Sai Charita - 5
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 5
சாந்த் பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் பாபாவின் வருகை - வரவேற்கப்பட்டு 'ஸாயி' என அழைக்கப்படுதல் - மற்ற ஞானிகளுடன் தொடர்பு - அவருடைய உடையும், அன்றாட நியதிகளும் - பாதுகைகளின் கதை - 'மொஹித்'துடன் மல்யுத்தப் பயிற்சியும், வாழ்க்கையில் மாற்றமும் - தண்ணீரால் விளக்கெரித்தல் - போலிகுரு ஜவஹர் அலி.
****
'சாந்த் பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் பாபா திரும்புதல்'
ஸாயிநாதன் ஷீர்டிக்கு வந்தகதை என்னவென
வாயார நான்பாடி இப்போது சொல்லுகிறேன்
'தூப்'பெனும் கிராமத்தில் சாந்த்பாடீல் என்னுமொரு
முஹமதியப் பெருந்தகை ஔரங்காபாத் சென்றார் [150]
செல்லுகின்ற வழியில்தன் குதிரையினைத் தொலைத்துவிட்டார்
அல்லும்பகலுமாய் இருமாதங்கள் விடாதவர் தேடிவந்தார்
தொலைத்ததனைக் காணாமல் ஏமாந்து நடந்துவந்தார்
களைப்படைந்தோர் மாமரத்தைக் கண்டவரும் தான்நடந்தார்
மாமரத்தின் அடியினிலோர் மாமனிதர் அமர்ந்திருந்தார்
தலையினிலோர் குல்லாவும் உடலினோர் கஃப்னியும்
கையினிலோர் 'ஸட்கா'வும் வைத்திருந்து ஹுக்காவைக்
புகைப்பதற்குத் தயாராய்த் தானங்கே அமர்ந்திருந்தார்
பாடீலைக் கண்டவுடன் அன்புடனே அழைத்திட்டார்
தன்னுடனே புகைப்பிடிக்க வருமாறு கூப்பிட்டார்
சேணத்தைக் கண்டவுடன் என்னவென வினவிட்டார்
காரணத்தைச் சொன்னவுடன் சோலையருகில் தேடச்சொன்னார்
காணாமல் போனவந்தக் குதிரையங்கே தெரியக்கண்டார்
கண்டவிந்த பக்கிரியோர் மஹானெனத் தானுணர்ந்தார்
குதிரையுடன் திரும்பியவர் இன்னுமோர் அதிசயம்கண்டார்
நிலத்தில் தடிநுழைத்து நிலக்கரியை எடுக்கக்கண்டார்
கத்தியினால் நிலம்நுழைத்து நீரினைக் கசியச்செய்து
இவ்வாறாய்ப் புகைபிடித்து தனக்கும் கொடுத்தவரின்
அடிபணிந்து பக்கிரியைத் தனதில்லம் அழைத்திட்டார்
அவரழைப்பைத் தானேற்றுப் பக்கிரியும் உடன்சென்றார் [160]
சிலநாள் கழித்தோர்க் கலியாணக் கூட்டத்துடன்
ஷீர்டிக்குச் சென்றமஹான் அங்கேயே தங்கிவிட்டார்
'ஸாயி என்னும் பெயரை பக்கிரி எப்படி அடைந்தார்?' ::
கண்டோபா கோயிலுக்கு அருகினிலோர் ஆலமரம்
அங்கேதான் மாட்டுவண்டிகள் அவிழ்க்கப் பெற்றன
இளந்துறவி வண்டியினின்று இறங்குதலைக் கண்டிட்ட
கோவிலின் பூசாரி மஹால்ஸாபதி பரவசமுற்றார்
'யா ஸாயி' [வரவேண்டும்ஸாயி] என்றவரும் அழைத்திட்டார்
அன்றுமுதல் ஸாயிபாபா என்றிவரும் பேர்பெற்றார்
'மற்ற ஞானிகளுடன் தொடர்பு'
தேவிதாஸ், ஜான்கிதாஸ், கங்காகீர் என்கின்ற
மஹானெல்லாம் ஸாயியின் மஹத்துவத்தைக் காணலுற்றார்
'விலையொண்ணா வைரமிங்கு ஷீர்டிக்கு வந்திருக்கு
தண்ணீரைச் சுமந்திங்கே செல்கின்ற மாமனிதர்
தானிங்கே வந்ததனால் ஷீர்டிக்குப் பெருமையாச்சு'
என்றவரும் சொன்னதினை யானுமக்குச் சொல்லிடுவோம்
'சாதாரண மனிதரல்ல மாவைரம் இவராவார்'
என்றன்றே அனந்த்நாத் என்னுமொரு ஞானிசொன்னார்
'பாபாவின் உடையும், அன்றாட நிகழ்ச்சி நியதியும்'
நீண்டதொரு முடிவளர்த்துக் காளையினைப் போலிருந்தார்
தண்ணீரைத் தாம்கொணர்ந்து தோட்டமொன்று தானமைத்தார்
வாமன் தாத்யா எனுமன்பர் தினமிரண்டு குடம் கொடுத்தார்
மூன்றாண்டுகள் இந்நிகழ்வு தினந்தோறும் தொடரலாச்சு [170]
பூந்தோட்டம் அமைந்திருந்தப் புனிதமான நிலத்தினிலே
பாபாவின் ஸமாதிமந்திர் இன்றின்னும் விளங்கிடுது
'வேப்பமரத்தடியில் உள்ள பாதுகைகளின் கதை'
அக்கல்கோட் மஹராஜின் பாதுகையை வணங்கிவரும்
பாயி கிருஷ்ணாஜி கனவினிலோர் காட்சிகண்டார்
'ஷீர்டியே என்வாசம்! அங்குசென்று தொடர்ந்திடுக!'
எனமஹராஜ் கனவினிலே சொன்னதனைக் கேட்டவரும்
ஷீர்டிக்குத் தாம்வந்து பாபாவை வழிபட்டார்
வேப்பமரத் தடியினிலே பாதுகையைப் பிரதிஷ்டைசெய்தார்
'ஸகுண்மேரு நாயக்'கெனும் அடியாரை அதற்கெனவே
அர்ச்சகராய் நியமித்துப் பூசனைகள் செய்துவந்தார்
'இக்கதையின் முழுவிவரம்'
பாபாவின் விஜயத்தை நினைவாகக் கொண்டதொரு
அடையாளச் சின்னமிங்கு வேண்டுமெனத் தான்விரும்பி
பாயி கிருஷ்ணாஜி நண்பரிடம் சொன்னபோது
'கோத்தாரி' எனுமன்பர் திட்டத்தைத் தான்வரைந்து
உபாசினி மஹராஜின் திருத்தத்தைத் தாமேற்று
பங்கயமும் சங்குசக்ரமும் மனிதன் உருவரைந்து
பாபாவின் யோகசக்தி சொல்லுகின்ற வாசகத்தைச்
பாடலாக அதிலெழுதிப் பாதுகையில் பொறித்திட்டார்
'சாயிநாதனை யான் நித்தமும் வணங்குகிறேன்
மரத்தடியில் நிரந்தரமாய் அவரிருந்து அருளுகையில் [180]
கசப்பான வேப்பிலையும் அமிர்தத்தை அருள்கிறது
கல்ப விருக்ஷமும் இதற்கீடு இணையாமோ'
[ஸதா நிம்ப வ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்
ஸுதா ஸ்த்ராவிணம் திக்தமப்ய ப்ரியம்தம் I
தரும் கல்ப வ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயிநாதம் II]
இத்தகைய பாதுகைகள் பாபாவின் ஆசிபெற்று
சிரவண பூர்ணிமா தினத்தன்று பதினோரு மணியளவில்
காண்டோபா கோவிலினின்று ஊர்வலமாய்க் கொண்டுவந்து
தீக்ஷித்தின் தலைமையினில் புனிதமாய்ப் பிரதிஷ்டையாச்சு
பஸ்தாஸேட் அனுப்பிவைத்த முன்பணத்தை முதலாக்கி
நூறுரூபாய் செலவினிலே பிரதிஷ்டையும் நிறைவாச்சு
தினந்தோறும் வழிபாடு லக்ஷ்மண்ராவ் செய்துவந்தார்
கோத்தாரி மாதந்தோறும் இரண்டுரூபாய் அனுப்பிவந்தார்
விளக்கென்றும் எரியலாச்சு வேலியும் போட்டாச்சு
ஸகுன்மேரு நாயக்கின் உபயத்தால் இதுவாச்சு
'மொஹித்தின் தாம்போலியுடன் மல்யுத்தப் பயிற்சியும், வாழ்க்கையில் மாற்றமும்'::
இதுவரைக்கும் சொன்னபின்னர் பாபாவின் கதை செல்வோம்
மொஹித்தின் தம்போலி என்னுமொரு மல்யுத்தவீரன்
ஷீர்டியில் பாபாவைப் பிணங்கியொரு சண்டைக்கழைத்தான்
பாபாவும் அவனோடு மல்யுத்தம் செயவந்தார்
மல்யுத்தப் போட்டியிலே பாபாவும் தோற்றுவிட்டார்
அன்றுமுதல் பாபாவின் தோற்றமங்கு மாறியது
கஃப்னி உடையணிந்து தலைமுடியை மறைத்துக்கொண்டார்
'ஏழ்மையிங்கு மிகநன்று இறைமையைவிட மிகநன்று
கடவுள் ஒருவரே நிரந்தர நண்பராவார்' [190]
என்னுமொரு வார்த்தையினை எப்போதும் சொல்லிவந்தார்
'உடம்பினைத் துறந்து இறைவனை நாடுக'
எனஸாயி சொற்படியே கங்காகீரும் துறவுபூண்டு
புண்தாம்பேக்கு அருகினிலே மடமொன்றை ஸ்தாபித்தார்
மக்களுடன் பேசவில்லை கேட்டதற்கே பதில்சொன்னார்
வேப்பமரத் தடியினிலே எப்போதும் தாமர்ந்தார்
மாலைநேர உலாப்போகும் பாபாசிலநாள் நிம்காங்வ்போனார்
த்ரியம்பக டேங்லேயின் இல்லத்தில் சென்றிருப்பார்
நானா ஸாஹேப்பிற்குப் புத்ரபாக்கியம் அருளிச்செய்தார்
அதன்பின்னர் பாபாபுகழ் அஹமத்நகர் எட்டியது
பகல்முழுதும் அடியார்கள்; இரவினிலோ மசூதியிலே
உடைமையென ஏதுமில்லை புகையிலையும் குச்சியுந்தான் [180]
துவைக்காத துணியொன்று தலைமுடியை முறுக்கியே
முதுகினிலே தொங்கியதோர் கோலமே பாபாவாம்!
சாக்குத் துணியொன்றே ஆசனமாய்க் கொண்டிருந்தார்
துனிநெருப்பின் சுவாலையிலே குளிரினையே விரட்டினார்
தென்மூலை நோக்கியே எப்போதும் அமர்ந்திருந்தார்
கௌபீனம் ஒன்றினையே எப்போதும் அணிந்திருந்தார்
அஹங்காரம் ஆசையெல்லாம் நெருப்பினிலே தானமிட்டார்
அனைவர்க்கும் அல்லாவே இறைவனென அறிவித்தார் [200]
ஆயிரத்துத் தொளாயிரத்துப் பனிரெண்டாம் ஆண்டினிலே
மசூதியும் புதிதாகி தாழ்வாரம் உருவாச்சு
அதன்முன்னே பாபாவும் 'தகியா'வில் வசித்திருந்தார்
அழகியதோர் நடனமெல்லாம் அங்கேதான் ஆடிவந்தார்
'தண்ணீரால் விளக்கெரிதல்' ::
தினந்தோறும் யாசகமாய் எண்ணையினை வாங்கிவந்து
விளக்குகளை எரியவிட்டு பாபாவும் மகிழ்ந்திருந்தார்
இலவசமாய்த் தந்ததினை இனியளிக்க மாட்டோமென
கடைக்காரர் சொன்னவுடன் கலங்காத பாபாவும்
வாயினுளே நீரூற்றி நிவேதனமும் செய்தபின்னர்
அந்நீரை விளக்கினிலே தானூற்றி எரியவைத்தார்
எண்ணையிலா விளக்கெல்லாம் தண்ணீரின் உதவிகொண்டு
நாள்முழுதும் எரிந்துநின்ற அதிசயத்தை நிகழ்த்தினார்
காணவந்த கடைக்காரர் அதிசயத்தைக் கண்டவுடன்
பாபாவின் தாள்பணிந்து மன்னிப்புக் கோரிநின்றார்
மன்னிப்புக் கோரியவரை மன்னித்த பாபாவும்
உண்மையாக நடக்கச்சொல்லி அவர்களையும் மன்னித்தார்
'போலிகுரு ஜவஹர் அலி' ::
மல்யுத்தம் நடைபெற்று ஐந்தாண்டு கழிந்தபின்னர்
ஜவஹரலி எனும்குருவும் சீடரோடு ஷீர்டிவந்தார்
'பாபா தன்சீடர்' எனக்கூறி மக்களையே குழப்பிவிட்டார்
பாபாவும் மறுக்காமல் அவர்பின்னே ராஹாதா சென்றார் [210]
பாபாவின் பிரிவினினால் மனம்வருந்திய ஷீர்டிமக்கள்
பல்வேறு வாதம்செய்து இருவரையும் கூட்டிவந்தார்
தேவிதாஸர் என்னுமொரு சீரான அடியவரால்
வாதத்தில் ஜவஹரலி தோற்றோடிச் சென்றுவிட்டர்
பல்லாண்டு கழிந்தபின்னர் மீண்டுமவர் ஷீர்டிவந்து
பாபாவின் பதம்பணிந்து தவறுணர்ந்து வேண்டிநின்றார்
உண்மையான ஒழுக்கத்தால் அஹங்காரம் அழித்திட்ட
பாபாவின் செயல்கண்டு அனைவருமே அதிசயித்தார்
தன்னுணர்வு தான்பெறவே தாள்பணிதல் தேவையெனும்
பேருண்மை காட்டிநின்ற பாபாவின் சீரிதுவே
ஸ்ரீராம நவமிவிழா, மசூதி நிலையெல்லாம்
அடுத்திங்குக் காண்போம் என்றிதனை முடிக்கின்றேன். [216]
ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment