Sai Charita - 3
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 3
ஸாயிபாபாவின் அனுமதியும், வாக்குறுதியும் - அடியார்க்கு இடப்பட்ட திருப்பணிகள் - பாபாவின் நிகழ்ச்சிகள் வழிகாட்டும் விளக்குகள் - அவரின் தாயன்பு - ரோஹிலாவின் கதை - பாபாவின் சுவையும், அமுதமுமான மொழிகள்.
-----------------
சம்மதத்தைச் சொல்லியே ஸாயிபாபா சொல்லியது:
'எம்முடையச் சரித்திரத்தை எழுதிடவே ஒப்புகிறேன்
அஞ்சாமல் நும்கடமை ஆற்றிடுக! முழுமனதாய்
நெஞ்சினிலே நம்பிஎவர் கேட்டிடினும் நலமாகும்
அறியாமை அகன்றுவிடும்; பக்தியின்னும் மேலோங்கும்
குறியாக நினைப்போர்க்குக் கவலைகளும் நீங்கிவிடும்;
அன்பலைகள் மேலெழும்பி லீலையெனும் கடல்மூழ்கி
நன்முத்து ஞானமதைப் பெற்றிடுவார் நிச்சயமாய்!'
பாபாவின் மொழிகேட்டுப் பாமரன்யான் மகிழ்வுற்றேன்
ஷாமாவைப் பார்த்தபடி மேலுமவர் சொல்லலானார் [70]
‘நாமத்தைச் சொல்லுவோரின் ஆசைகளைப் பூர்த்திசெய்வேன்
நாவினிக்கப் பாடுவோரின் நாற்புறமும் சூழ்ந்திருப்பேன்
சரணாகதி செய்வோர்க்கு வீடுபேறு யானளிப்பேன்
மரணத்தை வென்றவரும் நிரந்தரமாய் மகிழ்வடைவார்
நோயெல்லாம் குணமாகும்; தியானமுடன் நினைப்போர்க்கு
ஓயாத மனம்கூடப் பேரமைதிப் பெற்றுவிடும்
'ஸாயிஸாயி' எனச்சொல்லச் சஞ்சலங்கள் ஓடிவிடும்
மாயையெனும் பேயெல்லாம் வந்தவழி சென்றுவிடும்.'
அடியவர்களுக்கு அளிக்கப்பட்டப் பலதரப்பட்ட பணிகள் ::
அடியவர்க்கு ஆண்டவனும் பல்வேறு பணியிடுவார்
அடியேனுக் கிட்டபணி அவர்நூலை எழுதிடவே
சொலற்கரியப் பெருந்தகையின் சரித்திரத்தைச் சொல்லிடவே
வெலற்கரிய இப்பணியை யானேற்கத் தகுதியுண்டோ?
பாபாவை மனதிருத்திப் பேனாவை யானெடுக்க
பாபாவே தம்சரிதை தானாக வரையலானார்!
இசைக்கருவி கலைஞனிடைக் கையாலே பெருமைபெறும்
விசும்பிங்கே துளிர்ப்பதுவும் பேரிறைவன் அருளன்றோ!
கலங்கரை விளக்கமாக பாபாவின் கதைகள் ::
நடுக்கடலில் தத்தளிக்கும் மாலுமிக்கோர் அபயமென
நெடுந்தொலைவில் கலங்கரை விளக்கொன்று ஒளிவீசும்
சம்ஸார ஸாகரத்தில் தத்தளிக்கும் எமக்கெல்லாம்
வம்சபந்தம் நீக்கிடவே ஸத்சரிதம் துணையாகும் [80]
ஞானியரின் கதையெல்லாம் நமக்கென்றும் வழிகாட்டி
அஞ்ஞானம் அகற்றிடவே துணைபுரியும் தனைக்காட்டி!
யோகமென்றும் தியாகமென்றும் பூஜையென்றும் ஸ்மரணையென்றும்
நால்வகையாய் நாலுயுகம் கடைத்தேறும் வழிசொன்னார்
நாமத்தைக் கேட்பதுவே நாலிலென்றும் சிறந்தவழி
ஆன்மாவைக் கடைத்தேற்ற இதுவொன்றே நல்வழியாம்
தியானமென பாபாவின் சரித்திரத்தைக் கேட்பவர்க்குத்
தியாகவுள்ளம் மேலோங்கி ஆன்மநிலை கைகூடும்.
ஸாயிபாபாவின் தாயன்பு ::
பால்வேண்டும் கன்றுக்குத் தாயின்மடி நிறைவதுபோல்
பாபாவின் பேரன்பு ஊற்றெனவேப் பெருக்கெடுக்கும்
பால்நினைத்துப் பரிந்தூட்டி ஆடைஅணிகளை அழகுறப்பூட்டி
அறியாத குழந்தைக்கு அவற்றைச்சூட்டியே மனமகிழ்ந்திடும்
தாயன்பு இதுவென்று காட்டுகின்ற தயாளகுணம்
தானாக உருவெடுக்கும் ஸத்குருமார் உள்ளத்தே.
ஓய்வுபெற்ற ஊழியன்நான் பாபாவைக் காணச்சென்றேன்
ஓயாத கவலையுடன் பாபாவை நோக்கி நின்றேன்
சிஞ்சனீகர் என்பவரும் எனக்காக வேண்டிக் கொண்டார்
சிந்தையிலே கவலைதீர்த்துச் சீரோடு வாழச்சொல்லி
'வேண்டாத உறவையெல்லாம் வெட்டியவர் வந்துவிட்டால்
வேண்டியதை யான்தருவேன் பேரின்பம் நல்கிடுவேன் [90]
அடக்கமுடன் பணிவாக எனைவணங்க நலமாகும்'
எனபாபா மொழிந்ததிலே என்கவலைத் துறந்திருந்தேன்
ரோஹிலாவின் கதை ::
நெடிதுயர்ந்த வலியவொருக் காளையென ஓர்மனிதன்
ஷீர்டிக்கு வந்திருந்தான் 'ரோஹிலா'வெனும் பேர்கொண்டோன்
வாயுரக்க இருபொழுதும் திருக்குரானை ஓதிவந்தான்
ஓய்வுறக்கம் நாடிவரும் உழவர்க்கெலாம் தொல்லையானான்
செவிதாக்கும் பேரொலியைக் கேட்கவொண்ணா ஊர்மக்கள்
பொறுத்திருந்துச் சலிப்புற்று பாபாவிடம் முறையிட்டார்
'ரோஹிலாவின் மனையாளாம் ஸந்தீபி என்பவளின்
ஓயாதத் தொல்லைகளை விரட்டிடவே பாடுகிறான்
நீரொன்றும் கலங்காதீர்; நும்பணியை நீர்பாரும்'
எனச்சொன்ன பாபாவின் மொழிகேட்டு வியப்புற்றார்
மனையாட்டி ஏதுமில்லா ரோஹிலாவைத் தொல்லைசெய்யும்
வினைசேர்க்கும் தீயஎண்ணம் அதுதானே அவன்துணைவி!
இறைவனிடம் வேண்டுவதில் பேரிரைச்சல் ஏதுமில்லை
குறையெல்லாம் தீர்ப்பவனைக் கும்பிடவே பேதமில்லை!
பாபாவின் இனிய அமிர்தத்தையொத்த வார்த்தைகள் ::
மதியநேர வழிபாடு முடிகையிலே அருளுரையாய்
அடியவர்க்கு அருளியதை நாமிங்கே கேட்டிடுவோம் ::
'எங்குநீவிர் இருந்தாலும் எச்செயலைப் புரிந்தாலும்
இங்கிவனே தானறிவான் எனுமுண்மை நீர்அறிவீர் [100]
இதயத்தில் அமர்ந்திங்கு ஆட்டுவிக்கும் அந்தரங்கன்
எதையுமே ஆட்கொள்ளும் மாதாவே இந்த ரங்கன்!
முக்குணமும் முத்தொழிலும் புரிபவனும் யானேதான்
இக்கணமே எனைநோக்கும் அடியாரைக் காப்பவன்யான்!
எனைமறந்து செல்வோரை மாயவலை சூழ்ந்துகொள்ளும்
எனைநினையும் பக்தருக்குத் தீதொன்றும் வாராது'
அமுதமென ஊற்றெடுத்த அம்மொழியைக் கேட்டதுமே
முழுமனதாய் முடிவெடுத்தேன் இவரெனக்குக் குருவென்று
பூரணமாய்ச் சரணடைந்தேன் புனிதரவர் திருவடியில்
காரணமாய் ஆட்கொண்டாக் கருணையினை என்சொல்வேன்!
இலம்பகத்தை முடிக்கும்முன்னர் அடியவர்க்கோர் விண்ணப்பம்
இலகுவாகப் பயனளிக்கும் இக்கதையைச் செவிமடுப்பீர்
மடி,தூக்கம், மனவலைச்சல், புலனுணர்வு துறந்தொழிந்து
மடியாத கவனமுடன் இக்கதைகளைப் படித்திடுக.
சாதனைகள் செய்யவேண்டாம்; களைப்புற்று ஓயவேண்டாம்;
வேதனைக்கோர் அருமருந்தாம் லீலைகளைச் செவிமடுப்பீர்.
எத்திக்குச் சென்றாலும் கவனம்மாறா உலோபிபோல
தித்திக்கும் பாபாவைச் சிந்தையிலே அமர்த்திடுக!
சீராளர் ஷீர்டிக்கு வந்துசேர்ந்தக் கதையினையே
சீராகச் சொல்லிடுவேன் அடுத்துவரும் இலம்பகத்தில்! [110]
ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீயுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்லவல்லேன் அன்றே!]
( To be continued)
Loading
0 comments:
Post a Comment