Sai Charita - 38
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 38
பாபாவின் ஹண்டி - கோவிலை மதிக்காதிருத்தல் - காலா அல்லது கதம்ப உணவு - ஒரு கிண்ணம் மோர்.
******************
சாவடிஊர்வல வைபவத்தைநாம் சென்றஇலம்பகம் தனில்கண்டோம்.
பாபாசமைத்த ஹண்டிபற்றியும் இன்னும்சிலவும் இங்கேகாண்போம்.
முன்னுரை ::
உலகமனைத்துக்கும் மகிழ்ச்சியைநல்கி அடியார்நலன்களை இனிதேமுடித்து
திருவடிசரணம் அடைந்தோரிடர்களை போக்கிடும்புனிதராம் ஸாயியைவணங்குவோம்.
தாராளகுணமும் சரணமடைந்தவர் பாதுகாவலராய் விளங்கிடும்தாங்கள்
மக்களுக்கிரங்கி அவர்நலன்காக்கவே இப்பூவுலகினில் அவதரித்திருக்கிறீர்.
நல்லாத்மாக்களின் சாற்றினைப்பிரமன் அச்சினிலூற்றி ஞானியரனைவரின்
முடிமணியாகவே ஆத்மாராமனாம் பேரின்பப்பொருளாய் ஸாயியும்வந்தார்.
வாழ்வின்குறிக்கோள் அனைத்தையுமெய்தி அடியவரனைவரும் பற்றினையறுத்து
விடுதலையடைந்திட ஸாயிபாபா பேரருள்புரிந்து நல்வழிகாட்டினார். [2070]
'பாபாவின் ஹண்டி' ::
கிருத,திரேதா த்வாபர,கலி யுகங்களில்முறையே தவமும்ஞானமும்
யக்ஞமும்தானமும் சிறந்ததெனவே சாத்திரங்களும் கூறுகின்றன.
மனதுமுடலும் திருப்தியடையும் உணவினைத்தானமாய் அளித்திடும்செயலே
தானமனைத்திலும் உயர்ந்ததென்றும், ‘உணவேபிரம்மம்; உணவினிலிருந்தே
பிறந்திடுமுயிரும் உணவாலேயே உயிர்வாழ்ந்திடுமே; அழிந்தப்பின்னரும்
உணவினுள்ளேதான் மீண்டும்செல்லுமென.’தைத்திரீய உபனிஷத்’உரைக்கும்
உணவினையளிப்பதில் தடையேதுமில்லை; மதியநேரத்தில் வீட்டுவாசலில்
எவரேவரினும் தவறாதுணவினை அவர்க்குஅளித்தலே உயரியகடமை.
நோயுற்றவர்க்கும் ஊனமுற்றோர்க்கும் முதலிலளித்தல் மிகவுமவசியம்.
நண்பருறவினர் இவர்கட்கெல்லாம் பின்னரேஅளித்திடசாத்திரமுரைத்திடும்.
அன்னதானம் இல்லாத்தானங்கள் நிலவிலாத்தாரகை போலும், பதக்கமிலா
அட்டிகைபோன்றும், முடிமணியற்றக் கிரீடம்போன்றும், தாமரையில்லாக்
குளத்தினைப்போலவும், குங்குமமில்லாச் சுமங்கலிபோன்றும், இனிமையற்றப்
பாடலைப்போன்றும், உப்பில்லாதத் தயிரினைப்போன்றும் பொலிவினையிழந்திடும்.
வரண்என்னும் பருப்புசூப்பே மற்றெதைவிடவும் சிறந்ததைப்போன்றே
அன்னதானமே மற்றதானங்களைக் காட்டிலும்சிறந்ததாய் விளங்கிடலாகும்.
ஸாயிபாபா எங்ஙனம்உணவினைத் திறம்படச்சமைத்து அனைவர்க்குமளித்தார்
என்பதைப்பற்றி இனிவரும்பகுதியில் ஹேமத்பந்த்தும் நமக்குச்சொல்கிறார்.
தனக்கெனவேண்டி ஒருசிலவீடுகள் முன்னேநின்று பாபாஇரந்துப்
பெற்றதைப்பற்றி முன்னொருயிலம்பகம் தன்னில்விரிவாய்ச் சொல்லியிருக்கிறோம். [2080]
அடியவர்க்கெல்லாம் உணவுபடைத்திடத் தீர்மானித்தப்பின் அதற்கெனவேண்டிய
ஏற்பாடனைத்தையும் தாமேசெய்தார். கடைக்குச்சென்று சோளம்,மாவு,
பலசரக்கெல்லாம் பணத்தைக்கொடுத்து வாங்கிவந்தப்பின் கோதுமையரைப்பார்.
மசூதிமுன்னில் திறந்தவெளியில் அடுப்பினைமூட்டி ஹண்டியென்னும்
பாத்திரமொன்றில் பதமானவளவில் நீரினையூற்றி எரியவிடுகிறார்.
சிறியதும்பெரிதுமாய் ஹண்டியினளவு இருவிதமாக ஐம்பதுபேர்க்கும்
நூறுபேர்க்குமாய் உணவினையளிக்கப் போதுமானதாய் அங்கேயிருந்தன.
சர்க்கரைப்பொங்கலும், மாமிசப்புலாவும், கொதித்திடும்வரணில் கோதுமைமாவை
உருண்டையாகவோ ரொட்டிகள்போலத் தட்டையாகவோ மிதக்கவிட்டார்.
வாசனைப்பொருளை அம்மியிலரைத்து சமையலில்கலந்து சுவையைக்கூட்டினார்.
கேழ்வரகுமாவை நீருடன்கலந்துக் கொதிக்கச்செய்து தயிரினைச்சேர்த்து
அம்பீலென்னும் கூழினைச்சமைத்து சமஅளவாக அனைவர்க்குமளித்தார்.
வெந்திடுமுணவைச் சரிபார்த்திடவே கஃப்னியின்கைகளை மேலேசுருட்டி
வெறுங்கையாலே கொதிக்கும்ஹண்டியுள் பயமின்றிவிட்டுக் கலக்கிவிட்டார்.
கைவெந்ததற்கான அடையாளமெதுவுமோ முகத்தில்பயமோ சிறிதுமில்லை.
சமையல்முடிந்ததும் மசூதிகொணர்ந்து மௌல்வியின்மூலம் புனிதமாக்கினார்.
மஹால்ஸாபதிக்கும், தாத்யாபாடீலுக்கும் உணவினோர்பகுதி அனுப்பிவைத்தப்பின்
எளியவர்க்கெல்லாம் தம்கையாலேயே வேண்டியஅளவில் உணவுபடைத்தார்.
இத்தகுப்பேறு பெற்றவரெல்லாம் நிச்சயமாக அதிர்ஷ்டசாலியே
சைவமும்அசைவமும் அவரவர்பழக்கமாய் அளிக்கப்பட்டன என்பதேஉண்மை [2090]
வேண்டாதவர்க்கு வற்புறுத்தலோ தூண்டிவிடுதலோ நிகழ்ந்ததில்லை.
குருவெனுமொருவர் அளித்திடுமுணவைச் சந்தேகமின்றி ஏற்றிடல்வேண்டும்
எனுமோர்விதியைச் சோதனைசெய்திட சீடர்களுக்குப் பரீட்சைவைப்பார்.
தாதாகேல்கர் எனுமோர்வைதீகப் பிராமணரொருவரை ஒருமுறைபாபா
ஏகாதசிநாளில் ‘கொரலா’சென்று மாமிசம்வாங்கிட பணத்தைக்கொடுத்தார்.
குருவின்கட்டளை மீறலாகாதென கேல்கருமுடனே ஆயத்தமானார்.
அதனைக்கண்டதும் அவரைப்பார்த்து வேறொருநபரை அனுப்பிடப்பணித்தார்.
வேலையாள்'பாண்டு'வை தாதா அனுப்பிட, அதையும்தடுத்துத் திரும்பிடச்சொன்னார்.
பிறிதொருவேளையில் மாமிசக்கறியில் உப்பின்அளவைச் சரிபார்க்கச் சொன்னார்.
சுவைத்திடாமலே சரிதானென்றே சாதாரணமாக தாதாகூறிட,
'கண்ணால்நீயும் பார்த்ததுமில்லை; நாவாலதையும் சுவைத்ததுமில்லை;
பின்னரெங்ஙனம் சுவையினளவினைக் கூறிடவியலும்? மூடியைத்திறந்து
பார்'எனச்சொல்லி கையையிழுத்து பானையுள்ளழுத்தி 'கரண்டியாலெடுத்து
வைதீகம்பற்றிக் கவலைப்படாமல் உணவுடன்சேர்'என பாபாகூறினார்.
குழந்தையைச்சற்று அன்பின்மிகுதியால் கிள்ளிப்பார்த்து அழத் தொடங்கியதும்
மார்புடன்சேர்த்து அணைத்திடும்தாய்போல் பாபாஇவ்விதம் சீண்டிப்பார்த்தார்.
உண்மையில்கேல்கரை சாப்பிடவிடாமல் பாபாதடுத்தார் என்பதேநிகழ்ந்தது.
விருப்பமில்லாச் சீடனைவலியச் சாப்பிடச்செய்யும் கீழ்மையங்கில்லை.
ஆயிரத்தொள்ளா யிரத்துப்பத்தாம் ஆண்டுவரையிலும் ஹண்டிமுறைமை
நடந்துவந்து, தாஸ்கணுமூலம் ஸாயியின்பெருமை பெரிதும்பரவி [2100]
ஷீர்டிவந்திடும் அடியவர்கூட்டம் பெருகியப்பின்னர் நின்றுபோனது.
அடியார்கொணர்ந்திடும் பல்விதஉணவு நைவேத்தியமாய் நிறையலானது.
அனைவருமதனை உண்டப்பின்னரும் பெருமளவினிலே மீதியிருக்கும்.
எவ்விதமிந்த உணவுவகைகள் பகிரப்பட்டன என்பதைச்சொல்லிடும்--
--முன்னேநாமும் பாபாவுக்கு ஆலயம்மீதும் கடவுளர்மீதும்
இருந்த ஆர்வத்தை விளக்கிடும்வகையாய் நானாசாஹேப் கதையைக்காண்போம்.
கோவிலை மதிக்காதிருத்தல் ::
அந்தணரென்றும் முகமதியரென்றும் அவரவர்சொல்லினும் எவரிவரெனவும்
பெற்றவர்விவரமும் எவரும்அறுதியாய் அறிந்திடவில்லை என்பதெமெய்யாம்.
பரமாத்மாவினிடம் தன்னையேத்தந்து அகமெலாமொழித்து வாழ்ந்தவருக்கு
ஜாதியோமதமோ கொண்டிடுமவசியம் ஏதுமில்லை என்பதேவெளிப்படை.
துனியில்நெருப்பை அணையவிடாமல், துளசிவனத்தை மசூதியில்கொண்டும்,
சங்கொலி,மணியொலி இன்னிசையொலியெலாம் அனுமதித்தவர் முகமதியராமோ?
இந்துமுறைப்படி வழிபாடுசெய்தும், தனதுகாதுகள் குத்தப்பட்டும்
கோயில்திருப்பணி செய்திடத்தமது பணத்தைத்தந்தவர் முகமதியராவரோ?
நானாசாஹேப் சாந்தோர்கர்ஒருமுறை பினிவாலே என்னும்தனது
உறவினருடனே ஷீர்டிவந்து பாபாமுன்னே அமர்ந்திருக்கையில்
திடீரெனபாபா நானாமீது கோபங்கொண்டு 'இத்தனைக்காலம்
என்னுடனிருந்தும் எங்ஙனம்நீயும் இவ்விதம்செய்தாய்?'
என்றவர்மொழிந்திட, குழப்பங்கொண்ட நானாசாஹேப் விவரம்கேட்டு
ஸாயியைவேண்டிட, கோபர்காவன் வழியேஷீர்டிக்கு எவ்விதம்வந்தார் [2110]
என்பதைச்சொல்லிட பாபாகேட்டதும் , செய்ததவற்றினை நானாஉணர்ந்தார்.
ஷீர்டிவந்திடும் போதெலாம்நானா கோபர்காவனில் கோதாவரியாற்றங்
கரையினிலிருக்கும் தத்தர்கோவிலை வணங்கியபின்னரே ஷீர்டிவருவார்
இம்முறைஅங்ஙனம் செய்யத்தவறி, அதற்கெனஸாயியின் மன்னிப்பைக்கோரி
கோதாவரியாற்றில் குளிக்கும்போது முள்ளொன்றுகாலில் குத்தியவிவரம்
அனைத்தையும்கூறி ட, எளியதண்டனை இதுவெனச்சொல்லி எதிர்காலத்தில்
எச்சரிக்கையாய் இருந்திடச்சொல்லி அறிவுரைவழங்கினார் ஸாயிபாபா.
அன்பரளித்திடும் நைவேத்தியத்தை வழங்கிடும்விதத்தை இங்கேகாண்போம்.
'காலா [கதம்ப உணவு]::
ஆரத்திமுடிந்ததும் உதியினையளித்து பக்தரையெல்லாம் அனுப்பியப்பின்னர்
நிம்பாரில்தனது முதுகைச்சாய்த்து இருவரிசைப்பந்தியில் பாபாஅமர்வார்.
அடியாரெல்லாம் அவரவர்கொணர்ந்த பூரி.மாண்டி, போளி,பாஸந்தி,
சன்ஸா.சோறு முதலியவற்றை உள்ளேயனுப்பிட, அனைத்தையும்கலந்து
பாபாமுன்னே வைக்கப்பட்டதும், இறைவனுக்களித்து புனிதமாக்குவார்.
பிரசாதம்வேண்டி காத்துநிற்கும் நபர்களுக்களித்தப்பின் உள்ளேயிருக்கும்
அனைவருக்கும் தேவையறிந்து வயிறாரஅளித்திட நானாசாஹேப்
நிமோண்கரையும் ஷாமாவையும் ஸாயிபாபா கேட்டுக்கொள்வார்.
இருவருமவ்விதம் பிரியத்துடனும் கவனமாகவும் உணவுபடைப்பர்.
புனிதமானதும் தெய்வீகமானதும் ஆனஇவ்வுணவு இனிமையானதே!
ஒரு கிண்ணம் மோர் ::
இந்தவிதமாய் உணவுண்ணுகையில் ஒருமுறைஹேமாத்பந்த் அளவுக்கதிகமாய்
உணவையுண்டிட பாபாஅவர்க்கு ஒருகிண்ணத்தில் மோரினைத்தந்தார். [2120]
வயிற்றில்சிறிதும் இடமில்லையென்றே, சுவையாயிருந்தும் குடித்திடத் தயங்கினார்.
அதனைக்கண்ட ஸாயிபாபா, 'அனைத்தையும்குடித்திடு. இனிமேலிதுபோல்
வாய்ப்புமுனக்கு கிடைப்பதுமரிது ' என்றதைக்கேட்ட ஹேமாத்பந்த்தும்
முழுதுமாய்ப்பருகினார். தீர்க்கதரிசனமாய் பாபாவுரைத்த இந்தக்கூற்று
ஒருசிலநாட்களில் ஸாயிபாபா மஹாசமாதி அடைந்ததில்புரிந்தது.
கிண்ணம்மோரை அருந்தியப்போதும் அமிழ்தினையொத்த பாபாலீலைகள்
எனுமோர்விருந்தினை பற்பலகிண்ணங்கள் நாமும்பருகிடும் வகையினிலிந்த
ஸத்சரிதத்தை ஹேமாத்பந்த்தும் அளித்ததில்மகிழ்ந்து திருப்தியடைவோம். [2124]
ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment