Sai Charita - 16 & 17
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 16 and 17
'துரித பிரம்ம ஞானம்'
[இவ்விரு இலம்பகங்களும் பாபாவிடமிருந்து துரிதமாக பிரம்மஞானத்தைப் பெறவிழைந்த ஒரு செல்வந்தரின் கதையை உரைக்கின்றன. எனவே, ஒரே அத்தியாயமாக வெளியிடப்பட்டிருக்கிறது.]
*************************
முன்னுரை:
சோல்கரின்எளியச் சமர்ப்பணவிரதம் பாபாஏற்றதை முன்னம்கண்டோம்
அன்பும்பக்தியும் சேர்த்ததையளிப்பின் மகிழ்வுடன்பாபா ஏற்றுக்கொள்வார்
பெருமையும்கர்வமும் சேர்ந்ததிலிருப்பின் அதனைபாபா ஏற்றிடமறுப்பார்
ஸச்சிதானந்தம் நிரம்பியபாபா வெளிப்புறச்சடங்கினை லட்சியம்செய்யார்
இவரைப்போலொரு தயையும்மிகுதியும் நிரம்பியஸத்குரு வேறெவரில்லை
சிந்தாமணியோ கற்பகத்தருவோ காமதேனுவோ ஒப்பீடில்லை
விரும்பியபொருளைத் தந்திடுமிவையெலாம் கருதுதற்கியலா, அறிந்திடவொண்ணா
விலைமதிப்பில்லா மெய்ப்பொருள்தன்னைத் தந்திடும்ஸாயிக்கு ஈடாகிடுமோ?
பிரம்மஞானத்தை அருளிடவேண்டிய பெரும்பணக்காரர் கதைக்குவருவோம்
தேவைகளேதும் தனக்கெனயில்லா பெயர்,ஊர்அறியாப் பெருமகனொருவர்
பாபாபுகழை ஊர்சொலக்கேட்டுத் தேவைகளேதும் இல்லாத்தனக்குத்
தேவையானது பிரம்மஞானமே என்றவர்நினைத்து நட்பிடம்சொன்னார்
அதனைக்கேட்ட நண்பருமுடனே 'இல்லறஆசைகள் அனைத்தும்நிரம்பி
ஈகைக்குணமோ சிறிதுமில்லா நீவிர்பிரம்மம் அறிவதுமெங்ஙனம்?' [850]
என்றவர்சொன்னதைச் செவிமடுக்காமல் குதிரைவண்டியில் ஷீர்டிவந்தார்
மசூதிசென்று ஸாயியைப்பணிந்து பிரம்மஞானம் அருளிடவேண்டினார்
'கவலையுறாதே அருமைநண்பனே! உடனேஉனக்கு பிரம்மம்காட்டுவேன்!
உலகப்பொருட்களை யாசிக்கும்பலரே தினமுமென்னைத் தேடியேவருவார்!
அரும்பெரும்பொருளாம் ஞானம்விழையும் உன்னைப்போன்றவர் வேண்டிடும்போது
இதுவேயெனக்கு பெரும்பேறென்றோ! பிரம்மம்பற்றிய சுற்றுச்சூழலும்
அடைவதிலுள்ள நடைமுறைச்சிக்கலும் நானேயுரைப்பேன்' என்றேபாபா
அவரிடம்சொல்லி, பிறிதொருசெயலில் இருத்திடச்செய்து கவனம்மாற்றினார்
சிறுவனொருவனைத் தம்மிடமழைத்து 'நந்து'மார்வாடி இருப்பிடம்சென்று
ஐந்துரூபாய்கள் கடன்தொகைபெற்று வந்திடச்சொல்லி அனுப்பிவைத்தார்
சென்றவன்திரும்பி 'வீட்டிலில்லையவர்' என்றேசொன்னதும் வணிகர்'பாலா'
என்பவரில்லம் சென்றதைப்பெற்றிடத் திருப்பியனுப்பவே அங்கும்தோல்வியே!
அற்பத்தொகையாம் ஐந்துரூபாய்கள் அனைத்துமறிந்த ஸாயிபாபாவுக்கு
எதற்குத்தேவை என்னும்கேள்வி ஒருசிலர்மனதில் எழுந்திடக்கூடும்
நந்துவும்,பாலாவும் வீட்டிலில்லை என்றேயறிந்தே சிறுவனையனுப்பினார்
பிரம்மம்தேடி வந்தவருக்குச் சோதனைசெய்யவே இங்ஙனம்செய்தார்
பெரும்பணக்கற்றை ஒன்றினைச்செல்வர்தம் சட்டைப்பையுள் வைத்தேயிருந்தார்
சிறுதொகைவேண்டி பாபாஅலைவதை பணக்காரரும் பார்த்தேயிருந்தார்
மெய்யாய்ஞானம் பெறவிழைந்திருப்பின் அற்பத்தொகைக்கு பாபா அலைவதைப்
பார்த்தப்பின்னரும் வாளாவிருக்காமல் பணத்தையெடுத்துத் தந்தேயிருப்பார் [860]
ஆனாலிவரோ பணமும்தரவில்லை; அமைதியாகவும் இருக்கவில்லை
பொறுமையிழந்துப் பதட்டமடைந்து 'பிரம்மமெனக்குக் காட்டுகபாபா'
என்றேசொல்லவும், அன்புடன்பாபா அவரைப்பார்த்து, 'பிரம்மத்தையுமக்குக்
காட்டிடவேயான் இவ்விதம்புரிந்த செயல்உமக்குப் புரியவுமில்லையோ?
பிரம்மத்தைக்காணவும், கண்டதையுணரவும் ஐந்துபொருட்களைத் தந்திடவேண்டும்
"ஐவிதப்பிராணன், ஐவகையுணர்வுகள், மனமும், புத்தியும், நானெனும் அகங்காரமும்"
கத்திமுனையில் நடப்பதையொக்கும் பிரம்மத்தைக்காணும் வழியுமாகும்'
என்றேசொல்லி விரிவாயதனை உரைத்திட்டவிளக்கம் பின்வருமாறு;
வாழும்நாளில் பிரம்மம்கண்டிட ஒருசிலதகுதிகள் பெற்றிடவேண்டும்
1.விடுதலையடைந்திடச் செழுமியவிருப்பம் என்பதைச்சொல்லிடும் 'முமுக்ஷை':
கட்டியிருக்கும் தளைகளையறுத்து விடுதலைபெற்றிட வேண்டுமென்னும்
குறிக்கோளுடனே உறுதியாகவே உழைத்திடும்ஒன்றே முமுக்ஷையாகும்.
2. ஈருலகினிலும் இருக்கும்பொருட்களின் மீதேகாட்டும் வெறுப்புணர்ச்சி
'விரக்தி'யென்னும் இரண்டாம்தகுதியைத் தந்துஒருவனை மேம்படச்செய்யும்.
3.'அந்தர்-முகதா' என்றிடும் உண்முகச்சிந்தனை: புறத்தேகாணும் காட்சிகளனைத்தும்
உள்ளேயிருக்கும் ஆன்மவுணர்வே என்பதைப்புரிந்தவன் அகத்தேகாண்பான்.
4.இதுவரைசெய்த தீவினையனைத்தையும் தானேயுணர்ந்து மனந்திருந்தி
'தீவினையனைத்தையும் கசடறக்கழிதல்' என்னும்குணமே ஆத்மனையுணர்த்தும்.
5.மெய்த்தவம்புரிந்து, உண்முகமுணர்ந்து, தவற்றினைக்கழித்து பிரம்மச்சர்யம்
பூண்டிடும்வாழ்க்கை நிகழ்த்திடும்தகுதியே 'ஒழுங்கானநடத்தை' என்னும்நிலையாம். [870]
6.'ப்ரேயஸ்விலக்கி ஷ்ரேயஸ்நாடுதல்’: புலனுணர்வால்வரும் இன்பங்களெல்லாம்
அற்பசுகமே என்பதையுணர்ந்து நீங்காயின்பம் தந்திடும்நல்வழி இதனையுணர்தல்.
7. 'மனத்தையடக்கி மற்றவுணர்வுகளை அடக்கியாளுதல்': தேரெனுமுடலுக்கு
ஆத்மாவேதலைவன்; புத்தியேதேரோட்டி; மனதேகடிவாளம்; உணர்வேகுதிரைகள்
இவற்றினையடக்கும் திறமையிலாதவன் தேரோட்டியவனின் வஞ்சகச்சூழ்ச்சியுள்
தானும்சிக்கி பொல்லாக்குதிரையின் பிடியுள்சிக்கிப் பிறப்பிறப்பென்னும் சூழலிலாள்வான்
பற்றினைவிலக்கி, மனதையடக்கி உணர்வினையாளும் திறனுடையொருவன்
குதிரையையடக்கி இலக்கையடைந்து பரம்பொருள்வாழும் இடத்தையடைவான்.
8.'மனத்தூய்மை': மனநிறைவுடனே பற்றினையகற்றிக் கடமைசெய்தால் மனத்தூய்மைவரும்.
தூய்மைபிறந்திட உறுதிநிலைத்து ஆத்மானுபூதி நிலைக்குஉயர்த்திடும்.
9.'குருவின் தேவை': அடைந்திடவியலா ஆத்மவுணர்வினை அடைந்தஒருவர்
குருவாய்வந்து கூடவழைத்துச் சென்றுகாட்டிட எளிதாய்ப்புரியும்
10.'இறையருள்': இதுவேயனைத்தினும் முதன்மைப்பொருளாய் விளங்கும்தகுதியாம்.
இறையவன்மகிழ்ந்திட இறையருள்கூடி இகத்தினைத்தாண்டிப் பரம்பொருள்தெரியும்.
வேதமுணர்தலோ, அறிவின்திறமையோ ஆத்மவுணர்வினை அளிப்பதுமில்லை
'ஆத்மாஒருவனைத் தானேவிரும்பி அவனிடம்தன்னைத் தான்வெளிப்படுத்தும்'
'கடோபநிஷத்' என்னும்சூத்திரம் உரைத்திடுமுண்மை இதுவெனப்புரிவோம்'
இவ்விதம்பாபா விளக்கிக்கூறிச் செல்வரைப்பார்த்து இப்படிச்சொன்னார்:
'நல்லதுஐயா! நும்முடைச்சட்டைப் பையினுள்ளே ஐந்துரூபாயைப்
போலைம்பதுமடங்கு பிரம்மமிருக்குது! அதனைவெளியே எடுத்துக்காட்டும்!' [880]
சட்டைப்பையினுள் கையைவிட்டவர் அடுக்கியிருந்த கற்றையையெடுத்தார்
வியப்பினும்வியப்பாய் ஐயைம்பதுபெருக்க இருநூற்றைம்பது இருத்தல்கண்டே
வியந்துபோனார்! ஸாயிபாபாவின் எங்கும்நிறையும் ஆற்றல்கண்டே
மனமிகவுருகிப் பாதம்பணிந்து ஆசிவேண்டியே பணிந்துவீழ்ந்தார்
'கட்டுப்பிரம்மமாம் கரன்ஸிக்கட்டை நீரேசுருட்டி எடுத்துக்கொள்க!
ஆசைப்பேயை அழித்தாலொழிய மெய்ப்பொருளதனைக் காணுதல்கடினம்.
மனைமக்கள் சுற்றமென்னும் கவனம்கொண்டவன், கட்டிப்போடுமிப்
பற்றினையறுத்தே பிரம்மமென்பதை இங்கேயொருவன் அறிந்திடவியலும்.
இவ்விதவாசைகள் முதலைகள்நிறைந்த பெருநீர்ச்சுழியாய் ஆளைவருத்தும்
ஆசைகளென்னும் பற்றினைவிலக்கியே ‘சுழியைத்தாண்டுதல்’ செய்திடமுடியும்.
பிரம்மமும்ஆசையும் எதிரெதிர்த் துருவம்; ஒன்றிருந்திட மற்றங்கில்லை.
அமைதியும்திருப்தியும் இல்லாவொருவன் பிரம்மத்தையடைதல் கடினமேயாகும்.
ஆசைமனத்துள் எள்ளளவிருப்பினும் ஆன்மீகசாதனை அனைத்தும்வீணே.
ஆசையைக்கூட்டிப் பலனைநாடி அவற்றின்மீது வெறுப்புறாதவன்
கற்றவனாயினும் பயனேதுமில்லை; ஆத்மானுபூதியைப் பெற்றிடலாகான்.
கர்வம்நிறைந்து புலனைத்துய்ப்பவன் குருவின்சொற்களைக் கேட்டிடமாட்டான்.
மனத்தில்தூய்மையே மிகவுமவசியம்; அதனைவிடுத்து மற்றவையெல்லாம்
ஆடம்பரமே என்றேயுணர்க. எடுத்துக்கொள்ள முடிந்ததைமட்டும்
எடுத்துக்கொள்வதே நன்மைபயக்கும். எவரும்விரும்பும் எதையுமென்னால்
கொடுத்திடலியலும்; கொள்ளும்தகுதி அவருக்குண்டா என்பதில்யானும் [890]
கவனம்கொள்வேன். சொல்லும்சொற்களைக் கவனமாய்க்கேட்டிட நன்மைவிளையும்.
மசூதியிதனில் அமர்ந்துகொண்டு சொல்லிடும்யாவும் உண்மையேயாகும்.'
ஸாயிபாபா இவ்விதமருளிய அருளுரைகேட்டவர் அனைவருமன்று
பெருவிருந்தொன்றில் வந்தவர்யாவரும் உண்ணுதல்போலே பயன்மிகப்பெற்றார்.
'பாபாவின் குணாதிசயங்கள்':
இல்லம்துறந்து காட்டினில்குகையில் மடங்களிலமர்ந்து தனிமையிலிருந்துத்
தம்விடுதலை ஒன்றேகுறியாய் நாடிடும்முனிவர் பலரிங்குண்டு.
மற்றவர்பற்றிய சிந்தனையின்றித் தம்முள்மூழ்கியே நிலைத்திருப்பார்.
ஸாயிபாபா இவ்வகையில்லை. வீடோமனையோ உறவோசுற்றமோ
எதுவுமின்றியே வாழ்ந்திருந்தும் மக்களைவிடுத்துத் தனித்தவரில்லை.
பிச்சையெடுத்து அதனையுண்டே வேப்பமரத்தடி தன்னில்வாழ்ந்தார்.
உலகவழக்கில் கலந்துகொண்டு அதனில்சிறக்கப் போதனைசெய்து
மக்களுக்காகவே வாழ்ந்தவரிவர்போல் மற்றவரெவரையும் காண்பதுமரிதே.
அசாதாரணமான அறிவெல்லைகடந்த விலைமதிப்பில்லா தூய்மையான
ஓர்மாணிக்கக்கல்லாம் ஸாயிபாபா அவதரித்ததால் இந்தியநாடே பெருமையுடைத்து!
அவரதுகுடும்பமும் அவரைப்பெற்றத் தூயவர்களாகிய அவரதுபெற்றோர்
அனைவருமிதனால் போற்றுதற்குரியர்' எனப்பெருமிதம்கொள்வார் ஹேமாத்பந்த்தும். [898]
ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment