Sai Charita - 28
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 28
முடிவுமில்லாது வரையறையுமின்றி அனைத்துஜீவருளும் ஆவிர்ப்பவித்து
ஸர்வவியாபியாய் சாயிபாபா எங்கணுமுறையும் மஹிமையுடையவர்
வேதஞானமும் ஆத்மஞானமும் அளவிலாப்பெற்ற நம்ஸாயிபாபா
சீடரையெழுப்பிடும் ஸத்குருவாக இப்புவியிதனில் தகுதிவாய்ந்தவர்
அன்னையினருளால் புவியிற்பிறந்தோர் சாவினைநோக்கியே தினம்செல்கின்றார்
பிறப்பையுமிறப்பையும் அழித்திடும்வல்லமை கொண்டதோர்குருவாய் பாபாதிகழ்கிறார் [1440]
"என்னரும்பக்தன் எத்தனைத்தொலைவில், மூவாயிரம்மைல்கள் தொலைவிலிருப்பினும்
காலில்நூலைக் கட்டியிருக்கும் சிட்டுக்குருவியாய் ஷீர்டிசேர்வான்"
பாபாசொல்லிடும் கூற்றுக்கேற்ப ஷீர்டிசேர்ந்த சிட்டுக்குருவிகள்
மூவரைப்பற்றிய கதையினையிங்கே நாமும்கேட்டு நலம்பலபெறுவோம்.
[1] லக்மிசந்த்.::
மும்பையிலிருக்கும் அச்சகத்திலும், ரயிலலுவலகத்திலும், ராலிசகோதரர்
எனுமொருஇடத்திலும் பணிபுரிந்தவர் லக்மிசந்த்எனும் பெருந்தகையாளர்
பத்தொன்பதுபத்தில் கிறிஸ்துமஸ்ஸுக்கு இருதிங்கள்முன்னர் தாடிவைத்த
கிழவனாரொருவர் பக்தர்கள்சூழ நிற்பதாகத்தன் கனவினில்கண்டார்
சிலநாள்கழித்து ‘தத்தாத்ரேயா மஞ்சுநாத்பிஜுர்’ எனுமொருநண்பரின்
வீட்டினில்நிகழ்ந்த தாஸ்கணுவின் கீர்த்தனைக்கேட்க இவரும்சென்றார்
கீர்த்தனைமேடையில் தாஸ்கணுவைத்த ஸாயியின்படத்தைப் பார்த்ததும்தனது
கனவினில்வந்த கிழவனாரிவரென லக்மிசந்தும் அறிந்துக்கொண்டார்
தரிசனம்கண்டு, கீர்த்தனைக்கேட்டு, துக்காராமின் சரித்திரமறிந்ததும்
ஷீர்டிசென்றிட முடிவெடுத்து இல்லம்சென்றதும் சங்கர்ராவெனும்
நண்பரொருவரும் இரவுநேரத்தில் எட்டுமணிக்குக் கதவைத்தட்டித்
தம்முடன்ஷீர்டி வந்திடவிருப்பமோ? என்றவர்கேட்டதும் அகமிகமகிழ்ந்தார்
பதினைந்துரூபாய் மாமாவிடத்தில் கடனாய்ப்பெற்று ஷீர்டியாத்திரை
புகைவண்டிமூலம் சென்றிடும்வேளையில் பஜனைப்பாடல்கள் பாடிமகிழ்ந்தார்
பயணம்செய்த முகமதியரிடம் ஸாயியின்பெருமையைக் கேட்டுமகிழ்ந்தார்
கோபர்காவனை அடைந்தப்போது பழங்கள்வாங்கிட மனதில்நினைத்தார் [1450]
செல்லும்வழியில் கண்டகாட்சியில் மனதையிழந்து பழத்தைப்பற்றியே
மறந்தும்போனார்! ஷீர்டியருகே சென்றிடும்வேளையில் கூடைப்பழங்களைத்
தலையிற்சுமந்து வண்டியைநோக்கி கிழவியொருத்தி வந்திடக்கண்டு
ஒருசிலபழங்களை வாங்கிக்கொண்டதும் மீதிப்பழங்களைக் கிழவியும்தந்து
‘என்றன்சார்பில் பாபாவிடத்தினில் இந்தப்பழங்களைச் சேர்த்துவிடுங்கள்'
என்றவள்சொன்னதும், நிகழ்ந்தவனைத்தையும் மனதுளெண்ணியே வியந்துப்போனார்
கனவிற்கண்ட கிழவனார்க்கிவள் சொந்தம்போலும் என்றேயெண்ணியே
சவாரிதொடர்ந்து ஷீர்டிசேர்ந்திட மசூதிமேலே பறந்தக்கொடியினைப்
பணிவுடன்வணங்கிப் பூசைப்பொருட்களைக் கைகளிலெடுத்து உள்ளேசென்று
உரியமுறையினில் சாயிபாபாவை வணங்கித்துதித்து உருகியேநின்றார்
மலரினைநாடும் வண்டினைப்போல நின்றவரைக்கண்டு பாபாசொன்னார்:
'வஞ்சகனேயிவன்! பஜனைசெய்கிறான்! பிறரைக்கேட்கிறான்! ஏனிதுதேவை?
கண்ணாற்கண்டு உணர்ந்திடலன்றி பிறரைக்கேட்டிடும் அவசியமென்னவோ?
கண்டகனவின்று பொய்யோமெய்யோ? நீயேகொஞ்சம் எண்ணிப்பாரு!
கடனைவாங்கி என்னைக்காண வரவேண்டியதனின் அவசியமென்ன?
உள்ளில்தோன்றிய ஆசைகளனைத்தும் இப்போதுனக்கு நிறைவேறியதுவோ!"
எல்லாமறிந்திடும் எங்கும்நிறைபொருள் சொன்னதைக்கேட்டு வந்தவர்வியந்தார்
தரிசனம்காணக் கடனைவாங்குதல் பாபாவுக்குப் பிடித்தவொன்றில்லை!
'சன்ஸா'::
மதியவுணவுக்காய் அமர்ந்தவேளையில் சன்ஸாவென்னும் கோதுமைப்பண்டம்
நண்பரொருவரும் லக்மிசந்த்துக்கு பிரசாதமாகத் தந்திடச்சுவைத்தார். [1460]
மறுநாளுமதை அவரெதிர்பார்த்தும் அதுகிடைக்காமல் கவலையடைந்தார்.
மூன்றாம்நாளில் பாபாவேஅந்த சன்ஸாவைக்கேட்டிட இரண்டுபானைகள்
சன்ஸாவந்ததும் அன்பரைப்பார்த்து, 'பசிக்கு’ஸன்ஸா’வுண்டு,முதுகுவலிக்குமருந்திடு'
என்றவர்சொன்னதும் மீண்டுமொருமுறை தன்மனமறிந்த பாபாவால்மகிழ்ந்தார்.
'த்ருஷ்டி'::
ஓர்நாளிரவில் சாவடியூர்வலம் காணும்போது இருமலால்பாபா
அவதிப்படலைக் கண்டலக்மிசந்த் த்ருஷ்டியோயிதுவென மனதுள்நினைத்தார்.
மறுநாட்காலை மசூதிசெல்கையில் 'கண்ணேறுபட்டதால் அவதியுற்றேனோ?'
என்றேபாபா ஷாமாவிடத்தினில் சொல்வதைக்கேட்டு மீண்டும்வியந்தார்.
ஸர்வவியாபியாய் விளங்கிடும்ஸாயியைப் பணிந்தவர்வணங்கி 'தரிசனம்கண்டே
மகிழ்ச்சியடைகிறேன்! என்றுமென்னைக் காத்திடுஸாயி! கமலப்பாதம்
தவிரவும்பிறிதோர் கடவுள்எனக்கிலை! போற்றிடும்பஜனை, காத்திடும்பாதம்
இரண்டினில்என்மனம் என்றும்லயித்திட அருள்செய்திடுக! திருநாமம்செப்பி
உலகத்துன்பம் யாவுமேநீங்கி என்றும்மகிழ்ந்திட அருளுகபாபா!'
என்றவர்பணிந்து உதியினைப்பெற்று திருப்பெயர்பாடியே இல்லம்மீண்டார்.
தீவிரபக்தராய் லக்மிசந்த்மாறி, ஷீர்டிசென்றிடும் அடியவர்தம்பால்
பூவும்மாலையும் பூசைப்பொருட்களும் காணிக்கையுமனுப்பி அகமகிழ்ந்திருந்தார்.
'புர்ஹாண்பூர் அம்மையார்'::
மற்றொருகுருவியின் கதையினையிங்கே நாம்கேட்டிடுவோம்!
புர்ஹாண்பூரில் வசித்தவோர்மாது பாபாதனது வாசலில்நின்று
உப்பும்,பருப்பும் கலந்தவோர்உணவை பிச்சைகேட்பதாய்க் கனவினிற்கண்டாள்.
விழித்துப்பார்த்திட வாசலிலெவரும் இல்லாததுணர்ந்துக் கனவென்றறிந்தாள்.
கண்டக்கனவினை உற்றாரிடத்தினில் கூறிமகிழ்ந்து மனதுள்நெகிழ்ந்தாள். [1470]
தபால்துறையில் பணிசெய்தகணவன் அகோலாஎன்னும் ஊருக்குமாறிட
ஷீர்டிசெல்ல இருவரும்நினைந்து அதன்படிசென்று இருமாதமிருந்தனர்.
ஒவ்வோர்நாளும் மசூதிசென்று தரிசனம்கண்டு இன்புற்றிருந்தனர்.
பாபாவுக்கு கிச்சடிபடைத்திட பதினான்குநாட்கள் இயன்றிடவில்லை.
பொறுக்கமாட்டாமல் பதினைந்தாம்தினம் கிச்சடிசமைத்து மசூதிவந்தாள்.
திரைக்குப்பின்னே மற்றவர்களுடன் உண்பதற்காக பாபாஅமர்ந்திட,
திரையினைவிலக்கி உள்ளேநுழைந்ததும், மாதுவின்கையில் கிச்சடிகண்டு
பாபாமகிழ்ந்து கரண்டிகரண்டியாய்த் தட்டில்வாங்கி பாபாஉண்டார்.
இவ்விதம்பாபா உண்ணுதல்கண்டு அனைவரும்வியந்தார்! அன்பர்கள்தம்பால்
ஸாயிகொண்டிடும் அதீதஅன்பின் உறுதியையுணர்ந்திட இக்கதைஉதவும்.
'மேகா' ::
மூன்றிலும்பெரிய சிட்டுக்குருவியின் கதையினையிங்கே இனிநாம்காண்போம்!
ராவ்பஹாதுர் ஹரிவிநாயக் சாதேயென்பவர் சமையற்காரனாம்
வீரம்காவனில் வசித்திருந்த மேகாவென்னும் எளியவோரந்தணன்.
படிப்பறிவில்லை ஆயினும்மிகுந்த பக்தியுடனவனும் ஓம்நமசிவாயவெனும்
சிவமந்திரத்தை சதாகாலமும் செபித்துவந்திடும் சிவபக்தனாவான்
அவனதுபக்தியைக் கண்டுமகிழ்ந்த ராவ்பஹதூரும் சந்தியாகாயத்ரியை
முறையாய்ப்பழக்கி ஷீரடிவாழும் ஸாயிபாபாவே சிவனினம்சம்
என்பதைச்சொல்லி ஷீர்டிசென்றிட ஏற்பாடுசெய்து அனுப்பியும்வைத்தார்.
ஷீரடிபாபா முகமதியரென்று ரயில்நிலையத்தில் கேள்விப்பட்டு
ஷீர்டிசென்றிடத் தயக்கம்கொண்டு ‘அனுப்பிடவேண்டாம் என்னை’யென்றே
எஜமானரிடம் வேண்டியபின்னரும் வற்புறுத்தியதால் செல்லவிசைந்தான் [1480]
தாதாகேல்கர் எனும்தம்மாமனார்க்குக் கடிதம்கொடுத்து அனுப்பியும்வைத்தார்.
மசூதியருகே சென்றிட்டவேளையில் பாபாமிகவும் கோபமாயிருந்தார்.
'அந்தராஸ்கலை வெளியேதள்ளு! நீயோஉயரியபார்ப்பான்! நானோர்இழிந்ததுலுக்கன்!
இங்கேவருவதால் ஜாதியையிழப்பாய்! எனவேநீயும் உடனேஅகன்றிடு!'
கோபக்குரலில் பாபாசொன்னதைக் கேட்டமேகாவும் பயந்துநடுங்கினான்.
இருந்தபோதிலும் அங்கேதங்கி பாபாவுக்குச்சிலநாள் சேவைகள்செய்தான்.
பக்குவமின்னும் அடையாமேகா ஷீர்டிவிட்டு த்ரயம்பக்வந்து
ஒன்றரைஆண்டுகள் தங்கியபின்னர் மீண்டும்ஷீர்டி திரும்பிவந்தான்.
இம்முறைதாதா கேல்கரினுதவியால் மசூதிநுழையவும் ஷீர்டிதங்கவும்
அனுமதிபெற்று மானசீகமாய் பாபாஅருளைப் பெற்றவன்தெளிந்தான்
சிவஅவதாரமாய் ஸாயியைக்கண்டு அப்படிவழிபட மைல்கள்கடந்து
வில்வயிலைகளைப் பறித்துவந்து பாபாவுக்கு அர்ச்சனைசெய்தான்.
கிராமத்திலுள்ள தெய்வமனைத்தையும் வணங்கியபின்னர் மசூதிவந்து
இருக்கையைவணங்கி ஸாயியைப்பணிந்து பாதசேவைகள் புரிந்துவந்தான்.
ஒருநாள்மேகா கண்டோபாகோவில் சென்றதன்கதவும் மூடியிருக்கவே
தரிசனமின்றித் திரும்பிவந்திட,’ கதவுமங்கே திறந்தேயுள்ளது’
என்றேபாபா மொழிந்ததைக்கேட்டு மீண்டும்சென்றிட கோவிலின்கதவுகள்
திறந்திருப்பதைக் கண்டவன்மகிழ்ந்து தரிசனம்கண்டு வந்துபணிந்தான்.
'கங்கா ஸ்நானம்'::
சங்கராந்தி நன்னாளன்று கங்கைநீரினால் அபிடேகம்செய்திட
மேகாவிரும்பி பாபாவிடத்கில் பலமுறைகேட்டு சம்மதம்வாங்கினான். [1490]
இருபத்துநான்கு மைல்கள்தூரம் நடந்துசென்று கோமதியாற்றுத்
தண்ணீர்கொணரப் புறப்பட்டவனும் மதியம்வருகையில் தயாராயிருக்க
ஸாயியைவேண்டிட, 'பக்கிரியெனக்கு இதெல்லாம்வேண்டாம்' என்றேமறுத்தும்
ஆசனமமர்ந்திட பாபாவைவேண்டவும், தலையைமட்டும் நீட்டிக்கொண்டு
'ஓ,மேகா! சொல்வதைக்கேட்பாய்! எண்சாணுடம்பில் சிரசேபிரதானம்
என்பதால்நீயென் சிரசினில்மட்டும் நீரையூற்று!' என்றவரமர்ந்தார்.
அதன்படிசெய்திட ஒப்புக்கொண்டு நீரையெடுத்து 'ஹர்..ஹர்..கங்கே!'
எனக்குரலெடுத்து உணர்ச்சிவேகத்தில் மேகாஊற்றிட சிரசுடன்சேர்த்து
உடலிலுமூற்றி காலிக்குடத்தைக் கீழேவைத்தவன் பாபாவைப்பார்த்தான்.
தலைமட்டும்நனைந்து உடம்பிலொருதுளி ஈரமில்லாததைக் கண்டவன்வியந்தான்!
'திரிசூலமும் லிங்கமும்'::
நேரடியாகமசூதியினிலும் நானாஅளித்தப் படத்தின்வழியே வாதாவினிலும்
இருவிடங்களிலும் மேகாஸாயியை ஓராண்டுகாலமாய் வழிபாடுசெய்தான்.
தூயபக்தியை மெச்சியபாபா ஒருநாள்விடியலில் படுக்கையிலிருக்கையில்
பாபாவுருவினைத் தெளிவாய்க்காண்கையில் 'திரிசூலம்வரைக!' என்றேகூறிய
பாபாஅவன்மேல் அக்ஷதைதூவி மறைந்திடக்கண்டு விழித்தெழுந்தவன்
அக்ஷதைமட்டும் சிதறிக்கிடக்க திகைப்புடன்பாபா இருப்பிடம்சென்று
திரிசூலம்வரைந்திட அனுமதிகேட்டதும் 'நானுரைத்ததைக் கேட்டாயன்றோ?
நான்மொழிவதுவெறும் வார்த்தைகளல்ல' எனவேஸாயி சொன்னபின்னரும்
'கதவுகள்மூடிக் கிடந்தமையாலொருக் காட்சியெனவே அதனைக்கருதினேன்'
என்றவன்கூற, 'நான்நுழைந்திட எந்தக்கதவும் தேவையுமில்லை. [1500]
உருவமோநீளமோ எனக்குமில்லை. எங்கும்வசிப்பவன். என்னைநம்பியே
என்னிடமொடுங்கும் அன்பரின்செயல்களைப் பொம்மலாட்டமாய் யானேமுடிப்பேன்'
எனுமொருஅரிய உபதேசத்தை பாபாசொன்னதும் மேகாமகிழ்வுடன்
வாதாவந்து பாபாபடத்தின் அருகினிலேயொரு திரிசூலம்வரைந்தான்.
புனேவிலிருந்து வந்தவோர்ராம்தாசி பாபாவிடத்திலொரு லிங்கம்தந்தார்
அருகிலிருந்த மேகாவைப்பார்த்து, 'சங்கரும்வந்தார்! காத்திடுஅவரை!'
என்றேபாபா லிங்கத்தையளித்தார். அதேசமயத்தில் வாதாவிலிருந்த
காகாசாஹேப் குளித்துமுடித்த ஈரத்துண்டுடன் ஸாயியைநினைந்தார்.
அபோதவர்க்கு மனக்காட்சியிலோர் லிங்கம்தெரிந்தது! அங்கேவந்த
மேகாகாட்டிய லிங்கத்தைக்கண்டு கனவும்நனவும் ஒன்றெனமகிழ்ந்தார்.
திரிசூலத்தருகில் பாபாஅந்த லிங்கத்தைநிறுவி சிவபூஜைசெய்யும்
மேகாபக்தியை தாமேற்றுக்கொண்டதை இவற்றின்மூலம் ஊர்ஜிதம்செய்தார்.
மதியமும்மாலையும் பாபாவுக்கு ஆரத்திக்காட்டிச் சேவைகள்செய்த
மேகாஓர்நாள் பத்தொன்பது பன்னிரெண்டில் சிவபதமடைந்தான்.
திருக்கரங்களால் அவனைவருடி 'இவனேஎனது மெய்யானபக்தன்'
என்றேபாபா ஆசியளித்து சொந்தச்செலவில் சம்பிரதாயமாய்
அந்தணர்களுக்கு போஜனம்செய்விக்கக் கட்டளையிடவும் காகாசாஹேப்
தீக்ஷித்அதனை ஆணைப்படியே நடத்திமுடித்து நிறைவுசெய்தார். [1509]
ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment