Si Charita - 2
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 2
இப்பணியைச் செய்வதன் நோக்கம் - இஃதை மேற்கொள்வதில் உள்ள திறமையின்மையும், துணிவின்மையும் - காரசார விவாதம் - குறிப்பிடக்கூடியதும், முனிவருடைய பட்டமுமான ‘ஹேமாத்பந்த்’தை வழங்குதல் - குருவின் அவசியம்.
**********************
இதை எழுதுவதன் காரணம்::
கோதுமையை அரைத்தன்றோர் அதிசயத்தைக் காட்டியவர்
ஓதியொரு உண்மையினைப் போதித்த இந்தமகான்
புரிந்திட்ட லீலைகளைக் கேட்டதனால் ஆர்வமுற்று
புனையலானேன் இக்கதையை பல்லோர்க்கும் நலமளிக்க
ஞானியரின் வரலாறு ஆராய்ச்சிக் குட்படாது
ஞானமெனத் தெளிவதற்கோர் வழியொன்றே காட்டிடுது பணியைச் செய்யத் திறமையின்மையும், துணிவின்மையும் ::
இதையெழுதும் திறனிங்கு எனக்குண்டோ என்றஞ்சி
கதைக்கெல்லாம் காரணியாம் ஸாயியருள் நாடினேன் [30]
ஞானேச்வர் சொன்னதுபோல் யானிதற்கோ காரணம்
ஞானியரின் அருளன்றோ எமைப்பணிக்கும் அருட்கதவம்!
ஏயபிற நூல்பலவும் இவர்புகழைச் சொன்னாலும்
தூயநல் முத்தின்னும் இதனுள்ளே கிடைக்கிறதே
ஸாயிபுகழ் அறியாத மானுடர்கள் பலகோடி
பயனுறவே மேலுமொரு நூலெழுதத் துணிந்தேன்யான்!
ஷாமாவின் தயவாலே ஸாயிமகான் ஆசிதந்தார்
தாமாக முன்வந்து எனையாண்டு அருள்செய்தார்
'என்கதையைக் கேட்போரின் நம்பிக்கை மிகவாகும்
ஆனந்தப் பெருநிலையை அவரென்றும் அடைந்திடுவார்
வாதங்கள் ஏதுமின்றி என்கதையைப் படித்துவரின்
தீதொன்றும் வாராது துணைபுரிவேன் எந்நாளும்'
என்றவரும் சொன்னதுமே என்மனதில் மின்னலாச்சு
முன்னொருநாள் நான்செய்த வாதமொன்று நினைவிலாச்சு!
ஷீரடிக்கு செல்லுமாறு பலரென்னைச் சொன்னபோதும்
ஓரடியும் எடுக்காமல் நானதனை ஒத்திவைத்தேன்
'நண்பனின் மகனுக்கு வந்தவொருகாய்ச்சலைத்
தீர்த்திடாத குருவைஏன் நான்சென்று காணவேண்டும்?'
என்றேநான் நினைத்திடினும் நடப்பதையெவரும் தடுத்திடல்
இயலாதெனும் நியதிப்படி இறையருளால் குருவருளால் [40]
மனம்மாறி ஓர்நாளில் நானங்கு கிளம்புகையில்
'மன்மாடு’ மெயிலென்றும் தாதரிலே நில்லாது
போரிபந்தர் செல்க'வென எனைப்பணித்தார் ஓர்பெரியார்
மீறாமல் அவ்வணமே யான்செய்து இலக்கடைந்தேன்
‘ஸாதே’யின் வாதாவின் மூலையிலே நான்கண்டேன்
ஈடேது மில்லாத என்குருவாம் ஸாயியையே!
ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பத்தாம்ஆண்டில் திருக்காட்சிகண்டவுடன்
ஓடோடி அவரடியில் பணிந்துநான் நமஸ்கரித்தேன்.
கண்டதுமே மெய்ம்மறந்தேன் பசிதாகம் மறந்துவிட்டேன்
கண்டெடுத்த நல்முத்தாம் என்நாதனைக் கண்டுகளித்தேன்
திருப்பாதம் தொட்டவுடன் புதுவாழ்வை எனக்கருளிய
பெரும்பேற்றை நானுணர்ந்து அனைவரையும் வணங்குகிறேன்.
தரிசனம்யான் கண்டவுடன் எண்ணமெல்லாம் நலமாகி
முன்வினையின் வலிமையெலாம் அழிவதை உணர்கின்றேன்
பற்றற்ற நிலைகூடி சென்மாந்திர நற்பயனால்
சுபதரிசனம் நிகழ்கையிலே அனைத்துலகும் ஸாயிமயம்!
சூடான விவாதம் ::
வாதமெனச் சொன்னதற்கு வருகின்றேன் இப்போது
ஆதாரம் ஏதுமின்றி நான்செய்த வீண்வாதம்
வாதாவில் இருக்கையிலே ஓர்நாளில் நிகழ்ந்தது
"பாடே"வெனும் நண்பரிடம் நான்புரிந்த விவாதம் [50]
"எம்கடமை செய்திடவோ எமக்கேதான் உரிமையிங்கு
தம்கடமை மறந்தார்க்கும் குருவென்று ஏன்வேண்டும்?"
வீணகத்தால் வாதாடி நான்கேட்ட கேள்விக்கு
'நீநினைக்கும் வகையினிலே செயலொன்றும் நிகழ்வதில்லை
அகங்காரம் தனைவிடுத்து ஆண்டவனை நீபணிந்தால்
அகந்திறந்து வழிகாட்ட குருவங்கே வந்திடுவார்'
எனச்சொன்ன 'பாடே'யின் கூற்றினையே ஏற்காமல்
மனவமைதி தேடியானும் மசூதிக்குச் சென்றிட்டேன்
குறிப்பிடக்கூடியதும், முனிவருடைய பட்டமுமான ஹேமாத்பந்த்தை வழங்குதல்::
வந்ததுமே எனைப்பார்த்து'ஏதுபற்றி வாதமிங்கு
ஹேமாத்பந்த்?' எனக்கேட்டார் அன்புடனே பாபாவும்!
முன்னொருநாள் அரசவையில் புகழ்பெற்ற மந்திரியின்
இந்நாமம் எனக்கெனவே அன்றுமுதல் வழக்கமாச்சு!
குருவின் தேவையைப் பற்றி:
சரிதத்தில் குறிப்பேதும் இலாவிடினும் தீக்ஷித்தின்குறிப்பேடில்
இதுபற்றிய மேல்விவரம் அடுத்திங்கே இயம்பிடுவோம்:
ஹேமாத்பந்த் ஸாயிநாதனைச் சந்தித்தமறுநாளில் காகாஸாஹேப்
ஸாயியிடம் 'தான்ஷீர்டிவிட்டுச் செல்லணுமா?' எனக்கேட்க
'ஆம்'என பாபாசொல்ல 'எங்கேபோவது?' எனக்கேட்க,
'உயர...மேலே'என பாபாபதிலுரைக்க 'வழியெப்படி?' எனவினவ,
'பலவழிகள் உண்டெனினும் இங்கிருந்தும் வழியுண்டு.
செல்லும்வழி கடினமாயும் புலி,ஓநாய் நிறைந்திருக்கும் [60]
வழிகாட்டி கூடவரின், நல்வழியில் நினைச்செலுத்தி
நேரடியாய் இலக்குநோக்கி உனையிட்டுச் சென்றிடுவார்.
வழிகாட்டி யாருமின்றி வனத்தினிலே நீயலைந்தால்
பாழ்குழியில் விழுந்துவிடும் பேரபாயம் உனக்குண்டு
சரியான துணையின்றி குறிக்கோளை அடைவாரோ?'
எனபாபா சொன்னமொழி இதற்கானபதிலென்று கொண்டிடுவோம்.
'ராமருமே கிருஷ்ணருமே தமையறியத் துணைதேடி
மாமுனிகள் நாடியதன் பொருளிதுவே நீயறிவாய்!'
தீக்ஷித்தெனும் பெருந்தகைக்கு சொன்னவந்த மறுமொழியே
திக்கற்ற எனக்கென்று யான் தெளிந்து அடிபணிந்தேன். [65]
ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment