Sai Charita - 7
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 7
வியக்கத்தகு அவதாரம் - ஸாயிபாபாவின் குணாதிசயங்கள் - அவரின் யோக சாதனைகள் - அவரின் எங்கும்நிறை தன்மை - குஷ்டரோக அடியவரின் சேவை - குழந்தை காபர்தேயின் பிளேக் வியாதி - பண்டரீபுரத்துக்குச் செல்லல்.
****************
ஆறுவித யோகமுறை அறிந்தவராம் ஸாயிபாபா
இந்துவா முஸ்லீமா யாரறிவார் இவர்பிறப்பை?
இராமநவமி கிருஷ்ணாஷ்டமி இரண்டையுமே பாவித்தார்
திருக்குரானை ஓதிடவும் மசூதியில் அனுமதித்தார்
நாலுநாட்கள் 'தாபூத்'தை மசூதியில் வைத்திருந்து
சலனமின்றி ஐந்தாம்நாள் அவர்கையால் நீக்கிவிட்டார்
காதுகுத்தி இந்துவாய்த் தோற்றமங்கு காட்டினார்
'சுன்னத்'தெனும் வழக்கத்தை அவரென்றும் ஆதரித்தார்
ஹிந்துவெனச் சொல்வதென்றால் மசூதியில் வாழ்ந்திருந்தார்
இஸ்லாமியர் எனச்சொன்னால் 'துனி'யென்றும் வளர்த்திருந்தார்
இந்துமதப் பழக்கங்கள் அத்தனையும் அனுமதித்தார்
அல்லாவே தலைவனென்று எப்போதும் சொல்லிவந்தார்
மூலத்தை ஆராய முனைப்போடு சென்றவரும்
பாதத்தில் பணிந்தே வாய்பேசா ஊமையானார்
ஜாதிமத பேதமிலாப் பக்கிரியாய் அவர்வாழ்ந்தார்
மாமிசமும் மீனுங்கூட பலசமயம் உண்டுகளித்தார்
நாய்கள்வந்து தீண்டிடினும் அவ்வுணவை ஒதுக்கவில்லை
அருவருப்புக் காட்டவில்லை அவர்க்கேது ஜாதிமதம்? [290]
அவர்பாதத் தடியினிலே அமர்ந்தின்பம் துய்ப்பதற்கும்
அவர்நட்பைப் பெறுவதற்கும் எனக்கதிர்ஷ்டம் கிட்டியதே!
யானிவரின் பெருமையினை வார்த்தைகளால் சொல்லப்போமோ!
பாதத்தில் வீழ்ந்தபின்னே ஆத்மாவில் கலந்துவிட்டேன்
சாதகர்கள் பலபேர்கள் நாடியங்கு வந்தபோதும்
அல்லாவே தலைவனெனும் நாமமொன்றே அவருரைத்தார்
வீண்வாதம், கலகங்கள் அவரென்றும் விரும்பவில்லை
கடுமையாகத் தோன்றிடினும் அமைதியே வடிவானார்
யாரிந்த பாபாவென எவருக்குமே தெரியாது
உயர்வுதாழ்வு பேதமின்றிச் சமமாகப் பாவித்தார்
அந்தரங்க ரகசியங்கள் அனைத்துமவர்க்கு அத்துப்படி
அதையெல்லாம் சொன்னபோது கேட்டவரும் திகைத்திட்டார்
அனைத்தும் அறிந்திருந்தும் அறியாதவர்போல் நடித்திருந்தார்
புகழையென்றும் நாடியவர் ஒருபோதும் சென்றதில்லை
மனிதவடிவம் எடுத்திருந்தும் தெய்வமாய்ச் செயல்புரிந்தார்
ஷீரடியில் வந்துதித்த பரப்பிரம்மம் போலிருந்தார்
'ஸாயிபாபாவின் குணாதிசயங்கள்' ::
பாபாவின் அற்புதத்தை விளக்கவொண்ணா அறிவிலிநான்!
