Sai Charita - 35
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 35
சோதிக்கப்பட்டுப் போதாக்குறை ஏதுமில்லை எனக் கண்டுணர்தல் - காகா மஹாஜனியின் நண்பரும், எஜமானரும் - பாந்த்த்ராகாரரின் தூக்கமின்மை வியாதி - பாலாஜி பாடீல் நெவாஸ்கர்.
உதியின்பெருமையை மேலும்சொல்லிடும் செய்திக்குறிப்பும், சோதிக்கப்பட்டு
குறையெதுமிலையென கண்டுணர்ந்தஇரு நிகழ்வுகளையும்இவ் விலம்பகம்உரைக்கும். [1900]
முன்னுரை:
சமயப்பிரிவுகள் தந்திடும்உணர்ச்சி ஆன்மீகவழியில் மேலேசென்றிடப்
பெருந்தடையாகும். 'கடவுளென்பதோர் மாயத்தோற்றமே! ஞானியும்மனிதரே'
என்றிடுமொருசிலர் சாதுவைவணங்கி தக்ஷிணைதருவதை மறுப்பதைக்காணலாம்.
மதச்சார்பாளரும் பிறமதத்தலைவரை வணங்குதல்தவிர்த்து மறுப்பதும்காணலாம்.
ஸாயிநாதனை வணங்கிப்பணிந்து தக்ஷிணைகொடுப்பதை எதிர்த்திடும்குரல்கள் ::--
'ஷீர்டிபாபா தம்மிடம்தக்ஷிணை கேட்டுப்பெற்றுப் பொருளீட்டியதுவும்
ஞானியர்க்கழகோ? இவ்விதம்பெற்றால் அவரதுஞானம் என்னவானது?'::--
இன்றும்நமதுக் காதினில்விழுவதும் அறிந்தேயிருக்கிறோம். அவ்விதமெதிர்த்தப்
பலரும்ஸாயியைக் கண்டதும்தமது எதிர்ப்பினைமறந்து அவரடிபணிந்து
அவரிடம்தங்கிய இரண்டுகதைகளை இந்தஇலம்பகம் இனிதேயுரைக்கும்.
'காகா மஹாஜனியின் நண்பர்' ::
காகாமஹாஜனி எனுமடியாரின் நண்பரொருவர், உருவழிபாட்டினில்
நம்பிக்கையற்றவர், ஸாயிமுன்பணிவதோ தக்ஷிணைதருவதோ இயலாதென்னும்
நிபந்தனைபேரில் மும்பையினின்று இருவருமாக ஷீர்டிசேர்ந்தனர்.
மசூதிப்படிகளில் காலடிவைக்கையில், 'ஏன்வந்தீரையா?' [காம் யாவேன் ஜி!] எனுமொருகுரலால்
இனிமையுடனே பாபாஅழைத்திட, ஒலித்தஅக்குரல் தனதுதந்தையின்
குரலைப்போலவே ஒத்திருந்ததைக் கண்டநண்பரும் மகிழ்ச்சியில்மிதந்தார்!
தந்தையேஅழைக்கிறார் எனுமொருவுணர்வில் ஸாயிபாதத்தில் தலையினைவைத்தார்.
காலையிலோர்முறை மாலையிலோர்முறை எனவிருவேளையில் காகாவிடம்மட்டும்
தக்ஷிணைகேட்டதைக் கண்டிட்டநண்பரும், 'எனையேன்கேட்டிலை? ஏனெனைஒதுக்கினார்?
எனமுணுமுணுத்திடும் சத்தம்கேட்டு பாபாவினவிட, 'நானும்தரட்டுமா?' [1910]
எனஅவர்கேட்க, 'கொடுக்கமனமிலாக் காரணத்தாலே கேட்டிடவில்லை!
இப்போதுமக்குக் கொடுக்கத்தோன்றினால் கொடுக்கலாம்'என்றே ஸாயிமொழிந்திட
காகாகொடுத்த பதினேழுரூபாயே தானும்கொடுத்து வணங்கிப்பணிந்தார்.
கிளம்பிடும்சமயம் பாபாஅவரிடம், வேற்றுமையுணர்வெனும் தேலியின்சுவற்றை
இடித்தால்மட்டுமே ஒருவரையொருவர் முகத்திற்குமுகமாய்ப் பார்க்கலாம்;சந்திக்கலாம் '
என்றேகூறி வானிலைசற்று மப்பு,மந்தாரமாய்ப் பயமுத்துதற்போல்
மோசமாயிருப்பினும் பத்திரமாகப் பயணம்திரும்பிட ஆசியளித்து அனுப்பிவைத்தார்.
இல்லம்திரும்பிக் ஜன்னல்கதவைத் திறந்தவுடனே பறவைகள்இரண்டு
இறந்துகிடக்கவும் மூன்றாம்பறவை ஜன்னல்வழியே பறந்துசெல்லவும்
கண்டநண்பரும் இறந்தவையிரண்டும் விதிப்படிஇறந்தன; மூன்றாம்பறவையைக்
காத்திடத்தானோ பாபாதன்னைத் திருப்பியனுப்பினார் எனுமோரெண்ணம்
மனதில்தோன்றிட, அனைத்துமறிந்த ஸாயியின்கருணையை எண்ணிவியந்தார்.
'காகா மஹாஜனியின் எஜமானர்' ::
‘டக்கர்-தரம்ஸி- ஜேடாபாயி’ எனுமோர்வக்கீலின் அலுவலகத்தில்
காகாமஹாஜனி மேலாளராகப் பணியாற்றும்நாட்களில், விளையாட்டாக
ஓர்முறைஅவரும் காகாவுடனே ஷீர்டிசென்றிட எண்ணம்கொண்டுத்
தனக்குத்துணையாய் மேலுமொருவரை உடன்வரச்செய்து மூவரும்கிளம்பினர்.
செல்லும்வழியில் இரண்டுசேர்கள் காய்ந்ததிராட்சையை காகாவாங்கினார்.
ஷீர்டியடைந்து தரிசனம்காண மசூதியடைந்திட, ‘பாபாஸாஹேப்-
தர்கட்’என்பவர் இருக்கக்கண்டு டக்கர்தரம்ஸி அவரிடத்தினில்
ஷீர்டிவந்தக் காரணத்தைக் கேட்டதுமவரும் 'தரிசனம்காண'!’ [1920]
எனப்பதிலளித்தார். 'அற்புதமேதும் நடக்குதோயிங்கே?' எனவிவர்கேட்க,
தர்கட்டும்உடனே, 'அதனைக்காண நான்வரவில்லை. ஆயினும்பக்தரின்
பிரார்த்தனையாவும் பூர்த்தியாவதை இங்கேகாண்கிறேன்' எனப்பதில்சொன்னார்.
ஸாயியைக்கண்டு, அவரடிபணிந்து, தான்கொண்டுவந்த திராட்சைப்பழங்களை
மஹாஜனிகொடுத்ததும், அனைவருக்குமதை வினியோகம்செய்ய பாபாபணித்தார்.
டக்கர்கையிலும் ஒருசிலபழங்கள் கிடைத்தும்அவையெலாம் கழுவப்படாது
இருத்தலைக்கண்டு என்னசெய்வது எனப்புரியாமல் வக்கீல்திகைத்தார்.
விருப்பமில்லாமல் ஒருசிலபழங்களை வாயில்போட்டதும் விதைகளையென்ன
செய்வதுவென்றுப் புரியாமல்தவித்தார். மசூதித்தரையில் துப்பிடமனமின்றி
சட்டைப்பைக்குள் அவற்றைப்போட்டார். ஞானியென்பது உண்மையென்றால்பாபா
எங்ஙனம்தனக்கு இவற்றைத்தந்தும் உண்ணச்சொல்லியும் செய்தாரென்றே
மனதுக்குள்ளே எண்ணிக்கொண்டார். இவ்விதமெண்ணிய அதேவேளையில்
மேலும்திராட்சையைக் கொடுத்திடச்சொல்லி ஸாயிபணித்திட உண்ணாமலவற்றைத்
தன்கைகளிலே வைத்திருத்தலைக் கண்டஸாயியோ சாப்பிடுமாறு டக்கரைப்பணித்தார்.
அப்படியேஅவர் வாயில்போட்டிட விதைகளின்றியே இருத்தலைக்கண்டு வியப்புமடைந்து
உறுதிப்படுத்திட அருகிலிருந்த ‘தர்கட்’டிடம் அவரதுதிராட்சைகள் என்னவிதமெனக்
கேட்கவுமவரும் ‘விதைகளுள்ளவை’ எனமொழிந்திடவும் இன்னும்வியந்து
இன்னுமொருமுறை ‘காகா’தொடங்கி திராட்சைகள்தந்திட வேண்டுமெனவே
மீண்டும்நினைக்க அதேபோலவே அதுவும்நிகழ்ந்ததும் திருப்தியடைந்தார்.
காகாவின்எஜமானரென ஷாமா,டக்கரை அறிமுகம்செய்திட, காகாவுக்கென [1930]
வேறொருமாலிக் இருக்கிறார்!'என்னும் ஸாயியின்பதிலில் பெரிதும்மகிழ்ந்தார்.
மனம்மாறியவர் ஸாயியைப்பணிந்து வாதாதிரும்பி மதியஆரத்தி
கண்டுகளித்ததும், திரும்பிச்சென்றிட மசூதிவந்ததும் பாபாஉரைத்தார்:
'செல்வமும்நலமும் நிரம்பப்பெற்றும் தேவையற்றப்பல கவலைகள்கொண்டு
நிம்மதியிழந்த நிலையற்றவொருவன் உறுதியில்லாமல் இருந்திருந்தான்.
அவன்நிலைக்கண்டு இரக்கம்கொண்டு 'இங்குமங்குமாய் அலைவதைவிடுத்து
ஏதேனுமொன்றை உறுதியாய்ப்பற்றி அமைதியடைவாய்' எனநான்கூறினேன்'
கூறியவர்ணனை அனைத்தும்தனக்குப் பொருந்திநிற்றலைக் கண்டு’டக்கரும்’
தெளிவாய்ப்புரிந்து காகாமஹாஜானியும் தம்முடன்திரும்பி வந்திடவேண்டும்
எனநினைத்ததுமே, ஸாயிஅவரது எண்ணமறிந்து அதேபோலவே
அனுமதிதந்ததும் ஞானிதான்இவரே என்னும்உறுதியை மனதுள்கொண்டார்.
பதினைந்துரூபாய் தக்ஷிணையாகக் காகாவிடத்தில் பாபாபெற்றார்.
'ஒன்றைப்பத்தாய்த் திருப்பித்தருவதே என்குணமாகும். விலையின்றியெதையும்
இலவசமாக வாங்குவதுமில்லை; பக்கிரிசுட்டிக் காண்பிப்பவரிடமே,
முன்னம்அவரும் கடன்பட்டிருப்பின் மட்டுமேகேட்டுப் பணம்வசூலிப்பேன்
கொடுப்பதன்மூலம் கணிசமாய்அறுவடை செய்யவேஅவர்களும் விதைகளையின்று
விதைக்கின்றார்கள். அதிகம்பெற்றிடக் கொடுத்தலேவழியாம். கொடுப்பதன்மூலம்
பற்றின்மைவந்திடும். பக்தியும்ஞானமும் அதன்வழிவந்திடும்; ஒன்றைக்கொடுத்துப்
பத்தாய்ப்பெறுக!' என்னும்ஸாயியின் மொழிகளைக்கேட்டதும் டக்கரும்தாமே
பதினைந்துரூபாய் தக்ஷிணைகொடுத்தார். ஷீர்டிவந்ததால் ஐயங்களகன்று [1940]
பலவிஷயங்களைக் கற்றுக்கொண்டதில் நன்மையடைந்தேன் என்றவர்மகிழ்ந்தார்.
பணிவதும்வெறுப்பதும் தருவதும்மறுப்பதும் அவரவர்விருப்பம்! அவற்றால்சிறிதும்
பாதிக்கப்படாமல் பாபாவாழ்ந்தார் சுகதுக்கங்களையும் கடந்தேஸாயி
மகிழ்ச்சிதுன்பம் இவைஎதிலும்சாராமல் தனித்திறனோடு வாழ்ந்துக்காட்டினார்.
'தூக்கமின்மை வியாதி' ::
பாந்த்ராவில்வசித்த காயஸ்தபிரபு ஜாதியைச்சேர்ந்த அன்பரொருவர்
படுக்கச்செல்கையில் மறைந்தஅவரது தந்தையார்கனவில் வந்துமிரட்டி
கடுஞ்சொற்களால் திட்டிடும்காட்சியால் தூக்கமிழந்து அல்லற்பட்டார்.
ஒவ்வொருநாளும் இதுநிகழ்ந்ததனால் என்னசெய்வதெனப் புரியாநிலையில்
பாபாவின்பக்தர் ஒருவரிடத்தில் கலந்தாலோசிக்க பிழையாநிவாரண
சஞ்சீவியாகிய உதியைத்தந்து படுக்கச்செல்கையில் நெற்றியிலிட்டு
உதிப்பொட்டலத்தைத் தலையணைக்கடியில் வைத்துக்கொள்ள ஆலோசனைசொல்லிட
அதன்படிசெய்தவர் அன்றிரவினிலே வியக்கும்வகையில் நல்லுறக்கம்கொண்டார்.
இதனால்மகிழ்ந்தவர் ஸாயியின்படத்தைத் தலையணைக்கருகில் தொங்கவிட்டு
தினமும்வணங்கி வியாழக்கிழமையில் பூமாலைசாற்றி நிவேதனமளித்து
வியாதியினின்று முற்றிலுமாக விடுதலைபெற்று ஸாயியைஅனுதினம்
நினைவிற்கொண்டு வாழுங்காலமும் ஸாயியன்பராய் வாழ்ந்தாரிவரே!
'பாலாஜி பாடீல் நெவாஸ்கர்' ::
ஸாயிநடக்கும் தெருக்களைத்தினமும் சுத்தம்செய்திடும் அரும்பெரும்பணியினை
ஒவ்வொருநாளும் தவறாதுசெய்த இந்தபக்தரைத் தொடர்ந்துராதா கிருஷ்ணமாயியும்
அப்துல்லாவும் செய்துவந்தனர். அறுவடைசெய்த அனைத்துக்கோதுமையையும்
ஸாயியிடமளித்து மீதமென’ஸாயி’தருவதை மகிழ்வுடனேற்று வாழ்க்கைநடத்தினார். [1950]
இவ்விதமாகப் பக்தியுடனவர் பல்லாண்டுகள்செய்து அதற்குப்பின்னால்
அவரதுமகனும் இதேமுறையில் பாபாவிடத்தில் அன்புசெலுத்தினார்.
'உதியின் சக்தியும், செயல் திறமையும்' ::
பாலாஜியின்திவசத் தினத்தின்போது விருந்தினர்க்காக உணவுசமைத்தனர்.
உண்ணும்வேளையில் அழைப்புக்கும்மேலாய் மூன்றுமடங்காய் விருந்தினர்வந்தனர்.
சமைத்தஉணவு அத்தனைப்பேர்க்கும் போதாமல்போனால் கவுரவம்குறையுமே
எனஅவர்மனைவி திகைத்தநேரத்தில் அவளதுமாமியார் அவளைப்பார்த்து,
'பயப்படவேண்டாம்! சமைத்தஉணவு ஸாயியின்உணவு. அவரைநினைந்து
உதியினையெடுத்து பாத்திரமனைத்திலும் சற்றுத்தூவி துணியால்மூடி
விருந்தினர்க்கெல்லாம் உணவுபடைத்தால் பாபாநம்மை நிச்சயம்காப்பார்'
எனத்தேற்றியதும், அவ்விதமேஅவள் செய்திட்டப்போது அனைவரும்திருப்தியாய்
உணவினையுண்டு அதற்குப்பின்னும் மீதமிருந்ததைக் கண்டுமகிழ்ந்து
'நம்பிக்கைகொண்டிடில் செயல்களனைத்தும் திறம்படநடக்கும்'
என்னும்ஸாயியின் அருளுரைமெய்யாய் நிகழ்தலைக்கண்டு மனமகிழ்ந்தனரே!
ஸாயிமறைந்தும் இத்தகுஅதிசயம் இன்னும்நிகழ்வதை இன்றும்காணலாம்.
[ஆயிரத்தொள்ளா யிரநாற்பத்துமூன்றில் கர்ஜத்எனுமோர் ஊரில்நிகழ்ந்தத்
ஸாயிபூஜையில் அழைத்தவர்போல ஐந்துமடங்குக் கூட்டம்வந்தும்
வந்தவரெல்லாம் பாபாஅருளால் திருப்தியாய்உண்ட அதிசயநிகழ்வை
சௌகுல்என்னும் பாபாபக்தர் சொன்னதுமிங்கே பதிவாயுளது.]
'ஸாயிபாபா நாகமாகத் தோன்றுதல்'::
ஷீர்டிவாழ்ந்த ரகுபாடீலென்பவர் நெவாஸைச்சேர்ந்த பாலாஜிபாடீல்
என்பவரில்லம் ஒருமுறைசெல்கையில், மாட்டுக்கொட்டகையில் [1960]
நாகமொன்று சீறிப்பாய்வதைக் கண்டுதிகைத்தார். மாடுகள்பயந்தன.
பாலாஜிமட்டும் ஸாயியேயிவ்விதம் பாம்புருவினிலே வந்ததாயெண்ணி
கிண்ணமொன்றில் பாலைக்கொணர்ந்து நாகம்முன்வைத்து 'ஏனிந்தச்சீற்றம்?
ஏனெம்மையிவ்விதம் பயமுறுத்துகின்றீர்? அமைதியாய்ப்பாலை அருந்துகபாபா!'
எனச்சொன்னதுமே, பாம்பும்தானே வந்தவழியிலே சென்றுமறைந்தது!
பாலாஜிகுடும்பம் வரும்போதெல்லாம் சேலையும்ஆசியும் பாபாதருவார்!
[கோயம்புத்தூரிலும் நாகவடிவினில் பாபாதோன்றி அனைவரெதிரிலும்
அசையாமல்நின்று காட்சியளித்த மற்றொருநிகழ்வையும் இங்கேகூறுவார்.] [1964]
ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment