Sai Charita - 39
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 39
"பாபாவின் ஸம்ஸ்க்ருத ஞானம்."
கீதையின் ஒரு ஸ்லோகத்திற்கு பாபாவின் பொருள் விளக்கம் - சமாதி மந்திர் கட்டுதல்.
******************
பகவத்கீதையின் ஒருசெய்யுளுக்கு பாபாஅளித்த விளக்கமுரைக்கும்
இவ்விலம்பகத்தில் சொல்லியக்கருத்தை ஒருசிலர்மறுத்து பாபாவுக்கு
வடமொழிஞானம் கிடையாதென்று சொன்னதைஎதிர்த்து மற்றொருஇலம்பகம் ஹேமாத்பந்த்தும் எழுதியபடியால் இருவிலம்பகமும் ஒன்றாய்க்காண்போம்.
முன்னுரை:
ஸாயிபாபா காலடிபட்ட ஷீர்டிகிராமமும் த்வாரகாமாயியும் பெரும்பேறுடைத்து!
பாபாவந்தபின் சிறியகிராமமாம் ஷீர்டிவிரைவிலோர் க்ஷேத்திரமானது.
எவர்நலனுக்காய் வருகைதந்தாரோ அந்தமக்களெலாம் புண்ணியம்செய்தவர்.
அல்லும்பகலும் பெண்டிரனைவரும் பாபாபுகழைப் பாடிமகிழ்ந்தனர்.
பாபாவின் பொருள் விளக்கம் :
வடமொழியறிவும் தமக்குண்டெனவே பாபாநிகழ்த்திய அற்புதம்காண்போம்.
நானாசாஹேப் சந்தோர்க்கருக்கு கீதையின்ச்லோகம் ஒன்றின்பொருளை
பாபாவிளக்கிய அரும்பெரும்நிகழ்வினை நானாசாஹேப், பி.வி.தேவிடம்
நேரடியாகச் சொல்லியவிவரம் மற்றவராலும் உறுதிசெயப்பட்டது. [2130]
வேதஞானமும் பகவத்கீதையின் விளக்கஞானமும் பெற்றிருந்ததால்
பாபாவுக்குத் தெரியாதென்று நானாசாஹேப் கர்வமடைந்தார்.
அடியார்கூட்டம் பெருகிடும்முன்னர், அடியவரிடத்தில் தனியுரையாடலாய்
பாபாநிகழ்த்துவார். அப்படியோர்நாள் நானாசாஹேப் பாபாகால்களைப்
பிடித்துவிட்டபடி ஏதோவொன்றை முணுமுணுத்திருக்கையில் அதனைத்தொடர்ந்து
பாபாநானா இருவருக்கிடையே நிகழ்ந்தஉரையாடல் கீழேவருவது:
பாபா: உனக்குள்ளாகவே முணுமுணுப்பது என்னவோநானா?
நானா: பகவத்கீதைச் செய்யுளொன்றினைச் சொன்னேன்,பாபா.
பாபா: சொல்லும்செய்யுளை உரக்கக்கூறு.
நானா:
தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வதர்சின: [4-34]
பாபா: சொல்லும்பாடலின் பொருளைக்கூறு,.... உனக்குத் தெரிந்தால்.
நானா:
பணிந்தும்,கேட்டும், பணிவிடைசெய்தும் நீயதைஅறிக.
மெய்யினையுணர்ந்த ஞானியருனக்கு அதனைவிளக்குவர்.
பாபா: இவ்விதமான பொழிப்புரையொன்றும் எனக்குவேண்டாம்.
ஒவ்வொருசொல்லின் பொருளிலக்கணத்தை விரிவாய்க்கூறு’.
கட்டளைப்படியே பதம்பதமாகச் செய்யுளின்பொருளை நானாசாஹேப்
விவரித்தப்பின் மீண்டும்பாபா கேள்விக்கணைகளைத் தொடுக்கலானார்!
பாபா: சாஷ்டாங்கமாக நமஸ்காரத்தைச் செய்தால்போதுமோ?
நானா: 'ப்ரணிபாத'என்னும் சொல்லின்பொருளை வேறுவிதமாய் நானுமறியேன்.
'பரிப்ரச்னா' என்றாலென்ன?' என்னும்கேள்விக்கு 'கேள்விகேட்டல்'
என்னும்பதிலை நானாசொன்னதும், 'அப்படியாயின் 'பிரச்னா'என்றால் [2140]
பொருளென்னவென பாபாவினவிட, 'கேட்டல்'என்பதே அதற்கும்பொருளென
நானாசொன்னதைக் கேட்டபாபா, 'ஒரேபொருளினை இரண்டுமுணர்த்திட,
'பரி'யென்னும் கூடுதற்சொல்லை எதனால்வியாஸரும் சேர்த்துச்சொன்னார்?
பைத்தியமாயவர் இருந்திருப்பாரோ?' என்றேகேட்டிட, 'இதற்குமேலே
வேறொருபொருளும் அந்தவார்த்தைக்கு தெரியாதெனக்கு' என்றார்நானா.
'ஸேவா'யெனும்சொல் குறித்திடும்சேவை ஏதெனச்சொல்'என பாபாகேட்டார்.
நானா: 'நாங்களுமக்குச் செய்துவந்திடும் அதுவேதானிது'
பாபா: 'அத்தகுசேவை செய்தால்போதுமோ?'
நானா: வேறென்னப்பொருளைச் சொல்வதெனவே யானறிந்திலனே'.
பாபா: 'ஞானம்'என்னும் சொல்லுக்குப்பதிலாய் வேறெந்தச்சொல்லைப் போட்டுப்படிக்கலாம்?
நானா: 'அஞ்ஞானம்'என்னும் சொல்லைப்போடலாம்.
பாபா: அஞ்ஞானமெனும் சொல்லைப்போட்டுச் செய்யுளினின்று பொருளுணரக்கூடுமோ?
நானா: சங்கரபாஷ்யம் அத்தகுப்பொருள்தரும் அமைப்பேதும் தந்திடவில்லை.
பாபா: சங்கரபாஷ்யம் சொல்லாவிடினும் இந்தச்சொல்லை அந்தவிடத்தில்
வைத்ததன்பொருளை உணர்ந்துகொள்ளவும் தடையெதுமுளதோ?
நானா: அஞ்ஞானம்'என்னும் சொல்லைக்கொண்டு அர்த்தம்காண்பது
எப்படியென்று என்னறிவுக்கு விளங்கவில்லையே.
பாபா:ஞானரூபமாம் கண்ணபிரானே தானொருதத்துவ தரிசியாயிருக்க
வேறெதற்காக மற்றவரிடத்தில் சென்றிதன்பொருளை அறியச்சொல்கிறார்?
நானா: ஆமிதுஉண்மையே! ஞானியரிடத்தில் போகச்சொன்னதன் காரணமிதுவென [2150]
என்னால்சற்றும் புரிந்துகொள்ளவே முடியவில்லையே!
பாபா: அப்படியாயின் நீயிதையின்னும் அறிந்திடவில்லையோ?
பாபாயிப்படிக் கேட்டவுடனே நானாதனது செருக்கினையுணர்ந்தார்.
அதன்பின்ஸாயி பின்வருமாறு செய்யுளின்பொருளை விவரிக்கலானார்.
‘ஞானியர்முன்னே அங்கம்முழுவதும் படிந்திடும்படியாய் வணங்குதலோடு
உடல்பொருளாவி அனைத்தையும்தந்திடும் பக்குவத்துடனே வணங்கிடவேண்டும்.
குருவினைக்குடையும் கேள்விகள்தவிர்த்து, குற்றங்கண்டிடும் தன்மையைத்தவிர்த்து
விடையைத்தெரிந்திடும் ஆர்வமின்றியும் கேள்விகள்கேட்பதை விடுத்திடவேண்டும்.
ஆன்மீகவழியில் முன்னேறிடவே தேவையானதை அறிந்திடும்வகையில்
கேள்விகள்கேட்டு, பெற்றிடும்விடையைக் கேட்டிடுமார்வம் கொண்டிடவேண்டும்.
இவ்வுடலினதிபதி குருவெனக்கொண்டு அவர்க்குச்சேவை செய்திடலொன்றே
கடமையென்றுணர்ந்து சேவைசெய்திட, ஞானப்பொருளை குருவுமுணர்த்துவார்.’
இதனைக்கேட்டப்பின் நானாவுக்கு அஞ்ஞானமென்பதை குருவுபதேசம்
செய்வாரென்பது எப்படிப்பொருந்தும் என்பதையுணர்த்திட மேலும்விழைந்தார்.
‘அறியாதிருப்பதை அழிப்பதேஞானம்; ஞானேச்வரியின் [1396]விளக்கச்செய்யுளில்
'கனவும்தூக்கமும் மறைந்திடுமேயானால் மீதமிருப்பதுநீ யொருவன்மட்டுமே!’எனவரும்.
இருளைத்துரத்திட ஒளியேவேண்டும்; த்வைதமழித்திட அத்வைதம்பிறக்கும்;
இருநிலையகன்றிட ஒருநிலைவிளங்கும்; இப்படியாகவே ஞானம்பிறந்திட
அஞ்ஞானமென்னும் இருளைவிலக்கிடும் உன்னதச்செயலை குருபோதிக்கிறார்.
குருவைப்போலவே ஞானம்நிரம்பிய பண்புடையாளனே சீடனுமிங்கே. [2160]
மேலானவுணர்வும், அரும்பெரும்செயல்திறன் செய்திடுமாற்றலும்
அட்டமாஸித்தியும் நிரம்பியகுருவே மானுடவுருவில் சீடனுக்கருளிட
நிர்குணத்தன்மை சிறிதும்குறையா நிலையினில்வந்து உபதேசிக்கின்றார்.
பிறவிவினையினால் அஞ்ஞானவிருளில் சிக்கியிருக்கும் சீடனுக்கருளிட
'நீயேகடவுள்; வலிமையுள்ளவன்; குன்றாச்செல்வம் நிறையப்பெற்றவன்'
என்பதையுணர்த்தி அறியாமைவேர்களை அடியோடறுத்து மாயையைக்களையும்
வகையினையுரைத்து ஆத்மவிசாரம் செய்யப்பழக்கி நல்லருள்புரிகிறார்.
"நானொருஜீவன்; நானேவுடலும்; கடவுள்,உலகம், ஜீவன்மூன்றும்
வெவ்வேறானவையே; யான்கடவுள் அல்லேனல்லன்; ஆத்மாஉடலில்லை;
கடவுள்,உலகம் ஜீவனனைத்தும் ஒன்றென்பதையே அறியாதிருத்தல்"
மேலேகூறிய அஞ்ஞானத்தை அறியச்செய்தால் மட்டுமேயொருவன்
இவற்றையெல்லாம் களைந்திடவியலும் என்பதால்குருவும் இதனைச்செய்கிறார்.
தூயபக்தருக்குக் காண்பவரனைவரும் வாசுதேவனே! குருவும்சீடனும்
ஒருவரையொருவர் வாசுதேவனாய் மனதுள்கொள்வர். இவ்விருவரையுமே
பகவான்கிருஷ்ணனும் வாசுதேவராய்த் தானும்நினைக்கிறார் என்னும்பொருளை
உணர்த்திடவேண்டியே கீதையில்கண்ணனும் 'தத்துவதர்சி' என்பதைச்சொன்னார்.
சமாதி மந்திர் கட்டுதல்::
எந்தச்செயலையும் தான்செய்ததென ஒருபோதும்ஸாயி சொன்னதுமில்லை.
ஆயினும்பல்விதச் செயல்களெல்லாம் முறைப்படிநிகழ்ந்திடும் அதிசயத்தினை
அவருடனிருந்த அடியார்யாவரும் அதன்பலன்பெற்று அதிசயித்தனர்.
இத்தகுவொருசெயல் சமாதிமந்திர் கட்டிடவேலை என்பதைக்காண்போம். [2170]
பாபுசாஹேப் பூ[b]ட்டியென்னும் பெரும்பணக்காரர் தம்குடும்பத்துடன்
ஷீர்டிநகரில் வசித்துவருகையில் சொந்தக்கட்டிடம் கட்டிடுமெண்ணம்
கொண்டவேளையில், தீக்ஷித்வாதாவில் உறங்கிடும்சமயம் பாபாஅவரது
கனவினில்தோன்றி வாதாவொன்றைக் கோவிலுக்கருகில் கட்டிடப்பணித்தார்.
அந்தவேளையில் அங்கேதூங்கிக் கொண்டிருந்தஷாமாவும் இதேகாட்சியைத்
தாமும்கண்டிட, விழித்துக்கொண்ட ஷாமாகண்களில் நீர்வழிந்திடும்
காட்சியைக்கண்ட பூட்டிசாஹேப் காரணம்வினவிட, இருவர்கனவும்
ஒத்திருத்தலைக் கண்டுமகிழ்ந்து காகாசாஹேப் தீக்ஷித்துடனும்
கலந்தாலோசித்து, மூவருமாகத் திட்டந்தீட்டி பாபாமுன்னர்
சமர்ப்பித்திடவே ஸாயிபாபாவும் உடனையதனை அங்கீகரித்தார்.
ஷாமாவின்பார்வையில் கட்டிடமெழும்பிட லெண்டித்தோட்டம் செல்லும்வழியில்
அவ்வப்போது ஸாயிபாபாவும் ஆலோசனைவழங்கிட கீழ்த்தளம்,கிணறு
உக்கிராணஅறைவரை பூர்த்தியானதும், பாபுசாஹேப் ஜோக்[க்]கிடம் மேற்படிவேலை
கொடுக்கப்பட்டது. அந்தவேளையில் திறந்தமேடை ஒன்றின்நடுவே
குழலூதும்கண்ணன் உருவச்சிலையை வைத்திடவேண்டும் என"பூட்டி"நினைத்து
பாபாசம்மதம் கேட்டிடவேண்டி ஷாமாவைவேண்டிட, அதன்படிக்கேட்டதும்
பாபாஅதற்குச் சம்மதம்தந்து 'கட்டிடவேலை பூர்த்தியானதும் நானேவந்து
அங்கேதங்குவேன்! நாமெல்லாரும் அங்கேவாழ்ந்து, ஒன்றாய்நடந்து,
ஆடிவிளையாடி ஒருவரையொருவர் கட்டியணைத்து மகிழ்வுடனிருப்போம்'
என்றுசொன்னதும், மத்தியமண்டப அஸ்திவாரத்தைத் தொடங்கிடவெனவே [2180]
தேங்காயொன்றை உடைத்துவேலையும் ஆரம்பமானது; கண்ணன்சிலைக்கும்
ஏற்பாடாகிட, இந்தவேளையில் பாபாஉடல்நலம் குன்றியநிலையில்
இயற்கையெய்திடும் தருணம்வந்திட, பாபாகாலடி அங்குபடாமல்
வாதாவுக்காய்ச் செலவிட்டபணமெலாம் வீணாய்ப்போனதே எனுமெண்ணத்தால்
பூட்டிசாஹேப் வருந்தியவேளையில், இறுதிக்கணத்தில் 'பூட்டிவாதாவில்
என்னைவையுங்கள்' என்றுஸாயி கூறியமொழிகள் ஆறுதல்தந்தன.
ஸாயியின்மேனி முரளீதருக்காய் அமைத்தமேடையில் நடுநாயகமாய்
வைக்கப்பட்டு பூட்டிவாதாவே ஸாயிமந்திர் எனும்பெயர்பெற்றது.
ஸாயிபாபாவே முரளிதரானார்! அவர்தம்வாழ்வு அற்புதமானது!
பூட்டிசாஹேப் கட்டியவாதாவில் ஸாயியிருப்பதும் அவரதிர்ஷ்டமே! [2185]
அவரது [ஸாயியின்] இஷ்டமே!
ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment