Sai Charita - 43 and 44
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 43 and 44
பாபா மஹா ஸமாதி அடைதல். [தொடர்ச்சி]
ஏற்பாடுகள் - சமாதி மந்திர் - செங்கல் உடைதல் - 72 மணி நேர ஸமாதி - ஜோக்[]கின் துறவு - பாபாவின் அமுத மொழிகள்.
*****************
இருவிலம்பகமும் பாபாமரணம் பற்றியநிகழ்வினைச் சொல்வதால்
நாற்பத்துமூன்றும், நாற்பத்துநான்கும் ஒன்றாயிங்கே கூறப்படுகின்றன.
முன்னேற்பாடு ::
மரணிக்கும்நேரம் போகும்வழியை எளிதாக்கிடவும், அவரதுமனத்தை
ஆன்மீகவுணர்வில் திளைத்திடச்செய்யவும் மதநூல்களைப் பாராயணம்செய்வர்.
பரீக்ஷித்துமன்னன் சுகமஹரிஷியிடம் பாகவதம்கேட்டதும் இவ்வொருநிலையிலே!
இதனைத்தொடர்ந்து இந்தவழக்கமும் இன்றளவினிலும் நடந்துவருகிறது!
இறையவதாரமாம் ஸாயிநாதருக்கு இத்தகுவுதவி தேவையிலையெனினும்
பிறர்க்குவழிகாட்டியாய்த் தாமிருந்திடவே இந்தச்செயலையும் செய்துகாட்டினார்.
'வாஜே'என்பாரை ‘ராமவிஜயம்’ எனுமோர்நூலைப் படிக்கும்படியாய்க் கட்டளையிட்டார்.
ஒருவாரத்தில் பாராயணமும், இரவும்பகலுமாய் மூன்றுநாளிலும்
மீண்டுமொருமுறை மூன்றுநாளிலும் படித்த'வாஜே'யும் களைப்படைந்ததால்,
அதற்குப்பின்னர் அமைதியாயிருந்து, ஆன்மபோதத்தில் மூழ்கித்திளைத்தார்.
காலம்முடியும் சிலநாள்முன்னரே, வெளியிற்செல்லாமல், மசூதியிலிருந்தார்.
தனக்காய்வருந்தி, மனமுடையாமல் இருக்கும்படியாய் பக்தருக்குரைத்தார். [2340]
தீக்ஷித்,பூட்டியை உணவுக்கனுப்பியும், லக்ஷ்மிபாயி, பாலாசிம்பி,
நானாஸாஹேப் நிமோண்கர்போன்றோர் மசூதியிலேயே தங்கியிருந்தனர்.
அடியவர்ஷாமா படிகளின்கீழே அமர்ந்திருந்தார். லக்ஷ்மிபாயிக்கு
ஒன்பதுரூபாய் தக்ஷிணைதந்ததும், 'மசூதிதனக்கு வசதியாயில்லை;
பூட்டிவாதாவுக்குக் கொண்டுசென்றிடின் விரைவில்தானும் நலமுற்றிடுவேன்'என
பாபாமொழிந்ததும், பயாஜிகோதேயின் மடியில்சாய்ந்து உயிரைநீத்தார்.
அதனையுணர்ந்த பயாஜிசொற்படி சிறிதுதண்ணீரை ஸாயியின்வாயில்
நிமோண்கரூற்றிட, உட்செல்லாமல் வெளியேவழிந்ததும் 'ஓ,தேவா...!'என
நிமோண்கர்கதறினார்! சற்றேகண்களைத் திறந்துஸாயியும் 'ஆ'வெனச்சொல்வது
போல்தோன்றிடினும், நலமாய்உயிரை பாபாநீத்தது நிதரிசனமானது.
செய்திபரவி, ஆடவர்,பெண்டிர் குழந்தைகள்முதலாய் அனைவரும்வந்து
அழுது,புரண்டு, மயங்கிவிழுந்து, கண்ணீர்வழிந்திட வருந்தியழுதனர்.
எட்டுவயதுப் பாலகனாக மீண்டும்வருவதாய் ஸாயிமொழிந்த
சொற்களைநினைந்து சிலரரற்றிட, இதுபோல்நிகழும் என்பார்ஹேமாத்பந்த்.
ஞானியர்மொழிகள் பொய்ப்பதுமில்லை அதுகுறித்துஐயுறத் தேவையுமில்லை
சிறையிலிருந்தத் தேவகிமுன்னே சங்குசக்ரகதாதாரியாய் சக்ரபாணியும்இவ்விதம்தோன்றினார்.
பலதலைமுறையாய்த் தம்மடியாருடன் தொடர்புகொண்டாடிய ஸாயிபாபா
பாரதக்கண்ணன் வந்ததுபோலே மீண்டும்வருவதில் ஐயமேயில்லை!
பலதலைமுறையான அன்புப்பிணைப்பினை உருவாக்கிடவே ஸாயிமஹராஜ்
விஜயயாத்திரை சென்றதுபோலவும் மீண்டும்வருவார் எனவேநம்புவோம் [2350]
பாபாஉடலை அடக்கம்செய்வது எங்ஙனமென்பதில் இந்துக்களுக்கும்,
இஸ்லாமியருக்கும் இடையேசிறிது மாற்றுக்கருத்துகள் எழத்தொடங்கின.
திறந்தவெளியில் அடக்கம்செய்து அதன்மேல்ஸமாதி கட்டுதல்நன்றென
இஸ்லாமியரும், குஷால்சந்தும், அமீர்சக்கரும் கருத்தளித்தனர்.
கிராமாதிகாரி ‘ராமச்சந்திர பாடில்’அதனை உறுதியாய்மறுத்து
பூ[b]ட்டிவாதாவில் அடக்கம்செய்திட வேண்டுமென்பதை முன்வைத்திடவும்,
இதனைத்தொடர்ந்து முப்பத்தாறு மணிநேரங்கள் விவாதம்தொடர,
லக்ஷ்மண்மாமா ஜோஷியின்கனவில் பாபாதோன்றி, 'நானிறந்துவிட்டதாய்
பாபுஸாஹேப் நினைப்பதால்நீயே காகட்ஆரத்தியை செய்'எனச்சொன்னார்.
பாபாமீது பக்தியைக்கொண்ட லக்ஷ்மண்ஜோஷி, ஷாமாவின்மாமா.
பூஜைப்பொருட்களைத் தட்டில்வைத்து மசூதிவந்து, மௌல்விகள்தடுத்தும்,
காலைஆரத்தியை நடத்திமுடித்திட, மதியஆரத்தியை ஜோக்[g]கேசெய்தார்.
பாபாசொற்படி அவரதுமேனியை வாதாவில்வைத்திட முடிவுசெய்தனர்.
நடுப்பகுதியை தோண்டும்வேளையில், பம்பாயினின்று அமீர்பாயும்,
கோபர்காங்வின் மாம்லத்தாரும் அங்கேவந்து, ஒருமித்தமுடிவு
இல்லாததறிந்து, வாக்கெடுப்பு ஒன்றைநடத்தி, பெரும்பான்மைவாக்கில்
வாதாவில்வைத்திட முழுமுடிவானது. புதன்மாலையில் ஊர்வலமாகத்
திருவுடல்பவனி வாதாவந்து முரளீதருக்காய் ஒதுக்கியமத்திய
மூலஸ்தானத்தில், உரியமரியாதையுடன் முரளீதரராய் அடக்கமானார்.
இன்றுமடியார்க்கு அமைதியளித்திடும் ஆலயமாகப் புனிதமானது! [2360]
பாலாஸாஹேப் பாடே'யாலும், உபாசினியென்னும் அடியவராலும்
இறுதிச்சடங்குகள் முறைப்படியாக பூட்டிவாதாவில் நடத்தப்பெற்றன.
இத்தனைநேரம் திறந்தவெளியில் மேனியிருந்தும், பாபாவுடலில்
விறைப்பெதுமின்றியும், கைகளைவளைத்து கஃப்னியைகழற்றும்
வகையினிலவ்வுடல் மிருதுவாகவும் இருந்தநிகழ்வினை இதனைப்பற்றிய
புரஃபஸர்நார்கே என்பவரெழுதியக் குறிப்பால்நாமும் உணர்ந்துவியக்கலாம்!
செங்கல் உடைதல் ::
இறுதிவிடை பெறுவதற்குச் சிலநாட்கள்முன்னரே சகுனமொன்றுதெரிந்தது!
செங்கலொன்றின்மேல் தம்கைவைத்து ஸாயிபாபா அமர்ந்திருப்பார்.
தரைகூட்டும் சிறுவனொருவன் தன்கையில் அதையெடுக்கக்
கைதவறிக் கீழேவீழ்ந்து அதுவுடைந்து இருதுண்டானது.
எதற்குமேகலங்காத ஸாயிபாபா அதனிழப்பில் மனம்வருந்தி,
'உடைந்ததந்தச் செங்கலல்ல! என்விதியே உடைந்துபோனது!
ஆன்மத்தியானம் செய்யும்வேளை எப்போதும்அது என்னுடனிருக்கும்!
உயிருக்கும்மேலான செங்கலின்று என்னைவிட்டு நீங்கிவிட்டது'எனப்
புலம்பியழுதார்! ஜடப்பொருளின் இழப்பிற்காய் ஏனித்தனை வருந்தவேண்டும்?
என்கின்றக்கேள்விக்கு, 'அடியவரைமேலுயர்த்த அவதரிக்கும் ஞானியரும்
மக்களுடன்வாழுகையில் பிறர்போலச்சிரித்தழுது நடந்தாலுமவரெண்ணம் விழிப்புடனே
இருந்துவரும்' என்னும்பதிலை ஹேமாத்பந்த் சொல்லுகின்றார்.
72 மணி நேர ஸமாதி ::
மறைவதற்கு முப்பத்திரண்டு ஆண்டுகட்குமுன்னர் [1866] மார்கழிப்பவுர்ணமி
தினத்தன்று கடுமையானஆஸ்துமாவால் அவதிப்பட்ட ஸாயிபாபா [2370]
பிராணனை உயர்நிலைக்குக் கொண்டுசென்றுநிறுத்தும் ஸமாதிநிலையை
அடையமுடிவெடுத்து, மஹால்ஸாபதியிடம், 'மூன்றுநாள் என்னுடலைப்
பத்திரமாய்ப் பார்த்துக்கொள். நானதற்குள்திரும்பிவிட்டால் எல்லாம்சரியாகும்.
இல்லையெனில் என்னுடலைத் திறந்தவெளியிற் புதைத்துவிட்டு
அதன்மீது இருகொடிகளை அடையாளமாய் நட்டுவிடு'எனக்கூறி
கீழேசாய்ந்ததும், மூச்சுப்பேச்சு நின்றுபோய் உயிரிழந்துக்
காணப்பட, அதனைக்கண்ட மக்களெல்லாம், நல்லடக்கம்செய்ய
முடிவெடுக்க, மஹால்ஸாபதி அதைத்தடுத்து, தன்மடியில்
பாபாவைச்சாய்த்தபடி, மூன்றுநாட்கள் காத்திருந்தார்.. மூன்றாம்நாள்
அதிகாலை மூன்றுமணிக்கு உயிர்திரும்பும் அறிகுறிகள்
ஒவ்வொன்றாய்த்திரும்ப, தன்னுடலை அசைத்தவண்ணம் பாபாஉயிர்த்தெழுந்தார்.
மூன்றரைமுழ உடல்கொண்ட மனிதராநம்ஸாயி? அதைவிட்டுஅவர்நீங்க
இல்லாமற்போவாரா? அல்லதவர் நம்மகத்தே உறைந்திருக்கும்
ஆன்மாவிலிருப்பாரா என்பதையே நாமனைவரும் முடிவுசெய்யலாம்.
பஞ்சபூதக்கலப்பான இவ்வுடம்புஅழியினும், அழியாதப்பரம்பொருளாம் ஆன்மாவிலுறைந்து
நமையெல்லாம் ஆட்டுவிக்கும் பரப்பிரம்மமே நம்ஸாயி!
மரணமெல்லாம் புறத்தோற்றம்! உள்ளிருந்து நமைக்காக்கும்
பரம்பொருளே ஸாயிபாபா என்பதைநாம் அனுபவித்துணரலாம்!
உடலுருவாய் நம்ஸாயியை இன்றுநாம் காணாவிடினும்
சாம்ராவ்ஜயகரால் வரையப்பட்டஓவியமாய் இன்றும்நாமவரை மசூதியில்காணலாம். [2380]
உடலுருவாய் இருந்தப்போது அடியாரைக் காத்தாற்போல்
இன்றைக்கும் நமக்கெல்லாம் அருளுகின்றார் ஸாயிபாபா!
மனிதராய்த் தோன்றிடினும் ஸாயிபோன்ற ஞானியர்கள்
இறப்பதுமில்லை! அவரெல்லாம் கடவுளரேஎன நாமுணர்ந்திடுவோம்.
பாபாஸாஹேப் ஜோக்[G]கின் துறவு ::
'புனே'யைச்சேர்ந்த புகழ்பெற்ற'வர்க்காரி' விஷ்ணுபுவாஜோக்[g] என்பாரின்மாமா
ஸகாராம்ஹரிஎன்னும் பாபுஸாஹேப்ஜோக்[g] அரசாங்கவேலையில் ஓய்வுபெற்று
ஆயிரத்தொள்ளா யிரத்தொன்பதில் தனதுமனைவியுடன் ஷீர்டிவந்து
ஸாயிசேவையில் முழுநேரமீடுபட்டார். 'மேகா'மறைந்தப்பின், ஆரத்திபணியைச்
செவ்வனேசெய்தும், ஞானேச்வரியையும் ஏக்நாத்பாகவதமும் படித்துரைக்கும்
பணியும்செய்தார். பாபாவைநோக்கி, 'இத்தனைநாட்கள் நானுங்களுக்கு
சேவைசெய்தும், மனஅமைதியோ கிட்டவுமில்லை. ஞானியுடன்இருந்தும்
ஏனின்னும்நான் முன்னேற்றமடையவில்லை? எப்போதென்னை ஆசீர்வதிப்பீர்?'
எனக்கேட்க, அதைக்கேட்ட ஸாயிபாபா, ‘வேளைவரும்போதுன்
தீவினைகள் அழிக்கப்படும். பற்றனைத்தும் நீதுறந்து
சிற்றின்பச் சுவையெல்லாம் நீஜெயித்து முழுமனதாய்க்
கடவுளுக்குச் சேவைசெய்து சந்நியாசம்கொண்டிட அன்றேபுனிதனாவாய்!'
எனச்சொன்ன அருள்மொழியும் சிலநாளில் மெய்யானது!
அவர்மனைவி மரணமுற, பற்றெதுவும் வேறின்றி
உயிர்போகும் முன்னரவர் சந்நியாசம் மேற்கொண்டு
தம்வாழ்வின் லட்சியத்தை முழுமையாய் எய்தினார்! [2390]
பாபாவின் அமுத மொழிகள் ::
மசூதியிலமர்ந்தபடி பாபாமொழிந்திட்ட அமுதமொழிசிலவற்றை இங்கேகாண்போம்::
'என்னைமிகவிரும்பும் அடியார்கள்எப்போதும் என்னையே காண்கின்றார்!
எனைவிட்டுநீங்கிடினோ உலகவர்க்குசூனியமே! என்கதைகளல்லாது வேறெதுவுமுரைப்பதில்லை!
என்னையேதியானித்து என்பெயரேஉச்சரிப்பார்! முழுமையாயென்னிடத்தில் சரணடைந்தவர்க்கு
நானென்றும்கடமைப்பட்டு அவர்கடனைத்தீர்த்து விடுதலையைநல்கிடுவேன்! எனைநினைத்தேங்கியும்,
எனையெண்ணியுண்பவர்பால் நான்சார்ந்திருக்கின்றேன்! ஆறும்கடலுமாய் அவரென்னிற்கலக்கின்றார்.
பெருமையையும் கர்வத்தையும் முழுதுமாய் விட்டொழித்து,
நின்னுள்ளி லிருக்கின்ற எனிலுன்னைச் சேர்த்திடுக!'
யார் இந்த 'நான்' ::
'எனைத்தேடித் தொலைதூரம் நீரெங்கும் செல்லவேண்டாம்!
நின்பெயரை, ரூபத்தை அகற்றிவிடின் உள்ளிருந்து
வியாபிக்கும் மெய்யுணர்வே நானாகும்! உள்ளபடியிதையுணர்ந்து,
எங்ஙணுமே எனைகாணும் பயிற்சியினை நீசெய்தால்,
எங்கும்பரந்திருக்கும் பரம்பொருளை நீயுணர்ந்து என்னுடனொன்றாகும்
நல்லுணர்வை நீபெறலாம்' எனும்ஸாயியின் அமுதமொழியிதனை
ஹேமாத்பந்த் தெரிவித்து, நமைவணங்கி ஒன்றுசொல்வார்:
கடவுளையும் ஞானியரையும், அடியவர்கள் அனைவரையும்
மரியாதை செய்திடுக! 'பிறர்மீது குறைகூறி, குற்றங்கண்டு
குதர்க்கம்செய்பவன் என்மனதைக் காயப்படுத்துவான்; துன்பம்வரினும்
பொறுமையுடன் இருப்பவனே எனைமிகவும் மகிழ்விக்கிறான்'
எனும்ஸாயியின் அருளுரையை நினைவிற்கொண்டு, [2400]
அனைத்திலும் பரந்திருக்கும் நம்ஸாயி வேண்டுவது
அனைத்துயிர்க்கும் அன்புசெய்யவே! புத்தமுதம் இதைநாளும்
அன்புடனே தினம்பருகி, அவர்புகழை நாடோறும்
படிப்போரும் கேட்போரும் அவருடனே ஒன்றாவார்! [2402]
ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment