Sai Charita - 25
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 25
அஹமதுநகர் தாமு அண்ணா - 1] வியாபார விவகாரம் 2] மாம்பழ லீலை.
**************
கருணைக்கடலாம் இறையவதாரமாம் பரப்பிரம்மமாம் யோகீஸ்வரனாகிய
ஸாயிபாபாவை அட்டாங்கவணக்கம் நாமும்செலுத்தி யிதனைத்தொடங்குவோம்.
புனிதப்பொருட்களின் இருப்பிடமாகவும், ஆத்மாராமனும், அடைக்கலப்பொருளாய்
விளங்கிடும்ஸாயிக்கு ஜெயமுண்டாகியே நமதெண்ணம்யாவும் நிறைந்திடவேண்டுவோம்.
கருணைநிறைந்த ஸாயியின்பால்நம் பொறுமையும்பக்தியும் பெருகிடும்போது
எண்ணங்கள்யாவும் நலமுறவிளங்கி விருப்பம்யாவுமே நிறைவதைக்காண்போம்.
லீலைகள்சொல்லும் சரித்திரமெழுதிட ஹேமாத்பந்த்தும் நினைத்திட்டபோதே
பாபாஅதனைத் தாமேமுடித்து ஆசிகள்தந்துப் பேரருள்புரிந்தார். [1280]
இவ்விதம்நிறைந்தஇக் கேணியினின்று சுரந்திடுமமுதமாய்ப் பெருகிடும்லீலைகள்
படிப்பவர்பருகிடச் சுவையாய்விளங்கி கேடுகள்யாவும் தீர்வதைக்காண்போம்.
'புணே'யெனப்படும் அஹமதுநகரைச் சார்ந்தவோர்கனவான் 'தாமோதர்ஸாவல்ராம்
ராஸனேகாஸார்' என்னும்'தாமு அண்ணா'வின்கதையை விளக்கமாய்ச்சொல்வோம்.
'தாமு அண்ணா'::
இராமநவமித் திருவிழாபற்றிய இலம்பகம்ஆறில் இவரைப்பற்றியக்
குறிப்பினைக்காணலாம். ஆயிரத்தெண்ணூற்றுத் தொண்ணூற்றைந்தில்
நவமித்திருவிழாத் தொடங்கியநாளாய் தாமுஅண்ணாவும் வருடாவருடம்
ஷீர்டிசென்று அலங்காரக்கொடியோ பொம்மைக்குச்சியோ ஏற்பாடுசெய்தும்
ஏழையெளியவர்க்கு அன்னதானம்செய்தும் விழாவில்கலந்து சேவைகள்செய்தார்.
இதனைப்பற்றிய விவரங்கள்யாவும் முன்னொருஇலம்பகம் உரைத்திடக்கண்டோம்.
'அவரது வியாபார ஊக பேரங்கள்:
[1] பஞ்சு' ::
தரகரொருவர் பஞ்சுப்பேர வியாபாரமொன்றில் லாபம்பெற்றிடும்
வழியினைச்சொல்லி வாய்ப்பினைத்தவற வேண்டாமென்றொரு கடிதமெழுதிட
அதனைக்கண்ட தாமுஅண்ணாவும் முடிவெடுத்திட முடியாநிலையில்
ஷாமாவுக்கொரு கடிதமெழுதி பாபாசம்மதம் கேட்டிடவேண்டினார்.
மறுநாள்மதியம் மசூதிவந்த ஷாமாஅதனை பாபாமுன்வைக்கவே
விஷயமென்னவென பாபாகேட்டதும் தாமுஅண்ணாவின் விருப்பம்சொன்னார்.
‘இருப்பதைக்கொண்டு திருப்தியுறாமல் வானம்பிடித்திடத் திட்டம்தீட்டிடும்
முயற்சியிலிந்த தாமுயெழுதியக் கடிதத்தைப்படி'யென பாபாசொல்லிட
'நீங்கள்சொன்னதே யிக்கடிதமும்சொல்லுது! அனைத்துமறிந்தும் எதுவும்தெரியா
அமைதியடக்கமாய் இங்கேஅமர்ந்து அமைதியைநாடிடும் பக்தரைநீங்களும் [1290]
நேரடியாகவும் கடிதம்மூலமும் இங்கேயிழுத்திடும் லீலைதான்யென்னே!
எல்லாமறிந்தபின் கடிதம்படிக்க எனையேன்சொன்னீர்?' என்றார்ஷாமா.
'சந்தர்ப்பவசமாய்ச் சொல்லிடுமென்னைப் பொருட்படுத்தாது கடிதம்படியேன்'
என்றேபாபா சொன்னதும்ஷாமா முழுவதுமாக அதனைப்படித்ததும்,
'சேட்டுக்குப்பைத்தியம் பிடித்துவிட்டது! தேவைகளெதுவும் இல்லாஅவனை
லட்சம்பற்றியக் கவலைகள்விடுத்து சும்மாயிருந்திடக் கடிதமெழுது'
என்றார்பாபா. அவ்விதமெழுதியக் கடிதம்கண்டு லாபம்பெற்றிடும் ஆசைக்கனவுகள்
நசித்துப்போனதாய் உணர்ந்தசேட்டும் செய்தியில்ஷாமா சொல்லியவண்ணம்
நேரில்கண்டொரு பதிலைப்பெறலாம் என்றவர்நினைந்து ஷீர்டிவந்தார்.
பணிந்துவணங்கிக் கால்களைப்பிடித்து கேட்டிடத்தயக்கம் கொண்டவரிருந்தார்
லாபம்வந்ததும் அதிலொருபங்கினை குருவுக்குத்தரவும் எண்ணம்கொண்டார்.
அனைத்துமறிந்திடும் பாபாஉடனே இனிப்பைவிரும்பிடும் குழந்தைக்குத்தாயும்
கசப்புமாத்திரை புகட்டுதல்போல, தாமுஅண்ணாவின் தேவைகளறிந்து
நன்மைசெய்திட எண்ணங்கொண்டு, 'உலகவழக்கினில் சிக்கிடுமெண்ணம்
எனக்கேதுமில்லை' என்றவர்சொன்னதும், தாமுஅண்ணாவும் உடனதைவிடுத்தார்.
கேடுகள்செய்திடும் இனிப்பினைவிடவும் நன்மைசெய்திடும் கசப்பேசிறந்தது!
2. 'தானிய வியாபாரம்'::
அரிசி,கோதுமை முதலியதானிய வணிகம்செய்திட தாமுநினைத்தார்.
அதையும்படித்த பாபாஅவரிடம் 'ரூபாய்க்குஐந்துச் சேரெனவாங்கி
ஏழெனஅதையே நீயும்விற்பாய்' என்றேசொல்லிட அதையும்விடுத்தார்.
ஓரிருமாதம் பொறுத்துப்பெய்தப் பெருமழையாலே ஏறியதானிய [1300]
விலையும்வீழ்ந்திட நஷ்டமில்லாமல் தாமுஅண்ணாவும் தப்பிப்பிழைத்தார்.
பஞ்சுப்பேர வணிகமுமிதைப்போல் வாங்கியவர்க்கெல்லாம் நஷ்டமானது!
பெரும்பணம்தொலைந்திடும் பேராபத்தினின்று தம்மைக்காத்த குருவினைவணங்கி
நம்பிக்கையுள்ள பக்தராய்'தாமு' இன்றுமிருப்பதாய் ஹேமாத்பந்த்சொல்வார்.
'ஆம்ர லீலா' [மாம்பழ அற்புதம்]::
'ராலே'யென்னும் மம்லத்தாரொருவர் 'கோவா'வினின்று அனுப்பிவைத்த
சரக்குஒன்றில் முன்னூறுமாம்பழம் இருந்ததைக்கண்ட பாபாஅதனில்
நான்குபழங்களைத் தன்'கோலம்பா'வுள் தாமுஅண்ணாவுக்காய் எடுத்துவைத்தார்.
மனைவியர்மூவர் இருந்துமவர்க்குக் குழந்தைகளில்லா நிலையில்வருந்தினார்.
பாபக்கிரகத்தால் குழந்தைகள்பிறக்கும் வாய்ப்பெதுமில்லை என்றவர்தெரிந்தார்.
மாம்பழம்வந்த சற்றுநேரத்தில் பாபாவைவணங்கிட ஷீர்டிசென்றார்.
பாபாகையால் மாம்பழம்பெற்றிட மற்றவரனைவரும் ஏங்கியபோதும்
நான்குபழங்களை தாமுவுக்களித்து 'உண்டுமரிக்க' பாபாஉரைத்தார்.
இதனைக்கேட்டதும் தாமுஅண்ணாவோ அதிர்ச்சியடைந்திட அருகிலிருந்த
மஹால்ஸாபதியோ 'மரித்திடவேண்டியது தானெனுமாணவம்' என்பதைவிளக்கினார்.
மாம்பழம்பெற்றதும் பாபாஅவரிடம், 'அனைத்தையும்நீயே தின்றிடவேண்டா.
இளையமனைவிக்கு இவற்றைக்கொடுத்திடு! நான்குமகன்களும் நான்குமகள்களும்
'ஆம்ரலீலா'வால் அவளுக்குப்பிறக்கும்' என்றவர்கூறிய ஆசிவார்த்தைகள்
காலப்போக்கில் உண்மையாகியே சோதிடம்பொய்த்த லீலையைச்சொன்னது.
வாழும்நாட்களில் நிகழ்ந்தவையாவும் சமாதியடைந்த பின்னருமதுபோல்
நிகழ்ந்திடுமதிசயம் பின்வரும்பாபா கூறிடும்மொழியால் நன்கேவிளங்கும். [1310]
'மரித்தபின்னரும் என்னைநம்புக! சமாதியிலிருக்கும் எனதுஎலும்புகள்
தைரியமும்பலமும் தந்திடுமென்றும்! நம்பிக்கைகொண்ட அடியவருடனே
எனதுஎலும்புகள் கூடநடந்து, தொடர்புகொண்டு என்றும்பேசும்.
நும்முடைநலத்தை அவைகள்யாவும் கூடிப்பேசிடும் அதிசயம்காண்பீர்!
உடல்பொருளாவி அனைத்தின்மூலமாய் என்னைநினைந்திட நீங்கள்பெற்றிடும்
பலன்மிகவதிகம்! இல்லையென்றே கவலைகொள்ளாது இன்புற்றிடுக!'
'பிரார்த்தனை'::
'ஓ!ஸாயிஸத்குரு! கற்பகத்தருவே! இதுவேயும்மிடம் யாம்வேண்டுவதும்!::
பதமலர்மறவா நிலையினைத்தருக! பிறப்பிறப்பறுத்துக் காத்தருளிடுக!
புலன்வழித்திரியும் ஆசைகளகற்றி உள்முகதரிசனம் தந்தருளிடுக!
உற்றாருறவினர் உதவுவதில்லை! அருளைத்தருவதும் நீவிரொருவரே!
வாதமழித்துத் தீயதகற்றித் திருப்பெயர்கூறிடும் நிலையினைத்தருக!
உடல்பொருளுற்றார் நினைப்பினைத்துறந்துத் தானெனுமாணவம் தன்னையழித்து
சலனமடக்கி அமைதியைத்தந்து திருப்பெயரொன்றையே நினைந்திடச்செய்க!
சற்றேநீங்களும் எம்மையணைத்திட அகவிருளொழிந்தே நின்னொளிபெருகும்!
லீலையினமுதைப் பருகிடத்தந்தே நன்னருட்பயனால் எம்மையெழுப்புக! '
'குறிப்பு'::
தாமுஅண்ணா 'நரசிம்ஹபாபா' எனுமடியார்க்குத் தந்தவாக்குமூலம்.::
1. தரகர்சொன்ன பஞ்சுப்பேரம் கூட்டாகால்ல! எனக்குமட்டுமே!
2.மனைவிய ரெனக்கு இருவர்மட்டுமே! மூவரல்ல!
3.திருவடியமர்ந்து இரண்டுகேள்விகளை பாபாவிடத்தில் ஒருமுறைகேட்டேன்!
'இங்கேகூடும் அனைவரும்வேண்டிடும் பலன்களைப்பெறுதலும் சாத்தியமாகுமா?'
'பூத்திடுமந்த மரத்தினைநீபார்! பூத்திடுமனைத்தும் கனியானாலது
எத்துணைபெரிய அறுவடையாகும்! சிலவேமிஞ்சிட மற்றவையெல்லாம் [1320]
மலராய்க்காயாய்க் காற்றாலடித்துக் கீழேயுதிர்ந்திடும் நிலையைக்கண்பாய்!'
இரண்டாம்கேள்வி என்னைப்பற்றி! சோதரர்ரென்னிடம் பாகம்பிரிந்து,
சோதரியொருவர் இறந்தவேளையில், திருட்டுஒன்றினால் மனமிகநொடிந்து
வாட்டம்கொண்ட வேளையிலொருநாள்,' நீங்களிறந்தால் நான்மிகநலிவேன்!
நம்பிக்கைகுலைந்து எவ்விதம்யானும் உயிருடன்வாழ்வேன்" என்றதும்பாபா,
என்றுமென்னுடன் இருந்திடும்வாக்கினை எனக்குத்தந்தார்! இன்றுமவரே
என்னுடனிருக்கும் நிலையினைக்காண்கிறேன். சோதரிமரித்த வேளையில்நான்மிக
வாடியிருந்த வேளையில்பாபா, போதனைசெய்து சாந்தப்படுத்தி
குல்கர்ணிவீட்டில் பூரண்போளி சாப்பிடச்செய்து சந்தனம்பூசிமகிழ்வித்தார்.
நண்பனொருவன் மூக்குவளையம் அடங்கியவைர நகைகளைத்திருடிட
பாபாபடத்தின் முன்னேயமர்ந்து நானுமழுதிட மறுநாளவனே
பெட்டியைக்கொணர்ந்து என்னிடம்தந்து மன்னிக்கவேண்டிய நிகழ்வும்நடந்தது' [1326]
ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment