Tuesday, May 13, 2014

Sai Charita in Tamil verse



முன்னுரை

ஸ்ரீ சாயி பாபாவின் சரித்திரத்தை பலரும் நூல் வடிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட பிற மொழிகளில் இயற்றி உள்ளார்கள். அவற்றை தினம் ஒரு பாகம் என ஏழு நாட்களாக பாராயணம் செய்யும் வகையில் சில புத்தகங்கள் எழுதப்பட்டு உள்ளன. ஆனால் எனக்குத் தெரிந்தவரை சாயி சரித்திரத்தை பாடல் வடிவில் யாரும் எழுதி உள்ளதாக தெரியவில்லை. அமெரிக்காவில் குடியேறி அங்கு மருத்துவராக பணி புரியும் திரு சங்கர்குமார் அவர்கள் ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர் என்பவர் மராத்திய மொழியில் இருவரிப் பாடலாக எழுதி உள்ளத்தின் அடிப்படையில் இதை தமிழில் பாடலாக எழுதி உள்ளார்கள். சாயி சரித்திரத்தின் ஒரு பாகத்தை ஒரே பக்கத்தில் படித்து விடும் வகையில் எழுதப்பட்டு உள்ளது இது சாயி சரித்திரத்தை பாராயணம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். சாயி சரித்திரத்தை 3 அல்லது 4 மணி நேரத்தில் படித்து முடித்து விடும் அளவில் இது புனையப்பட்டு உள்ளது. திரு சங்கர்குமார் ஏற்கனவே இந்த தளத்துக்கு அறிமுகமானவர்தான். நிறைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்துள்ளவர். நாளை முதல் தொடர்ந்து சாயி சரித்திரம் வெளியாகும்.
சாந்திப்பிரியா

Introduction
The seven day Parayan Sree Sai Charita is available in English and many other languages including in Tamil. However I have not come across the Parayana written in Tamil , in verse format. Shri Sankarkumar, doctor by profession has settled in USA and has been contributing translations to this site. He has composed Sai Parayan in Tamil verse based on the two line verse written in Marathi by Shri Govindarao Ragunath Dabolkar for ease in reading particularly to those who are employed. Entire Sai Charita can be read within 3 to 4 hours . The Charita in Verse form will begin from tomorrow
Santhipriya

 
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்"

ஸத்குரு ஸாயிபாபா அடியார்கள் அனைவருக்கும் என் பணிவன்பான வணக்கம்.

ஸத்குரு ஸாயிபாபாவின் பெருமைகளைக் கூறும், ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம், ஸாயி அன்பர்கள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் புனித நூல் ஆகும். பாபாவின் அடியவரான "ஹேமாத்பந்த்" என பாபாவால் அழைக்கப்பட்ட ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர் என்பவர் மராத்தியில் இரு வரிப் பாடல்களாக இதனை எழுதி அருளினார். ஷீர்டியில் வாழ்ந்த ஸத்குரு ஸாயிபாபாவைப் பற்றி பல நூல்கள் இருந்தபோதிலும், இந்த நூலே அனைத்து அடியவர்களுக்கும் துயர் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது எனச் சொன்னால், அது மிகையில்லை! உல‌கின் ப‌ல‌ மொழிக‌ளிலும் மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட்டு, ப‌ல‌ ல‌ட்ச‌ம் ப‌க்த‌ர்க‌ள் இந்த‌ப் புனித‌ நூலை அன்றாட‌ம் பாராய‌ண‌ம் செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

த‌மிழில் வெளிவ‌ந்திருக்கும் நூலையொட்டி, அத‌ன் வ‌ரிக‌ளின் மூல‌ம் மாறாம‌ல், இதையே இருவ‌ரிப் பாட‌ல்க‌ளாக‌ எழுத‌ எண்ண‌ம் கொண்டேன். குருவ‌ருள் இல்லாம‌ல், எந்த‌வொரு செய‌லும் நிக‌ழாது! சுமார் 18 மாதங்களாக, முடிந்தபோதெல்லாம் கொஞ்ச‌ங் கொஞ்சமாக‌ எழுதிவந்து, சென்ற மாத‌ம் இதை முழுதுமாக முடித்தேன். இங்கே இதனை இடுவதற்கான ஆசியும் உரிய இடத்திலிருந்து கிடைத்ததும் என் அதிர்ஷ்டமே.

இந்த முறையில் ஏன் இப்படி எழுதுகிறேன் என்பதைப் பற்றிய ஒரு தன்னிலை விளக்கம் தர வேண்டியிருக்கிறது!

நான்கு சீர்களில் அமைந்திருப்பதைத் தவிர, பாடல் இலக்கணம் எதுவுமே இல்லையே. எதுகை மோனை அமையவில்லையே என ஒரு சில அன்பர்கள் என்னிடம் கேட்டனர்.

இதைப் படிப்பவர்களில் இரு வகையானவர் உண்டு. ஸாயி ஸத் சரிதத்தை அவ்வப்போதோ, அல்லது எப்போதுமேவோ படித்து வரும் ஸாயி அடியவர் ஒரு வகை. இதனை இப்போதுதான் முதன் முறையாகப் படிப்பவர் இன்னொரு வகை.

நான் தினமும் ஒரு அத்தியாயம் எனும் முறையில் இதனைப் பாராயணம் செய்து வருகிறேன்.

ஒரு சில விசேஷ தினங்களில் [ராமநவமி, குரு பூர்ணிமா, விஜயதஸமி] இங்கே எங்களது கோவிலில் ஏக தின பாராயணம் எனச் செய்வதிலும் கலந்து கொள்வேன்.

மராத்தி மூலம் மட்டுமே ஓவி மீட்டரில் இரு வரிச் செய்யுளாக இது அமைந்திருப்பினும், ஆங்கில மூலம், இதனது சாராம்சமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.

இதனது மொழியாக்கமாகவே, மற்ற மொழிகளிலும் உரைநடை அமைப்பில் இந்த புனித சரித்திரம் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது.
தமிழில் இந்த ஸாயி ஸத் சரிதத்தைப் பாராயணம் செய்யும் அன்பர்கள் அறிவர்,…. இதனை ஒரே நாளில் படித்து முடிக்க குறைந்த பட்சம் 10 - 12 மணி நேரம் பிடிக்கும் என!

இதைக் கருத்தில் கொண்டே, தமிழ் மூலப் பிரதியில் சொல்லியிருக்கும் எதனையும் விடாமல், அதே சமயம் இதைக் குறைந்த நேர அளவில் [சுமார் 4 மணி நேரத்துக்குள்] படிக்க ஒரு எளிய வழியாக இப்படிச் சொல்லத் துணிந்தேன்.

அப்படிச் சொல்லவரும்போது, எதுகை, மோனை இவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், [நான் எனது மனத்துக்குள் கொண்டிருக்கும்!!:)] சந்தம் சரியாக இருக்கிறதா என மட்டுமே அவதானித்து, வரிகளை அமைத்திருக்கிறேன்.

எளிதாக‌, அதே சமயம் எதையும் குறைத்துவிடாமல் பாராயணம் செய்ய வசதியாக‌ இருக்கும் எனும் கருத்தை மனதில் கொண்டு மட்டுமே கூடிய வரையில் ஒவ்வொரு இலம்பகத்தையும், தமிழ் மூலப் பிரதியின் அடிப்படையிலேயே எளிமையாக‌ச் சொல்ல விழைந்திருக்கிறேன்.
'இத்தகைய புனிதப் பணியாகச் செய்யும் படைப்புக்கு பக்தியே இலக்கணம் (லக்ஷணம்)' என இதனைப் படித்த ஒரு பெரியவர் சொன்னது உற்சாகமளித்தது.

அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கம்.
--DR சங்கர்குமார், USA

ஓம் ஸ்ரீ ஸாயிராம்.
ராஜாதிராஜ் யோகிராஜ் பரப்ரும்ஹ ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ் கி ஜெய்!
-------------
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
[வள்ளல் பெருமான்]

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.