப்பம்கொள்கிறேன். முன்வினையால்இது
நிகழ்ந்ததெனினும் இனிவரும்பத்துப் பிறப்புகளுக்கு இவ்வினைப்பலனை [1860]
மாற்றித்தந்திட ஸாயிபாபாவிடம் எனக்காய்வேண்டுக'என்றவர்கதறிட,
அவ்விதமேஅவர் பாபாவிடத்தில் டாக்டரின்சார்பில் வேண்டிக்கொண்டார்.
அதனைக்கேட்டுக் கருணைக்கொண்ட ஸாயிநாதனும் 'நானிங்கிருக்கையில்
சாவதற்குஏன் வேண்டிடவேண்டும்? பயம்கொளவேண்டாம்! இகபரநலன்களை
நானளித்திடுவேன்! இவ்விடம்அவரை உடன்கொணர்ந்திடுக! ஏதேனும்செய்தவர்
தொல்லைகளையே நாம்போக்கிடலாம்! பத்துஜென்மங்கள் தேவையேயில்லை!
பத்தேநாட்களில் தீர்த்துக்கட்டலாம்!' எனஆறுதல்தந்திட, ஒருசிலர்உதவியால்
டாக்டர்பிள்ளையை பாபாவருகே கொண்டுவந்தப்பின், தமதுதிண்டையே
பாபாஅளித்து, 'அமைதியாயிங்கே படுத்துக்கொள்க. முன்வினைப்பயனை
அனுபவிப்பதே தீர்த்திடும்வழியாம் நேரிடுமனைத்தையும் பொறுத்துக்கொள்க.
காப்பதும்அல்லா! தீர்ப்பதும்அல்லா! அவரைநினைந்திட அருள்புரிந்திடுவார்.
உடல்பொருள்வாக்கால் அவரைச்சரணடை! எவ்விதம்உன்னைக் காக்கிறாரென்பதைப்
பின்னர்கவனி! எனும்மொழியுரைத்ததும், நானாஸாஹேப் கட்டியத் துணியைப்
பிள்ளைகாட்டிட, 'நானாஓர்மடையன்! உடனேஅதைஎடு! இல்லாவிடிலோ
உடனேமரிப்பாய்! காக்கையொன்று இங்கேவந்து உன்னைக்கொத்தும்!
அதன்பின்நீயும் குணமடைந்திடுவாய்!' எனஸாயிசொல்லிய அந்தநேரத்தில்
விளக்குகள்திருத்தி மசூதிகூட்டும் 'அப்துல்'என்பவர் அங்கேவந்தார்.
சீர்செய்யும்வேலையைப் பார்த்திருக்கையில் தற்செயலாக அவரதுகால்கள்
நீட்டியவாக்கில் கிடந்தடாக்டரின் பாதம்மீது அழுந்தப்படியவே
வீங்கியகாலின் மீதிவர்காலும் பட்டதனாலே உள்ளேயிருந்த [1870]
ஏழுசிலந்திப் புழுக்களும்உடனே அழுத்தத்தினாலே வெளியேவந்தன.
வலிவேதனையினால் அலறியபிள்ளையும் சற்றுநேரத்தில் சாந்தமடைந்து
அழுகையும்பாடலும் மாறிமாறியே கூவத்தொடங்கினார்! அதனைக்கண்ட
ஸாயிநாதனும் 'பார்! நம்சோதரன் சௌக்கியமாகிப் பாடுவதைப்பார்!'
என்றேசிரித்திட, அதனைக்கேட்ட டாக்டர்பிள்ளையோ 'எப்போதந்தக்
காகம்வந்து என்னைக்கொத்தும்?' எனவினவிடவும், 'அப்துல்வடிவில்
காக்கையைநீயும் காணவில்லையோ? மீண்டும்வராது! வாதாசென்று
ஓய்வெடுப்பாயாக! விரைவில்நீயும் குணமடைந்திடுவாய்' எனமொழிந்தருளினார்!
உதியைத்தடவியும் நீருடன்கரைத்து அதனைப்பருகியும் வேறெந்தமருந்தும்
எடுத்துக்கொள்ளாமல் பத்தேநாட்களில் பிள்ளையின்வியாதி குணமாகியதே!
'ஷாமாவின் மைத்துனி'::
ஷாமாவின்தம்பி ‘பாபாஜி’யென்பவர் சாஸாவ்லிவிஹீருக்கு அருகேவசிக்கையில்
ஓர்நாளிரவு அவரதுமனைவி பிளேக்நோயினால் வருந்திடும்செய்தியை
பாபாஜிமூலம் ஷாமாஅறிந்து பீதியடைந்து வழக்கம்போலவே
பாபாவைஅணுகி, நோயைத்தீர்த்திடும் உதவியைக்கோரித் தொழுதுவேண்டினார்.
தம்பியின்இல்லம் சென்றிடஅனுமதியும் கேட்டவேளையில், 'நடுநிசிநேரம்
சென்றிடவேண்டாம். உதியைமட்டும் அனுப்பிவைத்திடு. 'மாலிக்'இருக்கையில்
பிளேக்கைப்பற்றிய பயமுனக்கெதற்கு? நாளைக்காலையில் சென்றுதிரும்பிடு!'
எனக்கூறியவுடன், ஸாயியின்மீது நம்பிக்கைக்கொண்ட ஷாமாஉடனே
அவ்விதமனுப்பினார். கட்டியின்மீது உதியைத்தடவி, நீருடன்கரைத்து
உட்கொண்டவுடன், உடலெலாம்வேர்த்து, ஜுரமும்குறைந்து நிம்மதியாக [1880]
அந்தப்பெண்மணி தூங்கத்தொடங்கினார். மறுநாட்காலையில் ஷாமாஅங்கே
சென்றசமயத்தில், அவரதுமைத்துனி உடல்லநலத்துடனே சமையலறையினில்
தேநீர்கலந்துக் கொண்டிருந்ததைக் கண்டவர்வியந்து, 'நாளைக்காலையில்
சென்றுதிரும்பிடு' என்னும்மொழியின் நுட்பமறிந்து ஷீர்டிதிரும்பினார்.
ஸாயியைவணங்கி, என்னேதேவா நும்திருவிளையாடல்! புயலினையெழுப்பி
நிலைகுலையச்செய்து, சற்றுநேரத்தில் அமைதிப்படுத்தி ஆறுதல்தருகிறீர்'!
என்றவர்வியந்திட,'நடக்கும்செயல்கள் புதிர்நிலையாகும். நிகழுமனைத்துக்கும்
நான்பொறுப்பல்ல! இறைவனொருவரே அதன்செயலாளர். கருணையுள்ளவர்!
நானிறைவனுமல்லன். பணிவுடனவர்க்குப் பணிபுரிந்திடலும், என்றும்அவரை
நினைவிற்கொள்வதும் மட்டுமேசெய்கிறேன். தன்னஹங்காரம் நீக்கியவொருவன்
இறைவனைநம்பி, என்றும்அவர்க்கு நன்றிகாட்டினால் பந்தங்கள்அறுந்து
விடுதலையென்னும் பேரின்பம்பெற்று நலம்பெற்றிடுவான்' என்றார்ஸாயி!
'ஈரானியரின் பெண்'::
மும்பையிலிருந்த ஈரானியகனவான் ஒருவரின்சிறுமகள் மணிக்கொருமுறையாய்
வலிப்புநோயினால் மிகவும்வாடி, அங்கம்குறுகி, பேசும்திறனும் அற்றுப்போனாள்.
சிகிச்சைகளெதுவும் பலனளிக்காததால், அவரதுநண்பர்கள் மும்பையிலுள்ள
காகாஸாஹேப் தீக்ஷித்மூலம் பாபாஅளித்திடும் உதியினைப்பெற்று
மகளுக்குத்தந்திட அறிவுரைசொல்ல, அதன்படிஅவரும் உதியினைப்பெற்று
தினந்தோறுமதை நீரில்கலந்து மகளுக்குத்தந்திட, மணிக்கொருமுறையாய்
வந்தவலிப்பும் ஏழுமணிகளுக்கு ஓர்முறையாகி வேகம்குறைந்து
படிப்படியாகச் சிலதினங்களிலே பூரணமாகக் குணமடைந்தனளே. [1890]
'ஹர்தா கனவான்'::
ஹர்தாவைச்சேர்ந்த முதியவரொருவர் மூத்திரப்பையில் கல்இருந்ததினால்
வேதனையடைந்து அறுவைச்சிகிச்சை ஒன்றேவழியென உற்றவர்சொல்ல,
வயோதிகத்தால் அறுவைச்சிகிச்சை செய்துக்கொள்ளவும் மனபலமின்றி
வருந்தியவேளையில், எப்போதும்உதியைக் கையிருப்பாகத் தான்வைத்திருக்கும்
அந்நகரத்தின் இனாம்தாரும் அவ்விடம்வரவே, முதியவர்மகனும்
சிறிதளவுஉதியினை அவரிடம்பெற்று நீரில்கலந்து தந்தைக்குத்தந்திட
ஐந்துநிமிடங்களில் உதியின்மஹிமையால் கல்லும்கரைந்து சிறுநீர்வழியே
வெளியேதள்ளிட, முதியவரவரும் வெகுவிரைவினிலே குணமடைந்தாரே!
'பம்பாய்ப் பெண்மணி'::
'காயஸ்தப்பிரபு' சாதியைச்சேர்ந்த பெண்மணியொருவர் மும்பையிலிருந்தார்.
பிரசவகாலத்தில் வந்திடும்வேதனை தாங்கமுடியாமல் வருந்தியவேளையில்
'ஸ்ரீராமமாருதி' என்னும்பக்தர் சொன்னதற்கிணங்க ஸாயியைநாடி
ஷீர்டிசென்று சிலமாதம்தங்கி தரிசனம்கண்டனர். வழக்கம்போல
கர்ப்பநேரத்தில், கருப்பையினுள்ளே தடங்கல்வந்து வலியால்துடித்தாள்.
பாபாவைநினைந்து வேண்டியவேளையில், அருகில்வசித்த மற்றொருப்பெண்னும்
அங்கேவந்து, இருவருமாகப் பிரார்த்தனைசெய்தபின், உதியினைநீரில்
கலந்துக்கொடுத்து பருகிடச்செய்தாள். தலைவிதிப்படியே குழந்தைஇறப்பினும்
வலியெதுமின்றிப் பிரசவம்நிகழ்ந்து தாயின்வேதனைத் தீர்ந்துபோனது.
உதியைத்தந்த ஸாயியைவணங்கி என்றும்அவர்பால் நன்றியோடிருந்தாள். [1899]
ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment