Friday, May 30, 2014

Sai Charita - 42


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

 [மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 42


பாபா மஹா ஸமாதி அடைதல்.

முன்பாகவே உணர்த்திய குறிப்பு - ராமச்சந்திர தாதா பாடீல், தாத்யா கோதே பாடீல் இவர்களின் மரணம் தவிர்த்தல் - லக்ஷ்மிபாய் ஷிண்டேவுக்கு தர்மம் செய்தல் - கடைசி நேரம்.

முன்னுரை ::

குருவின்கிருபையால் இவ்வுலகவாழ்வின் பயமெலாம்நீங்கிடும் என்னும்சத்தியம்
முந்தையவிலம்பகக் கதைகளின்மூலம் நாமெலாம்கேட்டு இன்பமடைந்தோம்.

முக்திக்குவழிவகுத்து துன்பத்தையின்பமாய் மாற்றிடும்வழியை இவையெலாமுணர்த்தும்.
ஸத்குருபாதம் நினைத்திருக்கையில் துன்பங்கள்யாவும் முடிவினையடையும். [2280]

மரணமும்தனது கொடுமையைத்தளர்த்தித் துயரங்களெல்லாம் நீக்கப்படுமே.
ஸமர்த்தஸாயியின் கதைகளைக்கேட்டிட நமதுமனமெலாம் தூய்மையடையும்.

பாபாநெற்றியில் மூன்றுபட்டையாய் டாக்டர்பண்டிட் சந்தனமிட்டக்
கதையையிலம்பகம் பதினொன்றிலேயே கூறிவிட்டதால் இங்கிடவில்லை.

முன்பாகவே உணர்த்திய குறிப்பு ::

ஸாயியின்வாழ்க்கைக் கதைகளையிதுவரை கேட்டிட்டநாமும் இப்போதவரது
மறைவினைப்பற்றிய நிகழ்வினைமிகவும் கவனமாய்க்கேட்டிட ஹேமாத்பந்த்வேண்டுவார்.

ஆயிரத்தொள்ளா யிரத்துப்பதினெட்டு செப்டெம்பர்மாதம் இருபதெட்டாம்நாளில்
ஸாயிபாபாவுக்கு வந்தக்காய்ச்சல் மூன்றுநாட்களுக்கு நீடித்தப்பின்னர்

உணவுண்பதையே பாபாநிறுத்தி அதனால்மேலும் பலவீனமானார்.
சரியாய்ப்பதினேழு நாட்களின்பின்னர் அக்டோபர்மாதம் பதினைந்தாம்நாள்

பாபாதனது பூதவுடலினை விட்டுநீங்கியே புகழுடம்பெய்தினார்.
இதனைப்பற்றிய விவரமுரைக்கும் 'தாதாஸாஹேப் கபர்தேவுக்கு

பேராசிரியர்நார்கே [அதேஆண்டு] நவம்பர்ஐந்தில் எழுதியக்கடிதம்' முதலாமாண்டு
ஸாயிலீலா சஞ்சிகையதனின் பக்கம்எழுபத்தெட்டில் நாம்காணலாம்.

இதற்குஇரண்டு ஆண்டுகள்முன்னரே இதனைப்பற்றியக் குறிப்பொன்றுதந்தார்.
ஆனாலதனை எவரும்சரியாய்ப் புரிந்திடவில்லை. விவரம்வருமாறு::

ஆயிரத்தொள்ளா யிரப்பதினாறின் விஜயதசமி நன்னாள்மாலையில்
கிராமஎல்லையைத் தாண்டிடும்குறிப்பாம் ஷிமோலங்கணிலிருந்து ஷீர்டிமக்கள்

திரும்பிடும்வேளையில், திடீரெனவேக் கோபாவேசமாய்த் தலைஅணியையும்,
கஃப்னி,லங்கோடு இவற்றையெல்லாம் கழற்றிக்கிழித்து "துனி"யிலெறிந்தார். [2290]

இச்சமர்ப்பணத்தை மகிழ்வாயேற்று, 'துனி'யின்தீயும் ஒளியுடனெரிந்தது.
எரியும்ஜுவாலையில் நிர்வாணமாய்பாபா நின்றநிலையிலே அனைவரைநோக்கி,

'நானொருஇந்துவா இல்லைமுஸ்லீமா என்பதையனைவரும் நன்றாய்ப்பாரும்!'
எனக்கூவியதும், அனைவரும்பயந்து செய்வதறியாமல் திகைத்துநிற்கையில்,

தொழுநோயடியவர் பாகோஜிசிந்தே துணிவுடன்நெருங்கி, லங்கோடைமட்டும்
கட்டிவிட்டப்பின், 'ஷிமோலங்கண்நாளில் ஈதென்னபாபா?' எனவும்கேட்க,

'இன்றையநாளே எனது"ஷிமோலங்கணும்"!' என்றேபாபா மறுமொழியுரைத்தார்.
பதினொருமணிவரை ஸாயியின்கோபம் தீர்ந்திடாநிலையில் அன்றையச்சாவடி

ஊர்வலம்நடைபெற முடியுமாவென்று கூடியிருந்தோர் நினைத்தவேளையில்,
சாந்தமடைந்து, ஆடைகள்புனைந்து, சாவடியூர்வலம் நடத்திடச்செய்தார்.

தசராநாளே தனதுவாழ்க்கையின் எல்லையைக்கடக்கும் நாளெனஸாயி
சொன்னதன்பொருளை எவருமன்றுப் புரிந்திடாப்போதும், இன்னொருவிதமாய்

இதனைப்பற்றிய குறிப்பினைஸாயி மீண்டுமொருமுறை உணர்த்திக்காட்டினார்.
அதனைப்பற்றிய விவரமதனைக் கீழ்வரும்நிகழ்வும் நமக்கெலாமுணர்த்தும்:

ராமச்சந்திர தாதா பாடீல், தாத்யா கோதே பாடீல் இவர்களின் மரணம் தவிர்த்தல் ::

இவ்விதம்நடந்த சிலநாட்பின்னர், ராமச்சந்திர பாடீலுக்குத் தீவிரக்காய்ச்சல்
வந்திடஅவரும் பலவிதசிகிச்சைகள் செய்திட்டப்போதும் குணமடையாமல்

மனந்தளர்ந்து, இறுதிநொடிக்காய்க் காத்திருக்கையில், ஓர்நாளிரவில்
பாபாஅவரது தலையணைக்கருகில் நிற்பதைக்கண்டு, பாதம்பற்றி,

'எப்போதுசாவேன் என்பதையெனக்கு உறுதியாய்க்கூறுக!' என்றேவேண்டினார்.
'கவலைப்படாதே! உனதுஹுண்டியும்[மரணஓலை]திரும்பப்பெற்றதால் விரைவில்நீயும் [2300]

குணமடைந்திடுவாய். தாத்யாபாடீல் பற்றியேநானும் கவலைப்படுகிறேன்.
இன்னுமிரு ஆண்டுகளில் விஜயதசமிநாளன்று மரணமடைவான்.இந்தச்செய்தியை

எவர்க்கும்சொல்லாதே! அவனிடமும்சொல்லாதே! பீதியடைவான்!' என்றார்பாபா.
அவ்விதமாகவே ராமச்சந்திர தாதாநலமுற்றார். பாலாசிம்பி எனும்நண்பரிடம்

ஸாயிகூறிய செய்தியைரகசியமாய்ச் சொல்லிவைத்து தாத்யாகுறித்து
இருவரும்பயந்து என்னஆகுமோ? எனஅந்நாளை எதிர்பார்த்திருந்தனர்.

சொன்னாற்போலவே, ஆச்வினஆண்டில்[1918] தாத்யாபாடீல் நோய்வாயுற்று
படுத்தபடுக்கையாய் வருந்தியபோதும், ஸாயியின்மீது கொண்டஉறுதியால்

அவரையேநம்பி நினைந்திருந்தார். விஜயதசமி நெருங்கிடநெருங்கிட
தாத்யாநாடி மெதுவாய்த்துடித்திட பாலாசிம்பியும், பாடீல்தாதாவும்

பயத்தால்நடுங்கி உடல்வியர்த்தனர். ஆயினுமன்றோர் வினோதநிகழ்வு
நடைபெற்றது! தாத்யாபிழைக்க, பாபாதனது உடலைவிடுத்தார்.

எங்ஙனமிந்த வினோதம்நிகழ்ந்தது என்பதுபற்றி ஸாயியேயறிவார்!
தன்மரணநாளையே தாத்யாபெயரிட்டு பாபாவழங்கினார் என்றேதோன்றும்.

மறுநாட்காலை பண்டரீபுரத்தில் தாஸ்கணுவின் கனவினில்பாபா,
'மசூதிஇடிந்து விழுந்துவிட்டது! எண்ணெய்க்காரரும் கடைக்காரர்களும்

ஷீர்டியிலென்னைத் துன்புறுத்தியதால் அவ்விடம்விட்டு நான்நீங்கிவிட்டேன்!
இதனைச்சொல்லவே இவ்விடம்வந்தேன்!அங்கேசென்று 'பக்கல்'மலர்களால்

என்னைப்போர்த்து' எனச்சொல்லியகன்றார். தனக்குவந்தக் கடிதம்மூலமும்
செய்தியறிந்து, தாஸ்கணுவும் ஷீர்டிசென்று, ஸமாதிமுன்னால் [2310]

கீர்த்தனைபாடி பூமாலையும், பாமாலையும் அவருக்குச்சார்த்தி
அன்னதானமும் பொதுமக்களுக்கு சிறப்பாய்ச்செய்து அஞ்சலிசெலுத்தினார்.

லக்ஷ்மிபாயிக்குத் தானம் ::

இந்துக்களுக்குப் புனிதநாளாகிய விஜயதசமி நன்னாளன்று
எல்லைக்கோட்டைத் தாண்டிடபாபா தேர்ந்தெடுத்ததும் பொருத்தமேயாகும்.

நோய்வாய்ப்படினும் உள்ளுணர்வுடனே ஸாயிதிகழ்ந்து, நிமிர்ந்தமர்ந்து
காட்சியளித்ததைப் பார்த்த/அனைவரும், தேறிவிட்டாரென்றே நினைத்திருந்தனர்.

ஆயினும்தனது முடிவினையறிந்த ஸாயிபாபாவோ தமதுஅடியவர்
லக்ஷ்மிபாயி ஷிண்டேவுக்கு தர்மம்கொடுத்திட மனதுள்நினைத்தார்.

எல்லா ஜந்துக்களிலும் பாபா வியாபித்திருத்தல் ::

வசதியுள்ளதோர் குடும்பத்திலிருப்பினும் இரவும்பகலும் மசூதியிலேயே
சேவைசெய்தவள் லக்ஷ்மிபாயி. மஹால்ஸாபதி, தாத்யா தவிர

லக்ஷ்மிபாயி ஷிண்டேமட்டுமே இரவிலும்கூட மசூதியினுள்ளே
சென்றிடுமுரிமையைப் பெற்றவளாவாள். ஒருநாள்மாலை மசூதிவந்து

பாபாவைவணங்கிட, ஷிண்டேவருகையில், பாபாஅவளிடம், 'ஓ!லக்ஷ்மி!
பசியாயிருக்கிறேன்' எனச்சொன்னதும், இல்லம்சென்று, ரொட்டியும்ஸப்ஜியும்

எடுத்துவந்து ஸாயிக்களிக்க, அதனையெடுத்து எதிரிலிருந்த
நாய்க்குக்கொடுத்ததைக் கண்டலக்ஷ்மிபாயி, 'சிரமமெடுத்துக் கொண்டுவந்ததை

இப்படிநாய்க்கு கொடுக்கின்றீர்களே!' எனக்கோபப்பட, அதற்குபாபா,
‘நாயின்பசியைத் தீர்ப்பதுங்கூட எனதுவேலையே! அதற்கேன்நீயும்

கவலைப்படுகிறாய்? ஆத்மாஒன்று நாய்க்குமுண்டு! பேசாதிருப்பினும்
பசியென்பதொன்றே! பசியாயிருக்கும் ஒருவர்க்குணவு அளிப்பவன்மெய்யாய் [2320]

எனக்கேஅளிக்கிறான் என்னும்நீதியை உணர்வாயாக!' எனப்பதிலளித்தார்.
இத்தகுஅரிய போதனைபெற்ற லக்ஷ்மிபாயி அந்நாள்முதலாய் தினமும்பாலும்,

ரொட்டியும்கொணர்ந்து அன்புடனளித்தாள். உவப்புடனதனை பாபாஉண்டு
அதிலொருபகுதியை ராதாகிருஷ்ண மாயிக்கனுப்புவார். அவளுமதனை

விருப்பாய்ப்புசித்தாள். அனைத்துஜீவனுளும் ஸாயிபாபா ஊடுருவிநின்று
அப்பாலுமிருக்கும் பெரியதோருண்மையை ரொட்டிக்கதையும் நமக்குச்சொல்லும்.

ஷிண்டேயின்சேவையை இறுதிநேரத்தில் ஸாயிநினைந்து உயிர்போகும்முன்னே
சட்டைப்பையுள் கையைவிட்டு ஐந்துரூபாயும், நான்குரூபாயுமாய்

ஒன்பதுரூபாய்களை அவளுக்களித்தார். ஷிமோலங்கண்தக்ஷிணையோ, அல்லதுமுன்பு
இருபத்தோராம் இலம்பகத்தில் சொல்லியவண்ணம் நவவிதக்குணமோ

உணர்த்துவதாக இந்நிகழ்விருக்கலாம். பலமுறையிவ்விதம் ஒன்பதுரூபாய்கள்
லக்ஷ்மிபாயிக்குத் தரப்பட்டாலும் இந்தத்தடவை பெற்றவிவ்வொன்பதை

எப்போதும்ஷிண்டே நினைவிற்கொள்வாள். இதனைத்தவிரத் தம்மடியார்க்காய்
இன்னும்சிலவும் பாபாசெய்தார். கவலையுடனேக் காத்துக்கிடந்த

காகாஸாஹேப், பாபுபூட்டி இருவடியாரையும் வாதாசென்று
உணவருந்தியப்பின் திரும்பிடுமாறு ஸாயிபாபா அனுப்பிவைத்தார்.

பாபாசொல்லை மறுக்கும்மனமின்றி, கனத்தவுணர்வுடன் இருவரும்சென்றனர்.
உணவுத்தட்டின் முன்னேயமர்ந்தும் பாபாபற்றியே நினைத்திருந்தனர்.

பாபாநிலைமை க‌வ‌லைய‌ளிப்ப‌தாய் இருப்ப‌தையிருவ‌ரும் உண‌ர்ந்தேயிருந்த‌ன‌ர்.
சற்றுநேரத்தில் ஸாயிமறைந்த செய்திகேட்டதும் பாதியுணவிலே [2330]

அவர்களிருவரும் மசூதிவிரைந்தனர். பயாஜிகோதே மடியில்பாபா
சாய்ந்துக்கிடந்தக் காட்சியைக்கண்டு மனம்வருந்தினர். தரையிலுமில்லை;

படுக்கவுமில்லை; இருக்கையிலமர்ந்த வண்ணமேஸாயி தமதுகைகளால்
தர்மம்செய்தக் கோலத்திலேயே பூதவுடலை உதறியெறிந்தார்.

குறிக்கோளொன்றை நிறைவேற்றிடவே ஞானியரெல்லாம் அவதரிக்கின்றனர்.
வந்தக்காரியம் முடிவடைந்ததும் அமைதியாயெளிமையாய் இயற்கையெய்துவர். [2333]

ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.