தாத்யாவின் மூலமாகக் கோயில்களைப் பழுதுபார்த்தார்
தக்ஷிணையாய்ப் பெற்றதெல்லாம் தானமாகத் தந்துவிட்டார்
இருபதோ பதினைந்தோ அல்லதுஐம்பது ரூபாய்களோ [300]
வந்தவர்க்குத் தந்துவிட்டு தர்மப்பணம் எனமகிழ்ந்தார்
பாபாவின் தரிசனத்தால் அனைவருமே பயனடைந்தார்
செயற்கரிய செயலெல்லாம் பாபாவால் நிகழலாச்சு
குருடர்கள் பார்வைபெற, முடவர்கள் நடமாட
நோயெல்லாம் குணமாக கொடியவரும் மனந்திருந்த
இப்படியாய் அவர்செய்த அற்புதங்கள் ஏராளம்
எட்டுத்திக்கும் புகழ்பரவி ஆயிரம்பேர் வந்தாலும்
அவரென்றும் துனியருகே அமைதியாக அமர்ந்திருந்தார்
குளிப்பதும் குளிக்காததும் அவர்க்கென்றும் வாடிக்கையாம்
தலையிலொரு டர்பனும் இடுப்பினிலே தூயவேட்டியும்
எப்போதும் அணிந்திருந்து எல்லார்க்கும் காட்சிதந்தார்
வைத்தியராய் நடித்தவரும் மக்களுக்குச் சேவைசெய்தார்
குணமாக்கும் வைத்தியமுறை யாருக்கும் புரியாதது
'பிப்பா'வை அரைத்தொருவர் கண்நோயைக் குணம்செய்தார்
'பாபாவின் யோகப் பயிற்சிகள்' ::
அனைத்துமுறை யோகமும் அவரறிந்த போதினிலும்
ஒன்றிரண்டை மட்டுமிங்கு இப்போது சொல்லுகின்றேன்
1. 'தவ்தி' அல்லது சுத்த விருத்தி ::
வாரத்தின் மூன்றாம்நாள் நெடுந்தொலைவு சென்றந்த
ஆலமரத் தருகினிலே கிணற்றினிலே குளிக்கச்செல்வார்
அவ்வாறு குளிக்கையிலே குடல்கும்பி அத்தனையும்
வெளியினிலே தானெடுத்து இருபுறமும் தூய்மைசெய்வார் [310]
'தவ்தி'யெனும் இச்செயலை நீளமான துணியொன்றை
உட்புறமாய் விழுங்கிச்சிலர் செய்வதினைப் போலன்றி
பாபாவின் தவ்தியோ தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்
இச்செயலை ஒளிந்திருந்து பார்த்தவர்கள் பலருண்டு
2. கண்ட யோகம் ::
உடலிலுள்ள உறுப்புகளைத் தனித்தனியே பிய்த்தெடுத்து
மசூதியில் வைத்திருந்த காட்சியினைக் கண்டவொரு
அடியவரும் பதறிப்போய் பாபாவை யாரோதான்
கொலைசெய்து விட்டாரென மனதினிலே எண்ணிவிட்டார்
மறுநாளே பாபாவும் பரிபூரண வடிவினிலே
மசூதியில் அமர்ந்திருக்கக் கண்டவரும் வியந்திட்டார்
சிறுவயதே யோகக்கலை பயின்றிருந்த பாபாவும்
காசெதுவும் வாங்காமல் அனைவர்க்கும் சிகிச்சைசெய்தார்
தன்னலத்தைப் பேணாமல் பிறர்நலனில் வாழ்ந்திருந்தார்
தாங்கவொணா வலிகளெல்லாம் தாமுவந்து ஏற்றிட்டார்
'பாபாவின் எங்கும் நிறை தன்மையும் கருணையும்' ::
தீபாவளி விடுமுறையில் வழக்கம்போல் ஓர்நாளும்
துனியருகே அமர்ந்திருந்து குளிர்காய்ந்துக் கொண்டிருந்தார்
எரிகின்ற நெருப்பினிலே விறகுக்குப் பதிலாகத்
தம்கையை பாபாவும் தீயினிலே நுழைத்துவிட்டார்
நெருப்பினிலே வெந்திருக்கும் கரத்தினைக் கண்டிட்ட
ஷாமாவும் பதைபதைத்துச் சட்டென்று அதையெடுத்தார் [320]
'ஏனிப்படிச் செய்தீர்கள் என்தேவா?' எனக்கேட்ட
ஷாமாவைத் தேற்றியே பாபாவும் சொல்லலானார்:
'உலைக்களத்தில் பணிசெய்த மனையாளைக் கூப்பிட்ட
கணவனுக்காய் உடனெழுந்து ஓடுகின்ற வேளையினில்
தன்மடியில் அமர்ந்திருந்த சிசுவொன்றைக் கவனியாது
அவசரமாய் ஓடுகையில் தீயில்சிசு விழுந்திடாமல்
நானதனைக் காப்பாற்ற என்கையை இதில்நுழைத்தேன்
என்கைகள் வெந்தாலும் குழந்தையினைக் காத்தேன்யான்'
எனச்சொன்ன பாபாவின் எல்லையிலாக் கருணையினை
எல்லாரும் வியந்திருந்து பாபாவின் தாள்பணிந்தார்
'குஷ்டரோகி அடியவரின் சேவை' ::
வெந்தகரம் சீராக நானாவும் அழைத்துவந்த
பம்பாயின் மருத்துவரை பாபாவும் மறுத்துவிட்டார்
'பாகோஜி ஷிண்டே' என்னுமொரு தொழுநோயாளி ஒருவரே
அன்றுமுதல் அவருக்கு நெய்தடவி சிகிச்சைசெய்தார்
மருத்துவராம் பரமானந்த் பலமுறைகள் யாசித்தும்
பாபாவின் கரம்தீண்டும் வாய்ப்புஅவர்க்குக் கிட்டவில்லை
ஆனாலும் பாபாவின் தரிசனமோ தினமவர்க்கு வாய்த்தது
பாகோஜியின் நெய்சிகிச்சை இறுதிவரை தொடர்ந்தது
'லெண்டி'க்குச் செல்லுகையில் குடைபிடித்து இவர்நடப்பார்
துனியருகே அமர்ந்தவுடன் சிகிச்சையினைத் தொடர்ந்திடுவார் [330]
உடல்முழுதும் நோயாலே சீழ்வடியும் நிலையிருந்தும்
பாபாவைத் தினம்தீண்டும் நற்பேற்றை இவர்பெற்றார்
'குழந்தை’ காபர்தே’யின் வியாதி' ::
அனைவருமே அதிசயிக்கும் லீலையொன்றைச் சொல்லுகிறேன்
'தாதாஸாஹேப்' எனுமடியாரின் துணைவியார் ஷீர்டியில்
தன்னுடைய புதல்வனொடு சிலகாலம் தங்கிவந்தார்
'பிளேக்'கென்னும் கொடுநோயால் இளம்புதல்வன் பீடிக்க
ஊருக்குத் திரும்பிடவே பாபாவைக் காணச்சென்றார்
'வானமிங்கு மேகத்தால் சூழ்ந்திருக்கும் நேரமிது
அவையெல்லாம் உருகிவிடும்! எல்லாமும் நலமாகும்!'
எனச்சொல்லி பாபாவும் தம்முடையைத் தூக்கிநின்றார்
பாலகனின் தொடையிருந்த கொடுநோயின் கட்டியெல்லாம்
பாபாவின் தொடையினிலே நெறிகட்டி நிற்கக்கண்டார்
'அடியவர்க்காய் நானேற்கும் கஷ்டமெலாம் பாருங்கள்
அவர்துயரை நான்வாங்கி நானவரைக் காத்திடுவேன்'
எனச்சொன்ன பாபாவின் லீலையிலே மகிழ்ந்திட்டார்
பலனேதும் கருதாமல் அடியவரைக் காக்கின்ற
ஞானியரின் செயலிதுவே எனமக்கள் உணர்ந்திட்டார்
'பண்டரீபுரத்துக்குச் செல்லுதலும், அங்கு தங்குதலும்' ::
அடியவரை நேசித்து அவர்க்காகக் காத்திருக்கும்
பாபாவின் லீலைசொல்லி இலம்பகத்தை முடிக்கின்றேன்::
நந்துர்பார் மாம்லத்தார் பாபாவின் சீரடியார்
பண்டரீ புரத்துக்கு மாற்றலாகிக் கிளம்பிட்டார் [340]
ஆரிடமும் சொல்லாமல் உடனவரும் கிளம்பினாலும்
ஷீர்டிக்குச் சென்றபின்னர் அங்குசெல்ல முடிவெடுத்தார்
ஷீர்டிக்கு அருகிலுள்ள நீம்காவனை அடைந்தபோது
மசூதியில் அமர்ந்திருந்த பாபாவோ பரபரத்தார்
'மஹால்ஸாபதி, அப்பாஷிண்டே, காசிராம்' மூவருடன்
பாபாவும் அமர்ந்திருக்கும் வேளையிலே அவர்சொன்னார்::
'பண்டரீ புரக்கதவம் எமக்காகத் திறந்திருக்கு
வாருங்கள் அனைவருமே மகிழ்வுடனே பஜனைசெய்வோம்'
காரணமே அறியாமல் மூவருமே கூடச்சேர்ந்தார்
நால்வருமே சேர்ந்தங்கு பாடியபல்லவி இதுவாகும்:
"பண்டரீபுரம் யான்செல்லவேண்டும்! நானங்கே தங்கவேண்டும்!
ஏனென்றால் அதுதானென் பரமாத்மா வாழுமில்லம்"
இப்படியாய் நால்வருமே பாடுகையில் நானாவந்தார்
அடிபணிந்து தன்னுடனே பண்டரீபுரம் வரச்சொன்னார்
கூடிநின்ற அடியாரோ பாபாவும் அதுவேதான்
இதுவரையும் பாடியதாய்ச் சொல்லிடவே மிகமகிழ்ந்தார்
பாபாவின் அடிபணிந்து அனுமதியைப் பெற்றபின்னர்
உதிவாங்கி உவகையுடன் நானாஸாஹேப் புறப்பட்டார்
முடிவில்லா லீலைகளை இவ்வளவில் யான்நிறுத்தி
மேலுமிந்தக் கதைகளையே தொடர்ந்திடுவேன் அடுத்ததிலே! [350]
ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment