Sai Charita - 47
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 47
பாபாவின் பூர்வ ஜன்ம ஞாபகங்கள்:- வீரபத்ரப்பா, சனபஸப்பா [பாம்பு, தவளை] இவர்களின் கதை.
முன்னுரை::
புனிதஸாயியின் திருமுகம்நோக்கிச் சிலகணம்பார்த்திட பிறவிப்பிணியகலும்.
அவரதுகடாட்சம் நம்மீதுபட்டிட கருமவினைகளின் கட்டுக்களகலும்.
மாந்தரனைவரின் பாபம்நீக்கிடும் கங்கைத்தாயோ ஞானியர்பாதம்
தன்மீதுபட்டுத் தன்னிடம்சேர்ந்தப் பாவமூட்டையை நீக்கிடவேண்டுவாள்.
ஞானியர்க்கெல்லாம் முடிமணியாகிடும் ஸாயிநம்மைத் தூய்மைப்படுத்திடும்
அற்புதக்கதையை அவரேகூறிட நாமும்கேட்டுத் திருவருள்பெறுவோம்.
பாம்பும், தவளையும்::
ஒருநாட்காலையில் உணவுண்டப்பின்னர் நதிக்கரையோரமாய் உலாவிடச்சென்றேன்.
குளிர்நதிநீரில் கைகால்கழுவிக் குளித்துமுடித்து மரத்தடியமர்ந்து [2480]
புகைக்குழாயைத் தயார்செய்கையில் தவளையொன்றின் ஓலம்கேட்டேன்.
கற்களைத்தட்டித் தீயினையெழுப்பிப் பற்றவைக்கையில் வழிப்போக்கனொருவன்
அருகிலமர்ந்து ஓய்வெடுக்கவும், உணவருந்தவும் அன்புடனழைத்தான்.
அவனொருசிலீமைப் பற்றவைத்து என்னிடம்கொடுக்கையில் மீண்டுமந்தத்
தவளையின்ஓலம் அவனும்கேட்டுக் காரணமறிந்திட என்னைவினவினான்.
முந்தையப்பிறவியின் தீவினைப்பலனை அந்தத்தவளை அனுபவிப்பதை
நானும்கூறி, வினையின்பலனை அறுவடைசெய்து அனுபவிப்பதைத்
தவிரவும்வேறோர் வழியிலையெனவும் கதறியழுவதால் பலனிலையென்றேன்.
தானேநேரில் சென்றந்தக்காட்சியைப் பார்த்துவருவதாய் அவனுமெழுந்திட,
பாம்பொன்றின்வாயில் தவளையொன்று சிக்கித்தவிப்பதாய் நானும்மொழிந்து
முந்தையப்பிறவிப் பலனைஇருவரும் அனுபவித்திடும் நிலைமையைச்சொன்னேன்.
கருநாகமொன்று பெரியதோர்த்தவளையை வாயில்கவ்விடும் காட்சியைக்கண்டு
சற்றுநேரத்தில் தவளையைநாகம் தின்றிடுமென்று என்னிடம்கூற,
'அவ்விதமெதுவும் நிகழ்ந்துவிடாது. பாதுகாவலனாய் நானிங்கிருக்கையில்
நாகம்தவளையைத் தின்பதையெவ்விதம் நானனுமதிப்பேன்? தவளையையெங்ஙனம்
விடுவிக்கின்றேனென சற்றேபாரும்!'எனநான்மொழிந்து புகைபிடித்ததும்
எழுந்துசென்றிட, பாம்பின்சீற்றம் நம்மைத்தாக்குமோ என்றவன்பயந்தான்.
நேராயந்தப் பாம்பிடம்சென்று, 'ஓ,வீரபத்ரப்பா! உனதுபகைவனாம்
பஸப்பாயிங்கேத் தவளையாய்ப்பிறந்தும் தன்செய்கைக்காக வருத்தப்படுவதைப்
பார்த்தப்பின்னரும் இன்னமும்பகைமையை மனதிற்கொண்டு இருப்பதையெண்ணி [2490]
வெட்கமாயில்லையா? பகைமையையொழித்து அமைதியாயிருப்பாய்' எனநான்சொன்னதும்
தவளையைவிடுத்து பாம்புமகன்று ஆற்றினில்தாவி மறைந்துசென்றது
தவளையும்குதித்துப் புதர்களில்மறைந்தக் காட்சியைக்கண்டு வழிப்போக்கன்வியந்தான்.
அவர்களின்கதையை அறிந்திடவேண்டி என்னைக்கேட்டதும் புதிரைவிளக்கினேன்:
இங்கிருந்து சிலமைல்தொலைவில் மஹாதேவரின் கோயிலமைந்தப்
புனிதத்தலத்தில், சிதிலமடைந்தக் கோயிலைப்புதுப்பிக்க நிதிவசூலித்தனர்.
பெருந்தொகைசேர்ந்ததும், அதனைக்கொண்டு வேலைகள்துவங்க அந்தப்பணத்தை
உள்ளூர்பிரமுகன் ஒருவன்பொறுப்பில் கொடுத்துவைத்தனர். முதல்தரக்கஞ்சனாம்
அந்தப்பிரமுகனோ பழுதுபார்த்திடக் கொஞ்சமாய்க்கொடுத்து மீதிப்பணத்தைச்
சுருட்டிக்கொண்டான். அவனதுகபடம் அறியாமக்களோ இன்னும்நிதியை
அவனிடம்கொடுக்க, அதையும்பெற்றும் கோவில்வேலைகள் தொடங்காதிருந்தான்.
ஒருநாளவனது மனைவியின்கனவில் மஹாதேவர்வந்து, 'நீயெழுந்திரு!
கோவில்கோபுரம் கட்டிமுடித்தால் நூறுபங்காய்த் திருப்பித்தருவேன்'
என்றுசொன்னதைக் கணவனிடத்தில் அவளும்கூறிட, மேலும்செலவுதான்
ஆகுமெனப்பயந்து, எனதுகனவினில் ஏனவர்வந்து சொல்லிடவில்லையென
ஏளனம்செய்து அலட்சியப்படுத்தினான். வலிந்துதிரட்டும் நன்கொடையெதையும்
இறைவன்தனக்கென விரும்பியதில்லை. மனப்பூர்வமாய்க் கொடுக்கும்கொடையே
இறைவனுக்குகந்தது என்பதற்கேற்ப, மீண்டும்கடவுள் மனைவியின்கனவில்
'உன்பதியிடமிருக்கும் தொகையினைப்பற்றிக் கவலைப்படாமல், உனதுவிருப்பமாய்
எதனைக்கொடுக்கினும் அதனையேற்பேன்' எனச்சொன்னதைக்கேட்டு, தனதுநகைகளைக் [2500]
கோவில்நிதிக்கெனக் கொடுத்திடவிரும்பிக் கணவனிடம்சொல்ல, அந்தக்கஞ்சனோ
இதனைக்கேட்டுக் கலக்கமடைந்து, நகைகளுக்காக ஆயிரம்ரூபாய்
எனமதிப்பிட்டு, அதற்குஈடாய் ஒருசிறுநிலத்தைக் காப்புச்சொத்தாய்க்
கொடுப்பதாய்க்கூறி கடவுளையேய்க்கத் தீர்மானித்தான். விவரமறியா
மனைவியுமிதற்குச் சம்மதம்தந்தாள். தந்தநிலமும் அவனதுஅல்ல!
'டுபகி'யென்னும் ஏழைப்பெண்மணி அடமானம்வைத்த நிலமேயதுவாம்!
தரிசுநிலமாம் அதிலேயெதுவும் பருவத்தில்கூட விளைவதுமில்லை.
ஏழைப்பூசாரி ஒருவர்பொறுப்பில் அதனைக்கொடுத்ததில் பூசாரிமகிழ்ந்தான்.
இவ்விதம்நிகழ்வுகள் முடிவடைந்த சிலநாட்களிலே புயலும்,மழையும்
இடியும்தாக்கிடக் கணவனும்,மனைவியும் மரணமடைந்தார். டுபகியும்மாண்டாள்.
அடுத்தப்பிறவியில் மதுராநகரில் அந்தணக்குடியில் வீரபத்ரப்பா
என்னும்பெயரில் கஞ்சன்பிறந்தான். அவனதுமனைவியும் கோயில்பூசாரி
மகளாய்ப்பிறந்து கௌரியென்னும் நாமம்கொண்டாள். டுபகியுமங்கோர்
ஆணாய்ப்பிறந்து சனபஸப்பா எனப்பெயர்கொண்டான். பூசாரியென்நண்பன்!
அவனும்கௌரியும் என்னிடம்கொண்ட பக்தியைக்கண்டு, தக்கதோர்வரனும்
அவளைத்தேடி வருவானென்று ஆசிகளளித்தேன். அதேபோலவே
வீரபத்ரப்பா அவ்வூர்வந்திட, அவனுக்குகௌரியை மணமுடித்துவைத்தேன்.
அவனுமென்னிடம் பக்திகொண்டாலும் பணத்தாசையவனை விட்டகலவில்லை!
இந்தநேரத்தில் ஒருசிலநிகழ்வுகள் விசித்திரமாய்நிகழ்ந்திட, நிலத்தின்விலையோ
பன்மடங்குஏறி, லட்சரூபாய்க்கு விற்பனையானது. பாதிரொக்கமாயும், [2510]
மீதியைமாதத் தவணையாகவும் கொடுக்கப்படவும் ஒப்பந்தமானது.
வீரபத்ரப்பாவோ பணத்துக்காகச் சண்டைபிடிக்க அனைவருமென்னிடம்
யோசனைகேட்டனர். கடவுளுக்குரிய இந்தச்சொத்தின் உரிமையாளியாய்
கௌரியொருத்தியே இருப்பதாலவளது சம்மதமின்றி வேறெவர்க்கும்
உரிமையிலையென நான்சொன்னதால், வீரபத்ரப்பா கோபங்கொண்டு
பணத்தைக்கவர்ந்திட நானெண்ணுவதாய்க் குற்றம்சுமத்தியும், அமைதிகாத்தேன்.
கௌரிமட்டும் என்னிடம்வந்து, அடுத்தவர்மொழிகளால் வேதனைப்பட்டுத்
தன்னைகைவிட வேண்டாமென்று என்னிடம்வேண்ட, அண்டியோர்க்காக
ஏழ்கடல்தாண்டியும் அவளைக்காப்பேன் எனுமொருவாக்கினை அவளுக்கீந்தேன்.
அன்றிரவினிலே கௌரியின்கனவில் மஹாதேவர்வந்து, 'மொத்தப்பணமும்
உனக்கானதே! கோவில்பணிக்காய்க் கொஞ்சப்பணத்தை சனபஸப்பாவிடமும்,
மீதிப்பணத்தைச் செலவிடவிரும்பிடின் மசூதியிலிருக்கும் பாபாவைக்கேட்கவும்
கூறிமறைந்திட, இந்தத்தகவலை என்னிடமுரைத்தாள். அசல்தொகையை
வைத்துக்கொள்ளவும், வட்டிப்பணத்தில் பாதியைமட்டும் கோவிலுக்காக
சனபஸப்பாவிடம் கொடுக்கும்படியும், வீரபத்ரப்பாவிற்கு ஒன்றுமில்லையெனவும்
ஆலோசனைசொல்லிடும் அந்தவேளையில் வீரபத்ரப்பாவும், சனபஸப்பாவும்
சண்டைப்போட்டு அவ்விடம்வந்திட, சாந்தப்படுத்த என்னாலான
முயற்சிகள்செய்து, கௌரியின்கனவின் விவரம்முழுவதும் அவரிடம்சொன்னேன்.
அதனைக்கேட்டதும் மூர்க்கமடைந்து சனபஸப்பாவைக் கண்டதுண்டமாய்
வெட்டப்போவதாய் வீரபத்ரப்பா மிரட்டியதுகண்டு சனபஸப்பா [2520]
பீதியடைந்து என்கால்களைப்பிடித்து காத்திடவேண்ட, அபயம்தந்தேன்.
காலப்போக்கில் வீரபத்ரப்பா மரணமடைந்தோர் பாம்பாய்ப்பிறக்க,
சனபஸப்பாவும் அடுத்தபிறவியில் தவளையாய்ப்பிறந்து இன்றோலமிட
அவனுக்களித்த வாக்கினைநினைந்து நானோடிவந்து வாக்கினைக்காத்தேன்.
அடியார்க்குநேரும் அபாயகாலத்தில் கடவுள்வந்து அபயமளிப்பார்.
அவ்விதமாகவே என்னையனுப்பி பஸப்பாவைக் காத்திடச்செய்தார்.
நீதி::
அனைத்துமிங்கே ஆண்டவன்கட்டளை! தான்விதைத்ததைத் தானேயறுவடை
செய்திடவேண்டும்; பட்டக்கடனைத் தீர்த்திடவேண்டின் கஷ்டப்பட்டே
தீர்த்திடவியலும்; பணத்தின்மீது பேராசைப்பட்டால் முடிவிலவனைக்
கீழேதள்ளி அவனையும்பிறரையும் அழித்திடுமென்பதே இக்கதைநீதி! [2525]
ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment