Sai Charita - 49
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 49
1. ஹரி கானோபா, 2. ஸோமதேவ் ஸ்வாமி, 3.நானாஸாஹேப் சாந்தோர்கர் ஆகியோரின் கதைகள்.
முன்னுரை::
வேதமோ,புராணமோ பிரம்மம்,ஸத்குரு இவர்களின்பெருமையைச் சொல்லிடவொண்ணா!
அங்ஙனமிருக்க, ஏதுமறியாத நம்மாலெவ்விதம் உரைத்திடக்கூடும்? [2570]
அமைதியாயிருந்து மௌனம்காப்பதே ஸத்குருபுகழைச் சொல்லிடும்வழியாம்.
ஆயினும்ஸாயியின் புகழைச்சொல்லா திருப்பதுமெப்படி என்னுமுணர்வால்,
அனைவரும்கூடி உண்டிடுமுணவே சுவைப்பதுபோல, அமிர்தமாம்ஸாயியின்
லீலையைச்சொல்லிப் பகிர்வதுவொன்றே நலம்பலவிளைக்கும் என்பதெனெண்ணம்!
அவரதுஆணையால் தெய்வீகவுணர்வைக் கூட்டிடுமிந்தக் கதைகளைச்சொல்வதும்
அவரடிபணிந்து தியானம்செய்வதே நோன்பெனக்கொண்டு செயல்களைப்புரிவோம்.
நாமம்சொல்லி, அருளுரைநினைந்து மனப்பூர்வமாய் அன்புசெலுத்தி
அவரதுவிருப்பம் போலவேயனைத்துச் செயல்களும் புரிவோம்.
விடுதலையளித்திடும் இவ்வழிநடந்திட அதனையளிப்பது ஸாயியின்கடமை.
இதனையுணர்ந்து செவ்வழிநடந்து இவ்விலம்பகக் கதையினுள்செல்வோம்.
ஹரி கானோபா ::
மும்பையில்வசித்த 'ஹரிகானோபா' என்பவர்தமது நண்பர்கள்வழியே
ஸாயியின்மஹிமையைக் கேள்வியுற்றாலும் நம்பிக்கையெதுவும் கொண்டிடவில்லை.
தாமேநேரில் சோதிக்கநினைத்து நண்பர்சிலருடன் ஷீர்டிவந்தார்.
ஜரிகைக்குல்லாவும் புதியகாலணியும் அணிந்துவந்தவர் ஸாயியைப்பணிய
மனதிலெண்ணி, புதுக்காலணிகளையோர் மூலையில்விட்டு, ஸாயியைப்பணிந்து
உதியைவாங்கி வந்தவர்தனது காலணியிரண்டும் மறைந்துபோனதைக்
கண்டுபதைத்து எங்குதேடியும் கிடைக்காததனால் வாடியமனத்துடன்
விடுதிக்குத்திரும்பி, குளித்துமுடித்து, உண்பதற்காக அமர்ந்தநிலையிலும்
காலணிபற்றியே எண்ணியிருந்தார். உண்டுமுடித்ததும் கைகால்கழுவிட
வாசலில்வருகையில், சிறுவனொருவன் காலணியிரண்டைக் கோலொன்றின்நுனியில் [2580]
தொங்கவிட்டபடி, "ஹரிகாபேடா, ஜரிகாஃபேடா" ['க'வின்புதல்வர்
ஹரியே!ஜரிகைத் குல்லாக்காரரே!] எனச்சொல்லியேத் தெருக்களில்சென்று
அந்தநபரிடம் இக்காலணிகளைத் தரும்படியாகவும் பாபாசொன்னதாய்ச்
சொன்னதைக்கேட்டு ஆச்சரியமுற்று, தானேஅந்த ஆளென்பதையும்,
காலணியிரண்டும் தன்னதேயென்றும் தெரிவித்தவுடன் சிறுவனுமவற்றைக்
கொடுத்துச்சென்றான். ஜரிகைக்குல்லாய் வெளியில்தெரியும் என்றபோதிலும்,
தனதுப்பெயரை எங்ஙனம்ஸாயி அறிந்திடவியலும் என்பதைநினைத்து,
சோதனைசெய்திட வந்தவர்ஸாயியின் பெருமையையுணர்ந்து திருப்தியடைந்தார்.
ஸோமதேவ் ஸ்வாமி ::
நாக்பூரில்வசித்த காகாஸாஹேப்பின் சகோதரர்'பாயிஜி' ஆயிரத்தொள்ளா-
-யிரத்தாறாமாண்டில் உத்தரகாசியில், ஸோமதேவ்ஸ்வாமி என்பவருடனே
ஒருவர்க்கொருவர் அறிமுகம்கொண்டார். ஐந்தாண்டுகட்குப் பின்னரோர்நாள்
ஸோமதேவ்ஸ்வாமி பாயிஜியின் விருந்தினராக நாக்பூர்வருகையில்,
ஸாயியின்பெருமையைக் கேட்டுமகிழ்ந்து ஷீர்டிசென்றிட விருப்பம்கொண்டார்.
மன்மாட்,கோபெர்காங்வ் நகரைக்கடந்து வண்டியிலமர்ந்து ஷீர்டிசெல்கையில்,
மசூதிமீது கொடிகள்பறப்பதைக் கண்டதும்மனதில், 'கொடிகள்கொள்வது
துறவையாகுறிக்கும்? புகழுக்கேங்கும் ஆசையல்லவோ!' என்றெண்ணம்கொண்டு,
ஷீர்டிசெல்லாமல் திரும்பிடும்கருத்தைக் கூடவந்தவரிடம் சொன்னதுமவரோ,
'கொடியைக்கண்டே கலக்கமுற்றிடின், தேர்,பல்லக்கு, குதிரை,பரிவாரம்
இவைகளைக்கண்டால் யாதெண்ணுவீரோ?' எனப்பதிலுரைக்க குழப்பம்மிகுந்து,
இத்தகுஆடம்பர சாதுவைக்காணுதல் எனக்குவேண்டாம்' என்றுரைக்கவும், [2590]
'பாபாஇதையெல்லாம் விரும்புவதில்லை. அடியவரன்பே இதற்குக்காரணம்;
வந்ததுவந்தீர்; தரிசனம்கண்டே பின்னர்செல்லலாம்' எனவற்புறுத்தவே,
அரைகுறைமனமாய் மசூதியடைந்தார். ஸாயியைக்கண்டதும், மனமிகமகிழ்ந்து,
தீயவெண்னங்கள் யாவுமகன்றிட, 'மனமகிழுமிடமே அடைந்திடுமிலக்கு'
என்னும்குருமொழி மனதிலுணர்ந்து, ஸாயியின்கால்களில் புரண்டிடவிரும்பி
அருகில்சென்றிட, கோபக்குரலில் அவரைப்பார்த்து, 'எமதுடம்பமெலாம்
எம்முடனிருக்கட்டும்! மசூதிவராமல் திரும்பிச்சென்றிடு! கொடியைவைப்பதும்
துறவினழகோ? அவரதுதரிசனம் ஏன்காணவேண்டும்? உடனேசென்றிடு"
எனபாபாகடிந்திட, உள்ளில்நினைத்ததை நினைத்தவண்ணமே பாபாசொல்வதைக்
கேட்டஸ்வாமியும், ஸாயியினரிய திறன்மிகவியந்து, தன்மதியீனத்தை
உணர்ந்துவருந்தினார். ஸாயியினருகில் அனைவரும்செல்வதும், அவர்களையெல்லாம்
அரவணைப்பதையும் கண்டஸ்வாமிஜி, தனதுயெண்ணமே இதற்கெலாம்காரணம்
எனும்பாடத்தை இதனாலுணர்ந்து, அகந்தையழித்து, நம்பிக்கைகொண்டு
ஸாயியின்மீது பற்றுமிகுந்த அடியவராகப் பின்னர்மாறினார்.
நானாஸாஹேப் சாந்தோர்கர் ::
நானாஸாஹேப்பும் மஹால்ஸாபதியும் மற்றவர்களுடன் மசூதியிலமர்ந்து
ஸாயிநாதருடன் உரையாடுகையில், பீஜாபூர்வாழுமோர் முகமதியகனவான்
குடும்பத்தாருடன் தரிசனம்காண அங்கேவந்திட, கோஷாப்பெண்டிரைக்
கண்டதும்நானா வெளியேசென்றிட முற்பட்டபோது, அங்ஙனம்செய்வதை
பாபாதடுத்தார். பெண்டிரனைவரும் ஸாயிமுன்பணிந்து தரிசனம்செய்கையில்
அவர்களிலொருவரின் அழகியமுகத்தை நானாபார்த்து, மீண்டுமோர்முறை [2600]
அவளதுஅழகைக் காணவிரும்பினார். அவர்கள்சென்றதும் பாபாஅவரிடம்,
'வீணாயேனோ கலங்கிடவேண்டும்? புலன்கள்தத்தம் கடமையைச்செய்திட,
நாமதிலேனோ குறுக்கிடவேண்டும்? கடவுள்படைத்த அழகியவுலகில்
அழகினைக்காணவும், பாராட்டிடவும் தடையேதுமில்லை. மனத்தூய்மையுடன்
இருந்திடவெதெனினும் பயப்படவேண்டாம். கண்கள்தமது வேலையைச்செய்திடக்
கலக்கமுமேனோ? தடுமாற்றமுமேனோ?" எனச்சொன்னதை ஷாமாவும்கேட்டு,
சொல்லியசொல்லின் பொருளறியாது நானாஸாஹேப்பிடம் விவரம்கேட்கவும்,
கோஷாப்பெண்ணைப் பார்த்திடவிரும்பிய தனதுசெயலுக்குப் பதிலிதுவென்றார்.
சலனமனதைத் தான்தோன்றித்தனமாய்ச் செல்வதைத்தடுத்து, உணர்வுகளெல்லாம்
குழப்பமுறினும், பொறுமைக்காத்து, உடலைநமது கட்டுக்குள்வைக்கணும்.
உணர்வுகள்தமது இலக்கினைநோக்கித் தறிகெட்டுஓடினும் நாமதன்பின்னே
ஏங்கிச்செல்லாமல் படிப்படியாகப் பயிற்சியின்மூலம் சலனத்தைவெல்லணும்.
அழகென்பதை வெட்கப்படாமல், பயமேதுமின்றிப் பார்த்திடவேண்டும்.
தீயவுணர்வினை மட்டும்நம்முள் அனுமதிக்காமல் கவனம்வேண்டும்.
கடவுளினழகிய படைப்புகளனைத்தையும் பற்றில்லாமனத்துடன் கவனிப்போமானால்,
உணர்வுகள்நமது கட்டுக்குள்வந்து எந்தப்பொருளையும் அனுபவிக்கையிலும்
இறைவனைப்பற்றிய எண்ணமொன்றே மனதுள்தங்கிடும் அனுபவம்பெறலாம்.
வெளியுணர்வுகளைக் கட்டில்வைத்தும், மனமதன்பின்னே ஓடிடும்நிலையில்
ஜெனனமரணச் சுழலிலிருந்து விடுபடுவதென்பது இயலாக்காரியம்!
விவேகமென்னும் சாரதிதுணையுடன் புலனடக்கம்கொண்டிட விடுதலைபெறுவோம். [2610]
ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!].
(To be continued)
Loading
0 comments:
Post a Comment